காலை நேர பரபரப்பில் காங்கேசன்துறை வீதிநெருக்கடிக்குள் சிக்கிவிட, வாகனங்கள் சீறிப்பாய்ந்தவண்ணம் இருந்தன. பாடசாலையில் மகளை இறக்கிவிட்டபின் அங்கு சென்ற போது, வீதியின் பிரதான சந்தியொன்றில் வீதியின் அருகே அமைந்துள்ள அந்தச் சிறிய கட்டிடத்தில் இருக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிறைந்திருந்தது. எல்லோரது வாய்களும் அமைதியாக ஆனால் கண்களும், மனமும் பரபரத்துக் கொண்டிருந்தன.
சிலர் சபித்துக்கொண்டனர், சிலர் சலித்துக்கொண்டனர், சிலர் எப்படியாவது தமது கைகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தவிப்பில் இருந்தனர். பார்வைகள் பேசிக் கொண்டன.
சிலர் எதிலும் பட்டுக்கொள்ளாமல் தமது தொலைபேசிகளை நோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது எரிச்சலாக வந்தது. தொலைபேசியை நோண்டுவதற்கு இங்கு எதற்கு வந்தார்கள். இருக்கைகளையும் நிரப்பிக்கொண்டு. இப்படித்தான் பலர் அலுவலகங்களில் வாழ்கின்றார்கள். அவர்கள் ஓய்வு பெறும்போது, "இவர்களது சேவைமகத்தானது. இனிமேல் அவர்களது சேவை கிடைக்க மாட்டாது! என்னும் போது ...." வெட்டிப் பாராட்டுக்கள் தொடரும்.
ஒருவரது பொறுமை எல்லை கடந்து கொண்டிருந்தது. கைகள் பரபரத்தன. "தம்பி உதை ஒருக்காத் தா" உடனே தருகின்றேன் எனக் கெஞ்சலாகக் கேட்டார். அந்தத் தம்பியின் முகத்தில் சினம் படர வேண்டா வெறுப்பாகத் தள்ளிவிட்டான். முதியவரோ அவன் சினம் பற்றி கொஞ்சமும் கவனமெடுக்கவில்லை. ஏன் நன்றி கூடச் சொல்லவில்லை. ஆனால் அவரது முகமும் கடுப்பேறிக்கொண்டது. ஓ? இதுதான் மனநிலை மாற்றமோ? அரசியல் தலைவர்கள் தேர்தலில் கெஞ்சி வாக்குக் கேட்பதும் தேர்தல் முடிந்தபின் எப்படி முகத்தை வைத்திருப்பார்களோ அப்படி இருந்தது அந்த இளைஞனுக்கு. இப்படியானவர்களை வேடதாரிகள் என்பார்கள் சிறப்பாக கபடதாரிகள் என்றும் சொல்வார்கள்.
அவன் மறுபக்கத்தில் இருந்த பெரியவர் எதையோ வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இவன் முயற்சித்தான் ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. என்னவாக இருக்கும்? ஏதேனும் வட்டுக்கோட்டை பொலிசார் படங்களோ? ஒருத்தனை சித்திரவைதை செய்து கொண்டவர்கள் அதனால் கோபமாகப் பார்க்கின்றாரோ? ஆனால் அவரது பார்வை ஒன்றும் அப்படியான "ரௌத்திரம்கொள்" பார்வைபோல் தெரியவில்லை? இது ஏதோ ஜொள்ளுவடிகின்ற வெறித் தனமாகவெல்லோ இருக்கின்றது. எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குந்தானே அப்போ பார்த்துக் கொள்கின்றேன்.
இதென்னது இந்த மனுசன் கையில அதை வைத்துக் கொண்டு, அதைத் தவிர மற்ற எல்லாரையும் கீழ்க் கண்ணால பார்த்துக் கொண்டிருக்குது? ஓ... இவரின் திட்டம் விளங்கி விட்டது தனக்கான சந்தர்ப்பத்தை தானே உருவாக்குகின்றாராம். யாரிடம் தனக்குத் தேவையானது இருக்கின்றது என்று வேவுபார்க்கின்றார். அவர் விடயத்தை முடித்ததும் இவர் பண்டமாற்று செய்து கொள்வார். சீனி விலை ஏறப்போகுது என்று வந்தாலே சீனியைப் பதுக்கி விட்டவர்களிடம், சீனி இருக்கோ? எனக் கேட்டால் தலையைக் கீழே போட்டு மேற்கண்ணால் பார்ப்பார்களே ஓர் ஆந்தைப் பார்வை அதுமாதிரி. அந்தப் பார்வையில் ஆயிரம் உளவாளிகள் தெரிவார்கள். இவருக்கு சீனி அவசரமா? எவ்வளவு கொடுத்தும் வாங்குவாரா? வாங்கிவிட்டு மாட்டிவிடமாட்டாரா? வழமையாகக் கடைக்கு வருபவரா? அப்பப்பா இது அனுபவப் பட்டவர்களுக்குத் தான் தெரியும். சிந்தனையைக் குழப்பியது அருகிலிருந்தவரின் குரல்.
"என்றாலும் நேற்று அவர் உங்களுக்குச் செய்தது பிழை"
எனக்கா? எனக்கு அவர் பிழை செய்தது இவருக்கு எப்படித் தெரியம்? இவர் யார்?, அவரை எப்படி இவருக்குத் தெரியும்? என்னை எப்படி இவருக்குத் தெரியும்? எனக்குப் பல பிழைகள், துரோகங்கள் அவர்கள் செய்கின்றார்கள். அதில் எந்த அவரை இப்ப நான் நினைப்பது? நான் நினைக்கின்ற அவரும் இவர் நினைக்கின்ற அவரும் ஒன்றா இருப்பாரோ? அல்லது இவர் நினைக்கின்ற அவரும் நான் நினைக்கின்ற அவரும் வேறு வேறு அவர்களாக இருப்பபார்களோ? அப்படியென்றால் அவர்கள் இருவரும் யார்? எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
முதலில் இவர் யார்?
பார்க்க அரசாங்க உத்தியோகத்தர் மாதிரி இருக்கின்றார். வெள்ளைச் சேட்டு, சப்பாத்து என கௌரவமிக்கவராக இருக்கின்றார். இப்பிடித்தானே எரிக் எண்டவரும் நோர்வேயில் இருந்து வந்தவர். வெள்ளையா இருக்கிற ஒரேகாரணத்துக்காக நம்பி மோசம் போன கூட்டம் நாங்க. எதற்கும் சூதானமாகத்தான் அணுகனும். கடவுள் மட்டுமில்லை, இப்படிப்பட்டவர்களும் ஏகனாய் அனேகனாய் உலகெங்கும் வியாபித்துத்தான் உள்ளார்கள்.
என்ன சொல்லுறீங்க? யார் அவர்? என்ன செய்தார்? எனது கேள்விகள் அனைத்தும் விளங்கியதா தெரியவில்லை அவருக்கு. ஆனால் இப்போ கண்களால் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருக்கின்றார். ஏதோ சொல்ல வருகின்றார் ஆனால் எனக்குத் தான் ஒன்றும் விளங்கவில்லை.. ஒருவேளை ரஸ்யாவின் மொசாட்டில் வேலை செய்திருப்பாரோ? கண்களாலேயே செய்தி சொல்லக் கூடியவரோ? ஆளைப் பார்த்தால் அந்தளவுக்கு விவரமான ஆளாகவும் தெரியவில்லை.
எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் வாயைத்திறந்து சொல்லுங்கோ அண்ணை. மெதுவான கிசுகிசுப்புக் குரலில் கேட்டேன். ஆனால் என் கிசுகிசுப்பு அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாகக் கேட்டு விட்டது போல் இருந்தது. அனைவரது காதுகளும் புடைத்துக் கொண்டன. சிலர் ஓரக்கண்ணால் இவரின் உதட்டசைவைக் கூட அவதானிக்கத் தொடங்கினர்.
இவரோ, அவர்கள் எவரையும் கருத்தில் கொள்ளாமல் "நேற்று நீங்கள், அவர் கேட்க உடனே பாவம் வயதானவர் என்று கொடுத்து விட்டீர்கள். அவரோ அதனை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டார். உண்மையில் உங்களிடம் தானே தந்திருக்க வேண்டும்."
எனக்கு இப்போ விளங்கியது. நேற்றைய சம்பவம் ஒன்றுக்காக இன்று நியாயம் அநியாயம் பற்றி எனக்கு ஆறுதல் சொல்கின்றார். அல்லது என்னை உசுப்பேத்தி விடுகின்றார். இப்படித்தான் உலக நாடுகள் முள்ளிவாய்க்காலில் சனம் கொத்துக் கொத்தாகக் குண்டடிபட்டு இறக்கும்போது, காயங்கள் அடையும் போது மௌனமாக இருந்துவிட்டு, தங்கள் நலனுக்காக இப்போ இடையிடை மனிதப் பேரவலம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் எனப் புலம்புவது போல் இருந்தது. எனக்கு ஏதோ இதைத் தொடர மனமில்லாமல் ஒருவர் மீது பார்வை பதிந்தது.
எல்லோர் கவனமும் எங்கள் மீது இருக்க ஒருவர் மட்டும் குழப்பமான முகத் தோற்றத்துடன் சோர்வாக இருந்தார்.
என்னாச்சு இவருக்கு? இவர்தான் எல்லாப் பத்திரிகைகளையும் பாய்ந்து காய்ந்து படிச்சிட்டாரே? இந்தியப் பத்திரிக்கையான தினத்தந்தியைப் பார்த்து எந்தெந்த நேரம் எந்தச் சனலில் என்ன சீரியல் என எல்லாம் குறிப்பெடுத்தும் கொண்டாரே? அப்புறம் எதற்கு இந்தக் குழப்பம்?
என்ன ஐயா? கடுமையான யோசணை? ஏதேனும் பிரச்சினையோ?
உவங்கள் அறுவாங்கள் ஒவ்வொரு பேப்பரிலையும் ஒவ்வொருமாதிரி போட்டா நாங்க எதை நம்பிறது? எப்படிமுடிவெடுக்கிறது?
என்ன பிரச்சினை ஐயா? என்னத்த மாறி மாறி போட்டிருக்கின்றாங்கள்?
இன்று சிம்ம ராசிக்கு .....
ஐயா நிப்பாட்டுங்கோ ராசிபலனை பற்றியே கதைக்கிறியள்? அது அப்படித்தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான் குழப்பமாக இருக்கு என்றபடி அந்த சனசமூக நிலையகட்டிடத்தில் இருந்து சிரித்தபடி வேலைக்குக் கிளம்பினேன்.
- மானிப்பாய் சுதன்
https://orupaper.com/posts/hgg4ct0uvsoafxa