Tuesday, April 9, 2024

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

 


“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே”

- கடவுள் வாழ்த்து, பொதுப்பாயிரம்,திருமந்திரம்.



கடவுள் என்றால் யார்? அவரைக் காணமுடியுமா?

மகன் கயூரனின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? என்று தெரியமால் முழித்துக் கொண்டிருந்தான் கயூரனின் தந்தையான சிவானந்தன்.

எத்தனை கடவுள்கள் உள்ளார்கள்? மீண்டும் கேள்வி வந்தது.

இறைவன் ஒருவன்தான் ஆனால் வேறு வேறு வடிவத்தில்  நாம் விரும்பிய வடிவில் வழிபடுகின்றோம். ஒவ்வொரு தேசத்தவர்களும் வெவ்வேறு சமயங்களாக வேறு வேறான வடிவங்களில் வழிபடுகின்றனர்.

அதைத்தான் மாணிக்கவாசகர் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என திருவாசகத்தில் பாடியுள்ளார். அதாவது தென்னாடு எனப்படும் கீழைத் தேசத்தின், பெரும்பாலான நாடுகளில் சிவன் என்று வணங்கும் இறைவன் ஏனைய இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றான். 

சமய சேர் இதைச் சொல்லவேயில்லை? என்றவாறு, கடவுள் பிழை செய்தால் தண்டிப்பாரா? யோசனையுடன் கேட்டான் மகன்.

சிவானந்தன் சிரித்துக் கொண்டான். பக்தியை பயத்தின் ஊடாக புகட்டியதன் விளைவு? இறைவனில் அன்பு, நம்பிக்கையை ஏற்படுத்துவதை விடுத்து கடவுள் மீது பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சிவபெருமான் அன்பே உருவானவன். அன்புதான் சிவனுக்கு முதன்மையானது. தூய்மையான தன்னலமற்ற அன்புக்கு மட்டும் கட்டுப்பட்டவர். அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்து அருள்வார். ஆனால் தெரிந்தே செய்யும் பிழைகளை அப்பிழைகளை உணர்ந்து, திருத்திக் கொள்ளாவிடில் தண்டனையை நிச்சயம் தருவார். அதுவும் அவர்கள் மீது கொண்ட அன்பினால் அவர்களை மேன்மைப் படுத்தவே. அதனாலே நாம் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் வேண்டும் என்கின்றன ஒவ்வொரு மதங்களும்.

கடவுள் என்றால் யார் என்று சொல்லவில்லையே? தனது கேள்வியில் பிடிவாதமாக நின்று கொண்டான் கயூரன்.

எங்களைப் படைத்து, காத்து, வீடுபேற்றைத் தருபவர்தான் கடவுள். எங்கும் எதிலும் அவன், அவள், அது என மூன்றாகவும் உள்ளவன்.

அதாவது  “கட” என்றால் எல்லாவற்றையும் கடந்து இருப்பவர். “வுள்” என்பது உள் என்பதாகும். அதாவது அவ் எல்லாவற்றினுள்ளும் இருப்பவர் என்பது பொருளாகும். எனவே எங்களுக்குள்ளும்  இருப்பவன். அன்புடன் இருந்தால் நாங்களும் கடவுளின் குணம் படைத்தவர்கள்தான்..

அன்பில்லாத இடத்து கடவுள் எங்களுக்குள் இருக்காது போய்விடுவார்.

இதைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் “நாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே” என குறிப்பிட்டுள்ளார். அதாவது  அன்புள்ளவர்கள் இடத்தில், பூவில் நறுமணம் இருப்பதுபோல் அவர்களுடன் சேர்ந்திருப்பவன் எனப் பாடியுள்ளார்.

எப்படியப்பா கடவுளை நாம் காணலாம்?

என்னடா இது? கடவுளிடம் மிக்சர் வேண்டாமல் விடமாட்டான் போலிருக்கிறதே! அன்புடன் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கு வழிகளிலும் இறைவனைக்காணலாம். அதற்கு நல்லோரின் நட்பும் நல்லதோர் குருவும் கிடைத்தால் இலகுவாக காணலாம்.

நல்லவர்கள் என்றால்?

தெரியலையே மகனே! அவர்களைத்தானே நானும் தேடிட்டு இருக்கிறேன் என்று சொல்லத்தான் நினைத்தேன். வேண்டாம் நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிடுவோம், “அவனருளாலே அவன்தாள் வணங்கும் சந்தர்ப்பம் இவனுக்கு கிடைக்கட்டும் என்று சிவனை வேண்டியவாறே, நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று சந்திரமுகி பட வடிவேலு பாணியில் சொல்லத்தொடங்கினேன்.

அறநெறியுடன் கூடிய அன்புடன் இருப்பார்கள்.  ஐம்புலன்களான  கண், காது, வாய், மூக்கு, தோல் போன்றவற்றை அடக்கக்கூடியவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.

இவர்களால்தான், ஓர் அறிவு முதல் ஆறறிவு ஈறாகவுள்ள அனைத்து உயிர்க்கும் தன்னை அறிவிக்க எழுத்து, சொல், மந்திரம்,கலை, அண்டங்கள், தத்துவம் என ஆறு பிரிவுகளாக விரிந்து நிற்கும் சிவனை உணரமுடியும்.

இவ்வாறு உணர்ந்தால், ஏழு பிறப்புக்களுக்கும் அப்பால் சென்று மீண்டும் மீண்டும் பிறப்பின்றி அவனை இறைவனின் திருவடிகளை எட்டிப் பிடித்துக்கொள்ள முடியும்.

கயூரன் ஒரு மாதிரியாகப் என்னைப் பார்த்தான். நீங்க ஏதோ சொல்ல வாறீங்க, எனக்கு விளங்கவில்லை என்றவாறு சென்றான்.

“பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்…” பாடசாலையின் காலை வழிபாட்டில் பாடிய சிவபுராணத்தில் இன்று ஏதோ இருப்பதை உணர்ந்தான் கயூரன்.



No comments:

Post a Comment

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...