Tuesday, April 9, 2024

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

 


“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே”

- கடவுள் வாழ்த்து, பொதுப்பாயிரம்,திருமந்திரம்.



கடவுள் என்றால் யார்? அவரைக் காணமுடியுமா?

மகன் கயூரனின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? என்று தெரியமால் முழித்துக் கொண்டிருந்தான் கயூரனின் தந்தையான சிவானந்தன்.

எத்தனை கடவுள்கள் உள்ளார்கள்? மீண்டும் கேள்வி வந்தது.

இறைவன் ஒருவன்தான் ஆனால் வேறு வேறு வடிவத்தில்  நாம் விரும்பிய வடிவில் வழிபடுகின்றோம். ஒவ்வொரு தேசத்தவர்களும் வெவ்வேறு சமயங்களாக வேறு வேறான வடிவங்களில் வழிபடுகின்றனர்.

அதைத்தான் மாணிக்கவாசகர் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என திருவாசகத்தில் பாடியுள்ளார். அதாவது தென்னாடு எனப்படும் கீழைத் தேசத்தின், பெரும்பாலான நாடுகளில் சிவன் என்று வணங்கும் இறைவன் ஏனைய இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றான். 

சமய சேர் இதைச் சொல்லவேயில்லை? என்றவாறு, கடவுள் பிழை செய்தால் தண்டிப்பாரா? யோசனையுடன் கேட்டான் மகன்.

சிவானந்தன் சிரித்துக் கொண்டான். பக்தியை பயத்தின் ஊடாக புகட்டியதன் விளைவு? இறைவனில் அன்பு, நம்பிக்கையை ஏற்படுத்துவதை விடுத்து கடவுள் மீது பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சிவபெருமான் அன்பே உருவானவன். அன்புதான் சிவனுக்கு முதன்மையானது. தூய்மையான தன்னலமற்ற அன்புக்கு மட்டும் கட்டுப்பட்டவர். அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்து அருள்வார். ஆனால் தெரிந்தே செய்யும் பிழைகளை அப்பிழைகளை உணர்ந்து, திருத்திக் கொள்ளாவிடில் தண்டனையை நிச்சயம் தருவார். அதுவும் அவர்கள் மீது கொண்ட அன்பினால் அவர்களை மேன்மைப் படுத்தவே. அதனாலே நாம் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் வேண்டும் என்கின்றன ஒவ்வொரு மதங்களும்.

கடவுள் என்றால் யார் என்று சொல்லவில்லையே? தனது கேள்வியில் பிடிவாதமாக நின்று கொண்டான் கயூரன்.

எங்களைப் படைத்து, காத்து, வீடுபேற்றைத் தருபவர்தான் கடவுள். எங்கும் எதிலும் அவன், அவள், அது என மூன்றாகவும் உள்ளவன்.

அதாவது  “கட” என்றால் எல்லாவற்றையும் கடந்து இருப்பவர். “வுள்” என்பது உள் என்பதாகும். அதாவது அவ் எல்லாவற்றினுள்ளும் இருப்பவர் என்பது பொருளாகும். எனவே எங்களுக்குள்ளும்  இருப்பவன். அன்புடன் இருந்தால் நாங்களும் கடவுளின் குணம் படைத்தவர்கள்தான்..

அன்பில்லாத இடத்து கடவுள் எங்களுக்குள் இருக்காது போய்விடுவார்.

இதைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் “நாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே” என குறிப்பிட்டுள்ளார். அதாவது  அன்புள்ளவர்கள் இடத்தில், பூவில் நறுமணம் இருப்பதுபோல் அவர்களுடன் சேர்ந்திருப்பவன் எனப் பாடியுள்ளார்.

எப்படியப்பா கடவுளை நாம் காணலாம்?

என்னடா இது? கடவுளிடம் மிக்சர் வேண்டாமல் விடமாட்டான் போலிருக்கிறதே! அன்புடன் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கு வழிகளிலும் இறைவனைக்காணலாம். அதற்கு நல்லோரின் நட்பும் நல்லதோர் குருவும் கிடைத்தால் இலகுவாக காணலாம்.

நல்லவர்கள் என்றால்?

தெரியலையே மகனே! அவர்களைத்தானே நானும் தேடிட்டு இருக்கிறேன் என்று சொல்லத்தான் நினைத்தேன். வேண்டாம் நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிடுவோம், “அவனருளாலே அவன்தாள் வணங்கும் சந்தர்ப்பம் இவனுக்கு கிடைக்கட்டும் என்று சிவனை வேண்டியவாறே, நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று சந்திரமுகி பட வடிவேலு பாணியில் சொல்லத்தொடங்கினேன்.

அறநெறியுடன் கூடிய அன்புடன் இருப்பார்கள்.  ஐம்புலன்களான  கண், காது, வாய், மூக்கு, தோல் போன்றவற்றை அடக்கக்கூடியவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.

இவர்களால்தான், ஓர் அறிவு முதல் ஆறறிவு ஈறாகவுள்ள அனைத்து உயிர்க்கும் தன்னை அறிவிக்க எழுத்து, சொல், மந்திரம்,கலை, அண்டங்கள், தத்துவம் என ஆறு பிரிவுகளாக விரிந்து நிற்கும் சிவனை உணரமுடியும்.

இவ்வாறு உணர்ந்தால், ஏழு பிறப்புக்களுக்கும் அப்பால் சென்று மீண்டும் மீண்டும் பிறப்பின்றி அவனை இறைவனின் திருவடிகளை எட்டிப் பிடித்துக்கொள்ள முடியும்.

கயூரன் ஒரு மாதிரியாகப் என்னைப் பார்த்தான். நீங்க ஏதோ சொல்ல வாறீங்க, எனக்கு விளங்கவில்லை என்றவாறு சென்றான்.

“பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்…” பாடசாலையின் காலை வழிபாட்டில் பாடிய சிவபுராணத்தில் இன்று ஏதோ இருப்பதை உணர்ந்தான் கயூரன்.



Sunday, March 31, 2024

காலை நேர ஒதுங்கலில்

 காலை நேர பரபரப்பில் காங்கேசன்துறை வீதிநெருக்கடிக்குள் சிக்கிவிட, வாகனங்கள்  சீறிப்பாய்ந்தவண்ணம் இருந்தன. பாடசாலையில் மகளை இறக்கிவிட்டபின் அங்கு சென்ற போது, வீதியின் பிரதான சந்தியொன்றில் வீதியின் அருகே அமைந்துள்ள அந்தச் சிறிய கட்டிடத்தில் இருக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிறைந்திருந்தது. எல்லோரது வாய்களும் அமைதியாக ஆனால் கண்களும், மனமும் பரபரத்துக் கொண்டிருந்தன.

 

சிலர்  சபித்துக்கொண்டனர், சிலர் சலித்துக்கொண்டனர், சிலர் எப்படியாவது தமது கைகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தவிப்பில் இருந்தனர். பார்வைகள் பேசிக் கொண்டன. 


சிலர் எதிலும் பட்டுக்கொள்ளாமல் தமது தொலைபேசிகளை நோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது எரிச்சலாக வந்தது. தொலைபேசியை நோண்டுவதற்கு இங்கு எதற்கு வந்தார்கள். இருக்கைகளையும் நிரப்பிக்கொண்டு. இப்படித்தான் பலர் அலுவலகங்களில்  வாழ்கின்றார்கள். அவர்கள் ஓய்வு பெறும்போது, "இவர்களது சேவைமகத்தானது. இனிமேல் அவர்களது சேவை கிடைக்க மாட்டாது! என்னும் போது ...." வெட்டிப் பாராட்டுக்கள் தொடரும்.

 

ஒருவரது பொறுமை எல்லை கடந்து  கொண்டிருந்தது. கைகள் பரபரத்தன. "தம்பி உதை ஒருக்காத் தா" உடனே தருகின்றேன் எனக் கெஞ்சலாகக் கேட்டார். அந்தத் தம்பியின் முகத்தில் சினம் படர வேண்டா வெறுப்பாகத் தள்ளிவிட்டான். முதியவரோ அவன் சினம் பற்றி கொஞ்சமும் கவனமெடுக்கவில்லை. ஏன் நன்றி கூடச் சொல்லவில்லை. ஆனால் அவரது முகமும் கடுப்பேறிக்கொண்டது. ஓ? இதுதான் மனநிலை மாற்றமோ? அரசியல் தலைவர்கள் தேர்தலில் கெஞ்சி வாக்குக் கேட்பதும் தேர்தல் முடிந்தபின் எப்படி முகத்தை வைத்திருப்பார்களோ அப்படி இருந்தது அந்த இளைஞனுக்கு. இப்படியானவர்களை வேடதாரிகள் என்பார்கள் சிறப்பாக கபடதாரிகள் என்றும் சொல்வார்கள்.

 

அவன் மறுபக்கத்தில் இருந்த பெரியவர்  எதையோ வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இவன் முயற்சித்தான் ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. என்னவாக இருக்கும்? ஏதேனும் வட்டுக்கோட்டை பொலிசார் படங்களோ? ஒருத்தனை சித்திரவைதை செய்து கொண்டவர்கள் அதனால் கோபமாகப் பார்க்கின்றாரோ? ஆனால் அவரது பார்வை ஒன்றும் அப்படியான "ரௌத்திரம்கொள்" பார்வைபோல் தெரியவில்லை? இது ஏதோ ஜொள்ளுவடிகின்ற வெறித் தனமாகவெல்லோ இருக்கின்றது.  எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குந்தானே அப்போ பார்த்துக் கொள்கின்றேன்.

 

இதென்னது இந்த மனுசன் கையில அதை வைத்துக் கொண்டு, அதைத் தவிர மற்ற எல்லாரையும் கீழ்க் கண்ணால பார்த்துக் கொண்டிருக்குது? ஓ... இவரின் திட்டம் விளங்கி விட்டது தனக்கான சந்தர்ப்பத்தை தானே உருவாக்குகின்றாராம். யாரிடம் தனக்குத் தேவையானது இருக்கின்றது என்று வேவுபார்க்கின்றார். அவர் விடயத்தை முடித்ததும் இவர் பண்டமாற்று செய்து கொள்வார்.  சீனி விலை ஏறப்போகுது என்று வந்தாலே சீனியைப் பதுக்கி விட்டவர்களிடம், சீனி இருக்கோ? எனக் கேட்டால் தலையைக் கீழே போட்டு மேற்கண்ணால் பார்ப்பார்களே ஓர் ஆந்தைப் பார்வை அதுமாதிரி. அந்தப் பார்வையில் ஆயிரம் உளவாளிகள் தெரிவார்கள். இவருக்கு சீனி அவசரமா? எவ்வளவு கொடுத்தும் வாங்குவாரா? வாங்கிவிட்டு மாட்டிவிடமாட்டாரா? வழமையாகக் கடைக்கு வருபவரா? அப்பப்பா இது அனுபவப் பட்டவர்களுக்குத் தான் தெரியும். சிந்தனையைக் குழப்பியது அருகிலிருந்தவரின் குரல்.

 

"என்றாலும் நேற்று அவர் உங்களுக்குச் செய்தது பிழை" 

 

எனக்கா? எனக்கு அவர் பிழை செய்தது இவருக்கு எப்படித் தெரியம்? இவர் யார்?, அவரை எப்படி இவருக்குத் தெரியும்? என்னை எப்படி இவருக்குத் தெரியும்? எனக்குப் பல  பிழைகள், துரோகங்கள் அவர்கள் செய்கின்றார்கள். அதில் எந்த அவரை இப்ப நான் நினைப்பது? நான் நினைக்கின்ற அவரும் இவர் நினைக்கின்ற அவரும் ஒன்றா இருப்பாரோ? அல்லது இவர் நினைக்கின்ற அவரும் நான் நினைக்கின்ற அவரும் வேறு வேறு அவர்களாக இருப்பபார்களோ? அப்படியென்றால் அவர்கள் இருவரும் யார்? எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

 

முதலில் இவர் யார்? 

 

பார்க்க அரசாங்க உத்தியோகத்தர் மாதிரி இருக்கின்றார். வெள்ளைச் சேட்டு, சப்பாத்து என கௌரவமிக்கவராக இருக்கின்றார். இப்பிடித்தானே எரிக் எண்டவரும் நோர்வேயில் இருந்து வந்தவர். வெள்ளையா இருக்கிற ஒரேகாரணத்துக்காக நம்பி மோசம் போன கூட்டம் நாங்க.  எதற்கும் சூதானமாகத்தான் அணுகனும். கடவுள் மட்டுமில்லை, இப்படிப்பட்டவர்களும் ஏகனாய் அனேகனாய் உலகெங்கும் வியாபித்துத்தான் உள்ளார்கள்.

 

என்ன சொல்லுறீங்க? யார் அவர்? என்ன செய்தார்? எனது கேள்விகள் அனைத்தும் விளங்கியதா தெரியவில்லை அவருக்கு. ஆனால் இப்போ கண்களால் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருக்கின்றார். ஏதோ சொல்ல வருகின்றார் ஆனால் எனக்குத் தான் ஒன்றும் விளங்கவில்லை.. ஒருவேளை ரஸ்யாவின் மொசாட்டில் வேலை செய்திருப்பாரோ? கண்களாலேயே செய்தி சொல்லக் கூடியவரோ? ஆளைப் பார்த்தால் அந்தளவுக்கு விவரமான ஆளாகவும் தெரியவில்லை.

 

எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் வாயைத்திறந்து சொல்லுங்கோ அண்ணை. மெதுவான கிசுகிசுப்புக் குரலில் கேட்டேன். ஆனால் என் கிசுகிசுப்பு அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாகக் கேட்டு விட்டது போல் இருந்தது. அனைவரது காதுகளும் புடைத்துக் கொண்டன. சிலர் ஓரக்கண்ணால் இவரின் உதட்டசைவைக் கூட அவதானிக்கத் தொடங்கினர்.

 

இவரோ, அவர்கள் எவரையும் கருத்தில் கொள்ளாமல் "நேற்று நீங்கள், அவர் கேட்க உடனே பாவம் வயதானவர் என்று கொடுத்து விட்டீர்கள். அவரோ அதனை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டார். உண்மையில் உங்களிடம் தானே தந்திருக்க வேண்டும்."

 

எனக்கு இப்போ விளங்கியது. நேற்றைய சம்பவம் ஒன்றுக்காக இன்று நியாயம் அநியாயம் பற்றி எனக்கு ஆறுதல் சொல்கின்றார். அல்லது என்னை உசுப்பேத்தி விடுகின்றார். இப்படித்தான் உலக நாடுகள் முள்ளிவாய்க்காலில் சனம் கொத்துக் கொத்தாகக் குண்டடிபட்டு இறக்கும்போது, காயங்கள் அடையும் போது மௌனமாக இருந்துவிட்டு, தங்கள் நலனுக்காக இப்போ இடையிடை மனிதப் பேரவலம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் எனப் புலம்புவது போல் இருந்தது. எனக்கு ஏதோ இதைத் தொடர மனமில்லாமல் ஒருவர் மீது பார்வை பதிந்தது.

 

எல்லோர் கவனமும் எங்கள் மீது இருக்க ஒருவர் மட்டும் குழப்பமான முகத் தோற்றத்துடன் சோர்வாக இருந்தார்.

 

என்னாச்சு இவருக்கு? இவர்தான் எல்லாப் பத்திரிகைகளையும் பாய்ந்து காய்ந்து படிச்சிட்டாரே? இந்தியப் பத்திரிக்கையான தினத்தந்தியைப் பார்த்து எந்தெந்த நேரம் எந்தச் சனலில் என்ன சீரியல் என எல்லாம் குறிப்பெடுத்தும் கொண்டாரே? அப்புறம் எதற்கு இந்தக் குழப்பம்? 

 

என்ன ஐயா? கடுமையான யோசணை? ஏதேனும் பிரச்சினையோ? 

 

உவங்கள் அறுவாங்கள் ஒவ்வொரு பேப்பரிலையும் ஒவ்வொருமாதிரி போட்டா நாங்க எதை நம்பிறது? எப்படிமுடிவெடுக்கிறது?

 

என்ன பிரச்சினை ஐயா? என்னத்த மாறி மாறி போட்டிருக்கின்றாங்கள்?

 

இன்று சிம்ம ராசிக்கு  .....

 

ஐயா நிப்பாட்டுங்கோ ராசிபலனை பற்றியே கதைக்கிறியள்? அது அப்படித்தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான் குழப்பமாக இருக்கு என்றபடி அந்த சனசமூக நிலையகட்டிடத்தில் இருந்து சிரித்தபடி வேலைக்குக் கிளம்பினேன்.

 

- மானிப்பாய் சுதன்

https://orupaper.com/posts/hgg4ct0uvsoafxa



 

Saturday, December 10, 2022

ஈசனின் ஆசை...

 

என்ன இழவுடா நெஞ்சு இப்படி வலிக்குதே? அம்மா....ஒருவேளை சாகப்போகின்றேனோ? "இடப்பக்கமே இறை நோந்தது என்றார், கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே" என்று திருமூலர் இதைத்தான் சொன்னாரோ?

என்ர இறப்பு, என்னுடைய முகநூல் உறவுகளுக்கு  தெரியாமப் போய்விடுமோ? RIP, ஆழ்ந்த இரங்கல், நல்ல மனிசன், ஆத்மா சாந்தியடையட்டும் என்று கொமன்ட்ஸ் ஐ பர்ர்க்காமல் போய்விடுவேனோ?



ஈசனின் மனம் நெஞ்சுவலியை விட வேகமாக அடித்துக்கொண்டது. வலியினை மறந்து விரல்கள் பரபரத்தன. மருந்துக்குழிசைகளை தேடும் நினைப்பொழிந்து சார்ஜ் போட்ட போனைக் தேடிக்கொண்டன கண்கள்.

நண்பர்களே! நான் இறந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்பதிவைப் பார்க்கும்போது நான் இருக்கின்றேனோ தெரியாது. ஆனால் என் இறப்புக்கு வரும் அழும் லைக் எண்ணிக்கையையும் கொமன்ட்ஸ் ஐயும் பார்க்க வேண்டும். தயவுசெய்து பார்த்துவிட்டு வழமைபோல் கடந்து போகாதீர்கள். லைக் பண்ணுங்க, கொமன்ட் பண்ணுங்க நான் பார்க்கனும். ஒரு ஐநூறு லைக் வந்தாத்தான் என்ர ஆத்மா சாந்தியடையும்.............

என்ன இது? போஸ்ட் அழுத்திவிட்டேன்?  ஈசன் தன் கைகளை அசைத்துப் பார்க்கின்றான் முடியவில்லை. என்ன நடந்தது? ஏன் நான் கட்டிலுக்கு மேல் மிதக்கின்றேன்? என்ன என் உடம்பு கீழே கிடக்கின்றது? 

ஓ...நான் செத்துவிட்டேனா? ஈசன் தன் இறப்பை எண்ணி ஓவென்று அழுகின்றான். அழுது ஓய்ந்தும் அவன் நினைவுகள் அழியவில்லை. எண்ணங்கள் லைக்குகளையும் கொமன்ட்ஸ்களையும் எண்ணிக்கொண்டிருக்கின்றன.

ஹலோ...

ஓ சொல்லுங்கோ?

நாங்க யாழ்ப்பாணம் அந்தியகால சேவையில் இருந்து கதைக்கின்றோம். உங்கட அப்பா எங்களோட நல்லமாதிரி. அவற்ற எல்லாப்பதிவுகளுக்கும் நாங்க விடாம லைக் பண்ணுகின்றவர்கள். இன்றைக்கு அவர் கடைசியாகப் போட்ட பதிவுக்கும் இதயக்குறி போட்டிருக்கின்றோம். 

ஓம் அதற்கு என்ன? உங்களப்போல ஆட்களால்தான் அந்த மனிசன் போனும் கையுமா திரியுது. கக்கூசுக்குபோனாலும் பதிவு போட்டுக்கொண்டு. இப்ப என்ன சொல்லுங்கோ?

நீங்க "ஈசன் சாந்தி மலர்" அவரோட மகன்தானே? உங்களுக்கு விசயம் தெரியாதுபோல, உங்க அப்பா இறந்து போய்விட்டாரெல்லோ? 

என்ன அப்பா இறந்துவிட்டாரா? உங்களுக்கு என்ன பைத்தியமே? மகன் எனக்கு தெரியாமல்?

உங்க அப்பாவின் முகநூலைப்பாருங்கோ, அவர் தன்ர முகநூலில் கடைசிப் பதிவென்று தன்னுடைய இறப்பை தெரிவித்திருக்கின்றார். சரி சரி வீட்டுக்கு போனபின் எங்களுக்கு அழைப்பெடுங்கோ எல்லாவற்றையும் நாங்க செய்து தருகின்றோம்.

ஈசனின் காதில் மகனின் மோட்டார் சைக்கிளின் சத்தம் கேட்கின்றது. என்ர பிள்ளையும் என்ர முகநூலைப் பார்த்திருக்கின்றான் போல். விசயம் தெரிந்து துடித்தோடி வரும் பிள்ளை என்ர உடம்பைக்கண்டு பிரண்டு பிரண்டு அழப்போகின்றானே? என்ற சிந்தனையில் மகனை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார் ஈசன்.

மகன் முகம் வாடியிருந்தது.  ஒரு துளி கண்ணீர் பிரயத்தனப்பட்டு வலது கண்ணில் இருந்து வெளிவந்திருந்தது. தலைமாட்டில் அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை அப்பா இயற்கையின் மறுசுழற்சிக்கு சென்றுவிட்டார் என வட்ஸ்அப் இல் உள்ள குடும்ப குழுமத்தில் தகவல் பதிந்தான். போன் அடித்தது.

ஹலோ ....

என்னங்க மாமாவை வீட்டைப்பார்க்கச் சொல்லி விட்டால் கல்லுண்டாய் இயற்கை உரம் செய்கிற இடத்துக்கு போய் என்ன செய்கிறார்? 

ஈசனுக்க இல்லாத தலை சுற்றியது. மகன் ஒருபோக்காக திரியும்போதே யோசிச்சனான். அடேய் அப்பா செத்துப்போட்டார் என்று தெளிவா போடவேண்டியதுதானே? ஏன்ரா குழப்புகின்றாய். நானே வட்ஸ்அப்பிலும் தகவலைப் போட்டிருக்கலாமோ.. ச்சாய்.

மகன் திக்கித்திணறி விசயத்தை மனைவியிடம் சொல்லி முடித்தான். 

அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் மும்மரத்திலும் தனது முகநூலில் எனது பக்கத்தை பார்க்கின்றான். இன்னும் லைக்ஸ் நூறைத் தாண்டவில்லைப் போல தெரிகின்றது. மகன் கொமன்ட்ஸ் ஐ பார்த்துக்கொள்கின்றான் மனது லேசாகக் கனத்தது. கொமன்ட்ஸ் இலும் தொடர்ந்து "றிப்" என்று குறுகிவருவதும் மனதினை மேலும் கவலைக்குள்ளாக்கியது.  இப்படியேபோனால் என் ஆத்மா இப்படித்தான் அலையப்போகின்றதோ? நினைவுகளற்ற நிலைக்கு செல்லமுடியாதோ? இதயம் இல்லாததால் ஈசனின் மனது அடித்துக்கொண்டது. 

ஈசனின் வீட்டில் சிறிது சிறிதாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

முகநூலிலும் சிறிது பரபரப்பு தெரிந்தது. காரீசன் காரீசன் என்பவரின் கொமன்ட் சர்ச்சயை கிழப்பிவிட்டிருந்தது. ஈசனின் ஈமக்கிரிகைகள் யாழ்ப்பாண முறையிலா? வன்னி முறையிலா செய்வார்கள். ஏனெனில் வன்னியில் பிறந்தவர்கள் வேறு இடங்களில் மணமுடித்துசெல்லும்போது அவர்கள் வன்னிப்பாரம்பரியம் புறக்கணிக்கப்படுகின்றது. எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடோய் பூவுலகில் இருந்து விண்ணுலகுக்கு நான் வந்துவிட்டேன். எனக்கு இப்ப எல்லாம் மண்ணும் ஒன்றுதான் விடுங்கடா என்று பதிவீடனும்போல மனம் பரபரத்தது ஆனால் முடியல. ஆத்மாக்கள் நினைப்பதை பதிவாக செய்யும் வசதியினை முகநூலில் ஏற்படுத்த வேண்டும் என மார்க்கிடம் எப்படி தெரிவிப்பது?

யாரடா இது? ஈசன் அவர்களுக்கு கொள்ளி வைப்பது அவரது மூத்தமகனா? இளைய மகனா அல்லது இடையில் பிறந்தவர்களா? மூத்தமகன்தான் கொள்ளி வைக்க வேண்டும். என்ற மூடத்தனமான பாரம்பரியத்தை மாற்ற வேண்டும்.

அடோய் இப்ப யாருக்கடா பல பிள்ளைகள். எனக்கும் ஒருத்தன்தானேடா? அப்ப ஒரு ஒழுங்குமுறைக்கு நான் நீ என பிரச்சினைகள் வராமல் ஒரு தேசவழமையை பாரம்பரியத்தை உருவாக்கினாங்கள். அது என்னடா செய்கிறது உங்களை? முன்னர் நான்தான் கொள்ளி வைப்பேன் என்று அடிபட்டாங்கள் அதனால ஒருபாரம்பரியத்தை உருவாக்கினார்கள். இப்ப  பெற்றோர்களைப் பார்க்கவே மாட்டேன் என்கிறார்கள். அதற்கே அடிதடி. பிறகெப்படி கொள்ளி வைப்பார்கள். இப்படித்தான் என்றால் வில்லங்கத்துக்காவது வைத்துவிட்டுப் போவார்கள்.

ஐயோ இந்தாள் ஏதோ எழுதுதே?  நாதன், பாரம்பரிய மொழிவழக்கென்று குண்டக்கமண்டக்கவா பராசல் பிராசல் எனப் புலம்புமே. இறைவா இதற்குமேல் அப்பு சொல்வதைக் என்னால் கேட்க முடியாது. என் எண்ணங்களை அழித்துவிடு.

அ... சைவவிளம்பி ஒன்று, உண்மையில், சைவத்தில் இந்தச்சடங்குகள் எல்லாம் ....

ஐயா குமாரு, கடைசியில் திருவருட் சம்மதம் தானே விட்டுவிடு காசு செலவழிக்கிறவன் சம்மதத்துடன் நடக்கட்டும்.

இவன்யாரு? என்னடா இது இரங்கலை தெரிவியுங்கோடா என்றால் எல்லோரும் ஏதோ ஒன்றை வைத்து கலகத்தை உருவாக்குகின்றீர்களே?

ஈசன் நாராயணன் பக்தர். இவர் சொர்க்கத்துக்கு செல்வாரா இல்லை வைகுண்டத்துக்கு செல்வாரா? 

விடு ராசா விடு நான் பொதுவா நரகத்துக்கே போய்விடுகின்றேன்.

இல்லை ஈசன் சம்புபட்ச நாராயண பக்தர்....

ஐயோ கட்டினதும் பெத்ததுகளுமே பட்சமில்லாம எப்படா சவத்தை எடுக்கலாம் என்று  பார்த்திருக்க, ஏன்டா ஏன்?

தீடிரென்று அழுகைச்சத்தம் கொஞ்சம் சத்தமாகக் கேட்க, யாரது வந்தது?

மருமகள் கண்ணீரும் கம்பலையுமாக... இப்பதானே எங்களுக்குத் தெரியும் உடனேயே எங்களுக்கு சொல்லியிருக்கக் கூடாது என ஓவென்று அழுதாள்.

அடிப்பாவி முதல் சுருக்கமா குறுக்கலா றிப் போட்டதே நீதானேடி? இப்படி பண்றீங்களேம்மா?

மச்சாள் நீங்க மூன்று மணித்தியாலத்துக்கு முதலே அப்பாவின் பதிவுக்கு கொமன்ட் பண்ணியிருந்தனீங்கள்? மச்சாள் பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைத்தாள். 

ஓ இதுதான் ஒப்பாரியோ? இதுக்ககுத்தான் ஒப்பாரியோ என்று நினைத்தபடி லைக்குகள் வந்திருக்குமோ என்ற கேள்வியுடன் வந்திருந்தவர்கள் கைகளில் தவளும் அலைபேசிகளை ஈசனும் மிதந்தபடி பார்த்தார்.

இன்று ஐநூறு லைக்குகள் வரவேண்டும். அல்லது திருமூலர் சொன்னது போல "நீரினில் மூழ்கி  நினைப்பொழிந்தாரே" என்பது போல முகநூலில் அடுத்த ரெண்டிங்கான விடயத்தை நோக்கிப் போய்விடுவார்கள். ஈசனின் எண்ண அலைகள் இங்கிருந்த ஒருவரை சலனப்படுத்த.

என்னமாதிரி தம்பி, மாமாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் ஐநூறு லைக்குகள் வந்தாத்தான்போல?

அவற்ற விருப்பத்தை போட்டிருக்கிறார்? ஆனால் நீண்ட நேரமாக நானூற்றுதொண்ணூற்றொம்பதிலேயே இருக்கு.

அப்ப நீங்க ஒரு லைக்க போட்டு ஆத்மாவை சாந்தியடைய வைக்க வேண்டியதுதானே? 

எனக்கு முகநூல் இல்லை அண்ணா.  ஆனா வேற பெயரில் சும்மா ஒன்று வைத்திருக்கின்றேன். அதில் இருந்து லைக் பண்ணட்டா?

எதில் இருந்து என்றாலும் ஐநூறு வந்நதால் சரி.

இந்த சம்பாசனையை கேட்க, தனது ஆத்ம சாந்தியையும் அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே என்று ஈசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தனது சாந்தி என் சாந்தி என்னும் முகநூலில் இருந்து  ஐநூறாவது லைக்கை அந்த தம்பி இட மனம் மகிழ்ச்சியில் பொங்கியது. அந்த தம்பியின் பேக் ஐடியைப் பார்க்க ஈசன் நினைவுகளும் அழிந்து ஆத்மாவும் சாந்தியடைந்தது. 


Tuesday, February 22, 2022

காதலெனும் ....


ஆருயிர்கள் மருவி வாழ்ந்திட 

இறைவன் படைத்தனன்

ஆண் பெண் - இவ்விருவர் சேர்ந்திட 

படைத்தனன் காதலதை

மனிதன் படைத்தான்

சாத்திரமதை - ஆதலால் 

காதல் போனது தோசம் வந்தது

தோசம் கலைக்க  இறைவன் சந்நிதி

காதல் கலைக்க நீதிமன்றம்

போயின ஆருயிர்கள்

ஆதலால்  ....

ஆண்  பெண் வேறு செய்யா

வாழ்ந்திடு வாழ்க்கைதனை

அதனால் ...

பெற்றிடு பேரின்ப வாழ்வுதனை. 


"வேறுசெய் தானிரு பாதியின் மெய்த்தொகை

வேறுசெய் தானென்னை எங்கணும் விட்டுய்த்தான்

வேறுசெய் யாவருட் கேவலத் தேவிட்டு

வேறுசெய் யாவத்தன் மேவிநன் றான்ன்றே"

                                   -  திருமந்திரம்.

Monday, January 17, 2022

மனிதன் - விலங்கு

மதமுமின்றி மொழியுமின்றி

உண்ணுவதும் உறங்குவதும்

இனம் பெருக்குவதுமாய்

இயற்கையுடன் இயற்கையாய்

தொற்றியது பயம்

பயமெல்லாம் பக்தியாக

கூட்டமாய் ஒதுங்கிட

மொழியது தேவையாயிற்று

பஞ்சபூதங்களும் கடவுளாகின

மெல்ல சமூக விலங்காக!

அதுவரை இயற்கையுடன் 

இசமாய் இன்பமயம்

அவன் அவள் அவர்கள்

இவன் இவள் இவர்கள்

நான்?

பெயர்வைத்தேன் 

வழிபட விதிமுறைகள் பல

தொழில்கள் பல பல

உருவாகின சாதிகள் பல பல

ஏற்ற தாழ்வுடன்

நாங்கள்?

ஒற்றுமையில் வேற்றுமை

தொலைந்தது நிம்மதி

பெருகினர் (ஆ)சாமிகள்

தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவர்க்கும் 

இறைவா போற்றி.

Wednesday, January 12, 2022

இழிகாதல்

 #இழிகாதல்


பிரம்மம் என்றான் 

குமரி என்றான்

கற்றகல்வி மறந்தான்

மணமுடித்து கலவிகொண்டு 

தம்கடமை முடித்தவர் 

அதி காரம் கொண்டு  - தம்

வாரத்தைதனில் 

ஆன்மீக காதல் உரைத்திட

பதவி துறந்து 

உள்ளி மறந்து 

அறம் மறந்து

பெற்றவரை மறந்து

பெற்றவர்கள்

முதுமையின் இயலாமையில்

பசிதீர்க்க வழியற்று

கண்கலங்கி பரிதவிக்க

அவன் வெள்ளையணிந்து  

கொண்டான்  இழிகாதல்!

Tuesday, January 11, 2022

உணரார் உணரார்!

 பஞ்சம் வருது பஞ்சம் வருது

பார்த்தவரெல்லாம் பதறுகிறார்

ஆனால் ...

பார்த்த இடமெல்லாம் 

நடுகிறார் #புகையிலை

பார்த்திரார்  சிந்திக்கார்

பொறுப்பான பரிபாலகர்

தடையொன்று வந்தது

சரியென்று புரிகிறது - இன்று

பணம் முக்கியம் இவர்களுக்கும்

அவர்களுக்கும்...

அதைவிட பசி முக்கியம் 

அனைவருக்கும் - பணமும்

புற்றுநோய்தான்  விதியெனில் 

தடுப்பார் யார் உளர்.

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...