சுதாவின் மனம் நீண்ட நாட்களின் பின்னர் குதூகலித்துக்கொண்டிருந்தது. திருமணத்துக்காக
பெண்களால் அனுபவிக்கப்படும் எல்லாவித சங்கடங்களையும் அனுபவித்து களைத்திருந்தாள் அவள்.
இனி அனுபவிப்பதற்கும் சங்கடப்படுவதற்கும் ஒன்றுமில்லை என்ற நிலையில்தான் வந்து சேர்ந்தது
ரகுவின் சம்பந்தப்பேச்சு. திருமணப்பேச்சு ஆரம்பமானதில் இருந்து சுதாவிற்கு அந்த பேச்சுக்களில்
எந்தவித சுவாரசியங்களும் ஏற்படவில்லை. இப்படி எத்தனை எத்தனை சம்பந்தங்கள், எத்தனை நிபந்தனைகள்,
அத்தனையும் பின்னர், சில அற்ப காரணங்களுக்காக அனைத்தும் பொடிப்பொடியாகும்போது அவள்
படும் வேதனைகளை அவமானங்களை ஏனையவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.
இவற்றுக்கெல்லாம் யார்மீது
பிழை சொல்ல?, யாரைக்கோபிக்க? புரியாத நிலைகளில் காரணம் தெரியாது எம்மவர்களால் கைக்கொள்ளப்படும்
கலாச்சார கொள்கைகளை சாடுவதா? அல்லது அரைவேக்காட்டுத்தனமான சாத்திரிமார்கள் மீது கோபப்படுவதா?
அல்லது எல்லோருக்கும் படியளக்கும் கடவுளை நோவதா? தனது தேவைகளுக்காக மனிதன் கடவுளை உருவாக்கி;
பின்னர் தான் உருவாக்கிய கடவுளிடமே அதைத்தா? இதைத்தா? என அழும் முட்டாள்த்தனத்தை நோவதா?
நல்லவேளையாக இவ்வளவு
கேள்விகளுக்கும் முடிவு ஒன்று பெறமுதல், ரகுவின் சம்மந்தப்பேச்சு கடைசி நிலையை எட்டியிருந்தது.
பெண்பார்க்கும் படலம் இனிதே நிறைவேறி பெண்ணைப்பிடித்து விட்டதாக மாப்பிள்ளை சொல்லியவுடன்,
சுதாவின் அப்பாவும் அம்மாவும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ரகுவினை மிக உயர்ந்த
இடத்தில் இருத்திக் கொண்டாடினார்கள். பெண்பார்க்க வந்த ரகு எல்லோரிடமும் விடைபெற்று
செல்ல ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுதா. மோட்டார்சைக்கிளில் ரகுசெல்லும் அழகை
ரசித்தவளை பார்த்த புறோக்கர், “நீ குடுத்துவச்சனியம்மா, பெடியன் நல்ல பிரயாசைக்காரன்,
தொழிலும் நல்லமாதிரி, ஊரிலையும் செல்வாக்கான ஆள், பார்த்தியே உவ்வளவு பொலீஸ்க்காரன்கள்
ரோட்டில நிண்டாலும் “கெல்மெற்” போடாமத்தான் போகின்றான். அவ்வளவு செல்வாக்கு”
புறோக்கரின் வாய்ஜாலம்
சுதாவையும் பெற்றோரையும் புல்லரிக்க வைக்க மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர். சுதாவின்
தம்பிகள் கால்களில் சக்கரங்களைக் கட்டியவாறு திருமணவேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு
செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்களும் வீட்டுக்குவந்துசேரத் தொடங்கினர். சுதாவின்
தாய்மாமா சுதாவைத் கட்டியணைத்து “பார்த்தியோ நான் அடிக்கடி சொல்லுவேன் உனக்கு நல்லது
நடக்கும். உன் கர்மவினைதான் எல்லாவற்றையும் தடுக்கிறது என்று. இப்ப பார்த்தியா கர்ம
வினை அகல, சூரியனைக்கண்ட பனிபோல் உன் துன்பங்களும் அகன்றுவிட்டது.”
சுதாவும் அடிக்கடி யோசிப்பது
உண்டு மாமாவின் கர்ம வினைக்கோட்பாட்டை? அந்த நேரத்தில் எல்லாம் சுதாவின் மனதில் எழும்
கேள்வி போனபிறப்பில் செய்த பாவங்கள் ஞாபகங்கள் நமக்குத் தெரிந்தால்தானே கர்ம வினையை
நாம் அனுபவிப்பதில் பலன் உண்டு. அதைவிடுத்து போனபிறப்பில் எமது ஆத்மா இன்னொரு உடலில்
அதன் மனத்துடனும் உணர்வுகளுடனும் செய்ததை இப்பிறப்பில்
இந்த உடலும் இப்போதுள்ள மனமும் அனுபவிப்பது எவ்விதத்தில் நியாயம்? என்று. எது எப்படியோ
தனது கர்ம வினை முடிந்தாகிவிட்டது என்பதை நினைத்து சந்தோசப்பட்டாள்.
இடையிடையே ரகு போனில்
தொடர்புகொண்டு கதைக்கத் தொடங்கியிருந்தான். போனில் கதைக்கும்போது ரகு காட்டிய நெருக்கம்
சுதாவின் மனத்தில் இருந்த பயம் அனைத்தையும் துரத்தியது. இடையிடையே ஒவ்வொருசாட்டுச் சொல்லி வீட்டுக்கும்
வந்து சென்று கொண்டிருந்தான். மகிழ்ச்சியான காலங்களில்; காலம் போவது தெரியாமல் போய்விடும்.
அதுபோல் சுதாவின் திருமணநாளும் நெருங்கியிருந்தது. மண்டபத்தல் திருமணம். மண்டபம் நிறைந்த
சனம். உறவினர்களைவிட ரகுவின் நண்பர்கள் பட்டாளமே மண்டபத்தை நிறைத்திருந்தது.
சுதாவின் பெருமைக்கு
அளவே இல்லாமல்போனது. எவரும் இல்லாமல் இருந்த அவளுக்கு கண்நிறைந்த கணவன் அவனது நண்பர்கள்
என பெரும் கூட்டமே தன்பின்னால் இருப்பது, அவளால் கனவில் கூடநினைக்க முடியாதது; இன்று
நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
திருமண நிகழ்வுகள் முடிவடைந்து
சுதாவை மாப்பிள்ளை வீட்டில் ஆனந்தக்கண்ணீருடன் விட்டுவிட்டு பெற்றோரும் உறவினரும் சென்றுவிட்டனர்.
சுதாவுக்கோ ரகுவின் வீடு புதிதாகத் தெரியவில்லை. ரகுவீட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள்
வீடு செல்ல நெருங்கிய ஒருசில உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே நின்றிருந்தனர் ரகுவின்
வீட்டில்.
அடுத்த நாள் இரவு, கொழும்பில்
இருந்து திருமணத்துக்கு வந்திருந்தான் ரகுவின் நெருங்கிய நண்பன், அவன் இரவு பயணத்துதுக்கு
தயாராக; ரகு நண்பர்கள் உறவினர்கள் சொல்லியும் கேளாமல் தானே பஸ்தரிப்பிடத்தில் விட்டுவிடவேண்டும்
என்ற ஆசையில் நண்பனை மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்றான். வீட்டில் ரகுவின் நண்பர்களின் கிண்டலையும் கேலிகளையும் பொய்க்கோபத்துடன்
ரசித்துக்கொண்டிருந்தவளிடம், “ரகுவிற்கு போன் பண்ணி கெதியாக வீட்டுக்கு வரச்சொல்லம்மா”
என்றார் மாமானார். அப்போதுதான் நேரம்போனது தெரியாமல் இருந்துவிட்டோமே என்ற பதைபதைப்பில்
போன்செய்தாள் ரகுவிற்கு, போன் ரிங் ஆனது. ஆனால் ரகு எடுக்கவில்லை.
மீண்டும் மீண்டும் எடுத்தும்
பயன் இல்லை. பதட்டத்துடன் ரகுவின் நண்பர்களிடம் ரகு போன் எடுக்காததைப் பற்றிச் சொல்ல
அவர்களிற் சிலரும் தங்களது போனில் இருந்து போன் செய்தும் ரகு போன் எடுக்காததால் தங்களது
மோட்டார் சைக்கிள்களில் ரகுவைத் தேடிப்புறப்பட்டனர். சுதாவிற்கு இப்போது பதட்டமும்
பயமும் சேர அழத்தொடங்கிவிட்டாள். ரகுவின் தாயார் “அழக்கூடாது பிள்ளை, என்னபயம்? மோட்டார்சைக்கிள்
சத்தத்தில் போன் ரிங் பண்ணியது கேட்காமல் போயிருக்கும் என ஆறுதல் கூறினார். ஆனால் அந்த
ஆறுதல் நிலைக்கவில்லை. நண்பனை ஏற்றிச் சென்ற ரகு திரும்பிவரும்போது மணல் ஏற்றிவந்த
டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு தலையில் காயத்துடன் ரகுவை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக
நண்பர்கள் தந்தையின் போனுக்கு தகவல் சொன்னார்கள்.
குடும்பமே அழுது குழறிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள்.
வைத்தியசாலையில் சிகச்சை
பயனளிக்காமல் ரகுவின் மரணச்செய்தியை மட்டுமே வைத்தியர்களால் கூற முடிந்தது. கூடவே நின்ற
பொலீஸ் “கெல்மெற் போட்டிருந்தால் தப்பித்திருக்கலாம். தலையில் அடி பலமாக விழுந்திராது”
என்றார். அதனை ஆமோதித்தபடி வைத்தியரும் செல்ல, சுதா பொத்தென்று மயங்கிவிழுந்தாள்.
ரகுவின்தாயும் உறவினர்களும்
சுதா ரகுவை முழுங்கிவிட்டாள். அவளது ராசிதான் ரகு இறந்துவிட்டான் என பேசத்தொடங்க, சுதா
நடைப்பிணமானாள், இவற்றை அவதானித்த சுதாவின் மாமா என்ன ஆனாலும் பரவாயில்லையென சுதாவை
தாய்வீட்டுக்கு வலுக்கட்டாயமா கூட்டிவந்துவிட்டார். வீட்டில் பிரமை பிடித்தவள்போல்
இருந்த சுதா விரக்தியோடு மாமாவைப்பார்த்து திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள்
“ரகு கெல்மெற் போடாததும் எனது கர்ம வினையா? மாமா” என்று. மாமானாரால் அழுவதைத்தவிர எதுவும்
கூறமுடியவில்லை….
-
மானிப்பாய்
சுதன்



No comments:
Post a Comment