ஊரிலே
சண்டியன் ஆன கரனிடம் எவரும் அவனை எதிர்த்துக் கதைப்பதில்லை. யாரும் எதிர்த்துக்கதைத்தாலும்
அவர்களுடன் கரனின் வாய் பேசாது. கைதான் பேசும். அந்தளவுக்கு இருந்த கரனுக்கு பொலீஸ்
என்றால் மட்டும் பயம். பொலீஸ் வருகிறது என்றால் ஓடி ஒழித்துவிடுவான். இப்பொழுது கொஞ்சக்காலமாகத்தான்
ஓட்டோ ஒன்றை லீசிங்நிறுவனத்தினூடாகப் பெற்று ஒரு தொழிலை செய்து வந்தான். ஆனால் லீசிங்
தவணையையும் ஒழுங்காகக் கட்டுவதில்லை.
“டேய்
மச்சான் வழியில ஆள் மடக்கி வாறாங்களாம்” என்ற முகுந்தனின் அலறல் கேட்டு தலையில் கைவைத்துக்கொண்டான்
கரன். ஆள்மடக்கி என்று இவர்களால் செல்லப்பெயர் சூட்டப்பட்டிருந்தார் நிதி நிறுவனத்தில்
இருந்து வரும் லீசிங் உத்தியோகத்தர். . இவங்களிட்ட லீசிங்கில ஓட்டோ எடுத்ததும் போதும்
அவங்களப் பார்த்து ஓடுறதும் போதும் என்று நினைத்துக்கொண்ட கரன்; “அக்கா லீசிங்காரர்
வந்தால் நான் இல்லையெண்டு சொல்லு” என்றவாறு ஓட்டோவை எடுத்துக் கொண்டு கேற்றடிக்கு வர:
அங்கு முகுந்தன், ஆள்மடக்கியான ரமேசுடன் கதைத்துக்கொண்டு
நின்றான்.
முகுந்தனை
முறைத்தவாறே கரன் லீசிங் உத்தியோகத்தரைப்பார்த்து அசடுவழியச் சிரித்தான். “எனக்குத்
தெரியும் அண்ணை நீங்க இண்டைக்கு வருவீங்கள் என்று, அதுதான் வேளைக்கே வெளிக்கிட்டனான்
ஒரு தவணைக் காசையாவது கட்டிட்டு வருவம் என்று. அதற்கிடையில் நீங்க வந்துவிட்டீங்க”
என்றவனை சந்தேகத்துடன் பார்த்த லீசிங் உத்தியோத்தர் “உண்மையாக காசுகட்டத்தான் வெளிக்கிட்டனீங்களோ?
அண்ணை” என்று நமம்பமுடியாமல் கேட்டான்.
“நீங்க
நம்பாவிட்டால் முகுந்தனைக் கேட்டுப்பாருங்கோ”. என்றவாறு மீண்டும் தனது நண்பனான முகுந்தனை
முறைத்துப்பார்த்தான் கரன். எப்படியோ மச்சானை மாட்டிவிட்டாச்சு இனி தப்பவைக்கிறமாதிரி
நடிப்பம் என்று யோசித்தவாறே “ ஓம் அண்ணை நேற்றே உங்களுக்கு காசுகட்ட வேணும் என்று சொன்னவர்.” என்று கரனின் பொய்யை ஆமோதித்தான் முகுந்தன். சரி
இன்டைக்கு கட்டாவிடில் அடுத்தமுறை ஓட்டோவை திருப்பி எடுக்கச் சொல்லிவிட்டினம் ஒபிசில,
பிறகு என்னைக் குறை நினைக்காதேயுங்கோ என்றவாறு” மீண்டுமொரு முருங்கை மரத்தில் ஏற புறப்பட்டார்
ஆள்மடக்கியான லீசிங் உத்தியோகத்தர்.
“ஆள்மடக்கி
வர முன்னமே சொல்லச்சொன்னா நீ அவனை வீட்டு கேற்றடியில வைத்துக் கதைத்துக் கொண்டிருக்கிறாய்
லூசா” என்று சினத்துடன் எரிந்து விழுந்த கரனுக்கு, “ஆள்மடக்கி வந்தால் சொல் என்றுதானே
சொன்னனீ, இப்பதானே வரமுதல் சொல்ல வேணுமென்று சொல்லுகின்றாய்.” என்று முகத்தை அப்பாவித்தனமாக
வைத்துக்கொண்டே சொன்ன முகுந்தனை, “நரியா” என்று கூறியவாறே சென்றான் கரன்.
நிதி
நிறுவனத்தில், ஏசி ரூமில் லீசிங்குக்கு எப்படி ஆட்களை மடக்குவது என்பது பற்றி புதிதாக
இணைந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தான் நிறுவனத்தின் சிரேஸ்டதர உத்தியோகத்தனான
றங்கன்.
ஓரமாக
தான் ஓதுவதைப் பார்த்துக்கொண்டிருந்த தனது நண்பனைப் பார்த்த றங்கன் தனது ஓதலை நிறுத்திவிட்டு,
“என்னடா ரமேஸ் பிரச்சினை” என்றான். “ஒன்றுமில்லை அந்த முகுந்தன் ஓட்டோ லீசிங்கை கட்டுகிறானில்லை.
அலைய வேண்டியதாகக் கிடக்கிறது. ஆறுமாத தவணை கட்டவில்லை. பிச்சைக்காரன்மாதிரி அவனுக்குப்
பின்னால் அலைய வேண்டியிருக்கு.” என்று சலித்துக்கொண்டவனுக்கு. “சரி சரி விடு இனி நான்
அவனைப்பார்த்துக்கொள்ளுகின்றேன், அடுத்தமாதம் தவணை கட்ட வைக்கின்றேன் பார். என்று ஆறுதல்
கூறி அனுப்பினான்.
றங்கன்
தன்கீழுள்ள ஒருவனைக் கூப்பிட்டான். “தம்பி இன்றைக்கு நீ லோயராக நடிக்கவேணும், நாங்க
போற இடத்தில நாங்க போன நேரத்தில் இருந்து நீர் ஏதாவது குறித்துக்கொண்டே இநுக்கவேணும்,
அப்ப அப்ப நான் சொல்லுகிறதுக்கும் தலை ஆட்டவேணும்.” என்று கூறியவாறு தனது கைப்பிள்ளையையும்
அழைத்துக்கொண்டு கிளம்பினான் றங்கன். இடையில் தனது நண்பனைக் கூப்பிட்டு “கரனுக்கு போன்
பண்ணு நாங்க இப்ப வருகிறோம் என்று” என்றவனை விநோதமாகப்பார்த்தான் நண்பன். போவது தெரியாமல்
போனாலே அவனைப்பிடிக்க ஏலாது. இதில சொல்லிப்போட்டுப் போனால்? மனதில் நினைத்ததை அப்படியே
கேட்டான்.
“அடேய்
இனி அவனுக்கு அட்வைஸ் பண்ணி, வெருட்டி பிரயோசனமில்லை. வீட்டுக்காரரைத்தான் வெருட்டவேணும்.
அதுக்கு அவன் வீட்டில் நிற்கக் கூடாது அதுதான். றங்கன் திட்டத்தையும் கெட்டித்தனைத்தையும்
பார்த்து மெய்மறந்து நின்றாலும் ஏதோ ஒன்று மனதை நெருடியது ரரமேசுக்கு. றங்கன் ஜேம்ஸ்பாண்ட்
பாணியில்தனது கைப்பிள்ளையுடன் கரன் வீட்டை அடைந்தான்.
“அக்கா
தம்பி இல்லையோ? நாங்க லீசிங் கொம்பனியில் இருந்து வாறம். இவர் எங்கட லோயர், உங்கட தம்பி
லீசிங் கட்டாததால் முதல் வாறவர் எங்கட சட்டப்பிரிவுக்கு அறிவித்து விட்டார். அதனால்
ஓட்டோவை எடுக்கவும் தம்பி மீது வழக்குப் போடவும் சொல்லியிருக்கினம்.” வாயில் வந்த பொய்களை
விறைத்த முகத்துடன் அவிழ்த்து விட்டான் றங்கன்.
ஐயா!
அப்ப பொலிஸ் வந்து பிடிப்பினமோ? பயத்துடன் கேட்ட கரனின் அக்கா தனது வலையில் சிக்கியதை
கண்சாடையில் தெரிவித்த றங்கன், “முதலில் நீதமன்றில் இருந்து கடிதம் அனுப்புவினம் அதுக்கு
போகாதுவிடில் பொலிஸ் வரும்.” என்றவாறு கைப்பிள்ளையைப் பார்க்க கைப்பிள்ளை மிகத்தீவிரமாக
பத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். “என்ன லோயர் ஐயா, நான் சொல்லுகிறுது சரிதானே?
என்ற றங்கனுக்கு தலையை கஸ்டப்பட்டு ஆட்டினார் லோயர்.
வேற
ஒன்றும் செய்யமுடியாதோ? எனக்கேட்ட முகுந்தனின் அக்காவிடம், லோயருக்கு தெரியாமல் இரகசியமாக
சொன்னான் றங்கன், “பிரச்சினையில்லை, நான் லோயரைச் சமாளிக்கின்றேன், நீங்க ஒரு மூன்று
தவனையாவது நாளைக்கிடையில் கட்டினீங்க என்றால் கொஞ்ச நாளைக்கு சமாளிக்கலாம். பிறகு கொஞ்சம்
கொஞ்சமாக கட்டுங்கோ. இது கடைசி வழி. இனி நீங்க யோசிச்சு செய்யுங்கோ.”
“நன்றி
தம்பி, போனமுறை வந்தவர் அடுத்தமுறை வந்து ஓட்டோவைக் கொண்டுபோடுவன் என்று சொன்னதால தம்பி
ஓட்டோவின்ர பற்றியையும் கழற்றிக்கொண்டுபோட்டான். நான் எப்படியும் நாளைக்கு மூன்றுதவனைக்காசை
கட்டிவிடுறேன். கோர்ட்டுக்குப் போகாம நீங்கதான் உதவி செய்ய வேணும்.”
அடப்பாவி
“பற்றறியை” வேறு கழற்றிவைத்திருக்கிறியோ? என்று நினைத்தவாறு, “நானும் இந்த ஏரியாத்தான்
பயப்படவேண்டாம் நான் எல்லாவிதத்திலும் உங்களுக்குத்தான் சப்போட் பண்ணுவன்” என்றவாறு
லோயரான கைப்பிள்ளையுடன் கிளம்பினான். றங்கனின் மருந்து வேலை செய்தது கரனின் அக்கா கத்திக்குழறி
மூன்றுதவனையை அடுத்த நாளே கட்டுவித்தால். றங்கனின் கெட்டித்தனத்தை எல்லோரும் பாராட்டினார்கள்.
ஆனால் காலம் ஓடியதே தவிர அதற்கு பிற்பாடு எந்த பணமும் வரவில்லை. றங்கனுக்கும் இந்த
சந்தர்ப்பம் தேவையாக இருந்தது.
தவணைப்
பணத்தினை சாட்டாக வைத்து அடிக்கடி கரன் இல்லாத சமயங்களில் கரனின் வீட்டுக்கு சென்றுவரத்தொடங்கினான். ஆரம்பத்தில் நல்ல விதமாக கதைத்துவந்த றங்கன் மெது
மெதுவாக இரட்டை அர்த்தங்களில் கதைக்கத் தொடங்கியது மட்டுமல்லாது தவணைப்பணத்தை தவிர
அனைத்து விடயங்களையும் கதைக்கத் தொடங்கியிருந்தான்.
றங்கனின்
நோக்கம் உணரத்தொடங்கியபோது கரனின் அக்கா கதைகளைக் குறைத்துக்கொள்ள தொடங்கினார். இதனால்
கோபமடைந்த றங்கன் ஓட்டோவைத் தூக்கப்போவதாகவும், பொலிஸ் நாளை தம்பியை பிடிக்கும் என்றும்
வெருட்டத்தொடங்கினான்.
இனியும்
பொறுக்கமுடியாது என உணர்ந்து கொண்ட கரனின் அக்கா, கரனிடம் விசயத்தைக் கூற, கரன் அவனை
வெட்டுகிறேன்பார் என கிளம்ப, “தம்பி பொறு, இப்படியான கதைகள் வெளியில் தெரிந்தால் எங்கட
மானம்தான் போகும், முதல் வந்த தம்பியிடம் இவனைப்பற்றிச் சொல்லு, அதோட காசையும் கட்டிவிடு”
என்று முடிவாகச் சொன்னார்.
அக்காவின்
முடிவே சரியெனப்படவே முதலில் தவனைப்பணம் பெற வரும் ரமேசுக்கு போன் பண்ணிவிடயத்தை கூறினான்.
“மன்னிக்கவேணும் அண்ணை, எங்கட ஆட்கள் சிலர் இப்படியானவர்களாக இருக்கினம். நான் ஒபீஸில்
கதைக்கிறன், நீங்களும் கொஞ்சம் தவணையைக் கட்டினால் எனக்கும் கதைக்க உதவியாக இருக்கும்”
என்றான் ரமேஸ்.
வேறுவழியின்றி
தவணைப்பணத்தை கட்ட தொடங்கிய கரன், றங்கனுக்கு
தகுந்த பாடம் புகட்ட சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். கடன் தொல்லையாலும்
கடன்காரர் தொல்லைகளாலும் அவஸ்தைகளும் தற்கொலைகளும் தொடரத்தான் செய்கின்றன. வங்கிகள்,
நிதி நிறுவனங்களின் கடன் ஒப்பந்த பத்திரங்களில் உள்ள மொழி உரிமையைப்பற்றியும் எவரும்
கதைப்பது இல்லை.
- மானிப்பாய்
சுதன்.

No comments:
Post a Comment