உயர்தரம் படிக்கும்போது பல மைல் தூரத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் தனியார் கல்வி நிலையத்துக்கு சைக்கிளில் வேர்க்க விறுவிறுக்க வந்தாலும், இன்று வகுப்புநடைபெறாமல் இருந்தால் நல்லது என்றமாதிரி இருப்பது போல், இன்றும் நீண்ட காலத்தின் பின் பாடசாலை தொடங்கினாலும் நாளைக்கு தொடங்கினால் என்பது போன்றசோர்வு தொற்றிக்கொண்டது.
பாடசாலைக்கு வெளிக்கிடும் வரை அலைபேசியையேபார்த்துக்கொண்டிருந்தான். யாராவது போன் பண்ணமாட்டார்களா?பணிப்புறக்கணிப்பு தொடரும், ஒருவரும் பாடசாலை போகவேண்டாம் என்று சொல்லமாட்டார்களா? என்ற அவாவில்.
ஒரு மாதிரி பாடசாலை வந்தவனுக்கு மாணவர்களைக் கண்டதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. பல மாணவர்கள் தோற்றங்கள் மாறி, மாஸ்க்குடன் இனங்கான முடியாத அளவுக்கு இருந்தார்கள்.
மாணவர்களுக்கு மாஸ்க் போடுவது, கைகழுவுவது, காய்ச்சல் பார்ப்பது என்று எல்லாவற்றையும் புதினமாக சம்பிரதாயமாக செய்து கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக மாஸ்க்குகள் நாடிகளுக்கு இறங்கப்பார்த்தன. சமூக இடைவெளிக் கதிரைகள் அந்நியோன்யமாயின.
பணிப்புறக்கணிப்பு, சட்டப்படி பணிப்புறக்கணிப்பு என்ற குழப்பத்தில் சில ஆசிரியர்கள் வராது போனதால், குமரனின் பணிச் சுமை அதிகரித்திருந்தது.
நீண்டகாலத்தின் பின் சந்தித்த மாணவர்களின் அலப்பறை உச்சந்தொடத் தொடங்கியிருந்தது.
தரம் 10 “ஜி” மாணவர்களின் சத்தம் அந்த கட்டடத் தொகுதியின் அனைத்து வகுப்புக்களையும் குழப்பிக்கொண்டிருந்தது. குமரன் மிகவும் கடுப்புடன் அனைவரையும் அதட்ட வகுப்பு அமைதியானது.
என்ன சத்தம்?
மாணவர் மத்தியில் அமைதி ……..
ஏற்கனவே பல நோய்களால் அவதிப்படும் நாற்பதே வயதான குமரனுக்கு, மாணவர்களின் சத்தம் கோபத்தை உண்டாக்க, மூச்சு முட்ட, அணிந்திருந்த முகக்கவசம் மூச்சுவாங்கலை அதிகரிக்க, கோபம் இன்னும் அதிகரித்தது.
ஆனாலும் அவரது “என்ன சத்தம்?” என்ற கேள்வி பல இயலாமைகளைக் காட்டி நின்றது.
மாணவர்களைப் பார்க்க எல்லோரும் முகமூடித் திருடர்களைப்போல் இருந்தார்கள்.
நான் கேட்கிறது விளங்கவில்லை?
மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
கிரிசாந் நீ சொல்லு?
மாணவர்கள் எல்லோரும், சொல்லாதே என கண்களால் கெஞ்சினார்கள்.
“இப்ப சொல்லவில்லை என்றால் அடுத்த லொக்டவுனில் நானும் “சூம்” வகுப்பு எடுப்பேன்”, தனது பிரம்ம அஸ்திரத்தைகையில் எடுத்தார்.
“சேர் நான் சொல்கின்றேன்” பாய்ந்தெழுந்தான் சர்மா.
சொல்லு சொல்லு என ஆசிரியர் முன்னுக்குவர …..
சேர் இரண்டு மீற்றர் என கோரஸ்ஸாக கத்தினார்கள் மாணவர்கள்.
கத்தாதீங்கடா….. என்றவாறு தூர நின்றே கண்களால்சொல்லுடா…… என்பதுபோல் பாவமாகப்பார்த்தார்.
சேர், சர்மா இந்தப் பக்கம் நிற்கின்றான். என மாணவர்கள் மீண்டும் கோரஸ்ஸாக கத்த …….
அப்போதுதான் கவனித்தார் தனது மூக்குக் கண்ணாடிமுழுவதும் மூச்சக்காற்றில் உள்ள நீராவி படிந்திருப்பதையும்மாணவர்கள் மங்கலாகத் தெரிவதையும்.
இதுவேற ….., என்றவாறே கண்ணாடியைக் கழற்றிதுடைத்தவாறு சொல்லுடா என்றார்.
சேர் இவங்கள் மகிபனின் மாஸ்க்கைக் கீழே இறக்கிஎட்டிப்பார்த்தவங்கள்.
அதுக்குள்ள என்னத்தையடா எட்டிப்பார்த்தனீங்கள்? என்னகொரனா குஞ்சு போட்டிருந்ததே?
இல்லை சேர்….. அதுவந்து ….. அதையும்தாண்டி, அவன்பெரிய ஆள் ஆகிவிட்டான் சேர்.
என்னடா சொல்லுகிறீங்கள்….. மூச்சுமுட்டுது, என்னவென்று சொல்லிப்போட்டு சத்தம்போடாம இருங்கடா.
அறைக்குப்பொய் மாஸ்க்கைக் கழற்றினாத்தான் சரி.
மகிபனுக்கு குட்டிகுட்டியா மீசை முளைச்சிருக்கு சேர்...!!
அடங்க மறுக்கும் மாணவர்களின் சத்தத்தைவிட தொடர்ந்துமாஸ்க்குடன் இருப்பது தொந்தரவாக இருக்க வகுப்பறையைவிட்டு வெளியேறி வந்தவர் கண்ணில், விஞ்ஞான பாட அசிரியர் டபுள் மாஸ்க்குடன் வருவது தெரிந்தது.
என்ன சேர் சோர்வாக வருகின்றீர்கள்?
கனநாளைக்கு பிறகு வகுப்பெடுத்தது, அதுவும் இடைவெளிவிட்டு இருக்க வைத்தது, கத்த வேண்டியதாக போய்விட்டது. அதுதான் களைப்பாக இருக்கிறது. என்றார் விஞ்ஞான பாட ஆசிரியர்.
ஓ… பின்ன மாஸ்க்கோட வகுப்பெடுக்கிறது என்றால்?
பரவாயில்லை சேர் மாணவர்களை நேரபார்த்து அவங்கட குழப்படிகளை ரசித்து படிப்பிக்கிறது சந்தோசமாகத்தான் இருகின்றது.
ஓம் சேர் அது மட்டுந்தான் சந்தோசம் கடைத் தெருவுக்குப் போனால் விலைவாசிகள் தலையைச் சுத்த வைக்கின்றன என்ற யோசனையுடன் அடுத்த வகுப்பினுள் சிரித்தவாறு சென்றான் குமரன்.
