Monday, November 6, 2017

மலரின் இலக்கியம்! --- (06.12.2015, சூரியகாந்தி - உதயன் நாளிதழ்)


மலர் தான் இப்படியான தர்மசங்கடமான வாழ்வுக்குள் தள்ளப்படுவேன் என்பதை தன்பாடசாலை வாழ்நாள்களில் அறிந்திருக்கவில்லை. என்று ஏ.எல் சோதனை மறுமொழி வந்ததோ அன்றே அவளின் பட்டாம்பூச்சி சிறகுகளை இழந்து தனிமரமானாள்.

பாடசாலையில் அவள் ஒரு அழகிய தேவதை. விளையாட்டென்ன? கலைநிகழ்வுகள் என்ன? எல்லாவற்றிலும் அவள்தான் முதல். இதனால் பல பதக்கங்களைப் பெற்றவளாக இருந்தாள்.அவளைச்சுற்றி ஒரு வட்டம் எப்போதும் இருக்கும். இந்தவட்டத்தில் அவள் தனித்து தெரிவாள் அவளின் உயரம் காரணமாகவும்.

மலர் கதை, கவிதை எழுதுவதில் இலக்கியங்களை விமர்சிப்பதில் ஆர்வம் கொண்டவள். தன் அழகான கையெழுத்தில் அவள் எழுதிய கவிதைகள், கதைகள் ஏராளம். அவைகளில் அதிகம் பத்திரிகைகள், சஞ்சிகைககளில் இடம்பிடித்தும் உள்ளன. தன் வட்டத்தில் சிறகொடித்துப் பறந்தவளை பெற்றோரின் ஆசை சிறகோடித்து விட்டது.

“பிள்ளை நீ டொக்டராக வேணும் எண்டதுதான் எங்கட கனவு, ஆசை. அதை நீ நிறைவேற்ற வேணும். “ஓ. எல்.” இல் எட்டு ஏ எடுத்துவிட்டு ஆர்ட்ஸ்படித்து என்ன செய்யப்போகின்றாய்? அப்பா சொல்கிறதைக் கேட்டு சயன்ஸ் படி” என்று அம்மா தீர்மானமாக கூறிவிட்டாள். இதுவே மலர் சயன்ஸ்படிக்க காரணமாகியது. மலரால் சயன்ஸில் முழு ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை. இதனால் மூன்று தர ஏ. எல். முடிவுகளும் தோல்வி. அவளுடன் படித்த நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொருதுறைக்கு சென்றார்கள். ஓ.எல். இல் சுமாராக இருந்தவர்கள் கூட ஏதோ ஒரு துறையில் படித்து வேலையாகிவிட்டார்கள். மலரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

உறவுகளின் கேலிப்பேச்சுகளும், தாய், தந்தை, சகோதரர்களின் தொடர் அறிவுரைகளும் அவளை நடைப்பிணமாக்கின. வாழ்க்கையே சூனியமாகிப்போனது. பல வேலைகளுக்கு மனுப்போட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவளின் வசந்தம் இறுகக் கதவடைத்துக்கொண்டது. இலக்கியத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

காலந்தான் எவருக்காகவும் ஓரிடத்தில் இருப்பதில்லையே! அது தன்பாட்டுக்கு ஓடி நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. இபபோது பெற்றோர் மலருக்கு திருமணம் செய்துவைப்பதில் முனைப்பாக இருந்தார்கள். சொந்தங்கள், நண்பர்களிடம் மலரின் சாதகத்தை கொடுத்துப் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை. பல புறோக்கர்மார் வீடுவந்து போய்க்கொண்டு இருந்தனர். மலரின் பெயர் தெரியாதவர்களிடமெல்லாம் மலரின் சாதகம் போய்ச்சேர்ந்தது.

தாய் இறுதியில் சாத்திரி ஒருவரிடம் மலரின் சாதகத்தைக் காட்டினார். உங்கள் மகளுக்கு காலசர்ப்ப தோசம் உள்ளது. அதனால் கலியாணம் பிந்தித்தான் நடக்கும், அதுவும் ஆக பிந்தவிடாதேயுங்கோ பிறகு பிள்ளைப்பேறும் அரிதாகும் என்று சாத்திரியார் வேறு நன்றாக வெருட்டி விட்டார்.

பிறகென்ன தோச நிவர்த்திக்காக கோயில் கோயிலாக மலர் ஏறி இறங்க மலரின் சாதகத்தில் உள்ள தோசமும் பிரபல்யமானது. தோச பிரபல்யம் வேறு பிரச்சினையாகியது. அம்மா ஒவ்வொரு நாளும் அவளை வைத்துப் புலம்பத் தொடங்கினாள். அரச உத்தியோக மாப்பிள்ளைமார் உத்தியோகமுள்ள பெண் வேண்டுமென்றனர், வியாபாரிகளோ இது தோசமான சாதகம்  என்ற ஒதுக்கினர். பொறுத்திருக்கமுடியாத பெற்றோர் மலரின் இரு தங்கைகளுக்கும் முதலில் திருமணம் செய்து வைத்தனர். மலர் இன்னும் உடைந்து போனாள். பெற்றோருடன் தனித்தாள்.

மலரின் வாழ்க்கையை நினைத்து பெற்றோர் நோயாளர்களாயினர். மலருக்கும் முப்பத்தைந்து வயதாகிவிட்டது. சாத்திரியார் சொன்னது உண்மையோ? பொய்யோ? அதிசயம் நிகழத்தான் செய்தது. மலருடன் பாடசாலையில் படித்த ஞானி வெளிநாட்டில் 18 வரடங்கள் உழைத்து சகோதரர்களையம் வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டு, உழைத்த பணத்துடன் ஊருக்கு வந்திருந்தான்.

ஊர்ப்புதினங்களுடன் மலரின் நிலையையும் அறிந்தவன், நேரே மலரின் வீட்டுக்கு சென்றான். அங்கு மலரின் தாயிடம் மலரை திருமணம் செய்யும் ஆசையைக் கூறினான். மலரின் பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சந்தோசத்தில் கண்கள்ில் இருந்து நீர் திரண்டது. மலரை அழைத்து சம்மதம் கேட்டனர்.

மலருக்கு ஞானியை தெரிந்திருந்தது. பழக்கமில்லை. பாடசாலையில் அவ்வளவு திறமையான மாணவனும் இல்லை. எனினும் விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று சம்மதத்துக்கு அறிகுறியாக தலையை ஆட்டினாள். ஊர் வாயில் விரல் வைத்தனர். மலருக்கு திருமணம் நடந்ததற்காக அல்ல, முதிர் குமரிக்கு காசுக்கார மாப்பிள்ளை கிடைத்தானே என்று.

எவ்வித ஆடம்பரமும் இன்றி திருமணம் முடிந்தது. ஞானி மீண்டும் வெளிநாடு சென்றான். சென்ற அடுத்த மாதம் மலரையும் வெளிநாட்டுக்கு கூப்பிட்டுவிட்டான்.

மலர் எழும்புங்கோ, இண்டைக்கு ஒருஇலக்ககிய கூட்டத்துக்கு போகவேண்டும். என்று கூறிய ஞானியை ஆச்சரியமாக நோக்கினாள் மலர். பாடசாலைக் காலத்தில் இருந்த ஞானியை மலருக்குத் தெரியும். அவனுக்கு கலை அலக்ககியங்களில் ஈடுபாடே இல்லாதவன். அவனா? இன்று இலக்கிய வழாவுக்கு அழைக்கின்றான்? என்ன அதிசயம் என்ற நினைத்தாள். அத்துடன் தான் எவ்வளவு தூரம் இலக்கியத்தை விட்டு… தனது வாழ்வில் சுமார் 20 வருடங்களை சூனியமாக்கி விட்டதை நினைத்து வெட்கினாள். திருமணம் ஏற்பாடனபோது ஏற்படாத புத்துணர்வு இன்று ஏற்பட்டது.

எந்தவித மறுப்புமின்றி வெளிக்கிட்டாள். விழாமண்டபத்துள் நுழைந்தவுடன், தன்னையும் தன் கணவரையும் அங்கிருந்தவர்கள் வரவேற்றதை பார்த்து ஆச்சரியமடைந்தாள். தன்னையும், ஞானியை அவர்கள் மேடைக்கு அழைத்துச்சென்றபோது மேலும் ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச்செல்லப்பட்டாள்.

மேடையில் இருக்கையில் அமர்ந்தவளின் பார்வை அருகில் இருந்தவரின் கையில் இருந்த அழைப்பதழை பார்த்தது. அதில் மலர் என்று ஏதோ வாசகம் தெரிய அழைப்பதழை வேண்டிப்பார்த்தவளுக்கு, “மலரின் கவிதைத் தொகுப்பு” வெளியீடு என்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஆனந்தமும் திக்குமுக்காடினாள். நம்புவதற்கு கடினமாக இருந்தது. தானா? அல்லது வேறு மலரா? என்ற சந்தேகம் எற்பட்டது.

மேடையில் விழாத்தலைவர் பேசத்தொடங்கியவர், எடுத்த எடுப்பிலேயே , “தனது மனைவியின் பாடசாலைக்கலத்தில் எழுதிய கவிதைகளை கவனமாகச் சேகரித்து, அதைத் தொகுப்பாக வெளியிட்ட கணவன் ஞானசேகரனை பாராட்டாமல் இந்த விழாவைத் தொடங்க முடியாது” என்று அவர் முழங்கத்தொடங்கியிருந்தார். மலரின் கண்கள் பனித்தன பனித்த கண்களூடு கணவன் மிக அழகாகத் தெர்ந்தான். இனி மலரின் மனக்கதவும், இலக்கிய கதவுகளும் திறந்தே இருக்கும்.


-    மானிப்பாய் சுதன்

ஆள்மடக்கிகள்! --- 20.11.2016, சங்குநாதம் - வலம்புரி நாளிதழ்)


ஊரிலே சண்டியன் ஆன கரனிடம் எவரும் அவனை எதிர்த்துக் கதைப்பதில்லை. யாரும் எதிர்த்துக்கதைத்தாலும் அவர்களுடன் கரனின் வாய் பேசாது. கைதான் பேசும். அந்தளவுக்கு இருந்த கரனுக்கு பொலீஸ் என்றால் மட்டும் பயம். பொலீஸ் வருகிறது என்றால் ஓடி ஒழித்துவிடுவான். இப்பொழுது கொஞ்சக்காலமாகத்தான் ஓட்டோ ஒன்றை லீசிங்நிறுவனத்தினூடாகப் பெற்று ஒரு தொழிலை செய்து வந்தான். ஆனால் லீசிங் தவணையையும் ஒழுங்காகக் கட்டுவதில்லை. 

“டேய் மச்சான் வழியில ஆள் மடக்கி வாறாங்களாம்” என்ற முகுந்தனின் அலறல் கேட்டு தலையில் கைவைத்துக்கொண்டான் கரன். ஆள்மடக்கி என்று இவர்களால் செல்லப்பெயர் சூட்டப்பட்டிருந்தார் நிதி நிறுவனத்தில் இருந்து வரும் லீசிங் உத்தியோகத்தர். . இவங்களிட்ட லீசிங்கில ஓட்டோ எடுத்ததும் போதும் அவங்களப் பார்த்து ஓடுறதும் போதும் என்று நினைத்துக்கொண்ட கரன்; “அக்கா லீசிங்காரர் வந்தால் நான் இல்லையெண்டு சொல்லு” என்றவாறு ஓட்டோவை எடுத்துக் கொண்டு கேற்றடிக்கு வர: அங்கு முகுந்தன், ஆள்மடக்கியான ரமேசுடன்  கதைத்துக்கொண்டு நின்றான்.

முகுந்தனை முறைத்தவாறே கரன் லீசிங் உத்தியோகத்தரைப்பார்த்து அசடுவழியச் சிரித்தான். “எனக்குத் தெரியும் அண்ணை நீங்க இண்டைக்கு வருவீங்கள் என்று, அதுதான் வேளைக்கே வெளிக்கிட்டனான் ஒரு தவணைக் காசையாவது கட்டிட்டு வருவம் என்று. அதற்கிடையில் நீங்க வந்துவிட்டீங்க” என்றவனை சந்தேகத்துடன் பார்த்த லீசிங் உத்தியோத்தர் “உண்மையாக காசுகட்டத்தான் வெளிக்கிட்டனீங்களோ? அண்ணை” என்று நமம்பமுடியாமல் கேட்டான்.

“நீங்க நம்பாவிட்டால் முகுந்தனைக் கேட்டுப்பாருங்கோ”. என்றவாறு மீண்டும் தனது நண்பனான முகுந்தனை முறைத்துப்பார்த்தான் கரன். எப்படியோ மச்சானை மாட்டிவிட்டாச்சு இனி தப்பவைக்கிறமாதிரி நடிப்பம் என்று யோசித்தவாறே “ ஓம் அண்ணை நேற்றே உங்களுக்கு காசுகட்ட வேணும் என்று  சொன்னவர்.” என்று கரனின் பொய்யை ஆமோதித்தான் முகுந்தன். சரி இன்டைக்கு கட்டாவிடில் அடுத்தமுறை ஓட்டோவை திருப்பி எடுக்கச் சொல்லிவிட்டினம் ஒபிசில, பிறகு என்னைக் குறை நினைக்காதேயுங்கோ என்றவாறு” மீண்டுமொரு முருங்கை மரத்தில் ஏற புறப்பட்டார் ஆள்மடக்கியான லீசிங் உத்தியோகத்தர்.

“ஆள்மடக்கி வர முன்னமே சொல்லச்சொன்னா நீ அவனை வீட்டு கேற்றடியில வைத்துக் கதைத்துக் கொண்டிருக்கிறாய் லூசா” என்று சினத்துடன் எரிந்து விழுந்த கரனுக்கு, “ஆள்மடக்கி வந்தால் சொல் என்றுதானே சொன்னனீ, இப்பதானே வரமுதல் சொல்ல வேணுமென்று சொல்லுகின்றாய்.” என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டே சொன்ன முகுந்தனை, “நரியா” என்று கூறியவாறே சென்றான் கரன்.

நிதி நிறுவனத்தில், ஏசி ரூமில் லீசிங்குக்கு எப்படி ஆட்களை மடக்குவது என்பது பற்றி புதிதாக இணைந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தான் நிறுவனத்தின் சிரேஸ்டதர உத்தியோகத்தனான றங்கன்.

ஓரமாக தான் ஓதுவதைப் பார்த்துக்கொண்டிருந்த தனது நண்பனைப் பார்த்த றங்கன் தனது ஓதலை நிறுத்திவிட்டு, “என்னடா ரமேஸ் பிரச்சினை” என்றான். “ஒன்றுமில்லை அந்த முகுந்தன் ஓட்டோ லீசிங்கை கட்டுகிறானில்லை. அலைய வேண்டியதாகக் கிடக்கிறது. ஆறுமாத தவணை கட்டவில்லை. பிச்சைக்காரன்மாதிரி அவனுக்குப் பின்னால் அலைய வேண்டியிருக்கு.” என்று சலித்துக்கொண்டவனுக்கு. “சரி சரி விடு இனி நான் அவனைப்பார்த்துக்கொள்ளுகின்றேன், அடுத்தமாதம் தவணை கட்ட வைக்கின்றேன் பார். என்று ஆறுதல் கூறி அனுப்பினான்.

றங்கன் தன்கீழுள்ள ஒருவனைக் கூப்பிட்டான். “தம்பி இன்றைக்கு நீ லோயராக நடிக்கவேணும், நாங்க போற இடத்தில நாங்க போன நேரத்தில் இருந்து நீர் ஏதாவது குறித்துக்கொண்டே இநுக்கவேணும், அப்ப அப்ப நான் சொல்லுகிறதுக்கும் தலை ஆட்டவேணும்.” என்று கூறியவாறு தனது கைப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான் றங்கன். இடையில் தனது நண்பனைக் கூப்பிட்டு “கரனுக்கு போன் பண்ணு நாங்க இப்ப வருகிறோம் என்று” என்றவனை விநோதமாகப்பார்த்தான் நண்பன். போவது தெரியாமல் போனாலே அவனைப்பிடிக்க ஏலாது. இதில சொல்லிப்போட்டுப் போனால்? மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான்.

“அடேய் இனி அவனுக்கு அட்வைஸ் பண்ணி, வெருட்டி பிரயோசனமில்லை. வீட்டுக்காரரைத்தான் வெருட்டவேணும். அதுக்கு அவன் வீட்டில் நிற்கக் கூடாது அதுதான். றங்கன் திட்டத்தையும் கெட்டித்தனைத்தையும் பார்த்து மெய்மறந்து நின்றாலும் ஏதோ ஒன்று மனதை நெருடியது ரரமேசுக்கு. றங்கன் ஜேம்ஸ்பாண்ட் பாணியில்தனது கைப்பிள்ளையுடன் கரன் வீட்டை அடைந்தான்.

“அக்கா தம்பி இல்லையோ? நாங்க லீசிங் கொம்பனியில் இருந்து வாறம். இவர் எங்கட லோயர், உங்கட தம்பி லீசிங் கட்டாததால் முதல் வாறவர் எங்கட சட்டப்பிரிவுக்கு அறிவித்து விட்டார். அதனால் ஓட்டோவை எடுக்கவும் தம்பி மீது வழக்குப் போடவும் சொல்லியிருக்கினம்.” வாயில் வந்த பொய்களை விறைத்த முகத்துடன் அவிழ்த்து விட்டான் றங்கன்.

ஐயா! அப்ப பொலிஸ் வந்து பிடிப்பினமோ? பயத்துடன் கேட்ட கரனின் அக்கா தனது வலையில் சிக்கியதை கண்சாடையில் தெரிவித்த றங்கன், “முதலில் நீதமன்றில் இருந்து கடிதம் அனுப்புவினம் அதுக்கு போகாதுவிடில் பொலிஸ் வரும்.” என்றவாறு கைப்பிள்ளையைப் பார்க்க கைப்பிள்ளை மிகத்தீவிரமாக பத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். “என்ன லோயர் ஐயா, நான் சொல்லுகிறுது சரிதானே? என்ற றங்கனுக்கு தலையை கஸ்டப்பட்டு ஆட்டினார் லோயர்.

வேற ஒன்றும் செய்யமுடியாதோ? எனக்கேட்ட முகுந்தனின் அக்காவிடம், லோயருக்கு தெரியாமல் இரகசியமாக சொன்னான் றங்கன், “பிரச்சினையில்லை, நான் லோயரைச் சமாளிக்கின்றேன், நீங்க ஒரு மூன்று தவனையாவது நாளைக்கிடையில் கட்டினீங்க என்றால் கொஞ்ச நாளைக்கு சமாளிக்கலாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுங்கோ. இது கடைசி வழி. இனி நீங்க யோசிச்சு செய்யுங்கோ.”

“நன்றி தம்பி, போனமுறை வந்தவர் அடுத்தமுறை வந்து ஓட்டோவைக் கொண்டுபோடுவன் என்று சொன்னதால தம்பி ஓட்டோவின்ர பற்றியையும் கழற்றிக்கொண்டுபோட்டான். நான் எப்படியும் நாளைக்கு மூன்றுதவனைக்காசை கட்டிவிடுறேன். கோர்ட்டுக்குப் போகாம நீங்கதான் உதவி செய்ய வேணும்.”

அடப்பாவி “பற்றறியை” வேறு கழற்றிவைத்திருக்கிறியோ? என்று நினைத்தவாறு, “நானும் இந்த ஏரியாத்தான் பயப்படவேண்டாம் நான் எல்லாவிதத்திலும் உங்களுக்குத்தான் சப்போட் பண்ணுவன்” என்றவாறு லோயரான கைப்பிள்ளையுடன் கிளம்பினான். றங்கனின் மருந்து வேலை செய்தது கரனின் அக்கா கத்திக்குழறி மூன்றுதவனையை அடுத்த நாளே கட்டுவித்தால். றங்கனின் கெட்டித்தனத்தை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் காலம் ஓடியதே தவிர அதற்கு பிற்பாடு எந்த பணமும் வரவில்லை. றங்கனுக்கும் இந்த சந்தர்ப்பம் தேவையாக இருந்தது.

தவணைப் பணத்தினை சாட்டாக வைத்து அடிக்கடி கரன் இல்லாத சமயங்களில் கரனின் வீட்டுக்கு சென்றுவரத்தொடங்கினான்.  ஆரம்பத்தில் நல்ல விதமாக கதைத்துவந்த றங்கன் மெது மெதுவாக இரட்டை அர்த்தங்களில் கதைக்கத் தொடங்கியது மட்டுமல்லாது தவணைப்பணத்தை தவிர அனைத்து விடயங்களையும் கதைக்கத் தொடங்கியிருந்தான்.

றங்கனின் நோக்கம் உணரத்தொடங்கியபோது கரனின் அக்கா கதைகளைக் குறைத்துக்கொள்ள தொடங்கினார். இதனால் கோபமடைந்த றங்கன் ஓட்டோவைத் தூக்கப்போவதாகவும், பொலிஸ் நாளை தம்பியை பிடிக்கும் என்றும் வெருட்டத்தொடங்கினான்.

இனியும் பொறுக்கமுடியாது என உணர்ந்து கொண்ட கரனின் அக்கா, கரனிடம் விசயத்தைக் கூற, கரன் அவனை வெட்டுகிறேன்பார் என கிளம்ப, “தம்பி பொறு, இப்படியான கதைகள் வெளியில் தெரிந்தால் எங்கட மானம்தான் போகும், முதல் வந்த தம்பியிடம் இவனைப்பற்றிச் சொல்லு, அதோட காசையும் கட்டிவிடு” என்று முடிவாகச் சொன்னார்.

அக்காவின் முடிவே சரியெனப்படவே முதலில் தவனைப்பணம் பெற வரும் ரமேசுக்கு போன் பண்ணிவிடயத்தை கூறினான். “மன்னிக்கவேணும் அண்ணை, எங்கட ஆட்கள் சிலர் இப்படியானவர்களாக இருக்கினம். நான் ஒபீஸில் கதைக்கிறன், நீங்களும் கொஞ்சம் தவணையைக் கட்டினால் எனக்கும் கதைக்க உதவியாக இருக்கும்” என்றான் ரமேஸ்.

வேறுவழியின்றி தவணைப்பணத்தை கட்ட தொடங்கிய கரன்,  றங்கனுக்கு தகுந்த பாடம் புகட்ட சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். கடன் தொல்லையாலும் கடன்காரர் தொல்லைகளாலும் அவஸ்தைகளும் தற்கொலைகளும் தொடரத்தான் செய்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களின் கடன் ஒப்பந்த பத்திரங்களில் உள்ள மொழி உரிமையைப்பற்றியும் எவரும் கதைப்பது இல்லை.


-    மானிப்பாய் சுதன்.

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...