Monday, December 11, 2017

கல்யாணியின் சீப்பு. --- (28.08.2016,சங்குநாதம் - வலம்புரி நாளிதழ்)



யாழ்ப்பாணத்தின் அடையாளமாகிவிட்ட நல்லூர்க்கந்தனின் திருவிழா தொடங்கியதில் இருந்து திருவிழாவுக்கு ஒருநாளாவது போகவேண்டும் என்ற உந்துதல் எல்லோர்மனதிலும் தோன்றுவதுபோல கல்யாணியின் மனதிலும் அந்த ஆசை துளிர்விட்டிருந்தது. கணவன் மனைவி இரண்டுபேருமே அரசாங்க உத்தியோகத்தில் வேலை. இதுபோதாது என்று பணம் பணம் என்ற மந்திரத்தையே தாரக மந்திரமாகக் கொண்ட கல்யாணியின் கணவன் மயூரனுக்கு இதில் எல்லாம் நாட்டம் இல்லை. கோயிலுக்குபோகின்ற நேரத்தில் நாலு வாழைத்தோட்டத்துக்கு இறைத்தால் பரவாயில்லை என்ற கொள்ளையுடையவன். ஆனாலும் ஒட்டுமொத்த மக்களையும் ஆட்கொண்ட நல்லூர்த்திருவிழா அவனையும் ஆட்கொண்டது.

“ஹலோ! ….”
“கல்யாணி இன்று நல்லூருக்கு போவோம், மஞ்சம் பார்க்க, என்னமாதிரி” என்றவனின் குரலை நண்பமுடியவில்லை கல்யாணியால். யாரும் வாழைக்குழைப் புறோக்கர்மார் கோயிலடிக்கு வருகினமோ இன்று. இந்த மனுசனுக்கு என்ன பிடித்தது. வியாழமாற்றத்திலும் அப்படி ஒன்றும் பெரிதாக நல்லாதக போடவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தவளை மயூரன் குரல் மீண்டும் பூவுலகத்துக்கு கொண்டு வந்தது.
“என்ன ஒன்றும் பேசாமல்? நேரம் வராதோ?”
“இல்லை இல்லை போவோம். என்ன தீடீரென்று?”
“தீடீரென்று ஒன்றுமில்லை. வேலையால் வந்து கோயிலுக்கு போவோம். இரவுச் சாப்பாட்டை கடையொன்றில் எடுப்பம். வேலையால வந்ததும் நீர் வெளிக்கிடத்தொடங்கும் பிறகு அதைக்காணவில்லை, இதைக்காணவில்லை என்று மினக்கிடமால். என்றவன் போனை வைத்தான்.

மயூரன் பொருட்களை வைத்தஇடத்தில் வைத்து எடுப்பவன். கல்யாணி அவனுக்கு நேர்மாறு. அதனால் மயூரனுக்கு என்ன பொருட்கள் தேவையென்றாலும் கல்யாணியிடம் அதை கேட்கும்போது வீடு ரணகளமாயிடும். என்ன மந்திரமோ மாயமோ தேடும் பொருள் மட்டும் கிடைக்காது. அதை விட முக்கியம் எந்தப்பொருட்களையும் கிடைத்த இடத்தில் வைப்பதில் கல்யாணிக்கு நிகர் எவருமில்லை.

ஒரு முறை வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருந்தபோது வீட்டில் இருந்த எந்த சாப்பாட்டுக்கோப்பைகளையும் காணவில்லை. விருந்தினர்களை இருத்திவிட்டு சாப்பாட்டுக்கோப்பையை தேடிக்களைத்து, பக்கத்து வீட்டில் இருந்து பத்து கோப்பைகளை வாங்கும்போதும்: அவற்றை மீளக்கொடுக்கும் போதும், பக்கத்து வீட்டுக்கார மயில்வாகனத்தார் கூறிய அறிவுரைகள் காதுகளில் இருந்து இரத்தத்தை வரவழைக்க உடனேயே சென்று பத்து புது கோப்பைகளை  வேண்டியிருந்தான் மயூரன்.

இரண்டு நாட்களில் பத்து பிளேற்றுக்களிலும் வெய்காயத்தோல் முதல் பலதரக் கழிவுகளும் நிரம்பியருக்க கண்ட கடுப்பில், இரண்டு கோப்பைகளை மட்டும் வைத்துவிட்டு மீதியை அலுமாரியில் வைத்து பூட்டப்போனவன் பூட்டாமலேயே விட்டான். ஏனெனில் பிற்பாடு வீட்டில் கோப்பைகள் இருக்கும் ஆனால் அலுமாரித்திறப்பு  இராது.

சிந்தனையில் வீடு வந்தவனின் முகம் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. ஏனெனில் கல்யாணி புதுப்புடவையில் அழகு மின்ன தலைமுழுகி வாராததலையுடன்,  கையில் தேநீர்க் கோப்பையுடன் நின்றிருந்தாள். அதைவிட ஆச்சரியம் மயூரனுக்கான வேட்டியும் சால்வையும் தயார் நிலையில் இருந்தது.
குளித்து தனது அறையில் வேட்டியைக் கட்டிக்கொண்டிருந்தவனின் அறைக்குள் அவசரஅவசரமாக நுழைந்த கல்யாணி மயூரனின் சீப்பினை எடுத்தாள் தலைவாருவதற்காக.

“இப்ப என்னத்துக்கு என்ர சீப்பை எடுக்கின்றாய்?” தனது பொருட்களை யாரும் பாவிப்பது அதிலும் தன் அனுமதியின்றி பாவிப்பது அறவே பிடிக்காத ஒன்று. கல்யாணியின் செய்கை கடுப்பினை ஏற்றியது.

“என்ர சீப்பினைக் காணவில்லை. ஒருக்கா தலையை இழுத்துப்போட்டு வைக்கின்றேன்”
“நீ ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம். உன்னுடையதை தேடி எடுத்துச் சிங்காரி.”
“பிறகு நேரம் போய்விட்டது என்று சொல்லக்கூடாது.” என்று சினுங்கியவாறு தேடலில் இறங்கினாள். தேடத் தேட பலபொருட்கள் கிடைத்தன சீப்பு மட்டும் சிக்கவில்லை. இதற்கிடையில் மயூரன் ஆயத்தமாகிவிட்டிருந்தான். அழகிய தேவதையாக இருந்தவள், வியர்வை பெருக்கெடுக்க பத்திரகாளியாகிக்கொண்டிருந்தாள். சீப்பு மட்டும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில் மயூனின் இரத்தம் கொதிக்க தொடங்கி கொதிநிலையை அடைந்திருந்தது. கோயிலுக்கு போக வேண்டும் என்ற உணர்வுடன் கொதியை அடக்கிக் கொண்டான்.

அயன் பண்ணிய சீலை கசங்கியிருக்க ஒருக்கா சீப்பை தாங்கோ என்று அழாக்குறையாகக் கேட்டாள். அதைக்காணவில்லை நான் என்ன செய்ய? முதலில் கோயிலுக்கு போய்விட்டு வருவம். வரும்போது ஒரு சீப்பும் வேண்டிக்கொண்டு வருவம்! என்ற கல்யாணியை முறைத்தான். கொதியன் ஆகிவிட்டிருந்த மயூரன். கொதியன் ஆகிவிட்டால் வீடு ரணகளம் என்பது உறுதி.

முதலில் சீப்பைத்தேடி எடு. ஒரு பொருளை ஒழுங்காக வைத்திருக்க தெரியாத நீ? கோயிலுக்கு போய் என்னத்தை கிளிக்கப்போறியள். சீப்பு எடுத்தால்தான் கோயில்.  என்ற கொதியனும், சீப்பைத் தேடுகிறேன் பேர்வழி என்று பொருட்களையெல்லாம் சிதறடிக்க அதைக்கண்ட கல்யாணிக்கு கோபம் தலைக்கேற நான் கோயிலுக்கும் வரவில்லை ஒண்டுக்கும் வரவில்லை. நீங்களே போட்டுவாங்கோ என்று சீறியவள் ஒரு இடைவெளிவிட்டு மனிசிக்கு ஐஞ்சு ரூபா சீப்பையே விட்டுத்தரமுடியாத மனிசரோட எல்லாம் என்னால் கோயிலுக்கு வரமுடியாது என்றாள்.

சீப்பு விசயம் நாட்டுப்பிரச்சினைகள் போலதிசைமாறிச் செல்வதை உணர்ந்த மயூரன் சரி சரி கோவியாத: என்னுடைய சீப்பினை எடுத்து தலையை இழுத்துக்கொண்டுவா போவோம் என்றவனை இடைமறித்த கல்யாணி, என்னால இனி வரமுடியாது. சீலையெல்லாம் கசங்கிப்போட்டுது. ஓரேவியர்வை, தலையிடி வேற, கோயிலுக்குப் போகிறதென்றால் அமைதியாக போகவேனும். இனி என்னால் ஏலாது. போய் இரவுக்கு சாப்பாட்டையாவது வேண்டிக்கொண்டுவாங்கோ என்றாள். நாளைக்கு “ஒபிசுக்கும்” லீவு. எல்லோரிட்டையும் இன்றைக்கு கோயிலுக்கு போறதென்று சொல்லிப்போட்டு வந்தனான். நாளைக்கு கோயிலுக்குப் போனால்தான் இனி “ஒபிசுக்கு” போவேன் என்றுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

ஆக, கோயிலும் இல்லை, சாப்பாடும் இல்லை. என்னகொடுமை முருகா? என்று நினைத்தவாறே வேட்டியை மாற்றிக்கொண்டு சாப்பாட்டுக் கடையை நோக்கி விரைந்தான்.

வழியெல்லாம் மோட்டார்சைக்கிள்களில் சோடி சோடியாக கோயிலுக்குப் போவோர்களைப்பார்க்க எரிச்சலாக வந்தது மயூரனுக்கு;. இவ்வளவு பேரினது வீட்டிலும் சீப்பு துலையாமல் இருக்க என்ரவீட்டில் மட்டும்? முருகா! அன்று மாம்பழத்தை விட்டுக்கொடுத்திருந்தால் நீயும் கோவனத்துடன் மலையேறியிருக்க வேண்டியதில்லை. நானும் சாப்பாட்டுக்கு அலைந்திருக்க வேண்டியதில்லை. விதிவலியது முருகா கவனமாக இருந்துகொள், இன்றைய இறைப்பும் இல்லை, நாளைக்கும் இறைப்பு? என்று நினைத்தவாறே, வழமையாக ஏற்படும் சண்டைகளின் போது சாப்பாடு எடுக்கும் கடையில் மோட்டார் சைக்கிளை நிற்பாட்ட.
மயூரனைக்கண்டதும் கடைப்பெடியன், என்ன அண்ணை அக்கா கோயிலுக்கு போட்டாபோல?  என்ற கேள்விக்கு ஓமடாப்பா? அவ இண்டைக்கு பாற்காவடி எடுக்கிறா, நீ இரண்டு இடியப்ப பார்சலைக் கட்டு என்றான். அப்ப நீங்க துணைக்குப் போகவில்லையே அண்ணை? என்றவனை முறைக்க, ஓ! இன்றைக்கு வீட்டிலதான் பாற்காவடிபோல கிடக்கு என்று முனுமுனுத்தவாறு பார்சலைக் கட்டினான் கடைப்பெடியன். சாப்பாட்டுக்கடையால் வரும்போது ஒரு பான்சிக்கடையில் ஒரு டசின் சீப்பு வேண்டிக்கொண்டான்.

பார்சலுடன் வீட்டுக்கு வந்த மயூரனுடன் எந்தவித கதையுமின்றி இருந்தாள் கல்யாணி. மயூரன் தான் வேண்டி வந்த டசின் சீப்புக்களை அவள் முன் வைக்க தலையில் அடித்துக் கொண்டாள். பின்சிரித்துக்கொண்டாள். ஏன் இந்த தேவையில்லா வேலை ஒருக்கா உங்கட சீப்பைத்தந்திருக்கலாந்தானே? என்றவளை, சரி சரி நாளைக்குப் போவோம் நல்லூருக்கு என்றவன், நளைக்கு சாப்பாட்டுக்கடையடியாலதான் போகவேணும். வரும்போது மனிசியோடபோய் இரண்டுபார்சல் கட்டவேணும் என்று நினைத்துக்கொண்டான்.

வாருங்கோ சாப்பிடுவோம் என்றவாறு சாப்பாட்டுமேசையில் உணவுமூடும் கூடையைத்தூக்கியவள் தூக்கியபடி நிற்பதைப்பார்த்த மயூரன் என்னப்பா அப்படிப்பார்க்கின்றாய்? என்றவாறு அவனும் பார்க்க இருவரையும் பார்த்துச் சிரித்தது சாப்பாட்டு மேசையில் இருந்த கல்யாணியின் சீப்பு.

மயூரன் கொதியனாக மாறி, எத்தனை தரம் அப்பா உங்களுக்கு சொல்லுகிறது அந்த அந்தப் பொருட்களை …………. கொதியனின் குணம் அறிந்த கல்யாணி அமைதியாக சாப்பிடத் தொடங்கியிருந்தாள்.


-மானிப்பாய் சுதன்.

காலத்தின் வலிகள்? --- (13.11.2016, தினக்குரல் நாளிதழ்)



அலுவலக சுவரில் நாட்காட்டி வார இறுதியை அண்மித்து, வியாழக்கிழமையைக் காட்டியபடி மின்காற்றாடியின் கட்டளைக்கு ஏற்ப ஆடியவண்ணம் இருந்தது. வியாழக்கிழமையாக இருந்தாலும் மக்கள் தத்தமது தேவைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு வந்துசென்று கொண்டிருந்தனர். ஆயுதப்போர் முடிவடைந்த பின்னர், அரசஅலுவலகமான எமது அலுவலகத்துக்கு மக்கள் வந்துசெல்வது அதிகமாகிக் கொன்டிருக்கிறது. சொத்துக்களுக்கான வரிகள், வியாபார அனுமதிகள், சொத்துப்பெயர் மாற்றங்கள் என பலவிதமான தேவைகளின் பொருட்டு மக்கள் எம்மை நோக்கி வரத்தொடங்கியிருக்கின்றனர். புதிய வீடுகள், புதிய வியாபாரங்கள், அதிலும் எமது புதிய கலாச்சாரமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வங்கிக் கடனை பெறுவததற்காகவே கூடுதலானோர் மேற்படி விடயங்களில் ஆர்வங்காட்டி வந்துகொண்டிருந்தனர்.

முழுவதுமாக தனது வேலைகளில் மூழ்கியிருந்த முரளியை, “சிவசூரியகுமார்” என்ற அந்த நீண்ட பெயர் நிமிர்ந்து பார்க்க வைத்தது. பார்த்த உடனேயே அந்தக்கண்கள், தான் சிறுவயது முதல் பார்த்த அந்த சினேகிதமான அந்தக்கண்கள் முரளியை அவனையறியாமலேயே கேட்க வைத்தது, “நீங்க மயிலிட்டி குமார்தானே!” மெலிந்த தேகமும் வாழ்வின் ஓரத்துக்கே ஓடி விரக்தியடைந்த அந்த முகமும் தனக்குத் தெரிந்த அந்த சிவசூரியகுமாராக இருக்குமோ என்று உற்றுப்பார்த்தபடி கேட்டான் முரளி. கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்னரான பாடசாலை நட்பு.

முரளியின் சந்தேகம் கலந்த ஆனால் சினேகமான அந்தக்குரல் குமாரை இவன் யார் என கேள்விக்குறியுடன் நோக்கியபடி ஓம் என வைத்தது. “நான் முரளிஇ விக்ரோறியாவில படிச்ச”  குமாரின் முகத்தில் ஓடிய குழப்பங்களை முரளியின் பதிலானது முடிவுறுத்தியது. அதன் பயனாக அவனின் முகம் தாயைக்கண்ட குழந்தையின் முகத்தினைப்போல் மலர்ந்து பின் சுருங்கியது காரணம் கடந்த சில வருடங்களாக அவன் சமூகத்திடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் அவனின் முகத்தினை வலுக்கட்டாயமாக சுருங்க வைத்தன.

ஞாபகமில்லையோ? என்ற முரளியின் கேள்வியை ஓரு விதமான சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட குமார், ம்… ஞாபகமிருக்கிறது. நண்பர்களை மறக்க முடியுமோ? நீங்க… ? நீண்ட கால தொடர்பின்மையோ அல்லது ஏதோ ஒரு அனுபவமோ குமாரை தனது நண்பனை “நீங்க” போட்டு உரையாட தூண்டியது. டேய் என்னடா நீங்க, வாங்க என்று கொண்டு… என்றவாறு எழும்பிய முரளி பக்கத்தில் இருந்த தனது சக உத்தியோத்தர்களுக்கு என்னுடைய நண்பன் இவன் என அறிமுகப்படுத்தியவாறு குமாரை அலுவலகத்துக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்தான்.

எவ்வளவு காலம் சந்தித்து! 2009 இற்கு பிறகு அடிக்கடி உன்னைப்பற்றி யோசிப்பதுண்டு. பலரிடம் விசாரித்தும் பார்த்தனான் ஆனால் ஒருத்தரும் சரியான விபரம் தரவில்லை. இருக்கிறியோ இல்லையோ என்றுகூடத் தெரியாதிருந்தது. இப்ப கண்டதுமதான்; பெரிய நிம்மதிடா… சொல்லு, இப்ப எங்க இருக்கிறாய்? யாருடன் இருக்கிறாய்? ஏன்ன செய்கிறாய்? என்னடா கோலமிது? முரளியின் அடுக்கடுக்கான கேள்விகள் தனக்கு பழக்கப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் குமாரினால் அலட்சியப்படுத்தமுடியாதிருந்தது முரளியின் முகத்தில் தெரிந்த நட்பினால்.

இருக்கிறேன். கலியாணம் கட்டிட்டேன், ஒரு மகள், லொறி டிரைவராக வேலை. இந்தக் கோலம் காலம் தந்தது. ஆனால் மக்கள் கதைக்கிறார்கள் பல நாடுகள் ஒன்று சேர்ந்து தந்தது என்று. அண்ணை இங்கு இருக்கும் வரை எல்லாம் நன்றாகதான் இருந்தது. பிறகு உனக்குத் தெரியும்தானே தடுப்புக்குப்போய் வெளியில் வந்தபின் எல்லாமே தலைகீழாகப் போய்விட்டது. குமார் இவ்வளவு தூரம் எவரிடமும் சமீபமாக கதைத்ததில்லை. இவ்வளவு விடயத்தையும் ஒரேதடவையில் கூறியதுகூட குமாருக்கே ஆச்சரியத்தைத் தந்தது.

பிறந்ததில் இருந்து அறிவு தெரிந்த நாள்வரை போராட்ட வாழ்க்கைக்கு பழகியதால் அதுவே சரியான முடிவு நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு என்றுணர்ந்ததினாலும், சரியான தலைமையாக அண்ணை இருந்ததினாலும் அண்ணையின் பாதையில் எல்லோரும் பயனித்துக்கொண்டிருந்த காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் தெரிவு அண்ணையுடன் பயனிப்பதாக அமைந்திருந்த நேரத்தில், பாடசாலை இடைவேளையில், டேய் நான் இயக்கத்துக்கு போகப்போகிறேன்! என்று கூறிய ஈசனைப்பார்த்து, மாணவர்கள் எல்லோரும் சிரிக்க, நீ போய் என்ன செய்யப்போகிறாய்? வெங்காயம் உரிக்கத்தான் விடுவார்கள், என்று குமார் கூறவும் மீண்டும் சிரிப்பொலி எழ.. நான் வெங்காயம் உரிக்கிற வேலையை செய்தால் இப்ப வெங்காயம் உரிக்கிறவன் சண்டைக்கு போகமுடியும்தானே என்ற ஈசனின் வார்த்தை அவனின் உறுதியை எல்லோருக்கும் அழுத்தமாக உணர்த்த சிரிப்புகள் போய் மௌனம் குடிகொண்டது.

நான் வரவில்லை அம்மா அப்பாவை விட்டு என்னால் இருக்கமுடியாது என்று கூறிய முரளியை பார்த்த ஈசன் டேய் உங்களை ஒருத்தரையும் நான் என்னோட வரச்சொல்லவில்லை. நீங்க படியுங்கள் எல்லோரும் போராடினால் நாடுகிடைத்த பின் அதை ஆள ஆட்கள் தேவை. ஆனால் படிக்கிதை ஒழுங்கா எமது சமூகத்தை வளர்க்கிற மாதிரி, எமது பாரம்பரிய கலைகளை வளர்க்கிற மாதிரி பிரயோகக் கல்வியாக படியுங்கடா.. எனக்கூறிய ஈசனின் வார்த்தைகளனின் பெறுமதியை அந்த வயதில் நண்பர்கள் பலரால் விளங்கிகொள்ளமுடியவில்லை, சிலருக்கு ஓரளவுக்கு விளங்கியமாதிரியும் இருந்தது. ஒரு சிலருக்கே விளங்கியது. இதனால் நண்பர்கள் மத்தியில் மௌனம் மேலும் அழுத்தமாக ஏற்பட அந்த அழுத்தத்தினை உடைத்தது குமார் எனப்படுகின்ற சிவசூரியகுமாரின் வார்த்தைகள்.

சிவசூரியகுமார் மயிலிட்டியை சேர்ந்தவன் இடப்பெயர்வின் காரணமாக தற்காலிகமாக கல்விகற்க  எமது கல்லூரியில சேர்ந்தவன்;. செல்லடியில் தந்தை இறக்க தாயுடனும் சகோதரிகளுடனும் சுழிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பாடசாலைக்கு வந்தது முதல் அவனது கெட்டித்தனத்தாலும் கல்வியில் அவன் காட்டும் ஆர்வத்தினாலும் ஆசிரியர் முதல் மாணவர் உள்ளம்வரை  இடம்பிடித்தவன். அப்படியானவன் ஈசனின் வார்த்தைகளை ஆமோதித்து கூறியது எல்லோரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியது. அதைவிட இறுதியாக குமார் கூறிய வார்த்தைகள் நானும் ஈசனுடன் போகிறேன். வீட்டுக்காரர் கேட்டா சொல்லுங்க எங்கள் குடும்பத்துக்காக மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வுக்காக செல்கிறோம் என்று. பாடசாலை மணி ஒழிக்க எல்லோரும் பலவிதமான சிந்தனைகளுடன் பலவிதமான விவாதங்களுடன் வகுப்பறைக்கு சென்றனர்.

அன்று இருளத் தொடங்கிய நேரம் முரளியின் வீட்டுக்கு குமாரின் தங்கை சைக்கிளில் வரும்போதே, முரளியின் இதயம் படபடவென அடிக்க தொடங்கியிருந்தது. வழமையாகவே முரளியின் தங்கையிடம் வருபவள்தான் ஆனால் இன்று இந்த நேரம் வருகிறாள் என்றால்? வழமையாக வீட்டுக்கு வந்தால் நேரே தங்கையிடம் செல்பவள். இன்று நேரே என்னிடம் வர உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. முரளி அண்ணா, அண்ணா இன்னும் வீட்டுக்கு வரவில்லை அம்மா உங்களிட்ட பார்த்துவரச்சொன்னவா, அண்ணாவைக் கண்டனீங்களோ? இந்தக் கேள்விக்கு பதில் என்னவென்று சொல்வது நினைக்க நினைக்க முரளியின் தலை சுற்றுவது போலிருந்தது. காம்பில போய் பார்த்தனீங்களே? வாய் குழற நா தடுமாற கூறிய வார்த்தைகளின் கனதி குமாரின் தங்கையின் பலத்த அழுகையிலேயே தெரிந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள் இருந்தவர்கள் அயல் என வீட்டில் மக்கள் கூட விடயம் காட்டுத் தீ போல் குமார், ஈசனின் வீடு எல்லாம் பரவிட்டது.

இரு குடும்பங்களும் பல இடங்கள் அலைந்து ஒருமாதிரயாகி பிள்ளைகளைக் கண்டுபிடித்தனர். ஆனால் அங்கிருந்தவர்கள் அம்மா பிள்ளைகளோட கதையுங்கோ அவை விருப்பப்பட்டால் கூட்டிட்டுப் போங்கோ… என்று கூற, ஆவலாக பிள்ளைகளைப்பார்த்த பெற்றோரை தீர்க்கமாக பார்த்த பிள்ளைகள் நாங்கள் போகிற பாதை சரியான பாதை எங்களைத்தடுக்க வேண்டாம். தயவு செய்து போய்வாருங்கள் சிறிது காலத்துக்கு பிறகு நாங்கள் வந்து பார்க்கின்றோம் என்றவர்களை எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் உடன்வர சம்மதிக்காததால், அழுது அழுது வற்றிய கண்களுடன் நிற்கும்பொழுது, பிறிதொரு வாகனம் வர அதில் ஏறிச் சென்றனர் பிள்ளைகள்.

வழமைபோல் சிறிதுகாலம் இவர்களது கதைபேசிய ஊர் பின் மறந்து போய் இருந்த வேளையில் சரியாக ஒருவருடம் கழித்து ஈசன் ஊர் வந்தான் வந்தவனிடம் குமாரைப்பற்றி கேட்க அவன் வேற இடம் நீண்டநாடகளாக சந்திக்கவில்லை. அம்மாவைப் பார்க்க வந்தனான் என்று கூறி சென்றவனை பின்னர்  சந்திக்கமுடியாது போனது.

காலம் தன் கடமையைச் சரிவர செய்ததன் பலனாக ஆண்டுகள் பல கடந்து செல்ல, போரின் போக்குகளும் மாறியிருந்தது. உள்நாட்டுப்போர் என்ற நிலை மாறி உலகநாடுகளின் விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப போரின் நிலை மாறியிருந்தது. இறுதியில் பல அவிழ்க்க முடியாத முடிச்சுகளுடன் ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்தது. ஏராளமான இறப்புக்கள், அங்கவீனங்கள், விதவைகள், அநாதைகள், காணாமற்போனோர் என ஆயுதப்போர் தமிழர்களை வதைத்தது மட்டுமன்றி உள ரீதியிலும் மிக மோசமாக பாதிப்படையச் செய்திருந்தது. மீளமுடியாத துன்பியல் அனுபவங்களுடன் தமிழ்ச்சமூகம் சரியான தலைமையின்றி ஆயுதப்போராட்டத்தை வெறுத்து தனது இயல்புவாழ்க்கைக்கு அடியெடுத்திருந்த நிலையில்தான் மீளவும் குமாரினதும் முரளியினதும் சந்திப்பு ஏற்பட்டிருந்தது.

குமாரின் நிலையை இலகுவாக விளங்கிக்கொண்டான் முரளி. ஏனெனில் இந்நிலை குமாருக்கு மட்டுமல்ல பெரும்பாலான போராளிகளுக்கு ஏற்பட்டிருப்பதுதான். சரி இப்ப எங்கே இருக்கிறாய் சொல்லு? பின்னர் நான் வீட்டை வந்து என் வீட்டுக்கு கூட்டிச் செல்கின்றேன்.. இப்ப எதற்காக இங்கே வந்திருக்கின்றாய்? முரளியின் கேள்விகளைப் பார்த்து சிரித்தபடி பதில் கூறினான் குமார்.

முதலில் உனக்கு ஒரு நன்றி. ஏனென்றால் என்னைக்கண்ட சிலர் என்னுடன் கதைக்க தயங்கினார்கள் அல்லது பயப்பட்டார்கள். சிலர் சிரித்து கதைத்துப் போன் நம்பர் வேண்டினார்கள். ஆனால் இதுவரை யாரும் போன் எடுக்கவும் இல்லை கதைக்கவும் இல்லை. பல வேலைகளுக்கு முயற்சித்தும் “முன்னாள்” என்கின்ற அடைமொழி எங்களை முன்னேற விடவில்லை. நீ மட்டும்தான் வீட்டுக்கு வருவதாயும் உன் வீட்டுக்கு கூட்டிச்செல்வதாகவும் கூறியிருக்கின்றாய். இந்த அளவே போதும். என்றவனை இடைமறித்த முரளி நீ முதலில் வந்த விடயத்தை சொல் என்றான்.

வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ள பிரதேச சபையில் காணி எனது பெயரில் இருந்தால்தான் கிடைக்குமாம். மாமா சீதனமாக தந்தவர். அந்தக்காணியை எனது பெயருக்கு மாற்றத்தான் வந்திருக்கிறேன். நான்கு தரம் வந்து சென்றுவிட்டேன். இன்னும் வேலை முடியவில்லை. வருகிற வியாழக்கிழமைக்கு முன்  செய்து கொடுக்கவேண்டும். குமாரின் பேச்சில் தெரிந்தது, எரிச்சலா? அல்லது விரக்தியா? என்பதை உணரமுடியாதிருந்தது.

எல்லோருடைய சுதந்திரத்துக்காகவும்தான் நாங்கள் எங்களது படிப்பையும் இளமையையும் தொலைத்தோம். இப்போது பார்த்தால் நாங்கள் மட்டும்தான் சுதந்திரம் இல்லாமல் இருப்பது போலவும் மற்றவர்கள் சுதந்திரமா இருப்பது போலவும் தோன்றுகிறது. நாங்கள் மட்டும்தான் தோற்றது போல! மற்றவர்கள் எங்களைப் பரிதாபமா பார்க்கின்றார்கள். நாங்கள் உயிரைத் துச்சமென நினைத்தவர்கள் எங்களால் வாழ்கையில் வெற்றிபெறமுடியும் ஆனால் நீங்கள் காட்டும் அலட்சியம்தான்… என்றவனை இடைமறித்த குமார், அலட்சியமில்லை… சில அரச நடைமுறைகள் அவசரத்துக்கு சரிவராது, தற்துணிவுடன் செயற்படவும் எவரும் முன்வருவதில்லை.

ம.;ம்.ம் முரளி நீ சொல்வது சரி ஆனால், எங்கட நிர்வாகம் நடக்கும்பொழுது, இப்படியா நடந்தது? அப்பவும் தமிழர்கள்தானே பணிபுரிந்தார்கள்? பாரபட்சங்கள் எங்கே நடந்தது? அரசியல்வாதிகளுக்கு கும்பிடுகள் எங்கே? போதைவஸ்துக்கள் எங்கே? கற்பழிப்புக்கள், சிறுவர் துஸ்பிரயோகம் எங்கே? தவறி நடந்தாலும் கொடுக்கும் தண்டனையில்? தலைமையின் அருமை இப்பதான் விளங்குது. இப்ப இருக்கும் அரசியல்தலைவர்களுக்கு தெரிவதில்லை எல்லோராலும் தலைவராக முடியாது என்று. அவர்களுக்கு பின்னால் திரியும் இளைஞர்களுக்கும் தெரிவதில்லை. ஆனாலும், வேண்டாம் இனிமேலும் ஒரு அழிவைத் தரும் ஆயுதப்போராட்டம்.. நமது விதிப்படி நடப்பதைக் காண்போம். இன்றைய அரசு ஒரு தீர்வைத்தரும். என்ற குமாரின் வார்த்தைகளில் தெரிந்தது அவனது பட்டறிவும் நல்லாட்சி பற்றிய கனவும்.

இன்று எல்லாம் இழந்த நிலையில், அன்று நாம் எமக்குப்பின் நாட்டை நன்றாக ஆழுவார்கள் என்ற நம்பிக்கையில், நீங்க படியுங்க நாங்க போகிறோம் என்று சென்றவன் இன்று படித்தவர்களின் அசமந்த போக்கினையும் பணத்தினை நோக்காக கொண்ட தன்மைகளையும் பார்க்கும்போது. முரளியின் மனதில் பல கேள்விகள் எழுந்தன, எங்கு தப்பு நடந்தது? நடக்கிறது? எப்படி நடக்கிறதுது? எது எப்படியோ குமார் சொன்னதுபோல் இனி ஒரு அழிவு வேண்டாம் என்று நினைத்தவனுக்கு, குமாரின் வேலையை உடனே முடித்துக் கொடுப்பது என்ற தீர்மானத்துடன் குமாரிடம்,
குமார் நீ யோசிக்காம போ, நான் பார்த்து வியாழக்கிழமைக்குள் செய்து தருவிக்கின்றேன். நாங்கள் மாறவில்லை எங்களால் முடிந்தளவு வேகமாவும் சரியாகவும் செய்கின்றோம். சில அரச நடைமுறைகள் சிறிது காலம் தாழ்த்தும். என்ற முரளிக்கு, சரி சரி நீ சொன்னால் சரி நான் வருகின்றேன். வேலை முடிந்தால் போன் பண்ணுவாயா? என்றவனை நோக்கிய முரளி, இல்லை நான் வீட்டுக்கே வந்து சொல்கின்றேன் என்றான். இப்பொழுது குமாரின் முகம்  சற்று நட்புடன் மலர்ந்தது.


-    மானிப்பாய் சுதன்

காலக்கொடுமை! - 10.12.2016, புதுவிதி - வாரப்பத்திரிகை


துரைச்சாமி, இவர் யார் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும். அதனால் இவரைப்பற்றி நானே கொஞ்சம் அறிமுகம் தந்துவிடுகின்றேன். துரையர் எனப்படுகின்ற துரைச்சாமி, ஓய்வு பெற்ற அரசதிணைக்கள தலைவரொருவர். துரையர் ஒன்றும் பெரிதாக கடமையே கண்ணாக திரியவில்லை. ஆனால் அவர் அலுவலகத்தில் எல்லோரையும் அடக்கியாண்டு பழக்கப்பட்டவர். அவர் வீட்டில் வேண்டாமே: இவர் இடமாற்றம் பெற்று போகும் அலுவலகங்களில் இவர் தனக்கென்று ஒரு சில அல்லக்கைகளை கைக்குள் போட்டுக்கொள்வார். அவர்கள் மூலம் கொஞ்சம் பொக்கற்றுக்குள்ளும் போட்டுக்கொள்வார்.

இதனால், இவர் பிரதித் திணைக்கள தலைவராக போகும் திணைக்களங்கள் எல்லாம் அதோ கதி. சில திணைக்களங்களில் ஒட்டிக்கொண்டார் என்றால், யாருடைய காலில் விழுந்தாவது ஐந்து வருடத்தையும் தாண்டி, பல வருடங்கள் காலத்தை ஓட்டிவிடுவார். இப்படித்தான் வடகிழக்கு மாகாணம்: வடக்கு மாகாணமாகவும் கிழக்கு மாகாணமாகவும் பிரியும்போது அதிர்ஸ்டவசமாக திணைக்கள தலைவரானவர், 2016 இன் முற்பகுதியில் பென்சன் எடுத்துக்கொண்டவர். இவர் 2017 வரை இருந்திருந்தால் திணைக்கள தலைவரானதுக்கும், வடக்குகிழக்கு பிரிந்ததுக்கும் சேர்த்து தகரவிழாவையும் விமரிசையாக கொண்டாடக்கூடியவர். நல்ல காலம் 2016 இல்  அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. 
மற்றவர்களிடம் வேலைவாங்கிப் பழக்கப்பட்ட துரையருக்கு வீட்டில் வேலை செய்துகொண்டிருக்க பிடிக்கவில்லை. அலுவலகத்தில் தனது மேசையில் இருந்து சாப்பிட்டு, கையையும் மேசையில் இருந்தே கழுவிவிட்டு பேஸ்புக் பார்த்து கொண்டவருக்கு, வீட்டில் மனைவி காட்டும் அதிகாரத்தை தாங்கவும் முடியவில்லை திருப்பி பேசவும் முடியவில்லை.
இன்று கோயில் கும்பிடப்போன துரையருக்கு கிடைத்தது ஒரு சந்தர்ப்பம். கோயில் திருவிழா தொடர்பாக ஊர் இரண்டுபட்டு கிடந்தது. நல்ல சந்தர்ப்பம் விடப்படாது என மனதில் யோசித்த துரையர், எந்தப்பக்கம் பலம் அதிகம் என்று பார்த்தார். பலமான பக்கம் இணைந்து கொண்டார். ஓய்வு பெற்ற அரசஅதிகாரி என்றளவில் அந்தக்கூட்டத்துக்கும் சந்தோசம். துரையர் வேலையைத்தொடங்கினார் பல கடிதங்கள் பறந்தன. பிரதிகள் பலருக்கு இடப்பட்டன. முடிவில் கோயிலை ஒருவாறாக நீதிமன்றத்துக்கு கொண்டுவந்திருந்தார்கள். இப்படியாக, ஊரில் பலர் பகையைத் தேடிக்கொள்ளத் தொடங்கியிருந்தார். இதனால் மனைவி பிள்ளைகள் சீறத் தொடங்க மெல்ல மெல்ல கோயில் விவகாரத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

ஆனாலும் துரையரை அண்டிப்பிளைத்தவர்கள் துரையரை உசுப்பேத்தத் தொடங்கினர். ஐயா, நீங்கள் நல்லதுதான் செய்தனீங்கள். அது எங்கட சனத்துக்கு விளங்கவில்லை. அதோட உங்கட திறமைக்கு சின்ன சின்ன கோயில் பிரச்சினைகளில் தலையிடுகிறதெல்லாம் நல்லதில்லை. நாட்டுப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய திறமை உங்களிடம் இருக்கு. அரசியலில் இறங்குகின்றதுதான் சரி. இப்ப சரியான தலைவர் இல்லாத நிலையில் எங்கட மக்கள் அல்லாடுகினம்….
“சரியான தலைவர் இல்லாத நிலை” துரையரை உசுப்பேத்தியது. அவரை அறியாமலேயே முதுகுத் தண்டு நிமிர்ந்து கொண்டது. கால்கள் ஒன்றன் மேல் ஒன்று உரசிக்கொண்டன. துரையர் கற்பனையில் மூழ்க, மூட்டிய நெருப்பு புகையத்தொடங்கியதை உணர்ந்த அல்லக்கைகள் திருப்தியுடன் சத்தமில்லாமல் கிளம்பினர்.

நான் நல்லதொரு தலைவனா? என்ற கேள்வி எழுந்தவுடனேயே துரையரின் மனச்சாட்சி அந்தக்கேள்வியினை உடனேயே சுட்டுப்பொசுக்கியது. இருந்தும் துரையரின் பேராசை சொல்லிக்கொண்டது; அந்த துரைச்சாமி அரச உத்தியோகத்தன். இந்த துரைச்சாமிதான் நிஐம், நான் நல்ல தலைவன்தான் என்றது. புலிகள் காலத்தில் அரசாங்கத்துக்கு தலையையும் புலிகளுக்கு வாலையும் காட்டி பிழைத்தது. பிள்ளைகளை அப்போதிருந்த உயர்அதிகாரிகள் காலைப்படித்து கொழும்பில் படிக்கவைத்தது. அது நல்லதொரு அப்பாவாக நான் செய்த கடமை.

மூத்தவன் சிங்கள இனப்பெண்ணை திருமணம் செய்தது. திருமணத்துக்கு சம்மதித்தது. அது மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடாமை, இரண்டாவது மகனும் நண்பர்களும் இயக்கத்துக்கு போனபோது, தன் மகனை மட்டும் களவாக பலரையும் ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்கவைத்தது, அது கட்டிய மனைவியின் பிள்ளைப்பாசத்துக்காக, இப்படி தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாலும் மனச்சாட்சி குத்தியபடியே இருந்தது.

பொதுச்சேவை செய்தது என்றால்? ம்கூம்… எடுத்த சம்பளத்துக்குரிய வேலையே செய்யவில்லை… குழம்பியபடி இருந்தவரை… அவருடைய அல்லக்கை ஒன்று வந்து தூபம் போடத்தொடங்கியது. ஏன் ஐயா குழம்பிறீங்கள். எல்லாம் நீங்கள் வேணுமென்றே செய்தனீங்கள், எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான். உங்கட திறமையை அப்ப யாரும் மதிச்சவங்களோ? இல்லைத்தானே.! ஒன்றுக்கும் யோசிக்காம மக்கள் சேவையே மகேசன் சேவை என்று இறங்குங்கோ.
ஆனால்…, கொஞ்சம் உங்களை மாற்றிக்கொள்ள வேணும் ஐயா….! என்று இழுத்தது ஒரு அல்லக்கை. என்னை மாத்த வேணுமோ? என்று ஒன்றும் விளங்காமல் கேட்டார் துரையர்.

ஓம் ஐயா; பெரிதாக ஒன்றும் இல்லை, இனி தலைக்கு, மீசைக்கு “டை” அடிக்கவேண்டாம், திருநீறைக்கொஞ்சம் அழுத்திப் பூசுங்கோ, வெள்ளை சேர்ட், வேட்டி உடுத்துங்கோ, யாரைக்கண்டாலும் தெரிந்தமாதிரியே புன்சிரிப்பொன்றை வீசுங்கோ…. தோராயமாக குடும்ப நலனை விசாரியுங்கோ… விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையங்களுக்கு அப்ப அப்ப கொஞ்சம் விசுறுங்கோ…. மற்றதுகளை நாங்க பார்த்துக்கொள்ளுகின்றம். முக்கியமாக மனிசியை மகள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கோ.
அல்லக்கைகளின் உபதேசம் கண்ணனின் கீதா உபதேசம் போன்றிருந்தது துரையருக்கு. “ஐயா கொஞ்சப்பெடியளை கைக்குள்ள வைச்சுக்க வேணும்” என்று சொல்லி தமது கன்னிக்கறவையை கறந்தனர் துரையரிடமிருந்து அல்லக்கைகள். வீட்டில் விசயத்தைச் சொல்ல, வீட்டில் வெடித்தது பூகம்பம். துரையர் சொல்லாமலே மனிசி மகள் வீட்டுக்கு சென்றுவிட்டாள். இப்போது துரையர் வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்தனர் அல்லக்கைகள்.

ஊரிலும், வேறு இடங்களிலும் துரையர் செல்வாக்கான ஆள்மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தியபடியே,  ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வீட்டுக்கதவுகளைத்தட்டி காலில் விழாக்குறையாக கெஞ்சியதின் விழைவு, போன தேர்தலில் தோற்றவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டனர். துரையரின் கற்பனை அதிகரிக்க அதிகரிக்க அவரது வங்கிகணக்கும் கசநோய் வந்த நோயாளிபோல்  மெலியத்தொடங்கியது.
கற்பனையில் இருந்த துரையரை ஒரு அல்லக்கையின் குரல் உலுப்பியது. “ஐயா வலிவடக்கில் கொஞ்க இடத்தை விடப்போகின்றார்களாம்” என்றது. என்னது விடப்போகிறாங்களாமோ? வலிவடக்கை விட்டால்! நாங்க பிறகு எதை வைச்சு பிழைக்கிறது?
“பயப்படாதேயுங்கோ ஐயா, அவங்கள் கொஞ்சம்தான் விடப்போகின்றாங்களாம். மிச்சம் இருக்குத்தானே! அதை வைச்சுப் பிழைச்சுக்கொள்ளலாம். வசாவிளானில் ஏதோஒரு கோயிலுக்கு விடப்போகின்றாங்களாம். நாங்களும் இரண்டு மூன்று சுலோக அட்டைகளுடன் போய் இருந்து போராடிவிட்டு பொங்கலையும் சாப்பட்டு வராலாம் ஐயா. எங்கட போராட்டம் ஓயாது ஐயா.”

“ என்னடா சொல்லுகிறாய், இது கொஞ்சம் ஓவராக இல்லை?”
“இல்லை ஐயா, இப்ப இதுதான் “டிரென்ட்”, பயப்படாதேயுங்கோ!
“அவங்கள் மறுபடி வந்திட்டாங்கள் என்றால்? சுட்டுத்தள்ளிப்போடுவாங்கள்…”
“அவங்கள் எங்கட பிள்ளையள்தானே! எங்கட பிள்ளையளின்ர காலில் விழுகிறதில என்ன வெட்கம் ஐயா! விழுந்திட்டாப்போச்சு. இப்படி பயம் வரும்போதெல்லாம் பேஸ்புக்கை பாருங்கோ உங்களுக்கு எவ்வளவு லைக் விழுகுது என்று. அவ்வளவும் உங்கட விசுவாசிகள்.”
“போடா உப்பிடித்தான் பேஸ்புக்கை நம்பி போனமுறை தோத்தவங்கள்…. என்கென்னவோ பயமாகக்கிடக்குது. தோற்றால்? சேர்த்து வைத்த காசுமில்லை, குடும்பமும் இல்லை.”
“ஐயா வென்றாலும் கைதடிக்குத்தான் போகப்போறியள், தோத்தாலும் கைதடிக்குத்தான் போகப்போறியள், இரண்டும் பக்கத்துல பக்கத்துலதான். பயம் வேண்டாம்… நாங்க இருக்கிறம்.” என்ற அல்லக்கைகளின் பேச்சுக்கள் விளங்கியமாதிரியும் விளங்காதமாதிரியும் இருந்தபோதிலும் துரையர் கற்பனையில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.
அல்லக்கைகள் தமக்குள் பேசிக்கொண்டன.
“டேய் உந்த லூசு வெல்லுமோடா?”
“போடா லூசா, சனத்துக்கு என்ன அந்தளவுக்கு கிறுக்குப் பிடித்துப்போச்சுதே?”
“அப்ப?”

“தமிழருக்கான தலைவரின் வெற்றிடம் இருக்கும் வரை, அந்த ஆசை உப்பிடியான லூசுகளுக்கு உள்ளவரை… நாம் பிழைத்துக்கொள்ளலாம். நாங்க யாரு சண்டைக்காலத்திலேயே எப்படியெல்லாம் உழைச்சனாங்கள்…! துரையரிட்ட இப்ப ஒண்டுமில்லை, செல்லாக்காசு. வா இனி அடுத்த “தல”யைத் தேடுவோம்.


-    மானிப்பாய் சுதன்.

என்ன கொடுமை சேர்? --- (17.07.2016, சூரியகாந்தி - உதயன் நாளிதழில் வெளியானது.)



இன்றைய காலைப்பொழுது வழமையானதொரு காலைப்பொழுதாக இருந்தாலும், என்னை துயிலெலுப்புவதில், மனைவியின் குரலில் ஒரு அவசரம் தெரிந்தது. அதிகாலையில் எழுந்துவிடும் மனைவி தனது சமையல் வேலைகளுடன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் என்னைப்பார்த்தவுடன் எரிபற்று நிலையை அடைந்து எரிச்சலாகிய மனைவியின்,  எரிச்சலான திருப்பள்ளி எழுச்சியை கேட்டு துயிலெழுவதில் ஒரு சுகம். திருமணமான புதிதில் மனைவியின் இந்ந திருப்பள்ளி எழுச்சி எனக்கு எரிச்சலாக இருந்தாலும், பின்னர் அது பழகிவிட்டது. இப்போது அந்த கோபமான எழுச்சி இல்லாவிட்டால் ஏதோமாதிரி இருக்கும். அந்தளவுக்கு முன்னேறி இருந்தேன் நான்.

எழும்புங்கோ இன்றைக்கு உங்கட அலுவலகத்தில் அந்த கோதாரி விழுந்த மெசினெல்லே பூட்டியிருக்கினம். வேளைக்கு போகவேணும் என்று சொன்னனீங்கள். நீங்கள் எழும்பி இனி எத்தினை தரம் அதுக்குள்ள போய் வரப்போறியளோ தெரியாது. பிறகு நேரம் போய்விட்டது என்று கத்தக்கூடாது…..

எனக்கு மனைவியின் ஆதங்கம் புரிந்தது, நான் என்ன விரும்பியே அடிக்கடி அதுக்குள்ள போகின்றேன்? அது அடிக்கடி வருகிறது போகின்றேன். என்ன செய்கிறது ஜீன்ஸை போட்டு சப்பாத்தையும் போட்டபிறகு மனம் ஒருக்கா போகவேணும் என்று நினைக்கும். போகாவிட்டால் அன்றைய தினம் … சொல்ல வார்த்தைகள் இல்லை…. உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை என்று நினைக்கின்றேன். என்னவென்று சொன்னால் என்னையும் உங்கட சங்கத்தில் சேர்த்துவிடுவீர்கள். காலையில் எழும்பி இயற்கையின் அழைப்புக்காக மலசலகூடத்துக்கு ஒரு மூன்று நான்கு தரம் போகாமல் விட்டால் அன்றைய நாள் விடிஞ்சமாதிரித்தான்.

இயற்கையை அதிகமாக நான் நேசிக்கறதாலதான் இயற்கையும் என்னை அடிக்கடி அழைக்கிறது போல. தயவு செய்து உங்கட “அடிக்கடி இயற்கை அழைப்போர் நலன்புரிச் சங்கத்தில்” சேர்த்திடாதேயுங்கோ. என்னைவிட சீனியர்களா பார்த்து சேருங்கோ. அது வேற பிரச்சினை பிறகு!

சிந்தனைய சிதறடித்தது மனைவியின் குரல், ம்… போட்டியளே… இனி வந்தமாதிரித்தான்….  என்ற மனைவிக்கு. எனக்கும் அப்படித்தான் தோனுது இனிவந்தமாதிரித்தான்! என்று கூற, உதுக்கிள்ள இருந்து கத்தாம நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகப் பாருங்கோ….உங்கள கட்டி நான் படுகின்றபாடு…. மனைவியின் புலம்பலால் எல்லாமே நின்றுவிட அவசரஅவசரமா குளிப்பதற்குச் செல்லும்போது …. அப்பா ஏழு இருபது நேரம் போகுது… மகளின் வார்த்தை அவளின் பாடசாலை செல்லும் அவசரத்தை கூற.. காக்கா குளியல் குளித்து வெளிக்கிட்டேன். போட்டுவிட்டேன் ஜீன்ஸையும் சப்பாத்தையும்….
இன்டைக்கு பிள்ளையளை இறக்கிவிட்டு அப்படியே போனீங்களெண்டால்தான் வேளைக்குப் போய் அந்த கோதாரி விழுந்த “பிங்கர் பிறின்டில்” கையை வைக்கலாம். மனைவியின் ஆலோசனை நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும்!

இவ்வளவு காலமும் அலுவலகத்துக்கு எத்தனை மணிக்குப் போனாலும் எட்டு மணி என்றுதான் கையெழுத்து போடுகிறது; “பிங்கர் பிறின்ட்” மெசினில அந்த விளையாட்டு விடஏலாது. இன்றிலிருந்து அந்த தொல்லை. புது வருட ராசி பலனிலேயே போட்டிருந்தது. சனி திசை மோசமாக இருக்குமென்று.

எங்கட அலுவலகம் ஒன்றும் பெரிய தலைமை அலுவலகம் இல்லை. சிறிய  அலுவலகம் ஒன்றுதான். ஒரு பத்து பேர் வேலை செய்யிறம். ஒற்றுமையாக எங்களுக்குள்ள ஒரு “அட்ஜஸ்மென்றில்” வேலை செய்துகொண்டிருந்தனாங்கள். அதை பொறுக்க முடியாம உவங்கள் மேலதிகாரிகள் வைச்சிட்டாங்க ஆப்பு.

அலுவலகம், சகல வசதிளும் பொருந்தியது என்று சொல்வதற்கு முடியாவிட்டாலும் அடிப்படைவசதிகள் எல்லாம் இருக்கிறது. எங்கட அலுவலகத்துக்குள்ளேயே இரண்டு கிணறுகள், ஆனால் குடிப்பதற்கு தண்ணீர்  ரோட்டில இருக்கிற பொதுக்கிணற்றிலதான். எங்கட சொத்தை நாங்க பாதுகாக்க வேணும்தானே. அதுதான் எங்கட தண்ணியை நாங்க பாவிக்கிறதில்லை. நீங்க ஒன்றும் கனக்க யோசித்து போடாதேயுங்கோ!
முக்கியமானதை சொல்ல வேணும் மலசல கூடம், அதுவும் இரண்டு இருக்கிறது. அதுக்கு ரோட்டுக்கு போவதில்லை. எங்களதையே பாவிக்கிறோம். அவ்வளவு சுகாதாரமானது. என்ன வாளிக்கு கைபிடி இல்லை. தண்ணீர்க்குழாயில் தண்ணீர், சும்மா சொல்லக்கூடாது சீறிக்கொண்டு வரும். அதிலும் ஒரு சிக்கல், அடிக்கடி மோட்டர் பழுதாகிவிடும் அவ்வளவுதான்.

இன்று அலுவலகத்துக்குள் நுழையும்போதே எல்லோரும் வந்துவிட்டது தெரிந்தது! வழமையாக நான் வரும்போது எவரும் நிற்கமாட்டார்கள் அலுவலகத்தை திறப்பவர் மட்டும் “ஸ்மார்ட் போனின்” தினவுக்கு ஏற்ப  அதற்கு சொறிந்து கொண்டிருப்பார். இன்று பொதுவான வழமைக்கு; மாறுதல் எற்பட்டிருந்தது. அலுவலகத்தின் பொறுப்பதிகாரி அலுவலகத்தை சுற்றியபடி இருந்தார் இருப்புக்கொள்ளாமையினால்!

நானும் அவசரஅவசரமாக ஓடிச்சென்று கைப்பெருவிரலை அழுத்தினேன் என் பலம் கொண்ட மட்டும். ஆனால் அது என்னை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இதுதானுங்கோ அந்தக்காலத்தில கைநாட்டு வைக்கும்போது இப்படிப் பிரச்சினை இல்லை. விஞ்ஞான வளர்ச்சி கூடி எல்லாவற்றிலும் பிரச்சினை. இப்பவும் கைநாட்டுத்தான், ஆனால் மெசினில வைக்கிறோம். நாங்க படிச்ச கைநாட்டுக்கள்.

“பிங்கர்பிறின்ட் மெசின்” ஏற்றுக்கொள்ளவில்லை என்று மற்றயவர்களுக்கு தெரிந்தவுடன் எல்லோருக்கும் ஒரு தனி சந்தோசம். ஆனாலும் முகத்தினில் அதனைக் காட்டிக்கொள்ளாது, “அண்ணை, மெதுவாக வையுங்கோ, நேற்று வைச்சமாதிரி வையுங்கோ, ஆளாளுக்கு அறிவுரைகள் தந்த வண்ணமிருக்க எனக்கோ! ஒருமாதிரியா போய்விட்டது.
நவீனங்களை கையாளத்தெரியாத கைநாட்டான் ஆக விழிபிதுங்கி நின்றேன். ஒருவாறாக என்னை அந்த பாழாய்ப்போன “பிங்கர் பிறின்ட்” ஏற்றுக்கொண்டது. இவ்வளவு சந்தடியிலும் பொறுப்பதிகாரி மட்டும் பட்டும் படாமலும் அலுவலகத்தை சுற்றியபடி இருந்தார். பாவம் மனுசன் வயதான காலத்தில் ஆறுதலாக ஒன்பது மணிக்கு ஆடிஆடி நிதானமா வருபவர். இன்று ஏனோ தெரியவில்லை நிலைகொள்ளாமல்…..!

கதிரையில் அமர்ந்தபோதுதான் என் அன்புக்காதலி இயற்கை என்னை அழைக்கத் தொடங்கினாள். இன்று அவசரஅவசரமாக வந்ததன் விளைவு, அவசரமா மலசலகூடத்தை நோக்கி ஓடினேன்.. என்ன கொடுமை மலசலகூட கதவு இறுகப்பூட்டியிருந்தது. “தட்டுங்கள் திறக்கப்படும்” என்பதற்கமைய எனது அவசரத்தை வெளிக்காட்ட இருமுறை தட்டி விட்டு அலுவலகத்தை சுற்றி நடக்கத்தொடங்கினேன் . அப்போதுதான் அவதானித்தேன்; அலுவலகத்தை சுற்றிய பொறுப்பதிகாரியை காணவில்லை, எனது விழிகள் பொறுப்பதிகாரியின் கதிரையை எட்டிப்பார்த்தது, அங்கும் இல்லை. ஆக, பொறுப்பதிகாரியையும் அழைத்துவிட்டாள் இயற்கை. அவருக்குமா….

ஒருமாதிரியாக அவர் வெளியில் வர, நான் உள்ளே சென்றேன். என்ன கொடுமை மாயவா? காலையில் “சூரியன் எப்.எம்” இல் ராசிபலன் சொல்லும்போதே சொன்னவங்கள் “திண்டாட்டம்” என்று. ஒற்றைச் சொல்லில் சொன்னாலும் அம்சமாக சொல்லியிருக்கிறாங்கள். தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை. இப்படியும் சோதனைகள் வருமா? சோதனையிலும் சிறிய வெளிச்சம்! நன்றி! டயலொக் நன்றி!. என்று கூறியவாறு. அலுவலக உதவியாளனாக இருக்கும், என்றும் அபயக்கரம் நீட்டும் கரனுக்கு “போன்” எடுத்தேன்.

ஹலோ! கரன், நான் ரொய்லெட்டுக்குள்ள… தண்ணீர் வரவில்லை மோட்டரைப் போடு என்றேன். ஐயோ அண்ணை இன்றைக்கு அது வேலை செய்யவில்லை என்றான். அடப்பாவிகளா! இப்ப என்னடா செய்ய? கொஞ்சம் பொறுங்கோ ரோட்டுக் கிணத்தில தண்ணி அள்ளிக்கொண்டு வாறான். ஆனால் உதுக்குள்ள இருக்கிற வாளிக்கு கைபிடி இல்லை, முன் கடையில பொறுப்பதிகாரியிட்ட சொல்லிப்போட்டு வாளி ஒன்று வேண்டி தண்ணி எடுத்துக்கொண்டுவாறன் அண்ணை.

நாசமாக போக! இவன் வாளி வேண்டி தண்ணி ……. ஐயகோ! ம் ம் ம் இருப்பம் வேற வழி! நேரம் போய்க்கொண்டிருந்ததே தவிர, தண்ணியைக் காணவில்லை. எனக்குத் தெரியும் உவன் ஓ.ஐ.சி.(பொறுப்பதிகாரி). வாளிக்கு லெற்றர் கேட்டிருப்பான், கிழட்டுப்பயல். அதுதான் இவ்வளவு நேரம் எடுக்கிறது போல. எதுக்கும் திரும்ப ஒருதரம் போன் எடுப்பம்.
ஹலோ! கரன் என்னடா செய்கிறாய்? அவனோ கிசு..கிசுப்பான குரலில், அண்ணை சத்தம் போடாதேயுங்கோ, பெரிய ஐயா வந்து நிற்கிறார். ஐயகோ ஐயகோ அந்த மனுசன் இன்றைக்கென்று ஏன் வந்ததுடா? அதுவோ “பிங்கர் பிறின்ட்”  வடிவா பாவிக்கினமோ என்று பார்க்கவாம்! அவனது கதையினூடு அங்கு பெரிய ஐயாவின் குரலும் கேட்டது.

உவர் கோபி எங்கே? மிக பவ்வியமாக ஓ.ஐ.சி. பதிலளித்துக்கொண்டார். அவர் வந்துவிட்டார்? ஆனால் காணவில்லை? என் மனதுக்குள் யோசித்தேன் அடப்பாவிகாளா இவ்வளவு காலமும் நான் வந்து அரை மணித்தியாலத்துக்கு பிறகு வாறனீங்கள்!  இப்ப நீங்கள் நல்ல பிள்ளைகள் நான்? சத்தமா கரனிடம் சொன்னேன் எடேய் சொல்லேண்டா அவர் ரோய்லெட்டுக்குள்ள என்று. பதிலில்லை. ம் ம் நான்தானே போன் எடுத்தது அதுதான் சிவப்பு பட்டனை அமத்தாமலே பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டான் பாவிப்பயல்.

அதற்கிடையில் பெரிய ஐயாவின் குரல், எனக்கு தெரியும் அவர் வந்து மெசினில கையை வைச்சிட்டு சந்தைக்குபோயிருப்பார். வரட்டும் அவர். நானே காலையில் போய் பிங்கர் பிரின்டில கைவைச்சிட்டு இங்க வாறன் நீங்கள் எனக்கு கணக்கு விடுகிறீங்கள். எனக்கு தெரியும்தானே உங்களைப்பற்றி. உங்களுக்கு தருகின்ற சலுகைகளை  எப்படியெல்லாம் துஸ்பிரயோகம் செய்கிறனீங்கள் என்று?

பாவம் அந்த மனுசன். என்ர கஸ்டம் அவருக்கு தெரியாது. ஊரில நடக்கிறதை வைச்சு எனக்கு விழுகிறது. மனதில் ஒரு சினிமா பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வந்தது. உன்னைச்சொல்லிக் குற்றமில்லை என்னைச்சொல்லிக் குற்றமில்லை… காலம் செய்த கோலமடி……
தீடிரென்று மின்னல் மின்னியது, ஆகா துளித்துளியாக தண்ணீர்க்குழாயில் வழிந்த நீர் வாளியை நிரப்பிவிட்டிருந்தது. இதுவல்லவோ ஆனந்தம். மிக அவதானமா காரியத்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்து அலுவலகத்துள் நுழைந்த, என்னைப்பார்த்த பெரிய ஐயா, ஏன் இப்படி இருக்கிறீங்க? பாருங்க இப்படி வியர்த்து? இடையில கள்ளத்தனமாக வெளியில போய்வருகிறதெண்டால் இப்படித்தான் வியர்க்கும்.

வெளிக்கு போய் வந்தபடியால்தான் வியர்க்குது ஆனால் எந்த “வெளி” என்பதுதான் பிரச்சினை. அசடுவழிய  சிரித்தபடி நின்றேன். சரி சரி இனிமேலாவது ஒழுங்கா வேலையை செய்யுங்கோ. என்றபடி பொறுப்பதிகாரியைப் பார்த்து ரொய்லெட் எங்கே? எனக்கேட்டார். என் தலை தானாக நிமிர்ந்தது… வாய் தானாகவே திறந்தது  “உங்களுக்குமா?” என்றது.

சேர் கொஞ்சம் பொறுங்கோ, நேற்றுத்தான் மோட்டர் பழுதாகப் போய்விட்டது. வாளியில தண்ணீர் எடுத்துக் கொண்டு வாறம் என்ற ஓ.ஐ.சி பாய்ந்து கிளம்பியபடி, தம்பி கரன் வாளி ஒன்று….. என்பதற்குள்ளாவே கரன் விழுந்தடித்துக்கொண்டு கடைக்கு ஓடினான். பெரிய ஐயா அலுவலகத்தை சுற்றிப்பார்க்க வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார்…. வாளி வரும்வரை.

நான் உடனடியாகவே நல்லதொரு காரியத்தில் இறங்கினேன்.  அது என்னவென்றால்,  “அடிக்கடி இயற்கை அழைப்போர் நலன்புரிச் சங்கத்தின் கிளை ஒன்றை எமது அலுவலகத்தில் ஆரம்பிப்பது. சங்கத்தில் அவசரத்துக்கு ஒரு வாளி வேண்டுமளவுக்கு காசு இருக்க வேணும் அதுதான் எமது அண்மைய இலக்கு.


“மானிப்பாய் சுதன்”

என்னவென்று சொல்வேன்? --- (மார்கழி 2016, ஒளிஅரசி மாதாந்த சஞ்சிகை)




சுதாவின் மனம் நீண்ட நாட்களின் பின்னர் குதூகலித்துக்கொண்டிருந்தது. திருமணத்துக்காக பெண்களால் அனுபவிக்கப்படும் எல்லாவித சங்கடங்களையும் அனுபவித்து களைத்திருந்தாள் அவள். இனி அனுபவிப்பதற்கும் சங்கடப்படுவதற்கும் ஒன்றுமில்லை என்ற நிலையில்தான் வந்து சேர்ந்தது ரகுவின் சம்பந்தப்பேச்சு. திருமணப்பேச்சு ஆரம்பமானதில் இருந்து சுதாவிற்கு அந்த பேச்சுக்களில் எந்தவித சுவாரசியங்களும் ஏற்படவில்லை. இப்படி எத்தனை எத்தனை சம்பந்தங்கள், எத்தனை நிபந்தனைகள், அத்தனையும் பின்னர், சில அற்ப காரணங்களுக்காக அனைத்தும் பொடிப்பொடியாகும்போது அவள் படும் வேதனைகளை அவமானங்களை ஏனையவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.

இவற்றுக்கெல்லாம் யார்மீது பிழை சொல்ல?, யாரைக்கோபிக்க? புரியாத நிலைகளில் காரணம் தெரியாது எம்மவர்களால் கைக்கொள்ளப்படும் கலாச்சார கொள்கைகளை சாடுவதா? அல்லது அரைவேக்காட்டுத்தனமான சாத்திரிமார்கள் மீது கோபப்படுவதா? அல்லது எல்லோருக்கும் படியளக்கும் கடவுளை நோவதா? தனது தேவைகளுக்காக மனிதன் கடவுளை உருவாக்கி; பின்னர் தான் உருவாக்கிய கடவுளிடமே அதைத்தா? இதைத்தா? என அழும் முட்டாள்த்தனத்தை நோவதா?

நல்லவேளையாக இவ்வளவு கேள்விகளுக்கும் முடிவு ஒன்று பெறமுதல், ரகுவின் சம்மந்தப்பேச்சு கடைசி நிலையை எட்டியிருந்தது. பெண்பார்க்கும் படலம் இனிதே நிறைவேறி பெண்ணைப்பிடித்து விட்டதாக மாப்பிள்ளை சொல்லியவுடன், சுதாவின் அப்பாவும் அம்மாவும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ரகுவினை மிக உயர்ந்த இடத்தில் இருத்திக் கொண்டாடினார்கள். பெண்பார்க்க வந்த ரகு எல்லோரிடமும் விடைபெற்று செல்ல ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுதா. மோட்டார்சைக்கிளில் ரகுசெல்லும் அழகை ரசித்தவளை பார்த்த புறோக்கர், “நீ குடுத்துவச்சனியம்மா, பெடியன் நல்ல பிரயாசைக்காரன், தொழிலும் நல்லமாதிரி, ஊரிலையும் செல்வாக்கான ஆள், பார்த்தியே உவ்வளவு பொலீஸ்க்காரன்கள் ரோட்டில நிண்டாலும் “கெல்மெற்” போடாமத்தான் போகின்றான். அவ்வளவு செல்வாக்கு”
புறோக்கரின் வாய்ஜாலம் சுதாவையும் பெற்றோரையும் புல்லரிக்க வைக்க மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர். சுதாவின் தம்பிகள் கால்களில் சக்கரங்களைக் கட்டியவாறு திருமணவேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்களும் வீட்டுக்குவந்துசேரத் தொடங்கினர். சுதாவின் தாய்மாமா சுதாவைத் கட்டியணைத்து “பார்த்தியோ நான் அடிக்கடி சொல்லுவேன் உனக்கு நல்லது நடக்கும். உன் கர்மவினைதான் எல்லாவற்றையும் தடுக்கிறது என்று. இப்ப பார்த்தியா கர்ம வினை அகல, சூரியனைக்கண்ட பனிபோல் உன் துன்பங்களும் அகன்றுவிட்டது.”

சுதாவும் அடிக்கடி யோசிப்பது உண்டு மாமாவின் கர்ம வினைக்கோட்பாட்டை? அந்த நேரத்தில் எல்லாம் சுதாவின் மனதில் எழும் கேள்வி போனபிறப்பில் செய்த பாவங்கள் ஞாபகங்கள் நமக்குத் தெரிந்தால்தானே கர்ம வினையை நாம் அனுபவிப்பதில் பலன் உண்டு. அதைவிடுத்து போனபிறப்பில் எமது ஆத்மா இன்னொரு உடலில் அதன் மனத்துடனும் உணர்வுகளுடனும்  செய்ததை இப்பிறப்பில் இந்த உடலும் இப்போதுள்ள மனமும் அனுபவிப்பது எவ்விதத்தில் நியாயம்? என்று. எது எப்படியோ தனது கர்ம வினை முடிந்தாகிவிட்டது என்பதை நினைத்து சந்தோசப்பட்டாள்.

இடையிடையே ரகு போனில் தொடர்புகொண்டு கதைக்கத் தொடங்கியிருந்தான். போனில் கதைக்கும்போது ரகு காட்டிய நெருக்கம் சுதாவின் மனத்தில் இருந்த பயம் அனைத்தையும் துரத்தியது.  இடையிடையே ஒவ்வொருசாட்டுச் சொல்லி வீட்டுக்கும் வந்து சென்று கொண்டிருந்தான். மகிழ்ச்சியான காலங்களில்; காலம் போவது தெரியாமல் போய்விடும். அதுபோல் சுதாவின் திருமணநாளும் நெருங்கியிருந்தது. மண்டபத்தல் திருமணம். மண்டபம் நிறைந்த சனம். உறவினர்களைவிட ரகுவின் நண்பர்கள் பட்டாளமே மண்டபத்தை நிறைத்திருந்தது.

சுதாவின் பெருமைக்கு அளவே இல்லாமல்போனது. எவரும் இல்லாமல் இருந்த அவளுக்கு கண்நிறைந்த கணவன் அவனது நண்பர்கள் என பெரும் கூட்டமே தன்பின்னால் இருப்பது, அவளால் கனவில் கூடநினைக்க முடியாதது; இன்று நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

திருமண நிகழ்வுகள் முடிவடைந்து சுதாவை மாப்பிள்ளை வீட்டில் ஆனந்தக்கண்ணீருடன் விட்டுவிட்டு பெற்றோரும் உறவினரும் சென்றுவிட்டனர். சுதாவுக்கோ ரகுவின் வீடு புதிதாகத் தெரியவில்லை. ரகுவீட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் வீடு செல்ல நெருங்கிய ஒருசில உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே நின்றிருந்தனர் ரகுவின் வீட்டில்.

அடுத்த நாள் இரவு, கொழும்பில் இருந்து திருமணத்துக்கு வந்திருந்தான் ரகுவின் நெருங்கிய நண்பன், அவன் இரவு பயணத்துதுக்கு தயாராக; ரகு நண்பர்கள் உறவினர்கள் சொல்லியும் கேளாமல் தானே பஸ்தரிப்பிடத்தில் விட்டுவிடவேண்டும் என்ற ஆசையில் நண்பனை மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்றான். வீட்டில்  ரகுவின் நண்பர்களின் கிண்டலையும் கேலிகளையும் பொய்க்கோபத்துடன் ரசித்துக்கொண்டிருந்தவளிடம், “ரகுவிற்கு போன் பண்ணி கெதியாக வீட்டுக்கு வரச்சொல்லம்மா” என்றார் மாமானார். அப்போதுதான் நேரம்போனது தெரியாமல் இருந்துவிட்டோமே என்ற பதைபதைப்பில் போன்செய்தாள் ரகுவிற்கு, போன் ரிங் ஆனது. ஆனால் ரகு எடுக்கவில்லை.

மீண்டும் மீண்டும் எடுத்தும் பயன் இல்லை. பதட்டத்துடன் ரகுவின் நண்பர்களிடம் ரகு போன் எடுக்காததைப் பற்றிச் சொல்ல அவர்களிற் சிலரும் தங்களது போனில் இருந்து போன் செய்தும் ரகு போன் எடுக்காததால் தங்களது மோட்டார் சைக்கிள்களில் ரகுவைத் தேடிப்புறப்பட்டனர். சுதாவிற்கு இப்போது பதட்டமும் பயமும் சேர அழத்தொடங்கிவிட்டாள். ரகுவின் தாயார் “அழக்கூடாது பிள்ளை, என்னபயம்? மோட்டார்சைக்கிள் சத்தத்தில் போன் ரிங் பண்ணியது கேட்காமல் போயிருக்கும் என ஆறுதல் கூறினார். ஆனால் அந்த ஆறுதல் நிலைக்கவில்லை. நண்பனை ஏற்றிச் சென்ற ரகு திரும்பிவரும்போது மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு தலையில் காயத்துடன் ரகுவை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக நண்பர்கள்  தந்தையின் போனுக்கு தகவல் சொன்னார்கள். குடும்பமே அழுது குழறிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள்.

வைத்தியசாலையில் சிகச்சை பயனளிக்காமல் ரகுவின் மரணச்செய்தியை மட்டுமே வைத்தியர்களால் கூற முடிந்தது. கூடவே நின்ற பொலீஸ் “கெல்மெற் போட்டிருந்தால் தப்பித்திருக்கலாம். தலையில் அடி பலமாக விழுந்திராது” என்றார். அதனை ஆமோதித்தபடி வைத்தியரும் செல்ல, சுதா பொத்தென்று மயங்கிவிழுந்தாள்.

ரகுவின்தாயும் உறவினர்களும் சுதா ரகுவை முழுங்கிவிட்டாள். அவளது ராசிதான் ரகு இறந்துவிட்டான் என பேசத்தொடங்க, சுதா நடைப்பிணமானாள், இவற்றை அவதானித்த சுதாவின் மாமா என்ன ஆனாலும் பரவாயில்லையென சுதாவை தாய்வீட்டுக்கு வலுக்கட்டாயமா கூட்டிவந்துவிட்டார். வீட்டில் பிரமை பிடித்தவள்போல் இருந்த சுதா விரக்தியோடு மாமாவைப்பார்த்து திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள் “ரகு கெல்மெற் போடாததும் எனது கர்ம வினையா? மாமா” என்று. மாமானாரால் அழுவதைத்தவிர எதுவும் கூறமுடியவில்லை….

-    மானிப்பாய் சுதன்


Sunday, December 10, 2017

கரிநாக்கு. --- (30.04.2017, சூரியகாந்தி - உதயன் நாளிதழில் வெளியானது.)



ஒவ்வொரு வினாடியும் பல ஆச்சரியங்களைளயும் விசித்திரங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் இவ்வுலகு, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தன்னையும் விட்டுவைக்காது என்பதை கேதீஸ் அறிந்திருக்க நியாயமில்லை. எம்மவரின் வாயில் ஏற்படும் சிறு அசைவு குடும்பத்தில், வாழ்க்கைளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலரின் பட்டறிவாக இருக்கும்.

இந்தப்பட்டறிவு கேதிஸின் வாழ்க்கையிலும் ஏற்பட்டது. ஆனால் அநியாயத்துக்கும் அற்ப விசயத்துக்காக ஏற்பட்டதுதான் கேதீஸின் பிரச்சினை. கேதீஸ் திருமணம் முடித்தநாளில் இருந்தே மனைவியின் பக்கத்தாரை சற்று இளக்கமாகவே நக்கலடித்து வந்தான். இதனால் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் பல சண்டைகள் வந்து போய்க்கொண்டிருந்தன.

விடுமுறைநாட்களில் காரைநகரில் உள்ள தனது தாய்மாமன் வீட்டுக்கு போய் நின்று வரவேண்டும் என்பது கேதீஸின் மனைவி நந்தினியின் விருப்பம். மாமனாரோ வயதான மாமியாருடன் தனியே இருக்கின்றவர். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில். போனில் அடிக்கடி அம்மா அப்பாவை ஒருதரம் போய்ப்பார்க்க சொல்லிக்கொண்டிருப்பார்கள் நந்தினியிடம் மாமானாரின் பிள்ளைகள்.
கேதீஸிடம் கேட்கப்போனால் குண்டக்கமண்டக்கவாக பதில் சொல்லுவான். போய்வர பெற்றோலுக்கு காசு அனுப்பச் சொல் என்பான். எதுவானாலும் பரவாயில்லை என்று கேதீஸிடம் சொல்லி இந்த சனி ஞாயிறு காரைநகர் வந்து சேர்ந்தார்கள் இருவரும். தனியே இருந்த மாமன் மாமிக்கோ எல்லைமீறிய சந்தோசம். கேதீஸ் அவர்களது வீட்டையும் வளவின் பெருப்பத்தையும் பார்த்து வியந்து போனான்.

மதியம் சாப்பிட்டுவிட்டு எஞ்சியதை நாய்க்கு வைக்கப்போன கேதீஸ் மிரண்டு போனான்; சுமாரான ஒருநாய்க்குட்டி தான்வைத்த உணவை ஒரே வாயில் சாப்பிட்டதைப்பார்த்து. நிச்சயமாக நாயின் வாயின் எந்தப்பகுதியிலும் தான்வைத்த சாப்பாடு பட்டிருக்காது என்பது விளங்கியது. எனேன்றால் அது சாப்பாட்டை விழுங்கிய விதம் அப்படி.
மனைவியடம் வந்த கேதீஸ், இதென்னப்பா நாயோ? பேயோ? இப்படிச்சாப்படுது. சாப்பாடு வைக்கிறதில்லையோ அதுக்கு.” என்றவனின் கதையைக் கேட்டுக்கொண்டு வந்த மாமனார், “அதுவோ தம்பி, எங்களிட்ட நின்ற நாய் வயதுவந்து செத்துப்போச்சு, நாங்க தனிய இருக்கிறனாங்கள், பெரிய வளவு எப்படியும் ஒருநாய் நிற்க வேணும் அதுதான் போனகிழமை மீன்சந்தையடியில் உதைப்படிச்சந்தனான். ஆள் சூரன். சின்னச்சத்தம் கேட்டாலும் விடாது குரைத்துக் கொண்டிருக்கும்” என்றார்
கேதீஸ் வாய்திறக்கும் போது தனது நாக்கசைவு ஏற்படுத்தப்போகும் விளைவுகளை தெரிந்திருக்கவில்லை. ஆனால் போகப்போக தெரிந்து கொண்டான். எலும்பில்லாத அங்கங்களின் தன்னிச்சையான அசைவுகளின் தாக்கங்கள் மிகவும் மோசமானவை என்பதைப்புரிந்து கொண்டான்.

தன்னைப்பார்த்து குரைத்ததையும், சாப்பபாட்டை உண்டவிதத்தையும் கொண்டு, “உப்பிடிச் சாப்பிட்டால் நாய்பிரக்கடிச்சு செத்துப்போகும் கெதியாக” என்றான் கேதீஸ். தொடர்ந்து நாய்களைப்பற்றியும் அவற்றின் விசுவாசத்தைப்பற்றியும் கதைத்துக்கொண்டு நித்திரைக்குப்போனார்கள்.
காலைப்பொழுழுதில் வெளியில் கேட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட கேதீஸ் சோம்பலை முறித்துக்கொண்டு வெளியில் வந்து பார்த்தவன் சிலையாய் நின்றான். “அவற்ற நாக்கு என்ன கரிநாக்கே பிள்ளை” என்று மாமியார் கேட்பது மட்டும் தெளிவாகக் கெட்டது. மனைவியின் பார்வைவீச்சு சுட்டெரிக்க நான் ஒன்றும் செய்யவில்லை என்று கண்ணாலேயே பதில் சொன்னான்.

நாய்க்குட்டி இரவே செத்துவிட்டிருந்ததை அதன் மேல் ஊரும் எறும்புகள் உறுதிப்படுத்தின. மாமா, மாமியின் கண்ணீர்களுடன் நாய்குட்டியின் இறுதிக்கிரியைகள் நடந்துகொண்டிருந்தன. தொலைபேசி அடிக்க அதை எடுத்த மாமியார் “ஓம்! பிள்ளை, உனக்கார் சொன்னது? சிங்கத்தாற்ற மனிசியே? ஆ…. அருமந்த நாய்க்குட்டி. நந்தினியும் அவரும் வந்து நிற்கிறபடியால் உதவி……
கேதீசுக்கு பயமாக இருந்தது இரவு தான் சொன்னதை மாமியார்க்கிழவி லண்டனில இருக்கிற மகளுக்கு போட்டுக்குடுக்க போகுதோ? என்று. நல்லகாலத்துக்கு சொல்லவில்லை. நன்றியுடன் மாமியைப்பார்க்க, “தம்பியோட கதைக்கப்போறியே இஞ்சதான் நிற்கிறார் கதை ..” என்றவாறு தொலைபேசியை கேதீஸிடம் கொடுத்தார். கேதீஸ் எல்லாவற்றுக்கும் ஓம் போட்டுக்கொண்டவன். “எனக்கே இப்பதான் தெரியும். எனக்கு முதலே, லண்டனில இருக்கிற உங்களுக்கு தெரிஞ்சிடுத்து” என்றான் சும்மாயிரமல். “ஓ.. அம்மா இராத்திரியும் சொன்னவா நீங்கள் நாய் செத்துப்போயிடும் போல கிடக்கு என்று சொன்னீங்கள் என்று…. மகள் சொல்லச்சொல்ல கேதீஸ் வடிவேலுபாணியில் “அடி நாறல் கிழவி…..” என்று மனதில் திட்டிக்கொண்டான்.

“சரி, நாங்க பிறகு கதைக்கிறம், நல்லதொரு நாய்க்குட்டியை பார்த்துக் குடுங்கோ, நாய்க்குட்டி கிடைக்கும் வரை நீங்க வீட்டில நிண்டுட்டு போங்கோ” என்றவாறு வைத்தார் தொலைபேசியை. கேதீஸ் மனைவியடம் விசயத்தை சொன்னான். “அடி, நாய்க்குட்டி கிடைக்கும் வரை எங்கள நிக்கட்டாம், அப்ப நாங்க என்ன நாய்களே? இல்லாட்டி உன்ர மாமனார் செத்தே போனார்….. அவசரஅவசரமாக ஓடிவந்து வாயைப்பொத்தினாள் நந்தினி. “உங்க நாறல் வாயை மூடிக்கொண்டு இருங்கோ. எனக்கு இனி விடியும்வரை நிம்மதி இராது.” என்றாள்.

“அடிப்பாவி அப்ப என்ரவாயாலாதான் நாய் செத்தது என்று முடிவு பண்ணிட்டியோ?”
“முதல்ல போய் நல்ல நாய்க்குட்டியா பிடிச்சுக்கொண்டு வாங்கோ… இல்லாட்டி வீட்டுக்கு போக ஏலாது.” மிரட்டினாள் பின் விரட்டினாள் நந்தினி. தன்னை நொந்தவாறே மோட்டார் சைக்கிளை எடுத்தான் கேதீஸ் நாய்க்குட்டி பிடிக்க.
வலந்தலை மீன்சந்தையடி, பொன்னாலை மீன்சந்தையடி, காக்கை தீவு மீன் சந்தையடி..., இப்படி நீண்டுகொண்டுபோனது நாய்க்குட்டி தேடும் படலம். எல்லா இடமும் பெட்டை நாய்க்குட்டிகளே நின்றன. கடுவன் குட்டிகள் கடுகளவும் காணவில்லை.

பெரிய கடையையும் தாண்டி திருநெல்வேலிச்சந்தையடியில் நாய்க்குட்டிகளை பூந்துபூந்து பார்த்தவாறே மோட்டார் சைக்கிளை மெதுவாக செலுத்தி வந்தவனை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்காரன்  மோதிவிட்டான். காலில் வலி ஏற்பட்டது.. அதை விட அவன்பேசியது இன்னும் வலித்தது “பெட்டை நாய்க்குட்டிகளையும் விடாதேயுங்கோ.” அவன் ஏன் அப்பிடிப் பேசிவிட்டுப்போறான்? தப்பா நினைச்சிருப்பானோ? அக்கம் பக்கம் பார்த்தான் எவருமில்லை. என்றவாறு நிமிர, “”என்ன தம்பி பார்க்கிறீங்க?” பிரதேச சபை சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் கேட்க, தன் நிலைமையைசச்சொன்னான் கேதீஸ்.
“கடுவன் குட்டிகளை யார் தம்பி இஞ்ச விடப்போகிறாங்கள்? நீங்கள் கோண்டாவில் தேத்ததண்ணிக்கடையடியில மணியம் என்று விசாரியுங்க, அவரிட்ட நாய்கள் இருக்கு நூறு இருநூறை கொடுத்தால் வேண்டலாம்” என்றார் அவர். தேநீர்க்கடை என்றதும் கேதீசுக்கு பசிக்கத்தொடங்கியது. தான் நீண்டதூரம் வந்திருப்பதும் தெரிந்தது.
மோட்டார் சைக்கிளை “ஸ்ரார்ட் பண்ண, வெளிக்கிட்டபோதுதான் பார்த்தான், கிக்கரைக்கானவில்லை. தேடியபோது உடைந்தபடி கிடைத்தது. ஒருவாறு சில ஆயிரங்களுடன் திருத்தி கொண்டான்.

பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கலாம். கடைசியாக ஏன்ர வாயாலதான் நாய்க்குட்டி செத்தது என்று பெருமூச்சு ஒன்றுடன். தேநீர்க்கடையில் தேநீரைக்குடித்தவாறே மெதுவாக “ அண்ணை மணியண்ணையை தெரியுமோ?” எனக் கேட்டான்.
“இஞ்ச கனக்க மணியம் இருக்கினம். நீங்க யாரைக் கேட்கிறீங்க?
“நாய்விக்கிற மணியம்”, பயந்து பயந்து மெதுவாகச் சொன்னான். கடையில் நின்ற மற்றவர்களுடன் ஆராய்ந்து ஒருமுடிவுக்கு வந்த கடைக்காரர். நாய்விக்கிற மணியத்தின்ர வீட்டு விலாசத்தைச் சொல்ல கேதீஸின் மோட்டார் சைக்கிள் மணியம் வீட்டை நோக்கிச் சென்றது. போகும்போது தான் நாய்க்குட்டியுடன் வீட்டுக்கு போவதுபோலவும் நந்தினி தன்னைப்பெருமையுடன் பார்ப்பது போலவும் கற்பனை பண்ணியவாறு சென்றான்.
மணியம் வீட்டுக் கேற்றடியல் நின்றுகொண்டு, ஏற்கனவே மணியத்தைத் தெரிந்தமாதிரி, மணியண்ணை மணியண்ணை என்று கூப்பிட்டான். வந்ததோ மணியண்ணையின் மனைவி. “என்ன தம்பி வேணும்?” கேற்றைத்திறக்காமலேயே கேள்வி வர.
“நாய்க்குட்டியொன்று வேணும் அதுதான், பார்க்கலாமோ?”
“வேண்டுகிறது என்று சொன்னால் பார்க்கலாம் தம்பி”
உசாரடைந்த கேதீஸ், “”எவ்வவளவு அக்கா ஒன்று?” என்றான்.
“எட்டாயிரம் தம்பி. ஒருமாதக் குட்டி, ஜேர்மன் சப்பேட்” என்று சொல்ல, திடுக்கிட்ட கேதீஸ், “நான் பிறகு மணியண்ணை நிற்கும்போது வருகிறேன்” என்றவாறு மோட்டார் சைக்ககிளை எடுத்தான்.

இனி ஒரு இடமும் போவதில்லை என்று நினைத்தவாறு யாழ்ப்பாணத்தில்  செல்லப்பிராணிகள் விற்கும் கடையொன்றுக்குள் நுழைந்தான். அங்கிருந்த பெண்ணிடம் “அக்கா நாய்க்குட்டி ஒன்று பார்க்கவேணும்” என்று சொல்ல, அந்தப்பெண் ஒரு வெள்ளைப் பேப்பர் எடுத்து “என்னமாதிரி அண்ணை? காவலுக்கோ? செல்லப்பிராணியாக வளர்க்கவோ” என்று கேட்க,
“காவலுக்குத்தான்” என்று சொல்ல, ஏத்தனை பரப்புக்காணி என்று கேட்டாள் அந்தப்பெண். கேதீசும் பெருமையாக இருபது பரப்பு என்று சொல்ல, “இருபது என்றால் ஒன்று பத்தாது அண்ணை” என்று சொல் உசாரடைந்த கேதீஸ் ஊர் நாய்தானே என்று கேட்க? கேதீஸ் ஏதோ கேட்க கூடாத கேள்வியை கேட்டமாதிரி அந்தப்பெண் பார்க்க கேதீஸ் தொங்கிய தலையுடன் கடைக்கு வெளியே வர, அவனது நண்பனொருவன் வர விடயத்தையும் தனது அலைச்சலையும் சலிப்புடன் சொல்ல.
பக்கத்துவீட்டில நாய் குட்டி போட்டிருக்கு, பொறு கேட்டுச் சொல்கின்றேன் என்று பக்ககத்துவீட்டுக்காரருடன் தொலைபேசியில் கதைத்துவிட்டு. “”உனக்கு அதிஸ்டம், இரண்டு கடுவன் நிற்குதாம் தருகினமாம். இரண்டுகிழமைதானாம். இன்னும் ஒரு கிழமை போக தருகினமாம். என்று சொல்ல, அலைச்சலையும் மீறி, தாங்கமுடியாத சந்தோசத்துடன் காரைநகருக்கு அடங்காப்பசியுடன் பறந்தான்.
வீட்டுக்குள் போனவுடன் நந்தினி பாய்ந்து விழுந்தாள் “எங்கேயப்பபா சுத்திப்போட்டு வாறியள், உங்களப்பார்த்துக்கொண்டு நாங்களும் சாப்பிடமால் இருக்கிறம்” என்றவளுக்கு பதில் சொல்ல வாயெடுத்தவன் புதிதாக ஒரு கடுவன் நாய்க்குட்டியை கட்டி வைத்திருப்பதைக் கண்டவுடன் வாயை மூடிக்கொண்டான்.

“நாய்க்குட்டி வந்திட்டுதுதானே, சாப்பிட்டுட்டுநாங்க வெளிக்கிடுவம்” என்றவனை “விடியப்போவம்” என்று மனைவி சொன்னதன் அர்த்தம் விளங்கியபோது தன் வாயால் காலையில் மாமானாரைப்பற்றி சொன்னதை நினைத்து நொந்து கொண்டானே அன்றி வாய் திறக்கவேயில்லை.


பிணை வைத்தார் நெஞ்சம்! --- (22.05.2016,சங்குநாதம் - வலம்புரி நாளிதழ், 24.09.2017 சூரியகாந்தி - உதயன் நாளிதழ்)


காலையில் தேனீரை அருந்தியபடி வானொலியில் சூரியன் எப்எம் (FM) கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கிரியின் ஞாபகம் வந்தது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது ஒன்றாக இருந்து படித்தது. கிரி நன்றாக படிக்கக்கூடியவன் இருந்தும் அவனது குடும்ப வறுமை அவனை துரத்தியபடி இருந்தது. அவனது நிலையறிந்து எமது நண்பர்கள் எவரும் அவனிடம் இருந்து பணத்தினை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்துவிடுவான். இரவு உணவுக்காக, அவனது கைப்பக்குவத்தில் உருவாகும் உப்புமாவும் தேநீரும் என்றும் மறக்க முடியாத ஒன்று. 
 பட்டங்களை
ஒவ்வொருவரும் வேலைக்காக ஒவ்வொரு இடத்தில் இருந்தாலும், இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் அருகில் இருப்பதாகவே உணரும் வேளையில் நேற்றைய தினம் அவனது நேரடி வருகை, அவனது தேவையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது.


பட்டமேற்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் அதனைத்தொடர்வதா வேண்டாமா எனும் திரிசங்கு நிலையில் இருந்தான். திருமண வயதில் இரு தங்கைகள் எந்நேரத்திலும் திருமணம் பொருந்தி வரலாம். வந்தால் பணம் தேவை. பட்டமேற்படிப்புக்கு சென்றால் திருமணத்துக்கு பணம் இல்லை. மேற்படிப்புக்கு செல்லாவிடில் இனி இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை. இந்நிலையில்தான் அவனது வருகை அமைந்திருந்தது.

பல வழிகளில் சிந்தித்து இறுதியில் ஞாபகத்துக்கு வந்தவன் எனது பாடசாலை நண்பன் அனந்தன். தற்பொழுது தனியார் வங்கியொன்றில் வேலைபார்க்கின்றான். அவனிடம் வங்கியில் இருந்து கடன் எடுத்து தங்கைகளின் திருமணத்துக்கு என நிலையான வைப்பிலிட்டுவிட்டு கிரி படிப்பதற்கு செல்லலாம் என்பதுதான் எங்களது ஐடியா. அனந்தன் மூலமாக இலகுவாக வேலையை முடிக்க எண்ணினோம். அனந்தனின் கைபேசி இலக்கத்தை தேடி தொடர்பினை ஏற்படுத்தினேன்.

“ஹலோ! சொல்லுமச்சான்.. என்ன திடீரென்று…” அனந்தனின் பேச்சு நம்பிக்கையை தர. 
“ஓன்றுமில்லை, உனக்கு தெரியும்தானே கிரியை, அவனுக்கு கொஞ்ச காசு வேணும். அதுதான் உங்கட வங்கியில கடன் எடுக்கலாமோ? என்று கேட்கத்தான்…..”
“அட இதுக்கேன் இவ்வளவு யோசனை. கிரி அரசாங்க உத்தியோகம்தானே அவனை கடனாளி ஆக்கிறது என்னுடையபொறுப்பு..”
“என்னடா சொல்கிறாய்? கடனாளி ஆக்கிறதோ?”
“இல்லை மச்சான் கடன் குடுக்கிறது என்ர பொறுப்பு. அவன்ர சம்பளத்தை சொல்லு அவனை எவ்வளவு பெரிய கடனாளி ஆக்கிறது என்று நான் சொல்கிறேன்..”
வழமையாகவே அனந்தன் கொஞ்சம் நக்கல் நளினத்தோடதான் கதைப்பான். ஆனாலும் இன்று கடும் சந்தோசத்தில், ஒரு அடிமை சிக்கனாற்போல் கதை. எப்படியிருந்தாலும் எங்கள் வேலை முடிந்தால் சரி என்ற முடிவுடன்,
“இல்லையடா அரசாங்க வங்கியில கேட்டனாங்கள்”; என்று சொல்லி முடிப்பதற்குள்.
“டேய் அவங்கள் டொக்குமென்ற்ஸ் கேட்டே சாகடிச்சுடுவாங்கள், நான் ஒரு கையெழுத்தோடு தருகின்றேன்…வேற ஒரிடமும் போயிடாதே…”

“அனந்தன், பிரச்சினை என்னவென்றால் இவன் இந்தியாவுக்கு புதன்கிழமை போகவேனும். இன்னு சனிக்கிழமை. புதன் கிழமைக்குள் விசயம் முடிய வேனும். இவன் வேற நாளைக்கு கொழும்பு போகின்றான் அதுதான்…” என்று நான் இழுத்தேன். அவனோ, “அது பிரச்சினை இல்லை நான் நாளைக்கு அவன்ர வீட்டுக்கு போய் விசயத்தை முடிக்கிறேன். பயப்படாம மற்ற அலுவல்களை பார்க்கச் சொல்லு.”
என்னடா இது, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தே கடன் தருகிறேன் என்கிறான். “நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தெரியுமோ?” ஒரு சந்தேகத்துடன் நான் கேள்வியைப் போட,
“எங்களுக்கு கஸ்டமர்தான் முக்கியம், மக்களுக்கு சேவை செய்யவேனும் அதுதான் எங்கட நோக்கம்.” என்று அவன் சொல்ல நான் அமைதியானேன்.
ஞாயிற்றுக்கிழமை உருசியான மதிய உணவு உண்ட மயக்கத்தில் தொலைக்காட்சியை இரசித்தபடி இருக்கும்பொழுது. கைபேசி சிணுங்கியது. அனந்தன்தான், கைபேசியை அழுத்தி “சொல்லுடா?” என்றேன். “மச்சான் உன்ர ஆளுடைய கணக்குக்கு நாளை பணம் போயிடும். எல்லாம் சரி”
என்ற அவனது வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்ததை போன்றிருந்தது. பதிலுக்கு நானும் “நன்றிடா என்று சொல்ல, நன்றி ஒன்றும் தேவையில்லை உன்ர ரெலிகொம் போன் நம்பரை சொல்லு” என்றான்.
“ஏன்?” என்ற எனக்கு,
“இல்லையடா அவனுக்கு பிணையாக உன்ர பெயரைத்தான் போட்டிருக்கிறேன். அதுக்கு உன்ர நிiயான இணைப்புடைய போன் நம்பர் தேவை. பிறகு வந்து டொக்குமென்ற்ஸ் இல கையெழுத்து வேண்டுகிறேன்” என்றான். எனக்கு இப்பவும் பால் வார்த்ததுபோலதான் இருந்தது ஆனால் நெஞ்சில இல்லை……சரி நண்பன்தானே. என்ற சிந்தனையுடன் எனது நிiயான தொலைபேசி இலக்கத்தை வழங்கினேன்.
காலம் தன்கடமையை சரிவர செய்ய மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் கிரியின் அம்மா எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று கிரியின் விபரங்களை கேட்டறிந்துகொண்ட நான், “அவன் போகும்போது ஒரு போன்கூட பண்ணாம போட்டான். அதுதான் எனக்கு கவலை” என்றேன்.

“ஓ அது கிரியும் சொன்னவன்தான் கடைசியில ஒரே வேலை அதனால் போன் பண்ணமுடியவில்லை. அங்கே போயும் படிப்பு, அங்கேயிருந்து இங்கே போனுக்கு காசும் கூட அதுல போன் பண்ணவில்லை என்று சொன்னவன். குறை நினைக்காதே தம்பி.”
“ஐயோ நான் குறை நினைக்கவில்லையம்மா. நீங்க சொல்லுங்க என்ன விசயமா வந்தனீங்கள்?”
“இவள் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குது. நல்ல இடம் அதுதான். வருகிற மாசமே திகதி வைத்திருக்கின்றோம். உங்களுக்கு நேரே போய்ச் சொல்ல சொன்னவன். அதுதான் வந்தனான். ஏல்லோருமாக குடும்பத்தோட வந்துவிடுங்கோ தம்பி.”
“சந்தோசமான விசயம் கட்டாயம் வருவோம்.” என்ற என்னிடம் இருந்து விடைபெற்று சென்றார் கிரியின் அம்மா.

மனைவியிடம் விடயத்தை சொன்னேன், “கிரியின் தங்கச்சிக்கு கலியாணமாம். கிரியின் அம்மா வந்து சொல்லிவிட்டு போனவர்.” வேலையால் சற்றுக் களைத்து வந்திருந்த மனைவி சிறிது கடுப்புடன், “ஏன் அவருக்கு ஒரு போன் பண்ணி சொல்ல முடியாதோ?” என்று கேட்டாள். என்னவோ தெரியவில்லை எனது மனைவிக்கு கிரியை அறவே பிடிப்பதில்லை. கிரி தொடர்பான எந்த விடயத்திலும் குதர்க்கமாகவே பதில் வரும். அதனால் “சரியப்பா கலியாணத்துக்கு குடுக்க ஏதாவது வேண்ட வேணும் நாளைக்கு வரும்பொழுது வங்கியில் காசு எடுத்துக்கொண்டு வாங்கோ.” என்றேன். மனைவிதான் பணவிடயம் எல்லாம். இப்பவும் வங்கிப்புத்தகத்தை கொண்டுபோய்த்தான் பணம் எடுப்பா. ஏரிஎம் கார்ட் எல்லாம் பாவிப்பதில்லை. மனைவி சற்று எரிச்சலுடனேயே, “சரியப்பா” என்றுவிட்டு தன்வேலையில் மும்மரமானாள்.

அலுவலகத்தில் மதிய உணவை உண்டுகொண்டிருந்த எனக்கு மனைவியின் கைபேசியில் இருந்து அழைப்பு வர, கைபேசியை எடுத்தவாறே,
“சொல்லுங்க” என்ற என் வார்த்தை அவளின் கைபேசிக்குNபுhக முன்னரே மனைவியின் குரல் என்னை வந்தடைந்தது. “என்னப்பா எங்கட எக்கவுண்ட்டில இருந்து பத்தாயிரம் ரூபா வெட்டிக்கிடக்கு, அனந்தனுக்கு போன் பண்ணிக்கேளுங்கோ என்னவென்று?” மனைவியின் குரலில் அவசரம், பயம் எல்லாமே தெரிந்தது.

“சரி சரி பயப்படாவேண்டாம். நான் அனந்தனிட்ட விசாரிக்கிறேன்” என்று மனைவிக்கு கூறினாலும் யோசனையுடன் அனந்தனின் கைபேசிக்கு அழைப்பினை எடுத்தேன்.
“ஆ….. சொல்லு மச்சான் யாருக்கும் லோன் வேணுமோ?” ஏன்றவனை மறித்து விடயத்தை சுரக்கமாக சொல்லி ஒருதரம் என்னுடைய கணக்கினை சரிபார்த்து சொல்லச்சொன்னேன். “ஒரு நிமிடம் லைனில் இரு” என்றவன் கணணியில் தட்டுவது கைபேசியினூடு கேட்டது, கூடவே எனது இதயத்துடிப்பும் சேர்ந்து கேட்டது காதில். “அடே மச்சான் உன்ர ஆள் வச்சிட்டாண்டா ஆப்பு உனக்கு.” “என்னடா சொல்கின்றாய்?” அதிர்ந்து கேட்டேன். “உன்னுடைய ஆள் கிரி இரண்டுமாதமாக தவணை கட்டவில்லை. சம்பளப்பணமும் எங்கட வங்கிக்கு வரவில்லை. அவனுக்கு நீதானே பிணை வைத்ததது. அதனால் உன்னுடைய கணக்கில் இருந்து கழிக்கிறான்கள்.” அனந்தனின் கழிக்கிறான்கள் என்ற சொல் அவனுக்கும் அந்த வங்கிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்பது போல காட்டியது.

இருந்தும் நான் கேட்டேன், “எனக்கொரு தகவல் தந்திருந்தா நான் கிரியோட அல்லது அவனது அம்மாவுடன் கதைத்து சரி செய்திருப்பேன்.” என்ற என்னை இடைமறித்த அனந்தன், “அது நாங்க ஒன்றும் செய்யமுடியாதுடா. இனியும் ஒரு பிரச்சினை இல்லை அவனுடன் கதைத்து காசை கட்ட சொல்லு. உன்ர கணக்கில வெட்டின காசையும் கேட்டு வேண்டிக்கொள்.” அனந்தனின் வார்த்தைகள் என்னுள் கஸ்டமர் கெயாரை ஞாபகப்படுத்தியது. அதை விட அவனது விட்டேத்தியான பதில் இன்னும் மோசமாக தாக்கியது என்னை. இவை எல்லாவற்றையும் விட எனது மனைவி? கடவுளே திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பார்கள், நீ துணை நிற்கின்றாயோ இல்லையோ எனது வாழ்க்கையில் விழையாடிவிடாதே என்ற கோரிக்கையுடன் கைபேசியை வைத்துவிட்டு இப்பொழுது மனைவிக்கு எடுக்கலாமா போன் எடுக்கலாமா? அல்லது வீட்டுக்குப் போய் சொல்வதா என்ற குழப்பத்தில் அரைநாள் விடுப்பு பெற்று கிரியின் வீடு நோக்கி பயனமானேன்.

“வா தம்பி. பிள்ளை வெளியில வா சிறி அண்ணா வந்திருக்கிறார்”. கிரியின் அம்மாவின் வரவேற்பும் அழைப்பும் என்னை கவரவில்லை. இருந்தும் புன்முறுவலுடன் கதிரையில் அமர்ந்த படி, “கிரி போன் கதைச்சவனோ என்றேன்.” “எங்கே தம்பி இப்ப ஒரு மாதமாக ஒரு தொடர்பும் இல்லை. கலியான நாள் வேற கிட்ட வருகிறது. கையில காசு ஒரு காசும் இல்லை. என்ன செய்கிறது என்றுதான் தெரியவில்லை. வங்கியில் இருந்த காசு சீதனத்துக்குதான் காணும். இவனை தொடங்கிட்டு முழிச்சுக்கொண்டிருக்கிறேன்”. கிரியின் அம்மாவின் புலம்பல்கள் உண்மையானவையா பொய்யானவையா ஒன்றும் விளங்கவில்லை. திருமண ஆசையில் நிற்கும் தங்கையைப் பார்க்க பாவமாக இருந்தது. குழப்பத்தில் எதையும் செய்வது நன்றல்ல என்ற எண்ணத்துடன் கிரியின் போன் நம்பரை மட்டும் வேண்டியபடி வீடு கிளம்பினேன்.

“என்னப்பா அனந்தனோட கதைச்சனீங்களே?” வீட்டுக்கு வந்ததும் வராததும் ஆக மனைவியின் கேள்விக்கணை தாக்க, வாறன் கொஞ்சம் பொறுங்கோ என்றபடி மௌனமாக சென்று உடை மாற்றி முகங்கழுவச் சென்றேன். குழியல் அறையில் யோசனையுடன் முகத்தை கழுவிக்கொண்டிருக்கும்போது மனைவியின் குரல் யோசனையைக் குழப்பியது. “இஞ்சேரப்பா போன் அடிக்குது கேட்கவில்லையோ? இது வேற தொல்லை எப்ப பார்த்தாலும்…” தண்ணீர்க்குழாயினை மூடியபின் தெளிவாக போன் சத்தம் கேட்டது எனக்கும். அட வைபரில் யாரோ கோல்  பண்றாங்கள். வெளிநாட்டுக் கோலாகத்தான் இருக்கும். வெளிநாட்டில் இருந்து யாரும் எடுத்தால் ஒரு அரை மணித்தியாலமாவது அறுக்காமல் விடமாட்டாங்கள். என்று அலுத்தவாறே மனைவி ஆசையாக வேண்டித்தந்த ஸ்மாட் போனை எடுத்துப்பார்த்தேன். “கிரிகிரி” என்றபெயரில் இருந்து அழைப்பு. மனதில் ஒரு மின்னல் கிரியோ என்றவாறு அவசரஅவசரமாக அழுத்தினேன் வைபரை.

 “ஹலோ … ஹலோ … நான் கிரி கதைக்கிறேன்.” ஏதேதோ சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனம் பெருமூச்சு ஒன்றினை விட.. “சொல்லடா எங்கேயடா இருக்கிறாய்? ஏன் ஒரு தொடர்பும் இல்லை? லோன் காசும் கட்டவில்லை” எனது கேள்விகளிலேயே எனது நிலைமையை புரிந்துகொண்டவன். “கொஞசம்பொறு நான் சொல்கிறேன்” என்று தொடங்கினான். மன்னிச்சுக்கொள் இவ்வளவுநாளும் ஒரு தொடர்பும் இல்லாம இருந்ததுக்கு. “ஒருசந்தர்ப்பம் கிடைத்தது லண்டனுக்கு வர. ஒருமாதிரி லண்டன் வந்திட்டன். அந்த வேலையில ஒன்றும் செய்ய முடியாம போயிட்டுது. பயப்படாதே. இப்ப காசு கொஞ்சம் அனுப்பி இருக்கிறேன் அதை வீட்டுக்கு குடு கலியான செலவுக்கு. அடுத்தமாதத்தில் இருந்து லோன் காசையும் உன்ர காசையும் கொஞ்சம் கொஞ்மாக அனுப்புகின்றேன். வீட்டுக்காரருக்கு எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லு. தங்கச்சியின் கலியானத்தை போய் நின்று நடத்திக்கொடு. நான் பிறகு எடுக்கிறேன்” என்றவாறு தொடர்பை துண்டித்தான்.

நல்ல காலம் தாயாரிடம் அவசரப்பட்டு எதையும் கேட்டுவிடவில்லை, கேட்டிருந்தால் அநியாயமாக ஒரு நட்பினை இழந்திருப்பேன் என்று நினைத்தவாறு, மனைவியை நோக்கி, “என்னப்பா இன்னும் ரீ போடவில்லையோ? நான் ஒருக்கா வெஸ்டேர்ன் யூனியனுக்கு போகவேனும”; என்றவாறு கொஞ்சம் நிமிர்ந்து இருந்து மனைவிக்கு விளக்கமளிக்கதொடங்கினேன்.


-மானிப்பாய் சுதன்.

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...