பல வருடங்களாக பூட்டி இருந்த, அந்த வீடு சில நாட்களாக களைகட்டியிருக்கின்றது. வாகனங்கள் வருவதும்போவதுமாக இருந்தாலும் மக்கள் கூட்டம் ஏனோ இல்லாமலேயே காணப்படுகின்றது. வாகனங்களில் வந்துபோவோரில் பலரும், புதிதாக மணவறைக்கு மட்டும் வேட்டிகட்டி வரும் மாப்பிள்ளைகள்
போல் காணப்பட்டனர். நிச்சயமாக அவர்கள் சாதாரணமாகவோ அல்லது பாரம்பரிய விழாக்களிலோ வேட்டி கட்டியவர்களாக தெரியவில்லை. ஏதோ ஒரு படப்பிடிப்புக்கு கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புலப்பட்டது.
இந்த திடீர் கதாநாயகர்களுக்கு
அல்லைக்கையாக நடிக்கத்தான் நான் அழைக்கப்பட்டிருக்கின்றேன். அங்கிருந்தவர்களில் முக்கிய
கதாபாத்திரம் ஏற்றிருந்தவர்கள் எவரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக
தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் பேச்சில் யாழ்ப்பாணம், தாயகம், தேசியம் …. என பல சொற்றொடர்கள்
வந்து விழுந்துகொண்டிருந்தன.
ஆ….. வாடா தம்பி, யார்
அனுப்பினது? அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் கேட்க, மணியரசன் அனுப்பிவிட்டவர் என்று
நான் கூற,
வாங்கோ…. வாங்கோ, அண்ணை
என்றவர், மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னார், இவர் யார் தெரியுமே? எங்கட தலைவரோட
ஒன்றாக இருந்தவர். இப்ப கொஞ்சம் கஸ்டப்படுகின்றார். அதுதான் எங்களோட கொஞ்ச நாளைக்கு
வேலைக்கு வரச்சொன்னனான். வெளியில் இருந்து வருகின்ற காசில சம்பளம் கொடுப்பம். அப்பதான்
அனுப்புகிறவங்களுக்கும் படம் காட்டி இன்னும் வேண்டலாம். சனத்துக்கும் நாங்கள் ஏதோ அவங்கட
பிரதிநிதிகள் போல படம் காட்டலாம்.
தம்பி, இருங்கோ கொஞ்ச
நாளைக்கு எங்களோட இந்த வீட்டிலேயே இருங்கோ, நாங்கள் கொஞ்சம் வேலைச்சுமையில் இருக்கிறதால,
வீட்டை நீங்தான் கவனிக்கவேணும். சாப்பாடு எல்லாம் நாங்கதாறம். நீங்க வீட்டை பாருங்கோ
நாங்க நாட்டை பார்க்கின்றோம். என்றவர் குறைநினைக்கக் கூடாது, தெரியுந்தானே பழைய நிலைமைகள்
இப்ப இல்லை, எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், நாங்க வென்றால், உங்கட இலட்சியம் வென்ற
மாதிரிதானே? இப்ப ஜெனீவா கன்ரீனுக்கு போய்வருகிற நாங்கள், பிறகு உள்ளுக்குள்போய் சர்வதேசத்தின்
உதவியோட ….., உங்களுக்கு எல்லாம் விளங்குந்தானே? என்றார்.
என் மனதுக்குள் அழுவதா?
சிரிப்பதா? என்று தெரியாமல், அவர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிந்ததால்
வீட்டை துப்பரவாக்க தொடங்கினேன். முன்னரும் ஒரு வீட்டை துப்பரவாக்கி கொடுத்தது. அதுவேறு
துப்பரவு இது வேறு துப்பரவு.
தம்பி ஒரு நாலு தேநீர்
கொண்டாடாப்பா குரலில் அதிகாரம் பறந்தது. தேநீரைக்கொண்டு வந்தபோது, முன்கோலில் வந்திருந்த
ஒருவர், துரையண்ணை!!! என்ன இப்படி? என்றார் ஆச்சரியம் தாளாமல். நீங்க அங்கே இருந்தபோது
நான் உங்களைச்சந்தித்தனான் ஞாபகம் இருக்குதோ? என்னைப்பற்றி வந்திருந்தவர்கள் உயர்வாக
நினைப்பதை உணர்ந்த வேட்டிக்காரர், தம்பிதான்
இப்ப முழு ஆதரவும், இரவிரவாக இருந்து கதைப்பம், தம்பி சொல்லுகிற விடயங்களை வைத்துத்தான், அடுத்தநாள் எங்கடை களப்பணி
தொடரும், நீங்க துரையென்றே சொல்லுகிறனீங்க, நாங்கள் தம்பி என்றே கூப்பிட்டு பழகிப்போச்சு
என்று சமாளித்தார்.
இரவிரவாக “சூமில்”,
“வைபர்கோலில்” வெளிநாட்டுக்காரரிடம் காசு வேண்டுவதற்காக அவர்கள் சொல்லும் லூசுத்தனமான
விடயங்களுக்கெல்லாம் தலையாட்டுவது, எனக்கெல்லவோ தெரியும்.
சண்டைநேரம் ஊரைவிட்டுட்டு
ஓடினதெல்லாம் சமூகவலைத்தளங்களிலும் தேசிய வடைசுடல் போட்டி போடுறதை இரவில் பார்த்தால்
நிச்சயமாக தூக்குப்போட்டுச் சாகவேணும்போல் தோன்றும்.
தம்பி இன்றைக்கு கிராமம்
கிராமமாக பரப்புரைக்கு போகவேணும் நீங்களும் எங்களோடு வரவேணும், கட்டுறதுக்கு வேட்டி
இருக்குத்தானே? இல்லாவிடில், இங்கே இருக்கிற ஒன்றைக்கட்டிக்கொண்டு வாங்கோ என்றார்,
தேசிய அமைப்பாளர் எனப்படுபவர். எனக்கோ இன்றைக்கு என்னை வைத்து என்ன கூத்துக்காட்டப்போகிறாங்களோ
தெரியாது என்று பதட்டமாக இருந்தது.
ஒரு மாதிரி வேட்டியை
கட்டிக்கொண்டு வெளிக்கிடும்போது வீதி முகப்பில்
இருந்த வைரவரை கும்பிடுவம் என்று கையைத் தூக்க, தம்பி கும்பிடவேண்டாம் அப்படியே திரும்பு
என்றார்கள்.
ஏன் அண்ணை நல்லவிசயத்துக்கு
போகும்போது கடவுளைக்கும்பிட்டு போகிறது நல்லந்தானே என்றேன் வெள்ளந்தியாக, நீங்க வைரவரை
கும்பிட்டால், பிறகு நாங்கள் மத சார்பான கட்சி என்று சொல்லிப்போடுவாங்கள், பிறகு கிறிஸ்தவர்களின்
வாக்குகள் கிடைக்காது.
ஏன் அண்ணை தமிழ்தேசியம்
என்றால்? தமிழர்களின் பாரம்பரிய மதஅடையாளம் சைவம்தானே? போர்த்துக்கேயர், ஒல்லாந்தார்,
ஆங்கிலேயர் போன்ற அந்நியர்தானே வேற்று மதத்தை பரப்பினவை, தழிழர் மத்தியில், அப்ப இரகசியமாக
பிரபலமடைந்ததுதானே வைரவர் வழிபாடு, இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் தெரியுந்தானே? அவர்கள்
ஏன் பிழையாக நினக்கப்போகின்றார்கள்? அவர்களே தற்போது தமிழர்களின் பல சமய பாரம்பரியங்களை
பின்பற்றுகின்றனர். பாரம்பரிய அடையாளங்களை விட்டுட்டு எப்படி தமிழ்தேசியம்?
தம்பி உனக்கு விளங்காது,
வாக்குகள் வராவிட்டாலும், பூகோளமயமாக்களில் எங்கட சமயத்தை வெளிநாட்டுக்காரர் விரும்பமாட்டினம்,
அத்தோட எங்களுக்கு காசு தருகிறவங்க பெரும்பாலும் வெளிநாடுகளில் மதம் மாறியவர்கள். பிறகு
பணமும் வராது.
ஓ…. இதுவும் தமிழ்தேசியத்துக்கான
தியாகம்தான்!!! என்று நினைத்தபடியே, அப்ப மதம் சார்பாக ஒன்றும் செய்யமாட்டியளோ அண்ணை?
ஏன் செய்ய மாட்டம், ஒரு
இரண்டு ஆயரிட்டையும், ஒரு இரண்டு கந்தன், வடிவேலன்
போன்ற சாமிகளிடம் சென்று இரண்டு மூன்று சந்திப்புக்களை மேற்கொண்டால் சர்வமதரீதியான
சந்திப்பாகின்றது.
அண்ணை அவரைப்பாருங்கோ,
ஆஸ்பத்திரி வாசலில் டொக்ரரின் காலில் விழுந்து கும்பிட்டுகொண்டிருக்கின்றார், ஏன்?
உடனடியாக அவ்விடத்துக்கு ஓடிச்சென்ற அவர் ஏதோ சொல்லிச் சமாளித்துக்கொண்டு விழுந்தவரை
அழைத்து வர, ஏன் அண்ணை நீங்க டொக்ரரின் காலில் விழுந்து கும்பிட்டனீங்கள்?
அது தம்பி வெள்ளைக்கோர்ட்
கொஞ்சம் நீளமாக இருந்துச்சா…., நான் யாரோ “பாதர்” என்று நினைச்சிட்டன். சரி பரவாயில்லை
முகநூலில் போடுங்கோ கொரனாவில் இருந்து காப்பாற்றிய தெய்வங்களை காலில் விழுந்துவணங்கிய
வேட்பாளர் வெடியரசன் என்று.
இரவு வீட்டில் ஒரே சண்டை,
என்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தவில்லை, அவர் தன்பெயரை முன்னிலைப் படுத்துகின்றார்.
தலைவர் நீங்க இதைக்கவனிக்காவிடின் எனக்கு வேறு வழியில்லை, நான் ஒருமாம்பழ கூடையோடு
கிளம்பிடுவன்.
ஏன்டா அப்பம்தானே கொடுப்பாங்க,
கொண்டுபோவாங்க? நீ என்னடா மாம்பழம் என்று சொல்லுகின்றாய்? அது நாரதர் விழையாட்டல்லோ?
என்ன? அண்ணை நீங்க எந்தக்காலத்தில
இருக்கிறீங்க இப்ப மாம்பழ காலம், மாம்பழம் கொடுத்து அவனவன் பிரபலமாகிறான், நீங்க இப்பவும்
காஞ்சுபோன அப்பத்தோடு நிக்கிறீங்க?
எனக்குத் தலைசுற்றியது,
போங்கடா நீங்களும் உங்கட தேசியமும் என்றவாறு வேட்டியை கழற்றிபோட்டுவிட்டு கோ…………..துடன்
கிளம்பினேன். இதுதான் இனி ஒவ்வொரு …….???
மானிப்பாய்
சுதன்

