கி.பி 2048 ….
அதில்லை அண்ணை, நீபோடுற கண்டிசனைப்பார்த்தா பொண்ணுக்கு மாப்பிளை பார்க்கிறமாதிரி தெரியல. ஏற்கனவே ஒருதரம் செய்துவைத்து இரண்டு வருசத்தில எல்லாம் முடிந்துபோய்விட்டது. இனியாவது கொஞ்சம் இறங்கி வாருங்கோ, முதலில் இடத்தை மாறுங்கோ. நான் பிறகு வருகிறேன் என்றவாறு கிளம்பினார் புறோக்கர்.
“இரண்டு வருசத்தில….” புறோக்கரின் வார்த்தைகள் நிரேஸை மூன்று வருடங்கள் முன்னே 2045 ஆம் ஆண்டுக்கு கொண்டு சென்றது.
கி.பி 2045 ……
மகளுக்கு 24 வயது. சம்பந்தம் தானாக வருகின்றது என்று எண்ணி பிரான்ஸ் மாப்பி;ள்ளைக்கு செய்துவைத்தனர். மாப்பிள்ளையும் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் ரோட்தான், நிரேஸ் குடும்பம் நாவலர் ரோட். மாப்பிள்ளை அரன் 2019 இல் பிறந்தவன்.
கி.பி 2019 …….
அரனின் அம்மா, அன்றைய காலத்தில் கலியாணம் செய்தால் வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் செய்வேன் என்று ஒற்றைக்காலில்; நி;ன்றவள் அரனின் தாய் வந்தனா. அவள் விரும்பியது போலவே பிரான்ஸ் மாப்பிள்ளை கிடைக்க, திருமணமும் இந்தியாவில் வெகு விமரிசையாக நடந்து, தேன்நிலவும் இந்தியாவில் கொண்டாடி வந்தனாவின் மாப்பிள்ளை பிரான்ஸ் சென்றார்.
இந்தியாவில் கோயில்கள் எல்லாம் ஏறி இறங்கியபின் யாழ்ப்பாணம் வந்திறங்கினர் வந்தனா குடும்பத்தினர். வந்தனாவுக்கோ தலைகால்புரியாத மகிழ்ச்சி, பெருமை. வீட்டுக்கு வந்தவுடன் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தத் தொடங்கினாள் வந்தனா. இந்தியத் தேன்நிலவின் விளைவாக உருவானவன்தான் அரன். இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தவளுக்கு குழந்தை பிறக்கமுதலே பிரான்ஸ் சென்றுவிடவேண்டும் என்ற உணர்வு எழுந்து கொண்டது. தனது குழந்தை எப்படியும் பிரான்ஸ் மண்ணில் பிறக்க வேண்டும் என்ற எண்ணம், அயலவர்களின் கேள்விகளாலும், மாமியாரின் தொணதொணப்பாலும் அதிகரித்துக்கொண்டது.
வந்தனாவின் மாப்பிள்ளைக்கோ சரியான வதிவிட உரிமையோ, குடியுரிமையோ பிரான்ஸில் இல்லை. இதில் எப்படி வந்தனா பிரான்ஸ் செல்வது? பிரான்ஸ்சில் குழந்தை பிறப்பது? நாட்கள் செல்லச் செல்ல ஸ்கைப் வைபரானது, வைபர் வடஸ்அப் ஆனது, 4ஜி 5ஜி ஆனது. ஆனால் வந்தனாவால் இவற்றில்தான் குடும்பம் நடத்த முடிந்ததே ஒழிய பிரான்சில் இல்லை. இதில் மாமியார் தன்னுடன் இருக்கவேண்டும் என்று தொல்லை ஒருபுறம். கடைசியில் அரன் யாழ்ப்பாணத்திலேயே பிறந்தான் வளர்ந்தான்.
அரனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சபதம் எடுத்துக்கொண்டார்கள் அடுத்த பிறந்தநாளை பிரான்சில் கொண்டாடுவதாக. 5ஜி தொழில் நுட்பத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தெளிவாகப் பார்த்துக் கொண்டான் பிரான்சில் இருந்து அரனின் அப்பா. வந்தனாவுக்கும் அரனுக்கும் ஐபோனும், 5ஜி இணைப்பும் குடும்ப உறுப்பினர்களாக ஒன்றியிருந்தன. அவர்கள் இருவருக்கும் அவை இல்லாவிட்டால் வாழ்க்கையே சூனியமாகிப்போனது.
முகநூல்களில் 5ஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு எங்கே விஞ்ஞான வளர்ச்சி விளங்கப்போகின்றது. எப்படியாவது இந்தக்கூட்டத்திடம் இருந்து தப்பி பிரான்ஸ் போய்விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
சரியாக 10 வருடம் கழித்து அரனின் பதினோராவது பிறந்தநாளை ஒருமாதிரியாக பிரான்ஸ்சில் கொண்டாடினாள். வந்தனா பிரான்சில் அம்மா அப்பாவை சகோதரர்களை இழந்ததை விட 5ஜி இணைப்பை பிரான்ஸ்சில் இழந்ததுதான் அவளது மிகப்பெரிய இழப்பு. அதற்கான காரணத்தை தேடும்போதுதான் கணவனின் பதில் அவளை சிந்திக்கவைத்தது. இப்போது யாழ்ப்பாணத்திலும் 5ஜி ஐ தடை செய்துவிட்டதாக கேள்விப்பட்டாள்.
கி.பி 2045
ஏனொ தெரியவில்லை வந்தனாவுக்கு இப்பொழுதெல்லாம் யாழ்ப்பாண வாழ்க்கைமுறை பிடித்துக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கொருமுறை யாழ்ப்பாணம் போய்வரும்போதெல்லாம் நினைத்துக்கொள்வாள் யாழ்ப்பாணத்திலேயே இருந்திருக்காலாம் என்று. ஆனால் பிள்ளைகள்? எப்படியும் மகனுக்கொரு யாழ்ப்பாணத்து பெண்ணைக்கட்டிவைக்க வேண்டுமென்று நினைத்து இணையத்தில், திருமணசேவைகளில் தேடிப்பிடிக்கப்பட்டவள்தான் நிரேசின் மகள் நிரந்தரி.
தன்னைப்போல் இல்லாமல் மகனது மனைவி திருமணம் முடிந்தவுடன் தனது கணவனுடன் பிரான்ஸ் வந்துவிட வேண்டுமென்பதில் உறுதியாகவும் இருந்தாள். ஒரு திருமண மண்டபத்துக்கு பணத்தினை கட்டிவிட அவர்களே திருமணத்தை இனிதே நடாத்திமுடித்தார்கள்.
பிரான்ஸ் வந்து சில நாட்கள் சந்தோசமாக இருந்த நிரந்திரிக்கும் கணவனுக்கும் இடையில் இடைவெளி தோன்றத்தொடங்கியது. கணவன் அடிப்படையில் ஆர்வமின்றியிருப்பதை அம்மாவிடம் தொலைபேசியில் கூற, அம்மா மாமியாரிடம் கூற, இறுதியில் மருத்துவரிடம் வந்து நின்றனர். மருத்துவர்கள் பலபரிசோதனைகள் செய்து, பல பழைய கதைகள் கேட்டு, இறுதியாக அவர்கள் கூறியதைக் கேட்ட வந்தனாவுக்கும் நிரந்தரிக்கும் தூக்கிவாரிப்போட்டது.
அரனுக்கு ஆண்மையே இல்லையென்றும், அவரால் குடும்பவாழ்வில் ஈடுபடமுடியாதென்றும் கூறிய மருத்துவர்கள் அதற்குக் காரணம் தாய் கருவுற்றகாலத்தில், யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5ஜி அலைக்கற்றைகளாக இருக்கலாம் என்றும் கூறினர்.
நிரந்தரியின் வாழ்க்கையில் இடிவிழுந்ததைப்போல் இருந்தது. ஆனாலும் உண்மையை உணர்ந்த அரன் குடும்பத்தினர். நிரந்தரிக்கு நிரந்தர வதிவிடவுரிமையை பெற்றுக் கொடுத்து விவாகரத்தும் கொடுத்திருந்தனர். பிரான்ஸ் வாழ்க்கை மெல்ல மெல்ல கசக்கத்தொடங்கியது நிரந்தரிக்கு. வந்தனாவுக்கோ மகனின் நிலையை நினைத்து உலகமே இருண்டுபோனது. எவ்வளவு முட்டாள்த்தனமான சமூகமாக இருந்துவிட்டோம் அப்போது? வந்தனாவின் தகப்பனார் அன்று ஒரு அரசியல்வாதியாக இருந்து 5ஜி க்கு வக்காளத்து வாங்கியதை நினைக்க அருவருப்பும் எரிச்சலும் வந்தது. எல்லாம் அற்பத்தனமான பணத்துக்காகத்தானே? இன்று வம்சமே இல்லாமல்?
கி.பி 2048 …
2045 இல் இருந்து மூன்று வருடமாக நிரந்தரிக்கு மறுமணம் செய்துவைப்பதில் தீவிரமாக இருந்தார் நிரேஸ். ஆனால் முடியவில்லை. ஒரு காலத்தில் மறுமணம் செய்வதற்கு தயங்கியவர்கள் இன்று இலகுவாக அதனை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் நிரந்தரிக்கு திருமணம் கைகூடுவது என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் இப்போது கிரகபாவம், செவ்வாய்த்தோசம், கால சர்ப்ப தோசம் என்பனவெல்லாம் போய், “5ஜி தோசம்” திருமணங்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தது.
2019ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் நகரப்பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பிறந்தவர்களுக்கு மலட்டுத்தன்மை, புற்றுநோய் இருப்பதாக செய்திகள் பரவ, 5ஜி பலரது திருமண வாழ்க்கையில் விளையாடியது. இதனை உறுதி செய்வதுபோல் விவாகரத்து வழக்குகள், குழந்தைப்பேறின்மைக்காக, புற்றுநோய்க்காக வைத்தியசாலையை நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.
நிரந்தரிக்கு திருமணம் செய்யவேண்டுமென்றால், புறோக்கர் சொல்வதுபோல் இடம்மாறவேண்டியதுதான் என்று எண்ணிய நிரேஸ், யாழ்நகரத்தை விட்டு சொந்த ஊரான காரைநகருக்கு போய் இருப்பதுதான் சரி என முடிவு செய்துகொண்டார். முடிவு செய்ததோடு மட்டும் நின்றுவிடாமல் காரைநகரில் குடியேறியும் விட்டார்.
இனி வரும் சம்பந்தங்களில் நாங்க காரைநகர் ஆட்கள், ஆனால் யாழ்ப்பாணத்தில்தான் கனகாலம் இருக்கின்றோம் என சொல்லத்தேவையில்லை. “நாங்க காரைநகர், மகள் விவாகரத்தானவர், பிரான்ஸ், மகப்பேற்று மருத்துவரின் சான்றிதழும் உள்ளது, யாரும் சம்பந்தம் இருந்தால் சொல்லுங்க” என்று சொல்ல வேண்டியதுதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம் என்றால், நான் ஓரே ஒரு பொய்தான் சொல்கின்றேன், “பிள்ளை பிறந்து வளர்ந்தது எல்லாம் காரைநகர்தான்”.
- மானிப்பாய் சுதன்


