இன்றைய காலைப்பொழுது வழமையானதொரு காலைப்பொழுதாக
இருந்தாலும், என்னை துயிலெலுப்புவதில், மனைவியின் குரலில் ஒரு அவசரம் தெரிந்தது. அதிகாலையில்
எழுந்துவிடும் மனைவி தனது சமையல் வேலைகளுடன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் என்னைப்பார்த்தவுடன்
எரிபற்று நிலையை அடைந்து எரிச்சலாகிய மனைவியின்,
எரிச்சலான திருப்பள்ளி எழுச்சியை கேட்டு துயிலெழுவதில் ஒரு சுகம். திருமணமான
புதிதில் மனைவியின் இந்ந திருப்பள்ளி எழுச்சி எனக்கு எரிச்சலாக இருந்தாலும், பின்னர்
அது பழகிவிட்டது. இப்போது அந்த கோபமான எழுச்சி இல்லாவிட்டால் ஏதோமாதிரி இருக்கும்.
அந்தளவுக்கு முன்னேறி இருந்தேன் நான்.
எழும்புங்கோ
இன்றைக்கு உங்கட அலுவலகத்தில் அந்த கோதாரி விழுந்த மெசினெல்லே பூட்டியிருக்கினம். வேளைக்கு
போகவேணும் என்று சொன்னனீங்கள். நீங்கள் எழும்பி இனி எத்தினை தரம் அதுக்குள்ள போய் வரப்போறியளோ
தெரியாது. பிறகு நேரம் போய்விட்டது என்று கத்தக்கூடாது…..
எனக்கு
மனைவியின் ஆதங்கம் புரிந்தது, நான் என்ன விரும்பியே அடிக்கடி அதுக்குள்ள போகின்றேன்?
அது அடிக்கடி வருகிறது போகின்றேன். என்ன செய்கிறது ஜீன்ஸை போட்டு சப்பாத்தையும் போட்டபிறகு
மனம் ஒருக்கா போகவேணும் என்று நினைக்கும். போகாவிட்டால் அன்றைய தினம் … சொல்ல வார்த்தைகள்
இல்லை…. உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை என்று நினைக்கின்றேன். என்னவென்று சொன்னால்
என்னையும் உங்கட சங்கத்தில் சேர்த்துவிடுவீர்கள். காலையில் எழும்பி இயற்கையின் அழைப்புக்காக
மலசலகூடத்துக்கு ஒரு மூன்று நான்கு தரம் போகாமல் விட்டால் அன்றைய நாள் விடிஞ்சமாதிரித்தான்.
இயற்கையை
அதிகமாக நான் நேசிக்கறதாலதான் இயற்கையும் என்னை அடிக்கடி அழைக்கிறது போல. தயவு செய்து
உங்கட “அடிக்கடி இயற்கை அழைப்போர் நலன்புரிச் சங்கத்தில்” சேர்த்திடாதேயுங்கோ. என்னைவிட
சீனியர்களா பார்த்து சேருங்கோ. அது வேற பிரச்சினை பிறகு!
சிந்தனைய
சிதறடித்தது மனைவியின் குரல், ம்… போட்டியளே… இனி வந்தமாதிரித்தான்…. என்ற மனைவிக்கு. எனக்கும் அப்படித்தான் தோனுது இனிவந்தமாதிரித்தான்!
என்று கூற, உதுக்கிள்ள இருந்து கத்தாம நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகப் பாருங்கோ….உங்கள
கட்டி நான் படுகின்றபாடு…. மனைவியின் புலம்பலால் எல்லாமே நின்றுவிட அவசரஅவசரமா குளிப்பதற்குச்
செல்லும்போது …. அப்பா ஏழு இருபது நேரம் போகுது… மகளின் வார்த்தை அவளின் பாடசாலை செல்லும்
அவசரத்தை கூற.. காக்கா குளியல் குளித்து வெளிக்கிட்டேன். போட்டுவிட்டேன் ஜீன்ஸையும்
சப்பாத்தையும்….
இன்டைக்கு
பிள்ளையளை இறக்கிவிட்டு அப்படியே போனீங்களெண்டால்தான் வேளைக்குப் போய் அந்த கோதாரி
விழுந்த “பிங்கர் பிறின்டில்” கையை வைக்கலாம். மனைவியின் ஆலோசனை நன்றாகத்தான் இருந்தது.
இருந்தாலும்!
இவ்வளவு
காலமும் அலுவலகத்துக்கு எத்தனை மணிக்குப் போனாலும் எட்டு மணி என்றுதான் கையெழுத்து
போடுகிறது; “பிங்கர் பிறின்ட்” மெசினில அந்த விளையாட்டு விடஏலாது. இன்றிலிருந்து அந்த
தொல்லை. புது வருட ராசி பலனிலேயே போட்டிருந்தது. சனி திசை மோசமாக இருக்குமென்று.
எங்கட
அலுவலகம் ஒன்றும் பெரிய தலைமை அலுவலகம் இல்லை. சிறிய அலுவலகம் ஒன்றுதான். ஒரு பத்து பேர் வேலை செய்யிறம்.
ஒற்றுமையாக எங்களுக்குள்ள ஒரு “அட்ஜஸ்மென்றில்” வேலை செய்துகொண்டிருந்தனாங்கள். அதை
பொறுக்க முடியாம உவங்கள் மேலதிகாரிகள் வைச்சிட்டாங்க ஆப்பு.
அலுவலகம்,
சகல வசதிளும் பொருந்தியது என்று சொல்வதற்கு முடியாவிட்டாலும் அடிப்படைவசதிகள் எல்லாம்
இருக்கிறது. எங்கட அலுவலகத்துக்குள்ளேயே இரண்டு கிணறுகள், ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் ரோட்டில இருக்கிற பொதுக்கிணற்றிலதான். எங்கட சொத்தை
நாங்க பாதுகாக்க வேணும்தானே. அதுதான் எங்கட தண்ணியை நாங்க பாவிக்கிறதில்லை. நீங்க ஒன்றும்
கனக்க யோசித்து போடாதேயுங்கோ!
முக்கியமானதை
சொல்ல வேணும் மலசல கூடம், அதுவும் இரண்டு இருக்கிறது. அதுக்கு ரோட்டுக்கு போவதில்லை.
எங்களதையே பாவிக்கிறோம். அவ்வளவு சுகாதாரமானது. என்ன வாளிக்கு கைபிடி இல்லை. தண்ணீர்க்குழாயில்
தண்ணீர், சும்மா சொல்லக்கூடாது சீறிக்கொண்டு வரும். அதிலும் ஒரு சிக்கல், அடிக்கடி
மோட்டர் பழுதாகிவிடும் அவ்வளவுதான்.
இன்று
அலுவலகத்துக்குள் நுழையும்போதே எல்லோரும் வந்துவிட்டது தெரிந்தது! வழமையாக நான் வரும்போது
எவரும் நிற்கமாட்டார்கள் அலுவலகத்தை திறப்பவர் மட்டும் “ஸ்மார்ட் போனின்” தினவுக்கு
ஏற்ப அதற்கு சொறிந்து கொண்டிருப்பார். இன்று
பொதுவான வழமைக்கு; மாறுதல் எற்பட்டிருந்தது. அலுவலகத்தின் பொறுப்பதிகாரி அலுவலகத்தை
சுற்றியபடி இருந்தார் இருப்புக்கொள்ளாமையினால்!
நானும்
அவசரஅவசரமாக ஓடிச்சென்று கைப்பெருவிரலை அழுத்தினேன் என் பலம் கொண்ட மட்டும். ஆனால்
அது என்னை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இதுதானுங்கோ அந்தக்காலத்தில கைநாட்டு வைக்கும்போது
இப்படிப் பிரச்சினை இல்லை. விஞ்ஞான வளர்ச்சி கூடி எல்லாவற்றிலும் பிரச்சினை. இப்பவும்
கைநாட்டுத்தான், ஆனால் மெசினில வைக்கிறோம். நாங்க படிச்ச கைநாட்டுக்கள்.
“பிங்கர்பிறின்ட்
மெசின்” ஏற்றுக்கொள்ளவில்லை என்று மற்றயவர்களுக்கு தெரிந்தவுடன் எல்லோருக்கும் ஒரு
தனி சந்தோசம். ஆனாலும் முகத்தினில் அதனைக் காட்டிக்கொள்ளாது, “அண்ணை, மெதுவாக வையுங்கோ,
நேற்று வைச்சமாதிரி வையுங்கோ, ஆளாளுக்கு அறிவுரைகள் தந்த வண்ணமிருக்க எனக்கோ! ஒருமாதிரியா
போய்விட்டது.
நவீனங்களை
கையாளத்தெரியாத கைநாட்டான் ஆக விழிபிதுங்கி நின்றேன். ஒருவாறாக என்னை அந்த பாழாய்ப்போன
“பிங்கர் பிறின்ட்” ஏற்றுக்கொண்டது. இவ்வளவு சந்தடியிலும் பொறுப்பதிகாரி மட்டும் பட்டும்
படாமலும் அலுவலகத்தை சுற்றியபடி இருந்தார். பாவம் மனுசன் வயதான காலத்தில் ஆறுதலாக ஒன்பது
மணிக்கு ஆடிஆடி நிதானமா வருபவர். இன்று ஏனோ தெரியவில்லை நிலைகொள்ளாமல்…..!
கதிரையில்
அமர்ந்தபோதுதான் என் அன்புக்காதலி இயற்கை என்னை அழைக்கத் தொடங்கினாள். இன்று அவசரஅவசரமாக
வந்ததன் விளைவு, அவசரமா மலசலகூடத்தை நோக்கி ஓடினேன்.. என்ன கொடுமை மலசலகூட கதவு இறுகப்பூட்டியிருந்தது.
“தட்டுங்கள் திறக்கப்படும்” என்பதற்கமைய எனது அவசரத்தை வெளிக்காட்ட இருமுறை தட்டி விட்டு
அலுவலகத்தை சுற்றி நடக்கத்தொடங்கினேன் . அப்போதுதான் அவதானித்தேன்; அலுவலகத்தை சுற்றிய
பொறுப்பதிகாரியை காணவில்லை, எனது விழிகள் பொறுப்பதிகாரியின் கதிரையை எட்டிப்பார்த்தது,
அங்கும் இல்லை. ஆக, பொறுப்பதிகாரியையும் அழைத்துவிட்டாள் இயற்கை. அவருக்குமா….
ஒருமாதிரியாக
அவர் வெளியில் வர, நான் உள்ளே சென்றேன். என்ன கொடுமை மாயவா? காலையில் “சூரியன் எப்.எம்”
இல் ராசிபலன் சொல்லும்போதே சொன்னவங்கள் “திண்டாட்டம்” என்று. ஒற்றைச் சொல்லில் சொன்னாலும்
அம்சமாக சொல்லியிருக்கிறாங்கள். தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை. இப்படியும் சோதனைகள்
வருமா? சோதனையிலும் சிறிய வெளிச்சம்! நன்றி! டயலொக் நன்றி!. என்று கூறியவாறு. அலுவலக
உதவியாளனாக இருக்கும், என்றும் அபயக்கரம் நீட்டும் கரனுக்கு “போன்” எடுத்தேன்.
ஹலோ!
கரன், நான் ரொய்லெட்டுக்குள்ள… தண்ணீர் வரவில்லை மோட்டரைப் போடு என்றேன். ஐயோ அண்ணை
இன்றைக்கு அது வேலை செய்யவில்லை என்றான். அடப்பாவிகளா! இப்ப என்னடா செய்ய? கொஞ்சம்
பொறுங்கோ ரோட்டுக் கிணத்தில தண்ணி அள்ளிக்கொண்டு வாறான். ஆனால் உதுக்குள்ள இருக்கிற
வாளிக்கு கைபிடி இல்லை, முன் கடையில பொறுப்பதிகாரியிட்ட சொல்லிப்போட்டு வாளி ஒன்று
வேண்டி தண்ணி எடுத்துக்கொண்டுவாறன் அண்ணை.
நாசமாக
போக! இவன் வாளி வேண்டி தண்ணி ……. ஐயகோ! ம் ம் ம் இருப்பம் வேற வழி! நேரம் போய்க்கொண்டிருந்ததே
தவிர, தண்ணியைக் காணவில்லை. எனக்குத் தெரியும் உவன் ஓ.ஐ.சி.(பொறுப்பதிகாரி). வாளிக்கு
லெற்றர் கேட்டிருப்பான், கிழட்டுப்பயல். அதுதான் இவ்வளவு நேரம் எடுக்கிறது போல. எதுக்கும்
திரும்ப ஒருதரம் போன் எடுப்பம்.
ஹலோ!
கரன் என்னடா செய்கிறாய்? அவனோ கிசு..கிசுப்பான குரலில், அண்ணை சத்தம் போடாதேயுங்கோ,
பெரிய ஐயா வந்து நிற்கிறார். ஐயகோ ஐயகோ அந்த மனுசன் இன்றைக்கென்று ஏன் வந்ததுடா? அதுவோ
“பிங்கர் பிறின்ட்” வடிவா பாவிக்கினமோ என்று
பார்க்கவாம்! அவனது கதையினூடு அங்கு பெரிய ஐயாவின் குரலும் கேட்டது.
உவர்
கோபி எங்கே? மிக பவ்வியமாக ஓ.ஐ.சி. பதிலளித்துக்கொண்டார். அவர் வந்துவிட்டார்? ஆனால்
காணவில்லை? என் மனதுக்குள் யோசித்தேன் அடப்பாவிகாளா இவ்வளவு காலமும் நான் வந்து அரை
மணித்தியாலத்துக்கு பிறகு வாறனீங்கள்! இப்ப
நீங்கள் நல்ல பிள்ளைகள் நான்? சத்தமா கரனிடம் சொன்னேன் எடேய் சொல்லேண்டா அவர் ரோய்லெட்டுக்குள்ள
என்று. பதிலில்லை. ம் ம் நான்தானே போன் எடுத்தது அதுதான் சிவப்பு பட்டனை அமத்தாமலே
பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டான் பாவிப்பயல்.
அதற்கிடையில்
பெரிய ஐயாவின் குரல், எனக்கு தெரியும் அவர் வந்து மெசினில கையை வைச்சிட்டு சந்தைக்குபோயிருப்பார்.
வரட்டும் அவர். நானே காலையில் போய் பிங்கர் பிரின்டில கைவைச்சிட்டு இங்க வாறன் நீங்கள்
எனக்கு கணக்கு விடுகிறீங்கள். எனக்கு தெரியும்தானே உங்களைப்பற்றி. உங்களுக்கு தருகின்ற
சலுகைகளை எப்படியெல்லாம் துஸ்பிரயோகம் செய்கிறனீங்கள்
என்று?
பாவம்
அந்த மனுசன். என்ர கஸ்டம் அவருக்கு தெரியாது. ஊரில நடக்கிறதை வைச்சு எனக்கு விழுகிறது.
மனதில் ஒரு சினிமா பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வந்தது. உன்னைச்சொல்லிக் குற்றமில்லை
என்னைச்சொல்லிக் குற்றமில்லை… காலம் செய்த கோலமடி……
தீடிரென்று
மின்னல் மின்னியது, ஆகா துளித்துளியாக தண்ணீர்க்குழாயில் வழிந்த நீர் வாளியை நிரப்பிவிட்டிருந்தது.
இதுவல்லவோ ஆனந்தம். மிக அவதானமா காரியத்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்து அலுவலகத்துள்
நுழைந்த, என்னைப்பார்த்த பெரிய ஐயா, ஏன் இப்படி இருக்கிறீங்க? பாருங்க இப்படி வியர்த்து?
இடையில கள்ளத்தனமாக வெளியில போய்வருகிறதெண்டால் இப்படித்தான் வியர்க்கும்.
வெளிக்கு
போய் வந்தபடியால்தான் வியர்க்குது ஆனால் எந்த “வெளி” என்பதுதான் பிரச்சினை. அசடுவழிய சிரித்தபடி நின்றேன். சரி சரி இனிமேலாவது ஒழுங்கா
வேலையை செய்யுங்கோ. என்றபடி பொறுப்பதிகாரியைப் பார்த்து ரொய்லெட் எங்கே? எனக்கேட்டார்.
என் தலை தானாக நிமிர்ந்தது… வாய் தானாகவே திறந்தது “உங்களுக்குமா?” என்றது.
சேர்
கொஞ்சம் பொறுங்கோ, நேற்றுத்தான் மோட்டர் பழுதாகப் போய்விட்டது. வாளியில தண்ணீர் எடுத்துக்
கொண்டு வாறம் என்ற ஓ.ஐ.சி பாய்ந்து கிளம்பியபடி, தம்பி கரன் வாளி ஒன்று….. என்பதற்குள்ளாவே
கரன் விழுந்தடித்துக்கொண்டு கடைக்கு ஓடினான். பெரிய ஐயா அலுவலகத்தை சுற்றிப்பார்க்க
வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார்…. வாளி வரும்வரை.
நான்
உடனடியாகவே நல்லதொரு காரியத்தில் இறங்கினேன்.
அது என்னவென்றால், “அடிக்கடி இயற்கை
அழைப்போர் நலன்புரிச் சங்கத்தின் கிளை ஒன்றை எமது அலுவலகத்தில் ஆரம்பிப்பது. சங்கத்தில்
அவசரத்துக்கு ஒரு வாளி வேண்டுமளவுக்கு காசு இருக்க வேணும் அதுதான் எமது அண்மைய இலக்கு.
“மானிப்பாய் சுதன்”


No comments:
Post a Comment