Sunday, July 18, 2021

கறுப்பு ஆடு

என்னவோ தெரியவில்லை, அரவிந்தனுக்கு நேற்றிலிருந்து காலை எழும்பும்போது உடல் சற்று அசதியாகவே இருந்தது. ஆனாலும், தனது வழமையான பணிகளில் ஈடுபட்டாலும், மனமும் சற்று சினப்பட்டதாகவே இருந்தது. காரணம்தான் என்னவென்று புரியவில்லை. 

குளித்துவிட்டு அலுவலகம் செல்ல வெளிக்கிட்டு சாப்பிட அமர்ந்தவனுக்கு, மனைவி கோப்பையில் வைத்த இடியப்பத்தையும் தக்காளிப்பழ சொதியையும் பார்க்க சொர்க்கமே தெரிந்தது. கூடவே அம்மாவும், அம்மா வைக்கும் சொதியின் வாசனையும் நினைவில் வந்துபோக ஆசையுடன் தக்காளிப்பழத்தைக் கடித்தவன் சப்பென்று இருந்தது. தான் கடித்தது தக்காளிப்பழமா என மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டான். 

 தக்காளிப்பழத்தை சாப்பிடுவதும், பின்னர் அதனை பார்ப்பதும், இடியப்பத்துடன் குழைத்துச் சாப்பிடுவதும், அவற்றினை மீள மணந்து பார்த்தும் கொண்டிருந்தவனை, அவனது மகன் அலைபேசியை நோண்டியபடியே வினோதமாகப் பார்ப்பது தெரிய…

  நான் என்ன படமே காட்டுகின்றேன், படிக்கச்சொன்னா “போனை” நோண்டிக்கொண்டு என்னை பர்ர்த்துக்கொண்டிருக்கின்றாய்… என கத்தினான். 

அரவிந்தன் கத்திய சத்தத்தில், மகன் அரவிந்தனை வினோதமாக பார்த்தவாறே ஆமை ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொள்வது போல் சோபாசெற்றிக்குள் குடங்கிக்கொண்டான்.

 சமையலறையில் இருந்த மனைவி கணவனின் சத்தத்தில் வந்து, என்னப்பா காட்டுக் கத்து கத்துகிறீங்கள்? அவனுக்கு “சூம்” வகுப்பல்லோ நடக்கிறது.

 அரவிந்தனுக்கு இப்போ கோபம் அதிகரிக்க, வகுப்பு நடக்குதோ? இவனைப்பார்த்தா வகுப்பில இருக்கிறமாதிரியே இருக்கு? என்னடி சொல்லுகின்றாய்? “சிற்றி”க்குப் போய் படிக்கிறதை பார்த்திருக்கின்றேன் “செற்றி”க்குள் இருந்து படிக்கிறதை இப்பதான் பார்க்கின்றேன். என்னது கையில் கிண்ணம்? 

 அவன் படிக்கும்போது களைக்காம இருக்க சாப்பிட மிக்சர் தரச்சொல்லுறவன் அதுதான்.. 

என்னடி விடிஞ்சது விடியமுதல் மிக்சரே சாப்பிடுகின்றது? கருமம் கருமம்.

 “அம்மா….” மகனின் அலறல் இருவரையம் நிசப்தமாக்கியது. இரண்டுபேரும் சத்தம்போடாம இருங்க எனக்கு வகுப்பல்லோ நடக்கிறது.

 ஓமடா வாத்திமாரும் நீங்களும் நல்லா நாடகம் போடுங்கோ! வகுப்பில படிச்சாலே நடைமுறை வாழ்க்கை தெரியாம சீரழியிறனீங்கள், இதுல ஒன்லைனில் …. வாழ்ந்த மாதிரித்தான்.

இஞ்சேப்பா சாமிப்படத்துக்கு விளக்கை ஏற்றி ஊதுபத்தியையும் கொழுத்தி வைத்துவிட்டு முதல்ல வேலைக்குப் போங்கோ என்ற மனைவியை முறைத்துக்கொண்டே சாமியறைக்குள் நுழைந்து கொண்டான். என்னை வீட்டால் அனுப்புவதில் அவ்வளவு சந்தோசம். 

ஊதுபத்தியை ஹோலில் வைக்கும்போது நன்றாக மூச்சை இழுத்துவிட்டவன் முகத்தை சுழித்தவாறே மீண்டும் மணந்து பார்த்துக் கொண்டான். 

தான் முகஞ்சுழிப்பதையும், ஊதுபத்தியை மணப்பதையும் சீரியல்களில் வரும் வில்லி நடிகைகள் போல் மகன் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டதும் ஒன்றும் நடவாதது போல் வேலைக்குக் கிளம்ப, சப்பாத்தை போடுவதற்கு அமர்ந்து சொக்ஸை எடுத்து உதறினான். 

 எத்தனை நாள் சொன்னான் அப்பா? ஒருக்கா போட்ட சொக்ஸை திருப்பிப் போடாதிங்க என்று. என்ன நாற்றம் நாறுது. அதை அங்கால போட்டுவிட்டு தோய்த்து வைத்திருக்கின்ற ஒன்றைப் போடுங்கோ என்று இரைந்த மனைவியையும், நாறல் என்ற சொக்ஸையும் மாறி மாறிப் பார்த்தவாறே வேறொன்றைப் போட்டுக்கொண்டு கிளம்பினான். 

 அம்மா, இன்றைக்கு அப்பாவுக்கு ஏதோ நடந்திட்டுது. சைக்கோ மாதிரி நடக்கிறார். என்ற மகனை, டேய் அப்பாவை அப்படிச் சொல்லக்கூடாது. அவருக்கென்ன யோசனையோ தெரியாது. என்று அதட்டியவள். அவரால் மற்றவைதான் சைக்கோவா மாறுவினமே ஒழிய உந்த மனுசன் மாறாது. என புறுபுறுத்தவாறே சாப்பிட அமர்ந்தவள், கணவனின் நடத்தையால் தக்காளிப்பழத்தை தானும் மணந்து பார்த்து நல்லாத்தானே இருக்கு என்றவளை மகன் ஒருமாதிரிப் பார்த்தான்.

 கொரனா நடைமுறைகளால் இரண்டு நாளுக்கு ஒருமுறை அலுவலகத்துக்கு வரும் அரவிந்தனுக்கு, அலுவலகம் வருவதற்கே சோர்வாக இருந்தது கையை கழுவச்சொல்கிறதும், முகக்கவசம் போடச்சொல்கிறதும் என எரிச்சலூட்டிய வண்ணம் இருந்தது. கிட்டத்தட்ட எல்லோருமே கொரனாவில் பி.எச்.டி செய்திருக்கின்றார்கள் என்பது வேறு சாவு வேதனை. 

 எப்படித்தான் இந்த முகக்கவசத்துடன் முழநேரமும் இருக்கிறாங்களோ தெரியாது? என நினைத்தவாறே தனது மேசையை துடைத்துவிட்டு ஊதுபத்தி ஒன்றைக் கொழுத்தி மேசையின் மேல் வைத்தான். 

 தனது வேலையில் மூழ்கியிருந்தவனை, என்ன நடக்கிறது? என்று கேட்டவாறு வந்த பிரபா வெளியுலகிற்கு கொண்டு வந்தான். என்னடா ஊதுபத்தி நல்ல வாசனையாக இருக்கு? என்றவனையம் ஊதுபத்தியையும் மாறி மாறி பார்த்தவன்.

 எனக்கொன்றும் அப்படி மணக்கவில்லையே என்றான். 

 நீ இப்படி மாஸ்க்கை போட்டுக்கொண்டு இருந்தா எப்படி மணக்கும்?

 இப்ப விளங்குதா? ஏன்னுடைய மாஸ்க் எப்படியென்று? என்றான்.

 அரவிந்தன். மாஸ்க் நல்லந்தான், ஆனா அது இதுக்குமேல் ஊத்தையாக இடமில்லை. அதை முதலில் மாத்து என்றவாறு சென்றான் பிரபா. 

நான்கு நாட்கள் கழிய பக்கத்து வீடு தந்த பலாப்பழத்தின் சுளைகளை உண்டவன், பழம் பச்சைத்தண்ணி மாதிரி கிடக்கு இனம் சரியில்லை, என்றவனை முறைத்த மனைவி வயசாக வயசாக நாக்கும் மரத்துப்போகுது இந்ந மனுசனுக்கு நானும் பார்க்கின்றேன் இப்ப ஒரு நாளைஞ்சு நாளா நாக்குக்கு சுண்டாயமா தேவைப்படுது. அது சரியில்ல இது சரியில்ல என்று கொண்டு. 

 நீ ஒழுங்கா சமைச்சா நான் ஏன் அப்படிச் சொல்லப்போகின்றேன்? போனகிழமை உன்ர தங்கச்சி வீட்டில சாப்பிட்டனாங்கள் என்ன “ரேஸ்ற்றாக”இ இருந்தது. அதுகள் ஊர் மரக்கறி பார்த்து வேண்டி சமைக்கிறாங்கள். நீ கண்டதையும் வேண்டிக் கொண்டுவந்து “பிறிட்ஜ்” இல் வைத்து …. 

 இவ்வளவு வருசமாக நல்லா இருந்தது இப்ப எப்படி? உங்களுக்கு நாக்கும் செத்து.. வெறும் வாய்தான் கிடக்கு, வேறோன்றுமில்லை. மனைவியின் வார்த்தைகள் மிகுந்த சோர்வைத் தந்தது அரவிந்தனுக்கு. 

 முந்தையநாள் வேலைக்குப் போகவில்லை. நல்ல காலம் அன்று அலுவலகத்தில் “பிசிஆர்” செய்தவங்களாம், தப்பித்துவிட்டேன். நளைக்கு வேலைக்குப்போக வேண்டும். என்று நினைக்கவே எரிச்சலாக இருந்தது. 

தொடர்விடுமுறைகள் பழகிப்போக வேலைக்குச் செல்லுதல் என்பது சுமையாக இருந்தது. சிந்தனையில் இருந்தவனை அலைபேசி குழப்பியது. அலுவலக நண்பன் பிரபாதான். 

"மச்சி, முந்தையநாள் ஒபிசில் எடுத்த “பிசிஆர்” சோதனையில் என்னோட சேர்த்து நான்கு பேருக்கு பொசிரிவ்வாம்!. யாரோ கொரனாவை கொண்டுவந்து தந்திட்டாங்க. எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகமாக பார்க்கிறாங்க. கோப்பாய்க்கு தூக்கப்போறாங்களாம்."   

அப்பாடா இனி ஒரு பத்து நாளைக்கு இதை வைச்சே லீவு போடலாம். கடவுளே யார் அந்த பாவி? நல்லகாலம் நான் தப்பினேன் என்று நினைத்தவாறு சாமியறைக்குள் விளக்கினை ஏற்றி, ஊதுபத்தியையும் கொளுத்தினான்.

 மூக்கு நிறைந்த வாசம்!!! என்ன ஊதுபத்தி? வழமையானதுதான்!!!

 அப்போ? இவ்வளவு நாளும்? நேராக சமையலறைக்குள் ஓடினேன்… சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது. 

வந்ததே வாசம் வந்ததே … என்று மனம் துள்ள… 

என்னப்பா? மகன் கேட்க. 

 டோய் இப்ப ஒரு கிழமையாக மணம் ஒன்றும் இல்லாமல் இருந்தது. இன்றைக்கு எல்லாம் மணக்குதடா….

 மகன் உடனேயே போனை நோண்டிக் கிளறி, அப்பா உங்களுக்கு கொரனா வந்து மாறியிருக்கு. 

கொரனாவுக்கு மணமில்லாமல் போறது ஒரு குறிகுணம். நீங்கள் இரண்டு நாளாக உடம்பு சோர்வாக, குத்துழைவாக இருக்குது என்று சொன்ன பிறகுதானே மணம் போனது, அம்மாவின் சமையல் சுவையின்றிப் போனது. மூக்கு மணத்தை உணராவிடின் சுவை தெரியாதுதானே? ஏன்றவாறே மகன் அரைவட்டம் போட்டு என்னை விலத்திச் சென்றான். 

 டோய்… பி.சி.ஆர் செய்தாத்தானே கொரனா!!!

 “கதம் கதம்” அந்த கறுத்த ஆடு!

 - மானிப்பாய் சுதன்

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...