காலையில் எழும்பிய கனகர் வெளிக்கு போகிறாரோ இல்லையோ, வீட்டுக்கு வெளியில் இருக்கிற பேப்பபர்கடைக்கு போகாமல் வெளிக்குப் போகமாட்டார். இது கனடாவுக்கு பிள்ளைகளிடம் போய்வந்ததில் இருந்து உருவான பழக்கம். அதற்கு முதல் மனிசி அன்பாக கொண்டுவரும் தேநீரைக்கூட வாயில் வைக்கமாட்டார்.
நீங்க நினைக்கிறது, எனக்கு விளங்குகின்றது. அவர் தண்ணிகிண்ணி பாவிக்கிறதில்லையோ என்றுதானே கேட்க வாறியள்? நிச்சயமா இல்லை. எப்பவாகிலும் இருந்திட்டு நல்ல சந்தோசம் வந்தா தண்ணியிலதான், மற்றபடி … ஆள் சுத்தமோ சுத்தம். மனிசி கார்த்திகை மாதம் மழைக்கு குளிரும், மாசிப்பனி மூசிப்பெய்யும் காலைமையில என்று, மருந்துக்கு என்று சொன்னாலும் ம்கூம்ம்ம… பாவிக்கவேமாட்டார்.
கனடாவில் வைத்து மகனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார், இனி நீ யாழ்ப்பாணம் வரும்பொழுது யாழ்ப்பாணத்துக்குள் காணி வேண்டி, கட்டின வீட்டுக்குத்தான் வருவாய். பழைய வீட்டை யாருக்கும் வாடகைக்கு விட்டுவிடுவேன். ஏன்ர பேரப்பிள்ளைகள் அங்கு நிற்க ஏலாது குந்தி இருக்கேலாது. வந்துபார் அப்பாவின் திறமையை என்று.
கனடாவால் வந்ததில் இருந்து தினமும் கோயில் ரோட்டில் காணி விற்பனைக்கு உண்டோ என வரிக்கு வரி விளம்பரங்களெல்லாம் தடவுவதுதான் வேலை. இப்ப விளங்கியிருக்கும் ஏன் கனகர் காலைமையில் பேப்பர் கடைக்கு ஓடுகிறவர் என்று. சொல்லாத புறோக்கருமில்லை வேண்டாத கடவுளுமில்லை. ஆனால் முருகனுக்குப்பக்கத்திலதான் நான் இருக்கவேணும் என்றுமட்டும் முடிவு செய்துவிட்டார் கனகர்.
ஆ… காணியும் இருக்கு போன் நம்பரும் இருக்கு ….. “ஹலோ …. நான் கோண்டாவில் இருந்து கனகர் கதைக்கிறேன், உங்கட காணிவிளம்பரம் பார்த்தனான்….” கனகர் முடிப்பதற்கிடையில், “ஐயா புறோக்கர்மாருக்கு நாங்கள் கொடுக்கமாட்டம். நேரடியாகத்தான் கொடுப்பம். என்று போனைவைத்துவிட்டார் காணிக்காரர். கனகருக்கோ என்ன என்று விசயம் விளங்கவில்லை.
கண்ணாடியைப் போடாமல், கைகேசியில் இருக்கும் இலக்கங்கள் மங்கலாகத்தெரிய, கண்ணாடியை தேடி எடுத்து போட்டுக்கொண்டு, திரும்ப கதைப்பதற்குள் யாரும் காணியை புக் பண்ணிவிடுவாங்களோ என்ற அந்தரத்தில், கழுத்தைப் பின்பக்கமாக இழுத்து தலையை சற்று கீழாக முன்னுக்குத் தள்ளி, கையை கிடைமட்டத்தில் இருந்து ஒரு முப்பது பாகை கீழ் இறக்கி போனை ஒரு நிலையில் வைத்து கையால் முதலில் அழைத்த இலக்கத்தை மீள அழைப்பதற்காக ஒரு தட்டுத்தட்டிய கனகரின் அழகைப்பார்த்து சொக்கிப்போய் நின்றால் கனகரின் மனைவி.
…..வாதஞ் சயித்தியம் விலப்புப் பித்தம்…. சூலை சயங் குன்மம் சொக்கு … என்ற கந்தச~;டி பாடல் வரிகள் அருகில் உள்ள முருகன் கோயிலில் இருந்து கேட்க…. கனகரின் அழகில் சொக்கிப்போயிருந்த மனைவி, கனகரிடம் “ஏனப்பா எங்கட வீட்டுக்குப் பக்கத்திலையும் முருகன்தானே இருக்கிறார். பிறகெதற்கு அந்த முருகன் கோயிலுக்கு பக்கத்தில…. என்றவளை முறைத்த கனகர், “ அடியேய் உன்ர கொப்பரின்ர வீட்டுக்கிட்ட இருக்கிறவர் ஆண்டி முருகன், அவரைவிட பணக்கார முருகன் இவர்…. ஆனால் இவரை விட பணக்கார முருகன் அவன்…. வாழ்க்கையில அப்படியே படிப்படியாக முன்னேறனுமடி நம்மட பரம்பரை” என்றார்.
மனைவியோ என்ன இருந்தாலும் சொந்தம் பந்தத்தோட சொந்த ஊரில இருக்கிறமாதிரி வராது என்றுதான் தோனுது. வருசத்துல ஒருக்கா வந்து நாலுநாள் நிக்கிற பிள்ளைக்காக… எப்படியும் கடைசியில் சந்நதிக்குத்தானே……. என்றவளை… முறைத்த கனகரைத் தொடர்ந்து முறைக்கவிடாமல் கைபேசி லைனுக்கு வர, ஆ…. தம்பி நான் புரோக்கரில்லை, நீங்க தப்பா நினைச்சு…..என்றவரை இடைமறித்த காணிக்காரர், ஐயா அது கொடுத்திட்டன் என்று லைனைக் கட் பண்ணிவிட்டார். முதல் முறையாக தனது தகப்பன் மீது கோபம் வந்தது கனகருக்கு தனது பெயர்பற்றி;
திரும்பவும் கைபேசி அழைக்க, கைபேசியைப்பார்த்தார் கனகர், புரோக்கர் ஒருவர் லைனில், ஐயா காணி ஒன்று இருக்கு பார்க்கப்போறீங்களோ, என்று கேட்க. ஓம்தம்பி பார்ப்பம் எத்தனைபரப்புத் தம்பி என்று கேட்டார்?
மூன்று பரப்பு காணி ஐயா, இரண்டாகப்பிரிக்கலாம், முன்காணித்துண்டால் பாதைவிடவேணும், நீங்க வந்து பார்த்தீங்க என்றால், உங்களுக்கு முன்னுக்கோ பின்னுக்கோ என்று முடிவு செய்யலாம். கனகரின் மனதிலோ, என்னடா மூன்று பரப்பை இரண்டா பிரிக்கிற கதை கதைக்கிறான் என்னிடம் இருக்கிற காசுக்கு மொத்தமாக வேண்ட வேண்டியதுதான் என்று யோசித்தவாறு கிளம்பினார். காணியிருக்கும் இடத்துக்கு.
பிரதான வீதியில் காத்திருந்த புறோக்கர் கனகரை பிரதான வீதியில் இருந்து காணியிருக்கும் இடத்துக்குச் அழைத்துச் சென்றான். ஏன்னடா தம்பி மெயின் ரோட்டில இருந்து 200 மீற்றர்தான் என்றாய், இப்ப நாங் இரண்டு கிலோமீற்றர் உள்ளுக்கு வந்திட்டம் போல?
ஐயா அது நீங்க இந்த இடத்துக்கு புதிதாக வந்ததுதானே, அதுதான் தூரம் மாதிரித்தெரியுது என்றவனை இடைமறித்த கனகர், “ஏன் மோட்டர்சைக்கிளின்ர மைலோமீற்றர் கேபிளும் முதல் தரம் போகும்போது அப்படியே காட்டும்? என்றார் கடுப்பாக.
வந்திருந்த நாலைஞ்சு புரோக்கர்மாரும் சேர்ந்து கனகர் ஏதோ அடக்கமுடியாத பகிடி விட்டதை போன்று சிரித்தார்கள், சிரித்தபடியே ஐயாவை ஏமாத்தேலாது. இந்த வயதிலேயே இப்படி என்றால் அப்ப எப்படி? என்று சொன்னதைக் கேட்ட கனகர் தனது பழைய வீரதீரங்களைச் சொல்ல வெளிக்கிட்டார். கடைசியில் மூன்றுபரப்பும் எவ்வளவு என கேட்க? அவர்களோ சாதாரனமாக மூன்றுக்கு முடிக்கலாம் என்றார்கள். கனகருக்கு தலை சுற்றியது. தன்னிடம் இருப்பதோ இரண்டுதான், இன்னும் ஒண்டுக்கு ஏங்கே பொறது? மகனிடம் கேட்டாலும் பிறகு வீடு கட்ட? என்னடா தம்பி போன மாதந்தானே 50,60 என்று சொன்னீங்கள் இப்ப இப்படி குண்டைத்தூக்கி போடுறியள்?
ஐயா அது வங்கி வட்டி குறைக்கமுதல் இது குறைத்த பிறகு. இதுக்குமேலேயும் போகும். காணிக்காரர் நல்ல பார்ட்டிக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று சொல்லிப்போட்டார், உங்களோடு சேர்ந்து வேண்டுகிறவரும் டொக்டர் ஓருத்தர். அவரும் நல்ல பார்ட்டியாக சேர்க்கச் சொல்லீட்டார். நாங்க அதுதான் உங்களுக்கு காட்டினாங்கள். விலை கூட என்றால் சொல்லுங்கோ கொஞ்சம் தள்ளி ஒரு காணி கிடக்கு ஆனா கோயில் மணிச்சத்தம் கேட்காது என்றார்கள்.
கனகருக்கு இப்ப நாலுமாதமாக அலைந்த களைப்பு, புரோக்கர்களன் வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து உசுப்பேத்த முன்துண்டு முடிவானது. பின்துண்டுக்கு பாதைபோக மிஞ்சியது ஒன்றேகால் பரப்பு. ஆனால் பின் ஒன்றரைப்பரப்பில் ஆசுப்பதிரியில் வேலை செய்யும் ஒருவர்தான் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.
வீடு கட்ட தொடங்கவும் “கொரனா” வரவும் சரியாக இருந்தது. இருந்தாலும் கனகர் அங்க சுழிச்சு இங்க சுழிச்சு வீட்டைக் கட்டினார். மலசலக்குழி கட்டும்போது, இரகசியமாக எடுத்த அனுமதியை விட கெட்டித்தனமாக குழியின்பக்கச்சுவரில் ஒரு வாழைக்குத்தியை வைத்து கட்டிவிட்டார். அடிக்கடி நிரம்பாமல் இருக்க வேண்டுமெல்லோ. ஆனாலும் தொடர்ந்து இருக்கப்போவது மனுசனும் மனிசியும் மட்டுந்தான். இரண்டுபேர் இருந்து? மேசனின் யோசனை எங்கோ போனது.
ஒருமாதிரி முகக்கவசங்களுடம் குடிபூரலும் நடாத்தி வீட்டுக்கு வந்த கனகர் மல்லாக்கப் படுத்திருந்தபடியே சொர்க்கத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். சொர்க்கத்தில் இருந்தவரை “என்னப்பா எல்லாமாச் சேர்த்து ஒரு ஒரு இரண்டரை முடிஞ்சிருக்குமென எனக் கேட்டவளின் முகத்தைப்பார்த்த கனகரின் முகத்திலும், கொஞ்சம் அதிகந்தானோ? என்று யோசனை தெரிந்தது. இருந்தாலும் என்னடி பெரிய பணம் மகன் கனடாவில் உழைக்காத காசா? பிள்ளையள் வந்து சந்;தோசமாக நிற்கவேணும்.
அதுக்கு பிள்ளையள் வரவேணுமே? கொரனா இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போகின்றதோ? என்ற பத்தினி, இஞ்சேரப்பா மழை பெய்யுது உடுப்பை எடுத்துப்போடுங்கோ என்றாள்.
மழை தொடர்ந்து பெய்யவும், கனகர் கடைக்கு போட்டுவாறன் என்று கிழம்பினார். கடையடிக்கு செல்லவும் மழை கொட்டத்தொடங்கியது. ஒரு மணித்தியாலம் மழை பொழிந்து தள்ளி சிறிது ஓய்ந்துகொள்ள கனகர் அடுத்த மழைவரமுன் வீட்டுக்குக் கிளம்பினார். தனது ஒழுங்கைக்குள் வந்தவருக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒழுங்கையில் முழங்காலுக்கு மேலே வெள்ளம். எப்படி வீட்டுக்குப்போவது என்று நினைத்தவருக்கு வீட்டுக்குள் வெள்ளம் வந்திருக்குமோ என்ற நினைப்பு வர மனைவிக்கு போன் எடுத்தார். கைபேசியில் தாராளமாக மனைவியிடம் இருந்து மிஸ்ட் கோல்கள், மழை இரைச்சலில் கனகருக்கு கைபேசியின் அழைப்பு கேட்கவில்லை. மனைவிக்கு அவசரஅவசரமாக போன் எடுக்க, எங்கேயப்பா நிற்கிறியள்? வீடு முழுக்க மழைவெள்ளம். நான் இப்ப கட்டிலுக்குமேல இருக்கிறேன்….. என்று மனைவி அலற, நான் வாறன் … நான் வாறன், என்று கைபேசியை தூக்கிபிடித்தபடி நடந்தார். தண்ணீர் மட்டம் முழங்காலுக்கு மேல் வந்து, மேலே மேலே ஏற, முருகா என்னையும் கோ…….துடன் போகவைச்சிட்டியே என்று நொந்தபடி வெள்ளத்துடன் ஐக்கியமாகி வீடுவந்து சேர்ந்தார் கனகர்.
மலசலகூடத்துக்குள்ளாலும் தண்ணீர்வர கெட்டித்தனமாய் வாழைக்குத்தி வைத்தது கனகரின் ஞாபகத்துக்கு வந்தது.
மானிப்பாய் சுதன்
