Monday, March 25, 2019

கலியாண(வீடு)ஹோல்! --- (11.09.2016,சூரியகாந்தி - உதயன் நாளிதழில் வெளியானது.)



ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மணமகனும் மணமகளும் உத்தியோத்தர்கள். திருமணம் காலை பத்து மணிக்கும் பதினொருமணிக்கும் இடைப்பட்ட நல்வேளை. அதனால், வழமையாக வாரஇறுதியில் செய்யும் வேலைகளை முடித்துக்கொண்டு திருமணத்துக்கு போவது இலகுவாக இருந்தது.

திருமண மண்டபத்தை அடைந்தபோது, மோட்டார் சைக்கிளை  நிறுத்துவதற்கு சரியான இடம்தேடி கண்கள் சுழன்ற போது: “அண்ணை இங்கே கொண்டாங்க, இந்த சைக்கிளுக்கு பின்னால நெருக்கமாக விடுங்க, கெல்மெற்றை கொண்டுபோங்க, “கான்டில் லொக்” போடவேண்டாம்” மண்டப செக்கியூரிட்டியின் குரலில் தென்படுவது வேண்டுதலா அல்லது கட்டளையா என்பதை உணரமுடியாமலேயே அவரின் கட்டளைக்கு பணிந்து பவ்வியமாக மோட்டார்சைக்கிளை அவர்சொன்னபடி நிறுத்தினேன். ஏனென்றால் நான் கொஞ்சம் நாகரீகமானவன் பாருங்கோ!!!

மோட்டார்சைக்கிளை மற்றவர் வண்டிகளுடன் அடுக்கியபின் மலங்க முழித்த எனக்கு செக்கியூரிட்டியின் அடுத்த கட்டளை குறிப்பறிந்து கிடைத்தது. “புங்குடுதீவு கலியாணம் முதல் மண்டபத்தில், கோப்பாய் கலியாணம் இரண்டாம் மண்டபத்தில்”

இப்பொழுது நான் ரொம்பவும் குழம்பி விட்டேன் நான் வந்த உறவினர் சுதுமலை அவர்கள் மாப்பிள்ளை வீடு. அவர்களின் பொம்பிளை யாழ்ப்பாணம் என்றல்லவோ சொன்னவர்கள்? என்னகக்குழப்பம் முகத்தில் தெரிய, “பொம்பிளை ஆக்கள் புங்குடுதீவு ஆக்கள்தான், இப்ப யாழ்ப்பாணத்தில் இருக்கினம் குழம்பாமல் வாங்கோ” என்ற மனைவியைப் பின்தொடர்ந்தேன்.

மண்டபத்துள் நுழையும்போதே என்னுடைய குழப்பம் பலரைத்தாக்கியிருப்பதை உணர்ந்து, “பொம்பிளை  புங்குடுதீவுதான்… வாங்கோ வாங்கோ” என்று கூறியவாறு மண்டபத்துள் நுழைந்தோம். மண்டபத்தில் உறவினர்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாயிருந்தது. மண்டபம் எதிர்பார்த்த அளவு நிரம்பி இருக்காததையிட்டு. என்னப்பா நிறையபேரை எதிர்பார்த்தேன்! ஆட்கள் குறைவாக இருக்கினம்.

“இப்பதானே பத்தரை மணி. எப்படியும் கலியாண வீட்டுச்சாப்பாட்டுக்கு பன்னிரண்டு மணியாகும்தானே?” என்ற மனைவியைப் பார்த்து, “கலியான வீடு பத்துக்கும் பதினொன்றுக்கும்இடையிலதானே?” என்ற என்னை ஏளனமாகப்பார்த்த மனைவி. “எல்லோரும் கணக்கான நேரத்துக்கு வருவினம் அட்சதையை போட்டு சாப்பிடபோகும்போது பாருங்கோவன்” என்றாள் மனைவி.

“அப்ப மாப்பிள்ளை ஊரறிய தாலிகட்ட மாட்டாரோ?  அது சரி அவை இனி ஊரறிய தாலிகட்டினால்தான் என்ன?... இல்லாட்டி….. வேண்டாம், நமக்கேன் ஊர்வம்பு!” என மனதுள்ளேயே எண்ணிக்கொண்டேன்.

“ஏசி கோலில்” ஒரேமாதிரி உடை அணிந்த இரண்டு பையன்கள் குளிர்பாணம் வழங்கிக் கொண்டு வந்தார்கள். “என்னப்பா இப்ப இதுவும் ஒரு ஸ்ரைல் இப்ப மாப்பிள்ளையின் நண்பர்கள் எல்லோரும் ஓரேமாதிரி உடை அணிகிறது என்ன?” என்ற எனது குதர்க்கத்துக்கு, “ஐயோ அது கோல்க்காரன்களப்பா வரவர உங்ஙகளுக்கு மூளை மக்கிப்போகுது.”  என்றாள். நானும் கபாலி பட ஸ்ரைலில் “மகிழ்ச்சி” என்றேன்.

மாப்பிள்ளை, வீடீயோக்காரன், போட்டோக்காரன், அழகுக்கலை நிபுணி என பல வில்லன்களை பொறுமையுடன் சமாளித்து பிரதான வில்லனான குருக்களிடம் இருந்து தாலியைப் பெற்று; வளைந்து மணமகளின் கழுத்தில் பிடித்துக்கொண்டு கொண்டு நிற்க பின்னால் நின்ற பெண்கள் தாலியை கட்டினார்கள், ம்ம்ம்…… இல்லை; சுரையைப் பூட்டினார்கள்.  என்னால் வீடியோ எடுப்பவர்களினதும் போட்டோ எடுப்பவர்களினதும் பின்புறங்களைத்தான் பார்க்க முடிந்தது. ஆனாலும் எனக்கு வந்த சந்தேகத்தை மனைவியிடம் கேட்டேன் “ஏனப்பா தாலிச்சுரை பூட்டுறதை கோல்க்காரர்கள் செய்யமாட்டினமோ? மனைவி முறைத்தாள். ஓ!! அப்படி செய்ய வீடியோகார அண்ணை விடமாட்டார் போல? என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்.

தற்செயலாக பின் திரும்பிப்பார்த்தேன்! மனைவியின் கருத்துக்கமைவாக நீண்ட இரண்டு “லைன்கள்” உருவாகியிருந்தன. ஒன்று அட்சதை போட்டு வரவை உறுதிப்படுத்த, மற்றையது சாப்பாட்டுக்காக: இப்ப நான் எந்த லைனுக்குப் போக?

ஒரு முடிவுடன் அட்சதை லைனின் முடிவிடத்தில் இணைந்துகொண்டோம். மிகவும் மெதுவாக பொறுமையுடன் மணமக்களை நோக்கி அடிமேல் அடிவைத்து முன்னேறிக்கொண்டிருந்தோம். திடீரென லைன் ஸ்தம்பித்து நின்றது. எட்டிப்பார்த்தேன். பெண்ணின் அலுவலக நண்பர்களாம் குழுப்போட்டோவுக்காக மணக்களின் கரையோரங்களிலும் முன்னுமாக அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு பின்னால் நின்ற ஒருவர்: இந்த இடத்தில் உங்கள் குழப்பம் எனக்கு விளங்குகின்றது. “உங்களுக்கு வேண்டாம் குழப்பம் நான் நிற்பது எனது மனைவிக்கு பின்னால்தான். இப்ப உங்களுக்கு திருப்திதானே.” எனக்குப் பின்னால் நின்றவர் சொன்னார் “நல்ல காலம் அலுவல உத்தியோத்தர்கள் முழுப்பேரும் வரவில்லை.”

“ஏன்  அண்ணை ஏதேனும் பிரச்சினையோ”

“இல்லை இல்லை இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, அலுவலக நாட்கள் என்றால் அலுவலக நேரத்தில் நடந்தால் எல்லோரும் வருவினம். விடுமுறை என்றால் வீட்டுவேலைகள். அதுதான்”

நான் மீன்டும் “மகிழ்ச்சி” என்று மனதுள் நினைத்தவாறு மணமேடையை நோக்கினேன். பாவம் வீடியோக்காரர், சினிமாபட ஒளிப்பதிவாளர் கூட இப்படி மினக்கிட மாட்டாங்கள். வீடியோகமராவின் டிஸ்பிளேயின் ஊடாக யாரைத்தேடுகின்றான் என்றுதான் தெரியவில்லை. நீண்ட நேரமாக தேடுகின்றான். அவனது தேடலில், எனது பொறுமை கட்டுடைத்து வெளியேற எத்தனிக்கிறது. இருந்தும் பொறுமையுடன் இருந்தேன்: ஏனென்றால் நான் கொஞ்சம் நாகரீகமானவன்!!!

“உதென்னப்பா முன்னுக்கு இருந்ததுகள் இடைக்கால பூருதுகள்.” என்ற எனக்கு பக்கத்தில் நின்றவர் சொன்னார், “அவைக்கு பதிலா ஒருவர் லைனில் வந்தவர். அவையின்ர ஆட்கள் ஒன்றாகப் படமெடுக்கவேணுமாம்” பக்கத்தில் நின்றவரின் பதிலை விட, “இவர் எப்ப எனக்கு பக்கத்தில வந்தவர்” என்ற கேள்வி மண்டையை குடையும்போதே எனக்கும் மனைவிக்கம் இடையில் புகுந்து எமது லைனில் சங்கமமாகிவிட்டிருந்தார். எமது லைனில் இப்போது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் மட்டும் ஒரு அடி பின்னகர்ந்திருந்தேன். அவை படம் எடுத்து முடிய லைன் நகருந்தானே என்ற என் நினைவில், இடி விழுந்தது.

“இவை யாரப்பா மற்றப் பக்கத்தால கொஞ்சப்பேர் மாப்பிள்ளைத் தோழனுடன் மணமேடையில் ஏறுகினம்.” என்று தலையை நீட்டி எட்டிக் கேட்ட எனக்கு சலிப்புடன் பதிலிறுத்தாள் மனைவி. “அவை பொம்பிளை வீட்டுக்காரர், சாப்பிட்டுவிட்டு வந்தவை போட்டோ எடுக்கப்போகினம்போல? என்றவளை, “அப்ப இந்த லைன்?” மனைவியின் மௌனம் என்னையும் மௌனிக்கச்செய்தது. ஆனாலும் மனம் கபாலி ஸ்ரைலில்; “நெருப்புடா.. இவங்களக் கொழுத்துடா…” என்றது.

பல தான்தோன்றித்தனமான இடைச்செருகல்கள், மாப்பிள்ளை, பொம்பிளை வீட்டாரின் உட்புகுத்தல்கள் மத்தியில் ஒருவாறாக அட்சதை போட்டு, மணமக்களை வாழ்த்தி? வரவினை உறுதிப்படுத்த கைலாகு கொடுத்து, இரண்டாம் கட்டமான சாப்பாட்டு லைனுக்கு, மனைவிக்கு பின்னால் ஓடி வந்திருந்தும், எனக்கும் மனைவிக்கும் இடையில் பத்துப்பேர். கண்காளால் என் இயலாமையைத் தெரிவித்து கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு லைனில் நின்றிருந்தேன். இடையிடையே “குணாபட” கமல்ஹாசன் மாதிரி வலது இடமாக ஆடி ஆடி மயைவியையும் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ஞபாகத்துக்கு வந்தது பழைய நிகழ்வொன்று. மணமகனின் சித்தப்பா ஒருவரின் திருமணத்துக்கு சிறுவனாக அப்பாவுடன் சென்ற போது, அப்பாவுக்கு முறையாக கைகழுவ செம்புடன் தண்ணீர் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக திருமண வீட்டில் சாப்பிடாமலேயே அப்பா என்னைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போனது. ஆனால் இன்று கை கழுவாமல்? இதுதான் காலக்கொடுமை என்பது. மனம் சோர பசியோ மனதை பார்த்து “அடங்குடா முதலில் விழுங்குடா” என்றது.

கோப்பையில் உணவினைப்போட்டபின் மனைவியை தேடிச் செல்ல, இடையில் “தம்பி நீ மணியத்தின்ர பெடிதானே? இஞ்ச வா இதில பக்கத்தில இருந்து சாப்பிடு” என்று வலுக்கட்டாயமா அமரவைத்தது ஒரு பெரிசு. வேறவழி அப்பாவின் பெயர்சொல்லி அமரச்சொல்லும்போது அமராது சென்றால் மரியாதை இல்லையே. ஏக்கதுடன் அமர்ந்து சோற்றினை வாயில் வைக்க, “தம்பி கொப்பர் என்ன செய்யிறார்? என்ற அவரது கேள்வி எனக்கு பிரக்கேற வைக்க… “கொப்பர் நினைக்கிறார் போல?” என்ற பெரிசைப்பார்த்துச் சொன்னேன் “அப்பா காலமாகி ஐந்து வருசம் ஆயிட்டுது ஐயா!” என்று.

“என்ன? மணியம் செத்துப்போனானோ?” என்ற கேள்வியில் அவர் வாயில் இருந்த பயற்றங்காய் என் கோப்பையில் விழ, எனது சாப்பாட்டினை நிறைவு செய்யவேண்டி நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிய பரிதாபத்துக்குரிய ஜந்துவாய்; “மனதுள் போங்கடா நீங்களும் உங்கட கலியாணமும்” என நினைத்தவாறு மணடபத்தை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிள் விட்ட இடத்துக்கு வர, மனைவி பீடாவை மென்றுகொண்டு “எப்படி கலியாண(வீடு)ஹோல்?” என்றாள்.

நான் மோட்டார் சைக்கிளின் கிக்கரை ஓங்கி உதைத்தவாறே “மகிழ்ச்சி” என்றேன் பல்லை நரும்பியபடி.

-    மானிப்பாய் சுதன்






வாழ்க வளமுடன். --- (மார்கழி (12).2017, ஒளிஅரசி மாதாந்த சஞ்சிகை)






தயவுசெய்து கதையின் தலைப்பை கதை முடிந்தவுடன் படித்துக் கொள்ளவும்…….

அரசாங்க வைத்தியசாலையில் கடந்த பதினைந்து வருடகாலமாக மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருக்கும் இராகுலன், எத்தனையோ நோயாளிகளைப்பார்த்து விட்டான். ஆனால் இன்று வந்திருந்த நோயாளியைப் பார்த்த பின், அந்த நோயாளியின் கதையைக் கேட்டபின் இராகுலனின் மனம் என்னவோ நிலையில்லாது தவித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நோயாளியும் தங்களது வருத்தங்களுடன் சேர்த்து ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள். ஆனால் இன்று வந்த நோயாளியின் கதை வேறுவிதமாகவும் புதிதாகவும் இருந்தது. ஒரு சமூகத்தின் மாற்றத்தை காட்டி நின்றது. ஆனால் அதற்கு எவரைக் குற்றவாளியாக்குவது என்பதுதான் பெரும் பிரச்சினையாகியிருந்தது.

இராகுலன் மருத்துவத்துடன் உளவியலையும் கற்றிருந்ததினால் அதனூடாகவும்  நோயாளிகளைப் பார்க்கமுனைந்து கொள்வான். ஏனேன்றால் வெளிநோயாளர் பிரிவில் வரும் நோயாளர்களில் பெரும்பாலனவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு; அதனால் நோயாளியானவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பதை அனுபவரீதியாக கண்டுகொண்டவன்.

அதிலும் இன்று வந்த நோயாளி பிரவீன் ஆறு வருடங்களுக்கு முன் தன்னிடம் வந்தவன். ஆனால் நோயாளியாக அல்ல. ஒரு காப்புறுதி நிறுவனத்தில் இருந்து வந்திருந்தான். அப்போது அவனைத்தான் பேசியதும், பின்னர் சமாளித்து அனுப்பியதும் நன்றாக ஞாபகமிருக்கிறது. இராகுலனுக்கு, அரசாங்கத்தினால் கிடைக்கும்: வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, வாகன வரிச்சலூகைக்காக விண்ணப்பித்து இருந்தான். அந்த வரிச்சலுகை அனுமதிப்பத்திரம் தனக்கு கிடைத்தவிடயம், தனக்குத் தெரியமுதலேயே; தன்னிடம் அது தொடர்பாக கதைப்பதற்கு பிரவீன் காப்புறுதி முகவராக வந்திருந்தான்.

“சேர், குட்மோனிங்…. உள்ளே வரலாமா? என்ற கேள்வியுடன் உள்ளே வந்தவன்; “உங்களுடன் ஒரு பத்து நிமிடம் கதைக்கலாமா?” என்று கேட்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனது எடுப்பான தோற்றமும், கடும் வெயிலுக்குள்ளும் முழுக்கை சேர்ட், “ரை” என வந்திருந்தவனை; ஒரு பதிலும் சொல்லாமலேயே, என்ன கதைக்கப்போகின்றாய்? என கண்களாலேயே கேட்டான் இராகுலன்.

“சேர் உங்களுக்கு வாகன வரிச்சலூகை அனுமதி கிடைத்திருக்கு, நீங்க எடுக்கிற வாகனத்துக்கு எங்கட காப்புறுதி நிறுவன…….” தொடர்ந்து அவனைப் பேசவிடாமல் இடைமறித்த இராகுலன் , “உங்களுக்கு யார் இதைச் சொன்னது? எனக்கு அனுமதி கிடைத்தது என்று? எனக்கு அதைப்பற்றி இன்றுவரை தெரியாது! என்றான் கடுப்புடன்.

“உங்கட மினிஸ்ரியில கதைச்சவை சேர்…… அதாலதான் தெரிய வந்தது. எங்களிடம் நிறைய….” என்றவனை இடைமறித்து, “எனக்கு வாகனம் எடுக்கிற நோக்கம் இல்லை, அப்படி எடுத்தாலும் இப்படி குறுக்கால நாகரீகமற்ற முறையில் எங்கட சொந்த விடயங்களை அறிந்து வருகின்ற உங்களிட்ட நான் காப்புறுதி எடுக்கமாட்டேன்” என்றான் இராகுலன்.

“சொறி சேர், பிழைதான்….. மன்னித்துக்கொள்ளவேணும் சேர். எங்களுக்கு வேற வழியில்லை சேர். “ராக்கெட்” ஐ முடிக்கவேணும் சேர். இல்லாட்டி பேசுவாங்க. புறமோசனும் வராது. தொடர்ந்து இப்படியே இருந்தால் புறமோசனும் போயிடும்.. சம்பளமும் குறைஞ்சிடும். அதுதான்.” என்று இழுத்தவனை, அவசரப்பட்டு திட்டி விட்டமோ என்று நினைத்த இராகுலன்; இப்படி அரச அலுவலகங்களிலும் நடைமுறையிருந்தால் நல்லாயிருக்கும் என நினைத்துக்கொண்டான். 

ஆனால் மேலதிகமாக நினைக்காதும் விட்டான். ஏனென்றால், இன்னும் பல மோசமான நிலைகளை நினைக்க வேண்டி வரும் பின் ரென்சனாகி மருந்தெடுக்க வேண்டி வரும்.

“சரி சரி …. உங்கள் போன் நம்பரை தந்துவிட்டு போங்க, தேவையென்று சொன்னால் நானே போன் பண்ணுகின்றேன்” என்று கூறி அவனது “விசிரிங் கார்ட்” ஐ பெற்றுக்கொண்டு, அவனைக் கொஞ்சம் சந்தோசமாக வழியனுப்பி வைத்தான் இராகுலன்.

காலங்கள் உருண்டோட, இன்று அவனைக் கண்ட கோலம்? மெலிந்து, செம்மைப்படுத்தாத தாடி, உப்பிய வயிறு, வாராத தலையுடன்… என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியே மனதைக் குடைந்து கொண்டிருந்தது இராகுலனுக்கு. உள்ளக நோயாளர் பிரிவில் அனுமதித்திருந்தவனை, நாளை சந்தித்து மேலதிகமாகக் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் வேலையில் மூழ்கினான்.

அடுத்தநாள் மதியநேரம், பிரவீனை பார்ப்பதற்காக உள்ளகநோயாளர் பிரிவுக்கு சென்றபோது, பிரவீன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவனை இராகுலன் பெயர் சொல்லி அழைத்தபோது குழப்பத்துடன் பார்த்த அவன் “என்னைத்தெரியுமா டொக்ரர்” என்றான் சந்தேகத்துடன்.

“நீங்க யாரென்று தெரியாது. ஆனால் முன்னர் நீங்கள் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமை புரிந்தது எனக்குத் தெரியும், என்னிடமும் அது தொடர்பாக வந்துள்ளீர்கள். இப்பொழுது நான் உங்களிடம் வந்தது சில விடயங்களைத் தெரிந்து கொள்ள, அவை எனது தொழிலுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன். அதுதான் உங்களுடன் சும்மா கொஞ்ச நேரம் கதைத்துவிட்டு போகலாம் என்று வந்தனான்” என்று மெதுவாக கூறினான் இராகுலன்.

“பரவாயில்லை டொக்ரர் எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு உதவும் என்றால் நான் எல்லாவற்றையும் சொல்லுகின்றேன் ….  என்னுடைய கதை எனது வாழ்க்கைமாற்றம் மட்டுமல்ல எங்களைப் போன்ற இளைஞர்களின் ஒரு சமூகரீதியான மாற்றமுந்தான்.” ஏனென்றால், பல தனியார் கொம்பனிகள் வெளிநாட்டுக் கொம்பனிகளின் பங்குதாரர் ஆகவோ, கிளைகளாகவோதான் இருக்கின்றன. அதனால் சில எமது சமூகத்துக்கு ஒத்துவராத நடைமுறைகளை கொண்டிருப்பதுடன், எமது உழைப்பை மட்டும் உறிஞ்சுபவனவாகவே காணப்படுகின்றன, எமது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்றனவாகவே காணப்படுகின்றன. என்றவாறு தன் கதையில் மூழ்கினான்.

“பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் பல இடங்களில் வேலைக்கு அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். அந்த நேரம்தான் எனது நண்பனைச் சந்தித்தேன்.”

“டேய் மச்சான் எங்கடா இங்கே?” சத்தம் வந்த திசையில் பார்த்தான் பிரவீன். தன்னுடன் படித்த கஜன் நிற்பதைக்கண்டவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். பிரவீன் ஆச்சரியப்பட்டது கஜனைக்கண்டல்ல, அவனின் தோற்றத்தையும் அவனது புதிய மோட்டார் சைக்கிளையும் கண்டேதான்.
“என்னடா இப்படி மாறிவிட்டாய்? எங்க வேலை செய்கின்றாய்? பார்த்து நீண்டநாள்?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றவனுக்கு தான் ஒரு காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்வதாகவும். அது தொடர்பாகத்தான் ஆட்களைச்சந்திக்க வந்திருப்பதாகவும் கூறியவனிடம், தன்நிலையைச் சொன்னான் பிரவீன்.

“டேய் நீ வேலை தேடியதுகாணும்…. நீயும் எங்கட நிறுவன காப்புறுதி முகவராக மாறு, உன்ர திறமைக்கேற்ப சம்பளம் கூடிக்கொண்டே போகும்” என்று கூறியவன் பிரவீனை தனது செல்வாக்கைப்பயன்படுத்தி தனது காப்புறுதி நிறுவனத்தில் சேர்த்தும் விட்டான்.

புதிய சூழல், புதிய பயிற்சிகள், மாதம் செல்லச்செல்ல பிரவீனின் திறமையால் சம்பளம், பதவி உயர்வு என பிரவீனின் உலகம் மாறத்தொடங்கியது. நண்பர்கள் வட்டம் கூடியது.

காப்புறுதி நிறுவனத்தின் ராக்கெற்றை அடைவதில் பிரவீன் தீவிரமாக உழைத்துக்கொள்வான். இதனால் அவனது ரீம் ராக்கெற்றை அடைந்தமைக்கான பல பார்ட்டிகளை நடாத்திக்கொண்டே இருந்தது. பலருக்கு பார்ட்டிகளில் பாராட்டுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் பார்ட்டிகளில் பாராட்டுக்கள், ஆலோசனைக்கா நேர ஒதுக்கீடுகளை விட மது அருந்துதலுக்கான நேரமே அதிகமாக இருந்தது.

பெரும்பாலும் அந்த காப்புறுதி நிறுவனம் சார்ந்த ஹொட்டல்களிலேயே பார்ட்டிகள் நடந்தேறின. பிரவீனுக்கு மது அருந்திப்பழக்கமில்லை. அதனால் தயக்கத்துடன் ஓரமாக நடப்பனவற்றைப்பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் உணவுகளை உண்டுகொண்டிருக்க ஆண்கள் மது அருந்தி ஆர்ப்பாட்டமாக குதூகலித்துக்கொண்டிருந்தனர்.

பிரவீனை எவரும் கவனிக்கவில்லை என்பதைவிட அவனை ஓர் நாகரீகமற்றவனைப்போல் பார்த்துக்கொண்டனர். அருகில் வந்த கஜன் “என்னடா மச்சான் பேசாமல் இருக்கிறாய், இப்படி இருந்தால் ஒன்றும் செய்யேலாது. நட்புகளும் கிடைக்காது.   அதைவிட மனேஜர் ஒருமாதிரி பார்க்கின்றார். வந்து சும்மா கொஞ்சம் எடுத்துப்பார்… பிறகு விடமாட்டாய்” என்றான்.

பிரவீனை இழுத்துக்கொண்டு போனான் கஜன். ஆண்கள், பெண்கள்  என எல்லோரும் சேர்ந்து கைதட்டி, மதுவையும் பிரவீனையும் அறிமுகப்படுத்தி வைத்தனர் கோலாகலமாக.

காலங்கள் உருண்டோட, பிரவீனைப் பார்த்து பலரும் வியந்தார்கள். பிரவீனின் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, நண்பர்கள் வட்டமும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. பிரவீன் செல்லும் பார்ட்டிகளும் உள்ளெடுக்கும் மதுவின் அளவும் அதிகரித்திருந்தது.

வேலைப்பளுவின் காரணமாக ஏற்படும் மன அழுத்ததத்தை குறைக்கவும், பணியாளர்ககளை ஊக்குவிக்கவும் என நிறுவனம் வெளிநாட்டு சுற்றுலாக்களை ஏற்படுத்திக்கொடுத்தது.

பிரவீனின் பெற்றோர் இனியும் தாமதித்தால் பிழை  என்றுணர்ந்து பிரவீனுக்கு திருமணபேச்சை எடுத்தனர். தனியார் நிறுவனம் என்றவுடனேயே பெண்வீட்டார்கள் தயங்கினர். பெண்களோ லண்டன், கனடா, இல்லையேல் அரசாங்க உத்தியோகம் என்றனர். விடாமுயற்சியுடன் பெண்தேடிப்பிடித்தனர். திருமணம் பெரும் தடல்புடலாக நிகழ்ந்தது.

அழகான மனைவி அமைந்த சந்தோசத்தில் மிதந்தான் பிரவீன். என்ன பிரவீனுடன் பார்க்க பெண் சின்னப்பிள்ளையாக  இருந்தாள். அதற்குக் காரணம், பிரவீனின் உணவுப்பழக்கமும், குடிக்கும்போது உண்ணும் உணவுகளும், எந்தவொரு உடல் உழைப்பும் இல்லாததால் ஏற்பட்ட அதிஉடற்பருமனுமே. இப்பொழுது பிரவீன் ஒரு குட்டி யானைபோல் வந்திருந்தான்.

மகிழ்ச்சிகரமாக காலம் சென்றதே தவிர “அப்பா” என்ற புறமோசன் மட்டும் வரவில்லை பிரவீனுக்கு. எமது சமூகத்தின் பாரம்பரியமான முறைப்படி பிரவீனின் மனைவிமீதே குற்றச்சாட்டு விழுந்தது. மருத்துவரிடம் சென்றபோதுதான் பிரவீனின் உடற்பருமன், அவனுக்கு ஏற்பட்டிருந்த நோய்கள் தெரிய வந்திருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை அதீத மதுப்பாவனையே என்று மருத்துவர் கூறிவிட்டார்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுவது சகஜந்தான். ஆனால் பிரவீனின் வாழ்க்கையில் விரைவாகவே ஏற்பட்டது. பிரவீனால் இப்பொழுது தனது ராக்கெற்றை பூர்த்தி செய்யமுடியாதிருந்தது. ஏனென்றால் அவனது அறிமுக வட்டம் முடிவு, வயது, என்பன தடையாக வந்தன.

“ராக்கெற்றை” பூர்த்தி செய்யாத கவலையையும் மதுப் பார்ட்டிகளே தீர்த்து வைக்கத்தொடங்கின. கொமிஸன்கள் குறைவடையத் தொடங்கின. பதவியுயர்வுகள் போய் பதவியிறக்கங்கள் வரத்தொடங்கின. புதிதாக வந்த இளையவர்களுடன் தாக்குப்பிடிக்க முடியாது இருந்தது. அதில் வேறு கௌரவப்பிரச்சினை தொடங்கியது.

குடும்பத்தில் வைத்தியச்செலவுகள், மனைவியின் கேள்விகள், சொந்தங்களின் கேள்விகள் என மோசமான நிலைக்கு பிரவீனை தள்ளிச்சென்றது வாழ்க்கை. நண்பர்கள் குறைந்தனர் ஆனால் மது மட்டும் அவனைக்கைவிடவில்லை இறுகப்பிடித்துக்கொண்டது. அதன் ஆறுதலில் பலநாள் உணவை மனைவியை மறக்கத்தொடங்கியிருந்தான் பிரவீன். வீட்டுக்கு தாமதித்து வரும்போதெல்லாம் கஸ்டமரை சந்தித்து வருவதாகக் கூறிக்கொண்டிருந்தான்.

மதுவின் தாக்கத்தால் மனைவிமீது பிரவீனுக்கு நாட்டம் குறைய, பிரவீனின் நடத்தையால் மனைவிக்கு பிரவீனின் மீது நாட்டம் குறைய, இருவரும் தொட்டதிற்கெல்லாம் சண்டைபிடிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், மனைவிபிரிந்து தாய்வீடு செல்ல தனிமரமான பிரவீன் மதுவுடனேயே கிடந்து தொழிலையும் இழந்தான். பெற்ற குற்றத்துக்கு பெற்றோர் கண்ணீருடன் கவனிக்க, ஒருநாள் இரத்தமாக வாந்தி எடுத்தவன் மயக்கமுற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவர்கள் இனி ஒன்றும் செய்யமுடியாது எனக்கைவிரித்திட, மதுவுக்கு அடிமையானவர்களுக்கான உளவியல் சிகிச்சை, மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.

பிரவீனின் நிலையறிந்து மனைவியும் பிரவீனுடன் வந்து சேர்ந்துகொண்டாள். எப்படியாவது பிரவீனை குணமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினாள். செல்லாத கோயில்கள் எல்லாம் சென்றாள், சாத்திரிகளிடம் சென்றாள், செய்வினை அகல தேசிக்காய் வெட்டி செய்வினைகளை அறுத்தாள். பாவம் அவள், செய்வினைகள் என்பது நாம் செய்த வினைகளே அன்றி வேறெதுவுமில்லை என்பது அவளுக்கு புரியவில்லை. நாம் செய்த வினைகளை பூசாரி அறுக்கமுடியாது. நாங்கள்தான் புண்ணியங்களைச் செய்து செய்வினைகளை அறுத்துக்கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை அவளுக்கு.

நாட்களை எண்ணிக்கொண்டிருந்த பிரவீனின் வாழ்க்கையில் மனைவியின் வருகையும், அவளின் பிரயத்தனங்களும் மனதளவில் புத்துணர்ச்சியை ஊட்டியது.

அவன் தனது பிழைகளை உணரத்தொடங்கியிருந்ததை காட்டியது அவன் தன்கதை சொல்லிய விதம்.

பிரவீனின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்த இராகுலனுக்கு பல சந்தேகங்கள் மனதில் வந்து போய்க்கொண்டிருந்தன. முக்கியமாக யார் மீது குற்றம்? தனியார் கம்பனிகளிலும் எம்மவர்தானே பணிபுரிகிறார்கள்? இருக்கலாம் ஆனால் தம் இருப்பை தக்க வைக்க சிலதை அவர்களும் செர்ந்துதானே செய்கிறார்கள். எல்லாம் முடிந்தபின்தானே வருந்துகிறார்கள்.

பணியாளர்களை வேலைச்சுமை, பணியால் ஏற்படும் மன  அழுத்தம் என்பவற்றில் இருந்து ஆசுவாசப்படுத்த என  பார்ட்டி என்ற போர்வையில் மதுப் பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள். “ஓகே! பிரவீன், கடைசியில் சித்தமருத்துவத்தையும் செய்து பார்ப்பம்! என்று இங்கு வந்திருக்கிறீங்க. நம்பிக்கையுடன் இருங்க. கடவுளை நம்புங்க…. நீங்க யோகா, தியானம் போன்றவற்றையும் செய்யுங்க. மனதுக்கும் உடலுக்கும் அமைதியைத்தரும்.” என்றவனை இடைமறித்த பிரவீன்.

“டொக்ரர், ஒரு டவுட், யோகா, தியானம் என்பன சந்தோசத்திலும் துன்பத்திலும் மனதை ஒருமுகப்படுத்தி நன்னிலையில் வைத்திருக்குமாமே. மதுவும் அப்படித்தானே டொக்ரர் சந்தோசம் என்றாலும் பாவிக்கிறம், துன்பம் என்றாலும் பாவிக்கிறம்….. மனத்தைச் சந்தோசப்படுத்த, துக்கத்தை மறக்க?, மறைக்க அப்ப இரண்டும் ……..” இரண்டுபேருமே சிரித்துக்கொண்டார்கள்.

இராகுலன் நீண்டதொருபெருமூச்சை விட்டுக்கொண்டான். அவனை அறியாமலேயே அவனது வாய் “வாழ்க வளமுடன்…..” என்று சொல்லிக்கொள்ள மனம் பிரவீனுக்காக பிரார்த்தித்துக் கொண்டது.

மானிப்பாய் சுதன்.


போதை விபத்துக்கள். --- (மார்கழி 2017, ஜீவநதி காலாண்டுச் சஞ்சிகை)





சம்பிக்க பண்டாரவின் தலை வெடித்துவிடும்போலிருந்தது. இலங்கைக் காவல்துறையில் இணைந்ததில் இருந்து போதைப்பொருட்கள் தடுப்பு சிறப்புப் பிரிவின் ஒரு நேர்மையான அதிகாரியாக தொழிற்பட்டுக்கொண்டிருப்பவன். அண்மைக்காலமாக யாழ்மாவட்டத்தில் பரவி இருக்கும் போதைப்பொருட் பாவனையை தடுப்பதற்காக யாழ்மாவட்டத்தின் முக்கியமான இடத்தில் நியமிக்கப்பட்டிருந்தான்.

யாழ் மாவட்டத்துக்கு வந்தபின்னர் தனது வேலையின் முக்கியத்துவத்தையும், அதன் கடினத்தன்மையையும் உணர்ந்துகொண்டவன். பலவிதமாக புலனாய்வு செய்தும் போதைப்பொருள் யாழ்மாவட்டத்துக்கு வருவதையோ, அங்கிருந்து பிறமாவட்டங்களுக்கு பரவுவதையோ அவனால் ஊகிக்கவவோ, கண்டுபிடிக்கவோ முடியாதிருந்தது. இதுவே சம்பிக்கவின் தலைவெடிப்புக்கு காரணமாக இருந்தது.

தமிழ் மொழியில் பரீட்சயமிருந்த அவன் யாழ்ப்பாணம் வந்த ஒருவருட காலப்பகுதிக்குள் தமிழ் மொழியில் மேலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். அதற்குக் காரணம் சம்பிக்க ஒரு காவல்துறை அதிகாரியாக அல்லாது, பேருந்துச் சாரதியாகவே யாழ்ப்பாணம் வந்திருந்தான். வந்தவன் பல மட்டங்களிலும் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டான். தனக்கு உதவியாக தமிழ் காவல்துறை ஒருவரையும் கேட்டுப்பெற்றுக் கொண்டிருந்தான். அவன் பெயர் காந்தன்.

இருவரும் பலவழிகளிலும் பல இடங்களிலும் இருந்து இரகசியமாக விசாரணைகளை மேற்கொண்டும் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவின் கேரளப்பகுதியில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள கடலை அண்டிய கிராமங்களுக்கு மீன் பிடிப்படகுகளில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது என்பது மட்டுமே. அதிலும் கேரளக்கஞ்சா சிறப்பாக வந்துகொண்டிருந்தது. பல தடவை பத்திரிகைளில் கேரளாவில் இருந்து கடத்தப்பட்ட பல கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பிடிபட்டதை பார்த்துக்கொண்டான். தமது காவல்துறை கஞ்சாவுக்குப்பின்னால் நின்று புகைப்படத்துக்கு முகம்காட்டிக்கொண்டிருந்தனர். அவை ஒரு சிறு பகுதியே என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது.

பாடசாலை மட்டம் முதல் பல இடங்களிலும் போதைப்பொருள் பாவனை பரவியிருந்தமையால் மக்களும் காவல்துறைமேல் மிகுந்த சினங்கொண்டிருந்தனர். இதனைவிட மக்களின் ஆதங்கங்களையும் அவ்வப்போது கேட்ககூடடியதாயிருந்தது சம்பிக்கவுக்கு. “புலிகள் இருக்கும்போது இவையொன்றும் இல்லாமல் கட்டுப்பாடாகத்தானே இருந்தது”

“புலிகள் நேர்மையானவர்கள், உவங்கள் காசைவேண்டிப்போட்டு விக்கவிடுகிறாங்கள்”
“புலிகளையே தோற்கடித்தவர்களுக்கு; போதைப்பொருட்களை கொண்டுவாறவங்களை  பிடிக்கத்தெரியாமலே இருக்கு, உவங்கள் தமிழ் சமுதாயத்தைத் திட்டமிட்டு அழிக்கிறாங்கள்”

இப்படிப்பல கதைகளை சம்பிக்கவால் கேட்கக்கூடியதாக இருந்தது. மக்கள் சொல்வதும் உண்மைதானோ? என்று தன்னுள் கேட்டுக்கொள்வான். எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும்… கட்டுப்படுத்தவேண்டும் என்ற சிந்தனையுடன் தேநீர்க்டையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தவனின் காதுகளில் அங்கிருந்த இளைஞர்களின் உரையாடல் வித்தியாசமாகப்படவே காதைத் தீட்டிக்கொண்டான்.

“மச்சி, இன்டைக்கு பள்ளிக்கூடத்தடிக்குப்போனா பாக்கு எடுக்கலாம்… வாறியா?” என்றான் ஒருவன்.

அதற்கு மற்றவன், “போடா அதைப்போட்டால் தலையைச்சுத்தும் பிறகு வேலையும் செய்யேலாது. நான் வரவில்லை.”

“என்னடா? பள்ளிக்கூடபெடியலே பாவிக்கிறாங்க நீ…..”

“வேண்டாமடா நான் வரவில்லை நீ போ, இண்டைக்கு கந்தசாமி ஐயா புதிதாக வேண்டிய காணி துப்பரவாக்க வேண்டும்.”

“அந்தமனுசன் என்னடா திடீரென்று காணி, வாகனமெல்லாம் வேண்டுது. தபால் கந்தோரை விட வேறவேலை ஏதும் செய்கிறாரோடா?”

இல்லையடா! ஆனால் வங்கிகளில் ஏதோ கடன் எடுக்கிறவர் என்று சொல்லுகிறவர்… எங்களுக்கு என்ன? வேலை வந்தாச் சரிதானே.” என்ற அவனின் கூற்று சம்பிக்கவுடன் இருந்த  காந்தனின் மண்டைக்குள் ஏதோ குறுகுறுக்க வைத்தது...

“சேர், எனக்கும் அந்த கந்தசாமியாரைத் தெரியும், அவரிடம் திடீரென்று பணம் புழங்கிறதும் தெரியும், அவர்வேலை செய்கிற தபால் நிலையமும் கடற்கரைப்பக்கந்தான். எங்கேயோ இடிக்குது! கந்தசாமியாரை கொஞ்சம் கவனிச்சா ஏதாவது தடயம் கிடைக்கும்” என்றான் காந்தன்.

சம்பிக்கவும் தலையை ஆட்டியவாறு; “காந்தன் நீங்க அவரை அவருக்கு தெரியாமல் கவனியுங்க, நான் ஊருக்கு போய் வந்தபிறகு யோசிப்பம்” என சிந்தனையுடன் சென்றான்.
புகைவண்டியில் இருந்த சம்பிக்கவுக்கு நித்திரை வரவில்லை. பல கடத்தல்களை இலகுவாக கண்டுபிடித்தவனுக்கு இம்முறை கொஞ்சம் சிக்கலாகவே இருந்தது. சிந்தனையில் இருந்தவனின் பார்வை, தன்னுடன் முதலில் பேரூந்தில் வந்த இரண்டு காவல்துறையினர் மீது விழுந்தது. அவர்கள் வேறு இரு காவல்துறையை சார்ந்தவர்ளிடம் சில பொதிகளை கொடுத்தனர். அவர்களது நடத்தை சந்தேகத்தை வரவைக்கவே, அவர்களைப் பின்தொடர தீர்மானித்தான்.

வவுனியாவில், பொதிகளை வழங்கிய காவல்துயைறினர் பேரூந்தில் ஏறி மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல, பொதிகளை வேண்டியவர்கள் மன்னார் செல்லும் பேரூந்தில் ஏறிச்சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து மன்னார் சென்றபோது பொதியை வேறு இரு நபர்களிடம் கைமாறிக்கொடுத்தபின், இருகாவல்துறையினரும் கொழும்பு செல்லும் பேரூந்தில் ஏறிக்கொண்டனர்...

சம்பிக்க பொதிகளைப் பெற்றவர்களது வாகன இலக்கத்தை குறித்துக்கொண்டு, மன்னார் காவல்துறை அலுவலகத்துக்குச் சென்று, தன்னை அறிமுகப்படுத்திய பின் அன்றைய தினம் விடுமுறையில் சென்றவர்களது விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். இருவர் மட்டுமே விடுமுறையில் சென்றிருப்பதை அறிந்த சம்பிக்கவுக்கு இப்பொழுது ஒரு வழி கிடைத்தமாதிரி இருந்தது. தனது மேலதிகாரிக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என யோசித்தவன்: பின்னர் தன்முடிவை மாற்றிக்கொண்டான். முழுவதுமாக கண்டுபிடித்தவுடன் ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம் என முடிவுசெய்தவனை காந்தனின் தொலைபேசி அழைத்தது.

“ஹலோ…., சேர் நாங்க சந்தேகித்தது சரியென்று நினைக்கின்றேன். படகில் வருபவை தபால் நிலையத்துக்கு சிறுபொதிகளாக வந்து தபால்பொதிகளுடன் பொதிகளாக இடமாற்றப்படுகின்றன. போதைப்பொருட்கள் மட்டுமல்ல சில அனுமதியற்ற மருந்துவகைகளும் வருகின்றன.”

சம்பிக்கவுக்கு காந்தனின் வார்த்தைகள் மேலும் உற்சாகத்தைக் கொடுக்க,  “நன்றாகத் தெரியுமா” என கேட்டான்.

“சந்தேகமில்லை ஆனால் ஆதாரத்துடன் பிடிக்க நாம் பொறுத்திருக்க வேண்டும். பொருட்கள் எப்போது வருகின்றன என்பது தெரிய வேண்டும்.”

“சரி … சரி நான் ஊருக்குப்போகவில்லை, வேறோரு அலுவலாக மன்னார் வரைக்கும் வந்துவிட்டேன். நாளை யப்னா வருகிறேன், வந்து மிகுதியைக் கதைக்கின்றேன். நீங்க நான் சொல்கின்ற காவல் நிலையங்களில் இருந்து இன்றைக்கு விடுமுறை பெற்றவர்களின் விபரங்களை எடுத்துவையுங்க” என கூறி காவல் நிலையங்களின் பெயர்களைக் குறிப்பிட்டான்.

ஒகே சேர்…. என்று கூறியவாறு தொலைபேசியைத் துண்டித்தான் காந்தன்.

காவல் நிலையங்களில், காந்தன் விடுமுறை பெற்றவர்களின் விபரங்கள் சேகரித்தமை எப்படியோ காவல்நிலையத்தில் எல்லோருக்கும் தெரியவந்துவிட்டது. அதிலும் ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியான பூஜா பிரசன்ன முதலில் விடுமுறை விபரங்களை கொடுக்கவில்லை. பின்னர் சிறப்பு காவல்துறையின் வேண்டுகோள் என கூறியே விபரங்களைப் பெற்றிருந்தான்.

விபரங்களைக் கொடுத்த பூஜா பிரசன்னவுக்கு, நிலைமை தீவிரமடைவது தெரிந்தது. மாட்டுப்பட்டால் எல்லோரும் கூண்டோடு கூட்டுக்குள்தான் என்று உணர்ந்தவன். இனி “டீலில்” ஈடுபடவதில்லை எனத் தீர்மானத்துக்கொண்டான். விடயம் கடத்தல்காரர்களது மேலிடம் வரை செல்ல, சம்பிக்கவுக்கு அமைச்சர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“ஹலோ, நீங்க மன்னாரில் நிற்பதாக அறிந்துகொண்டேன். என்னுடைய இடந்தான் என்ன தேவையென்றாலும் கேளுங்க, ஆனால் தேவையில்லாத விடயங்களில் கவனம்செலுத்தாதீர்கள்” என அதிகாரத்துடன் கூறினார்.

சம்பிக்கவும், “ஒகே சார் என்று கூறியவாறே தொலைபேசியை துண்டித்தான். தனது வேலை மிகவும் பெரியதொன்றாக இருப்பது தெரிந்தது அவனுக்கு. முதலில் யப்னா போகவேண்டும், காந்தனிடம் தகவல்கள் பெறவேண்டும் ஆராய வேண்டும். பின்னர் யோசிப்போம் என்ன செய்வது என்று யோசித்தவாறே புறப்படத்தயாரானான்.

யாழ்ப்பாணம் வந்த சம்பிக்க, காந்தனுடன் சேர்ந்து யோசிக்கலானான். தன்னால் கண்டுணரப்பட்டவைகளையும் காந்தனால் கண்டுணரப்பட்டவைகளையம் பட்டடியல்ப்படுத்தினார்கள். வட்டம் போட்டார்கள், புள்ளடி போட்டார்கள் இருந்தும் அடுத்தமுறை பொருட்கள் வரும்வரை காத்திருந்தால்தான் ஆதாரங்களுடன் பிடிக்கலாம். கொழும்பில் இருந்து மேலதிகமாக ஆட்களை வரவழைத்திருந்தார்கள். அவர்கள் சுற்றுலாப்பயனிகள்போல் சுற்றிக்கொண்டிருந்தார்கள் சம்பிக்கவின் கட்டளை கிடைக்கும்வரை.

“காந்தன் நாங்க காத்திருக்கின்ற விடயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும், நான் இங்கு வந்திருப்பதும் அவர்களுக்கு தெரியும், எனவே இத்திட்டத்தை கைவிட்டு நான் போகிற மாதிரிப்போனால்தான் சில வேளைகளில் நாங்க நினைக்கிறது நடக்கும். எனவே இன்றிலிருந்து நீங்க வழமையான உங்க கடமைக்கு போங்க, நான் கொழும்பு போகிறமாதரி இருக்கட்டும். தகவல் கிடைக்கும்போது வாங்க” என்று கூறி காந்தனை அனுப்பிவிட்டு சம்பிக்க கொழும்பு செல்வதற்காக புகையிரத நிலையத்துக்குச் சென்றான்.

புகையிரத்தில் சென்ற சம்பிக்க வவுனியாவில் இறங்கி சுற்றுலாப்பயனிகள் வான் ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் பயணிகளாக வந்துகொண்டிருந்தான். கிளிநொச்சியை அண்மிக்கும்பொழுது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனம் சம்பிக்க வந்த வானுடன் மோதுண்டது; வாகனத்தின் முன்பக்கம் நசுங்கிப்போக, அந்த விபத்தில் ஒரு சம்பிக்க பண்டார என்னும் காவல்துறை அதிகாரியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்த செய்தி காந்தனுக்கு கிடைத்தது...

டிப்பரைச்செலுத்திய சாரதி காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தான். வயிற்றுப் பசிக்காக போராடிக்கொண்டிருந்த, போராட்ட பக்கமே படுத்திராத அந்த சாரதி, காவல்துறைப்பேச்சாளரால், புனர்வாழ்வுபெறாத முன்னாள் போராளியாக உருவாக்கிகொள்ளப்பட்டான். இரண்டுநாட்களாக விபத்துதொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு. முகப்புத்தகங்களில் படங்கள் பதிவிடப்பட்டது. நாளடைவில் விபத்து தொடர்பான ஆரவாரம் மெதுவாக அடங்கிப்போக. படகுகளும் வழமைபோல் ஓடத்தொடங்கியிருந்தன. காந்தன் மட்டுமே சொல்லமுடியாத தகவல்களுடன் சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்கின்றான்…

யாவும் கற்பனை !
மானிப்பாய் சுதன்.




ஒட்டாத உறவுகள்! --- ( 21.05.2017, சங்குநாதம் - வலம்புரி நாளிதழ்)


சந்திரனின் மனம் மிகுந்த குழப்ப நிலையில் இருந்தது. மனைவி பிள்ளைகளோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் புதிய உறவினர்களின் வருகையை. மனைவி, பிள்ளைகளுக்கு வருபவர்கள் புதிய உறவினர்கள். ஆனால் சந்திரனுக்கோ, அவர்கள் விடுபட்ட மிகப்பழைய உறவினர்கள். அவர்களின் வருகை சந்திரனுக்கு எவ்வித மகிழ்ச்சியையும் கொடுக்கவில்லை. மாறாக பழைய வடுக்களையே கிளறியவண்ணம் இருந்தது. வீட்டின் பின் மாமரத்தின் கீழ் அமர்ந்தவனின் மனம் பல ஆண்டுகள் பின்னோக்கி ஓடியது.

அன்று சந்திரனின் குடும்பத்தில் அவன், அவனது அம்மா அப்பா, சகோதரர்கள் இருவர் என அளவான குடும்பமாக  இருந்தது. ஆனால், சந்திரனின் தாயாரது இளைய சகோதரனின் குடும்பமும் சந்திரனது குடும்பத்துள் ஒன்றாகவே காணப்பட்டது.

“சந்து, நேரம் போய்விட்டது, அம்மா தேடப் போறா… வீட்டுக்குப் போ.” மச்சாளின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சந்திரன். உண்மையிலேயே நேரம்போய்விட்டதை மாலைநேர மம்மல்ப்பொழுது அவனுக்கு உணர்த்தியது. ஆனாலும் தாய்மாமனின் குரல் அவனை மேலும் உற்சாகமாக வேலை செய்யத்தூண்டியது. வாழைகளுக்கு நீர்பாய்ச்சிக்கொண்டிருக்கும் மாமாவுக்கு உதவியாக பாத்திகளில் வரும் நீரை வாழையின் அடிகளுக்கு போகும்வண்ணம் கால்களால் தள்ளிக்கொண்டிருந்த அவனுக்கு; மச்சாள், வீட்டுக்குபோக நேரமாகிவிட்டது என்று கூறியபோது, “அவனை ஏன் கலைக்கிறாய்? இதுவும் அவன்ர வீடுதானே நேரம்போனால் சாப்பாட்டை குடு. அவன் இங்கேயே நிற்கட்டும்.” மாமாவின் உரிமையான பேச்சு சந்திரனை வானத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.

சந்திரனுக்கும் இதுவரை தனது வீட்டுக்கும் மாமாவின் வீட்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. சொல்லப்போனால் தனது வீட்டில் நிற்பதைவிட மாமா வீட்டில் நிற்பதே அதிகம். எந்த விசேட நாட்களிலும் மாமாவீட்டிலேயே நின்றுகொள்வான்.

மாமா உறவுகளை எப்படி வைத்திருப்பாரோ அப்படித்தான் சொத்துப்பத்துக்களையும் வைத்திருப்பார். பெரியமாமாவுக்கும் மாமாவுக்கும் சேரவேண்டிய காணி ஒன்றினை பெரியமாமா உயிருடன் இருக்கும் காலத்திலேயே தனது பெயருக்கு மாற்றிவிட்டார். இந்தவிடயம் தெரியாத, பெரியமாமி தங்களது பராமரிப்பில் இருந்த அந்தக்காணியை ஊரில் வேறு ஒருவருக்கு விற்பதற்கு ஆயத்தமாக, அது பெரிய சண்டையானது.

சந்திரனின் அம்மாவுக்கோ தனது சின்ன அண்ணாமீது அளவுகடந்த பாசம். இதனால் மாமா வீட்டுடன் சேர்ந்து பெரியமாமியுடனும், காணி வேண்ட வந்தவர்களுடனும் சண்டைபிடித்து ஊரில் கணிசமானவர்களுடன் கதைபேச்சு நின்று நிரந்தர பகையையும் தேடிக்கொண்டது சந்திரனின் குடும்பம்.

இதனால் சந்திரனின் மற்றைய உறவினர்களின் வீட்டுபோக்குவரவும் மட்டுப்படுத்தப்ட்டது. கடைசியில் மாமா வீடே தஞ்சம் என இருந்தது. ஒரு நாள் மாமாவின் மரணச்செய்தி வீடு வந்து சேர்ந்தது. செய்தியை கேட்டவுடன் சந்திரனின் அம்மா அழுத அழுகை, மாமா மீதான பாசத்தை காட்டிநின்றது. இன்றளவும் அதனை சந்திரனால் மறக்கமுடியாதிருந்தது. இன்று எந்த மரண வீட்டிலும் அப்படி ஒரு அழுகையை அவன் கண்டதில்லை. உணர்வுகளை வெளிக்காட்டுவதில் கூட நவநாகரீகம் புகுந்துள்ளது. எழுபத்தைந்து வயது தாண்டியவர்கள் கஸ்டம் தராமல் இறந்து விடவேண்டும் என்று கூட இன்று பலர் சிந்திக்கின்றார்கள்.

மாமாவின் செத்தவீடு காரணமாக சில நாட்கள் மாமா வீட்டிலேயே நின்றான் சந்திரன். மாமா இல்லாத வீட்டில் ஏதோ ஒரு இடைவெளி இருப்பதை அந்தச் சிறுவயதிலேயே அந்தச் சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டான் சந்திரன். ஆனால் அந்தச் சிறியவயதில், மாமா இல்லாதவிடத்தில் சந்திரனின் அப்பாவோ, அம்மாவோ அவர்களது குடும்பத்தில் அதிகாரம் செய்துவிடுவார்களோ என்கின்ற பயத்தில் அதனைத்தடுக்க மச்சாள்மார் தங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள் என்ற உண்மை சந்திரனுக்கு விளங்கவில்லை. அவர்கள் நினைக்கும் அளவுக்கு சந்திரனின் அப்பா, அம்மா இல்லை என்பது மச்சாள்மாருக்கோ, சந்திரனின் அத்தைக்கோ விளங்கவில்லை. இதனால் நாளடைவில் பல குற்றச்சாட்டுக்களைக் கூறியே சந்திரன் வீட்டில் இருந்து விலகிக்கொண்டனர்.

பன்னிரண்டு வயதில் இவற்றை உணராத சந்திரனுக்கோ அவர்களது பிரிவு மோசமானதாக இருந்தது. வீதிகளில் அவர்களைக் காணும்பொழுதெல்லாம் ஏக்கத்துடன் அவர்களை அவன் மட்டுமேபார்ப்பான். அவர்கள் பார்ப்பதில்லை. காலங்கள் செல்ல வலிகள் மறந்துபோக வலிகள் தந்த வடு மட்டும் சந்திரனின் மனதில் படிந்துகொன்டது. நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சந்திரனின் சகோதரர்களும் ஒவ்வொருவராக  வெளிநாடுசெல்ல சந்திரன் தனிமைக்குள் தள்ளப்பட்டான். 

மாமா வீட்டுக்காக சில ஊரவர்களுடன் பகைத்திருந்தமையினால் வளர வளர தனிமையை பழகிக்கொண்டவன், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களிலும்  நண்பர்களை பயந்து, பயந்தே தேர்ந்தெடுத்துக்கொண்டான். அவர்களும் விட்டுப்பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில்.

அவனது தனிமை அவனது திருமணத்துடன் மறைந்தாலும், கடந்தகால ஏக்கங்களும் வலிகளும் மறையவில்லை. அதனாலேயே பலருடனும் பெரிதாக ஒட்டிக்கொள்வதில்லை. அற்ப விடயங்களுக்காக சண்டையிடும் உறவுகளும், புரிந்துகொள்ளாத உறவுகளும் அவனுக்கு ஒட்டாத உறவுகளாகவே தொடர்ந்தன. ஒட்டிக்கொள்ள அவன் நினைத்ததுமில்லை. காலஓட்டத்தில் மச்சாள் குடும்பம் சேர்ந்துகொண்டாலும்; பழைய அந்த ஏதோ ஒரு உணர்வு மட்டும் இல்லாமலேயே இருந்தது. இருந்தும் மனைவிக்காகவும் தன்னைப்போல் இப்போதிருக்கும் சின்ன பிள்ளைகளம் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் எதிர்பார்ப்புக்கள் இன்றிய உறவினை ஏற்படுத்திக்கொண்டான். சகோதரர்கள் வெளிநாடு சென்றதைப்போலவே மச்சாள் ஒருவரும் திருமணம் முடித்து வெளிநாடு சென்றிருந்தார். அவரது திருமணமோ அல்லது வெளிநாடு சென்றதோ எதுவும் சந்திரனுக்கு தெரியாது. அத்துடன் அவர் போர்க்காலங்களிலம் சரி எக்காலங்களிலும் இதுவரை தொடர்பில் இல்லை. ஏன் சந்திரனின் பெற்றோரின் இறப்பில்கூட தொடர்புகொள்ளவில்லை.

தற்போது திடீரென அவர்கள் வெளிநாட்டில் இருந்து பிள்ளைகளுடன் வருவதாகவும், சந்திரனின் வீட்டுக்கும் வரப்போவதாகவும் தகவல் வர சந்திரனால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சந்திரனுக்கு தெரியும் இது நிச்சயம் அத்தையின் வேலையாகத்தான் இருக்கும். வயதுபோன நேரத்தில் சிலர் சொந்தங்களைத் தேடுவார்கள். இப்பொழுது படுக்கையில் இருக்கும் அத்தையைப் பார்க்கப்போகும் போதெல்லாம், “அவனுக்கு மோர்பிடிக்கும் ஊத்திக்கொடு” என்று சொல்லம்பொழுதெல்லாம் சந்திரன் மனம் இருபத்தைந்து வருடங்கள் முன்னோக்கிச் சென்றுவிடும். இருபத்தைந்து வருடங்கள் இந்த வார்த்தைகளை ஏன் இழந்தான் என்றும் அவனுக்கு விளங்குவதில்லை.
“அப்பா ஓட்டோ வருகிறது” என்ற மகனின் வார்த்தைகள் சந்திரனை நிகழ்காலத்துக்கு கொண்டுவர, வீட்டின் முன்பக்கம் செல்லமுன்னமே சந்திரனின் மனைவியும் பிள்ளைகளும் புதிய? பழைய? உறவினர்களை வரவேற்றிருந்தனர். சந்திரனும் ஒப்புக்காக அவர்கள் முன் சிரித்துக்கொண்டிருந்தான். பதில்கள் ஒற்றைச்சொல்லில் வந்துகொண்டிருந்தன அவனிடத்தில் இருந்து. வந்தவர்கள் அவர்களது ஸ்மார்ட் போன்களில் செல்பி எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

“உங்களுக்கு ஆட்களுடன் கதைக்கிறதென்றால் பிடிக்காது. அதுகள் எவ்வளவு பாசமாக கதைக்குதுகள் கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறீங்கள், அந்த சின்னப் பிள்ளைகள் பாவம் அதுகளோடையாவது கதைத்திருக்கலாம்.” மனைவின் வழமையான புராணம். ஆனாலும் “அந்தச்சின்னப்பிள்ளைகளோடையாவது” கொஞ்சம் குத்தியது. என்னைப்போல்தானே அவர்களும், பெரியவர்களின் சுயநலங்களால் பாதிக்கப்படுகின்றார்கள். இருந்தாலும் வேண்டாம், இப்படியே இருந்திடுவம் என்ற நினைப்புடன் இருக்க, போன் மணியடித்தது.
மனைவியின் கதையில், “ஆ…பாவங்கள், இவர் இப்படித்தான்…” என்று கதைக்கும்பொழுதே சந்திரனுக்கு விளங்கிவிட்டது. யாரோ தனக்கு ஆப்பு வைக்கிறார்கள் என்று, கதைத்துமுடியும்வரை மௌனமாக இருந்தான்.

“அந்தப்பிள்ளையள், அத்தையிட்ட ஏன் சித்தப்பா எங்களோடு கதைக்கவில்லை என்று சொல்லி கவலைப்பட்டதுகளாம்” என்று மனைவி கூறவும், பாசம் பொத்துக்கொண்டு வர, அவன் மனைவியையும் கூட்டிக்கொண்டு உடனே அத்தைவீட்டுக்கு கிளம்பிச் சென்றான். சந்திரனையும் மனைவியையும் கண்டதும் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சந்திரனே கதையைத் தொடங்கி கதைத்தான். பழைய கதைகளைக் கூறும்போதே அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோலவும், வீடு தேடி வந்தபோது சந்திரன்தான் வடிவாக கதைக்கவில்லைப்போலவும்; அவர்கள் கதைக்க, சந்திரன் மனைவியை ஆழமாக பார்த்தான். அவள் மௌனமாக இருந்தாள். சந்திரனுக்கோ பொத்துக்கொண்டு வந்த பாசம் பொசுக்கென்று போனது.

சில நாட்களில் அவர்கள் வெளிநாடு சென்றுவிட, மச்சாளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமட்டை அனுப்பினாள் சந்திரனின் மனைவி. அடுத்த பிறந்தநாளும் வரப்போகிறது. இதுவரை எந்தப்பதிலும் இல்லை, தொடர்பும் இல்லை. சந்திரனின் மனைவியும் இப்பொழுதெல்லாம் அவர்களைப்பற்றி கதைப்பதில்லை. சுட்டமண் ஒட்டாது என்பார்கள் சில உறவுகளும் அப்படித்தான், ஒட்டாத உறவுகளாய் ஆனால் இரத்த உறவுகளாய்?

-    மானிப்பாய் சுதன்.

வெள்ளடியனும் மீன் குழம்பும். --- (11.12.2016 சங்குநாதம் - வலம்புரி நாளிதழ்)


மாசி மாத பனி மூசிப் பெய்யும் என்பார்கள். ஆனால், கார்த்திகை மாதத்தில் மூசிப்பெய்துகொன்டிருந்தது பனி. பனியின் குளிர் தாங்கொணாது போர்த்து மூடிப் படுத்திருந்தான் றமணன். காலை ஏழு மணியாகியும் எழுந்திராத கணவனை, தன் திருப்பள்ளியெழுச்சியினாள் எழுப்பினால் றமணனின் மனைவி மாலினி.

நித்திரையில் இருந்து எழுந்தவன் சோம்பலை முறித்து, தேனீரைச் சுவைத்தபடி, மனைவியிடம் “இன்றைக்கு மதியம் என்ன சாப்பாடு”. என்று கேட்டான்; “நீங்களே சொல்லுங்க” கணவன் விருப்பமே தன் விருப்பம்போல் கூறினால் மாலினி.  பந்து தன் பக்கம் வந்ததை உணர்ந்த றமணன் ஆர்வக்கோளாறுடன் “மீன் வேண்டுவம்” என்றபொழுது மாமனாரின் அவலக்குரல் கேட்டது.

“மாலி… மாலி… ஓடி வா”

என்னவென்று பாருங்கோவன் என்றாள் மாலினி.

“கொப்பர் உன்னைத்தானே கூப்பிடுகின்றார்” என்றான் தேனீரைச் சுவைத்தபடி றமணன்.

“தம்பி …. தம்பி…. கொத்தப்போகுது கொத்தப்போகுது … கொத்துது….” மாமனாரின் அலறல் நிலைமையின் தீவிரத்தை உணர்த்த. முன்னர் ஒருமுறை வீட்டுக்குள் பாம்பு வந்தபோது மாமானார் கட்டிலின் மேல் நின்றபடி அலறியது, ஞாபகத்துக்கு வர, மீண்டும் பாம்புதானோ என்று நினைத்தபடி றமணன் மாமானாரின் குரல் வந்த திசை நோக்கி தடியொன்றுடன் ஓடினான்.

மாமனார் சுவரோடு சுவராக பல்லிபோல் ஒட்டிக்கொண்டு சூ.. சூ.. என்று கத்த முயன்று கொண்டிருப்பதும், ஆனால் வாயிலிருந்து வெறும் காற்று  மட்டும் வருவதையும், அவர் நடுங்கிய கையில் அரிசிச்சுண்டு இருப்பதையும், அதை நோக்கி றமணன் செல்லமாக வளர்த்த வெள்ளடியன் (?) கோழி பாய்ந்து பாய்ந்து கொத்துவதையும் கண்ட றமணனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. “ஐயோ அப்பாவை வெள்ளடியன் கொத்தப்போகுது” என்ற மனைவியின் குரலில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பு ஏவறையாக வந்தது.

றமணன் வெள்ளடியன் சேவல் வளர்க்க வேண்டுமென்ற ஆசையில் சிறு குஞ்சாக வேண்டிக் கோழிக் கூட்டில் விட்டது. நாளடைவில் அது வளர்ந்து மற்றய கோழிகளைக் கொத்த கூட்டில் இருந்து விடுதலை கிடைத்தது வெள்ளடியனுக்கு. வெளியில் நாய் பிடித்தாலும் பிடித்துவிடும் என்ற பயத்துடன் இருக்க நாய் வெள்ளடியனைப்பார்த்து பயந்து ஒதுங்கியது. இதனால் றமணனுக்கு ஒரு பெருமை தனது வெள்ளடியனைப்பார்த்து. வெள்ளடியன் வளர வளர அதன் அதிகாரம் வீட்டில் அதிகரித்துக்கொண்டே போனது. சிறுபிள்ளைகளைக் கண்டால் துரத்தித் துரத்தி கொத்தத் தொடங்கிவிடும். இன்று அதன் வேட்டையில் சிக்கியவர் றமணனின் மாமனார். கோழி பாவம் என்று அரிசிபோட வந்தவரை, சிறைப்பிடித்து தாக்கத்தொடங்கியிருந்தது.

றமணனும், மாலினியும், வெள்ளடியனிடம் இருந்து அவரை மீட்டெடுக்க கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இடையிடையில் மாலினியையும் கொத்த முற்பட்டது வெள்ளடியன். றமணன் ஒருமாதிரியாக மாமனாரை மீட்டெடுத்தான். வெள்ளடியனை நல்லதொரு கயிற்றால் கட்டியவனைப்பார்த்து, மாலினி சொன்னாள்; “உந்த சனியனை வித்துப்போட்டு வாங்கோ.”  பதிலுக்கு றமணன் “உனக்கென்ன விசரே?” என்றான்.

மாலினியோ, “கோழியை வித்துப்போட்டு அந்தக்காசில் மீனை வேண்டிக்கொண்டு வாங்கோ, மத்தியானம் மீன் குழம்பு வைக்கலாம்.” என்றாள்.

“அதில்லையடி சந்தைக்கு நான் கோழியோட போனால், என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு கோழி அமுக்கிற மாதிரி அமுக்கி விடுவாங்கள். பிறகு நட்டத்திலதான் முடியும் கோழி வியாபாரம்.” றமணன் தன் பட்டறிவை வைத்து தன் நிலையைச் சொன்னான்.

அதெல்லாம் வடிவா விற்கலாம் “தனி ஓருவன்” படத்தில் அரவிந்தசாமி தன் அப்பாவுக்கு சொல்லுகிறமாதரி மாலினியும் றமணனுக்கு சொன்னாள் இவ்வாறு, சந்தைக்குள்ள போகும்போது கொஞ்சம் தலையை நிமிர்த்தி, ஒருபக்கமாக சரித்து, ஒரு அலட்சியப்பார்வையுடன் பார்த்துக்கொண்டு விலையைச் சொல்லுங்கோ”

“என்ன விலையைச் சொல்ல?” றமணனின் கேள்வி மாலினிக்கு எரிச்சலைத் தர.

“இரண்டாயிரம் என்று சொல்லுங்கோ” றமணன் சிறு குழப்பத்துடன் கோழியின் இரண்டு கால்களையும் கட்டி பையினுள் தூக்கிப் போடும்போது கோழியின் கனம் திருப்தியைத் தந்தது றமணனுக்கு. இருந்தும் கோழியை முதலில் விட்டுவிட்டு சந்தை நிலைமையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றான்.

சந்தைக்குள் சென்றவன் கோழியிறைச்சி கடைக்கருகில் சென்று நோட்டம் விட்டான்.
“என்ன தம்பி கோழி இறைச்சி வேணுமோ?” இறைச்சிக்கடைக்கு பக்கத்து கடைக்காரர் கேட்டார்.

றமணனின் மௌனத்தை கண்ட கடைக்காரர் “இறைச்சி விக்கிறவர் தேத்தண்ணி குடிக்கப் போய்விட்டார். எவ்வளவு என்று சொல்லும் நான் தருகின்றேன் என தன்னிலை விளக்கம் கொடுக்க, றமணனின் தலை ஒரு சரிவாக உயர்ந்துகொள்ள, கண்கள் அலட்சியத்தை வீச “இல்லை, வெள்ளடியன் கோழி ஒன்று விற்கவேணும் அதுதான்....” என்றான் அலட்சியமாக,

“வெள்ளடியனோ?, தம்பி எவ்வளவு சொல்லுகிறாய்?” பக்கத்து கடைக்காரர் பாசமாய் கேட்க, றமணன் “பெருமையுடன் இரண்டாயிரம் என்றால் குடுப்பன்.” என்றான்.
“சரி கொண்டுவாரும். இறைச்சிக்கடைக்கு போகமுதல் என்னட்ட காட்டும்” என்றார் பக்கத்துக் கடைக்காரர்.

றமணன் மிகவேகமாக வீடுசென்று மீண்டும் கோழியுடன் வந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பக்கத்து கடைக்காரருக்கு சைகையால் கோழி கொண்டுவந்த பையைக் காட்ட, அவரும் கண்ணசைவின் அர்த்தம் புரிந்து விரைந்து வந்து பார்த்தார். கோழியைப்பார்த்தவர் மீண்டும் தன் கடைக்குப் பின்னால் சென்று ஒரு பெரிய கோழியை தூக்கிவந்தார். அதைப்பார்த்தவுடன் றமணனின் தலை சிறிதுதாள தன்னையறியாமலே மோட்டார்சைக்கிளை விட்டிறங்கியிருந்தான்.

“தம்பி, இதைத்தான் நாங்கள் வெள்ளடியன் கோழி என்று சொல்லுகிறனாங்கள். உதைக்கொண்டுவந்து வெள்ளடியன் என்று சொல்லுகின்றீர். றமணனுக்கு அவரது கோழியின் பருமனைப்பார்த்ததும் தனது கோழி அதன் குஞ்சுக் கோழிபோல் இருப்பதாகக் தோன்றியது. இருந்தும் “அண்ணை இது வடமராச்சி கலப்பு வெள்ளடியன் அண்ணை என்றான். ஆனால் அவனோ அதைக்கவனியாமல், இறைச்சிக் கடைக்காரனை விசிலடித்துக் கூப்பிட்டுவிட்டு தன்பாட்டில் போய்விட்டான். இதனால் றமணனின் கௌரவம் சிறிதுபாதிக்கப்பட்டதாய் றமணன் உணர, இறைச்சிக்டைக்காரனிடம் “அண்ணை கலப்பு வெள்ளடியன் இரண்டாயிரம் என்றால் தருவன்” என்றான்.

பையைத் தூக்கிப்பார்த்த கடைக்காரனுக்கு கோழியின் கனம் திருப்தியைத்தர, தலையை ஆட்டியவாறே கோழியை வெளியில் எடுத்து பின் அதனைப்புரட்டி அதன் குதவாசலில் விரலால் அழுத்தி மணந்து பார்த்துவிட்டு, “அழுகல் மணம் வருது தம்பி” என்றான். கடுப்பாகிய றமணன், “அதுக்குள்ள கையை வைச்சா அழுகல் மணந்தானே வரும்” என்றான். “இல்லை தம்பி கழிச்சல் பீச்சல் வருத்தம் போல…. ஏதாவது” என்று இழுத்தவனை இடைமறித்த றமணன் “ ஒருவருத்தமும் இல்லாத வீட்டுக்கோழி இரண்டாயிரம் என்றால் எடுங்கோ இல்லாட்டி விடுங்கோ” என்றான்.

“ஆயிரத்து ஐநூறு என்றால் தாங்கோ தம்பி” என்றவனை இடைமறித்து. வேண்டாம் அண்ணை நான் வேற இடத்தில விற்கிறன் என்று கிளம்பி கோழிப் பண்ணையொன்றுக்கு சென்றான். அங்கிருந்தவர்களும் அதே விலையைக் கேட்க, தளர்ந்துபோன றமணன், மீன்சந்தையில் மீனை வேண்டிக்கொண்டு கோழியையும் வீட்டுக்கு கொண்டு போவோம் என்று நினைத்தவாறு பர்ஸ்ஸைப்பார்த்தான் வெறும் நூறு ரூபா மட்டுந்தான் இருந்தது. ஆக, கோழியை விற்றால்தான் மீன்குழம்பும் என்று யோசித்தவாறு மீன்சந்தையை நோக்கிச் செலுத்தினான் மோட்டார் சைக்கிளை.

மீன்சந்தையில் கோழிப்பையுடன் அநாதரவாக நின்ற றமணனை, மீன் வெட்டிக் கொடுப்பவர் “என்ன தம்பி இன்றைக்கு கோழியே?” என்றார். றமணன் அவசர அவசரமாக “இது விக்கிறதுக்கு” என்றான். பார்ப்பம் கோழியை என்று வேண்டிப்பார்த்தவர், அருகில் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக நின்றவரிடம் “ஐயா நாட்டுக்கோழிக்கு அலைஞ்சியள், இஞ்ச தம்பி நல்ல வெள்ளடியன் கோழியோட நிக்குது, பார்த்து வேண்டுங்கோவன்” என்றார். அடப்பாவி திரும்பவும் வெள்ளடியன் என்று சொல்லி என்னைத் தலைகுனிய வைக்கப் போகின்றானே இவன் என்று றமணன் யோசித்தவாறு இருக்க.

“தம்பி இது வெள்ளடியன் கோழிதானே?” வெள்ளையும் சொள்ளையும், வெள்ளந்தியாக கேட்டார்!

இப்போது றமணனின் தலை ஒருபக்கமாக சாய்ந்து உயர்ந்து அலட்சியமாக ஆட்டியது. ஆடொன்று சிக்கிட்டுது, விடப்படாது மனது யோசித்துக்கொண்டது.

“விலை?” கேட்டது வெள்ளையும் சொள்ளையும்.

“இரண்டாயிம்”.

“தம்பி பார்த்துக்குடு” மீன் வெட்டுபவர்.

சரி இவனும் என்னைமாதிரயே வெள்ளந்தியா இருக்கின்றானே! என்று மனதுள் யோசித்தவாறே… “ உங்களுக்கு என்றபடியால் ஆயிரத்து எண்ணூறு”

“ஆயரத்து எழுநூறு என்றால் தாங்கோ தம்பி.”

இவரிட்டையும் என்னிடம் நூறு ரூபா மட்டும் இருக்கிற மாதிரி, ஆயிரத்து எழுநூறுதான் இருக்கோ? பாவம்! என்று நினைத்தவாறு. தன் சந்தோசத்தையும் வெளிக்காட்டாதவாறு  வெள்ளடியனை இடது கையால் கொடுத்து வலது கையால் காசை வேண்டிக்கொண்ட றமணன் நாக்கில் நீரூர மீன் வேண்டுவதற்கு சந்தைக்குள் சென்றான்.

-    மானிப்பாய் சுதன்

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...