காலை நேர விரிவுரைக்காக தயார்படுத்திக்கொண்டிருந்த தயாளனின் மனம் நிலைகொள்ளாது அலைந்துகொண்டிருந்தது. பாடசாலைக்காலத்தில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய தயாளன் பல்கலைக்கழகத்திலும் தனது கெட்டித்தனத்தை தக்கவைத்துக்கொண்டான். அதன் விளைவு இன்று பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளனாக சென்றுகொன்டிருக்கின்றான். இப்படியாகப்பட்ட நிலையில், சில காலமாகவே அவனது மனம் நிலைகொள்ளாது அலைந்து கொண்டிருக்கின்றது.
தனது திருமண வாழ்க்கையைப் பற்றி பலகனவுகளை நீண்டகாலமாக சுமந்ததினால் என்னவோ தயாளன் தான் பார்க்கும் சினிமாக்கள், கதைகள் மூலமாக தனது மனைவியைப்பற்றியும் தனது குடும்ப வாழக்கையைப்பற்றியும் கொஞ்சம் அதிகமாகவே கற்பனை செய்திருந்தான். அதன் விளைவு பார்க்கும் பெண்களையெல்லாம் தனது கற்பனைக்குள் பொருத்திப்பார்த்துக்கொள்வான். மனைவி என்று அமைந்துவிட்டால் அவள்தான் எல்லாம் என்று சிந்தித்திருந்தான். இந்த நிலையில்தான் தயாளனின் காதில் மணிஓசையும், தலைக்கு பின்னால் சிறு ஒளிவட்டமும், கடைவாயிலில் சிறு அருவியும் உருவாகியிருந்தது சமீபகாலமாக. இவற்றுக்கெல்லாம் காரணம் அவனது விரிவுரை வகுப்பில் இருக்கும் அழகுப்பதுமையான மயூரதி என்னும் இறுதியாண்டு மாணவி.
தனது கற்பனை வளையத்துக்குள் போட்டுப்பார்க்கும் முன்னரே தனது மனதுக்குள் நுழைந்தவளை வலுக்கட்டாயமாக வெளியில் எடுத்து கற்பனை மனைவியுடன் ஒப்பிட்டுப்பார்த்தான். நீண்ட முடி, துறுதுறுவென்ற கயல்விழி…. ம்ம்ம் எல்லாமே கச்சிதமாக, ஆனாலும் அவசரப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் அவளது குடும்ப நிலையையும் விசாரித்ததில் அதுவும் திருப்தி. நண்பர்கள் கேட்டார்கள் நீ காதலிக்கிறாயா? அல்லது உனக்கு நீயே புறோக்கறா? சுய சம்மந்தம் பேசுறமாதிரி இருக்கு. தயாளனுக்கு நண்பர்களின் கேள்வி அவனது ஆண்மையை உசுப்பேற்றியது. இதன் விளைவு மயூரதியை காதலிப்பது என முடிவு செய்தான். அன்றிலிருந்து தொடங்கியது நிலைகொள்ளாமை. எவ்வளவு முயன்றும் தனது விருப்பத்தினை சொல்ல முடியவில்லை என்ற கௌரவ பிரச்சினை, கேட்டு மறுத்துவிட்டால் என்ன செய்வது? என்ற பயம். இதைத்தான், கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லா ஒரு உருண்டையும் …. என்று பாடினாங்களோ? என்று யோசிக்க தூண்டுமளவுக்கு வளர்ந்திருந்தது காதல் பித்து, ம் ம் ம் இல்லை இதனை காதல் விருட்சம் என்றும் சிலர் சொல்வார்கள், எது எப்படியோ ஏதோ ஒன்று தயாளனின் மனதில் வளர்ந்து விட்டது என்பது மட்டும் உண்மை.
இன்றைய தினம் மயூரதியிடம் நேரடியாக கேட்டுவடுவது என்ற தீர்மானத்துடன் தயாளன் வீட்டிலிருந்து கிளம்பினான். பல்கலை வளாகத்தினுள் மயூரதியை தேடிஅலைந்தன கண்கள். விரிவுரை மண்டபத்துள்ளும் அலைந்தன, ஆனாலும் பயன் இல்லை. மயூரதியைக் காணவில்லை. துவண்ட மனதுடன் வீட்டுக்கு வந்தவனுக்கு தேனீரை வழங்கியவாறே தாயார், தம்பி பிள்ளை ஒருத்தியின்ர படம் பக்கத்துவீட்டு மாமி கொடுத்தவ உன்ர சாதகத்துடன் பொருத்தமாம் பிள்ளைக்கும் உன்னைத் தெரியுமாம் உனக்கு பிடிச்சிருந்தா செய்யலாம் என்று சொன்னவா. என்று சொல்லியவாறே படத்தினைக் காட்டினார். வேண்டா வெறுப்புடன் ஒப்புக்காக படத்தைப் பார்த்தவனின் மூளையில் வெட்டியது மின்னல். மயூரதியின் படம். இருந்தாலும் சந்தோசத்தை அடக்கியவாறே உங்களுக்கு பிடிச்சா தொடருங்கோ என்று சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று துள்ளிக்குதித்தான்.
தயாளனின் சம்மதம் கிடைத்ததும் அசுர வேகத்தில் எல்லாம் முடிந்தது. தயாளன் தன் கனவுப்படி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். ஒருநாள் மயூரதி தயாளனிடம் நாங்கள் ஆதர்ஸ தம்பதிகள் தானே? என்று கேட்டாள் தான் கேட்க, நினைத்ததை மனைவியே கேட்டதில் இரட்டிப்பு சந்தோசம் பேச்சு மூச்சின்றி நாங்க மட்டும்தான் என்று தன் மனைவியை கட்டிப்பிடித்தவாறே ஆசையுடன் கூறினான்.
நாட்கள் நகர நகர தயாளனில் குறைபிடிப்பதே மயூரதியின் வேலையாக இருந்தது. இவருக்கு ஒன்றும் தெரியாது. இவர் கதைக்கமாட்டார் என்று சொல்லிச்சொல்லியே தயாளனின் இயல்பான வளவளா குணம் தயாளனுக்கே மறந்து போனது. ஒரு முறை தயாளன் மரக்கறி வேண்டிவர அதில் மரவள்ளிக்கிழக்கு அவியாமல் போக, இவரை வேண்ட விட்டால் இப்படித்தான் எங்Nயும் ஆவென்று கொண்டு அவியாத கிழங்கை வேண்டிவந்து விடுவார் பாருங்கோ மாமி. என்று மாமியாரிடம் புறுபுறுக்க, தயாளனின் தாயாரும் அப்படியே அப்பாவைப்போல அவரும் இப்பிடித்தான். தயாளனுக்கு குழப்பமாக இருந்தது, அப்பாவுக்கு மரவள்ளிக்கிழங்கு வேண்டத்தெரியாதா? அல்லது எங்கேயும் ஆவென்றுகொண்டு திரிஞ்சவரோ? மரவள்ளிக்கிழங்கு வேண்டுவதிலும் பரம்பரை அலகின் செல்வாக்கு இருக்கிறதோ. இதனை வைத்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வேண்டும் என்ற சிந்தனையுடன் புத்தகங்களை தேட ஆயத்தமானான்...
“எங்கட குடும்பத்தில எல்லா வேலையும் நான்தான் செய்யவேனும். இவரை விட்டா அவ்வளவுதான் காசைக்கரியாக்கிப்போடுவார்”, இப்பொழுதெல்லாம் மனைவியின் வாயிலிருந்து இந்த வசனங்கள் சரளமாக வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு தேனீருடன் பரிமாறப்படுவது: மனைவியின் சம்பிரதாயங்களுள் ஒன்றானது. இதனை பெருமையாக ஏற்றுக்கொள்வதா? இல்லை தன்னை ஒரு “டம்மியாக” யோசிப்பதா என்று குழம்பி குழம்பியே தயாளனின் தலையில் சிறு மைதானம் உருவாகியிருந்தது.
இரவு வழக்கத்துக்குமாறாக மனைவியிடமிருந்து அன்பு கூடியிருந்தது. கூடவே என்னப்பா நாங்க ஆதர்ஸ தம்பதிகள்தானே என்றவுடன் தயாளனின் வயிற்றுனுள் பட்டாம் பூச்சி பறக்கத்தொடங்கியது. காதல் வந்தாலும் வயிற்றினுள் பட்டாம் பூச்சி, காதல் மனைவியின் கேள்வியின் பயத்திலும் பட்டாம்பூச்சி பிரமை! என்ற குழப்பமான நினைப்புடன், “என்னம்மா நாங்கள் ஆதர்ஸ தம்பதிகள்தானே அதிலென்ன சந்தேகம்” என்றான் தயாளன். மயூரதி தனது கைகளால் தயாளனின் கைகளை அழுத்தியவாறே மெதுவாக, “முதலில் இல்லை இப்பதான் சந்தேகம் வந்திருக்கு…” என்று மெதுவாக இழுக்கதொடங்க… , இன்றைக்கு முருங்கைமரம் ஏறிவட்ட உணர்வுடன் ஏன் என்ன சந்தேகம் என்றான் தயாளன்.
கலியாணம் கட்டின புதிதில் நாங்க மட்டுந்தான் ஆதர்ஸ தம்பதிகள் என்று சொன்னீங்க. இப்ப சொல்லம்போது “மட்டுமை” காணவில்லை. அதுதான் சந்தேகமாகக்கிடக்குது. இப்பொழுது சிறகடித்துப் பறக்கத்தொடங்கியது பட்டாம்பூச்சி வயிற்றில், அடடா ஒரு ஆர்வக்கோளாறில் மனைவியை சந்தோசப்படுத்த சொன்னவார்த்தைகள் இன்று எனக்கு எதிராக பூமராங் எனும் ஆயுதத்தை போல் மீளவும் என்னை நோக்கி திரும்பியது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியில்லை ஏனெனில் சமீபகாலமா இவ்வாறான தாக்கதல்களுக்கு பழகிவிட்டிருந்தேன். அதுவா … அப்ப உங்களை சந்தோசப்படுத்துவதற்காக அப்படி சொன்னனான். அதுக்காக இப்ப வேணுமென்று மட்டுமை விட்டுட்டு சொல்லவில்லை, அவ்வளவுதான், வெடித்தது விம்மல் படபடத்துக்;கலங்கியது கண்கள் மழைபோல் பொழிந்தது கண்ணீர் கூடவே, அப்ப இவ்வளவு காலமும் என்னை எமாத்திக்கொண்டுதானே இருந்திருக்கின்றீங்க… மனைவியின் அழுகை, கண்ணீர், தயாளனைக் குழப்ப இப்பவும் எப்பவும் நாங்க மட்டும்தான் ஆதர்ஸ தம்பதிகள். இதுக்குப்போய் பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம்… என்று கட்டியணைத்தவாறே தயாளன் “மட்டும்” என்ற வார்த்தை எவ்வளவு வீரியமானது என்பதை நொந்தபின் உணர்ந்து கொண்டான்.
காலையில், இரவின் ஊடல் எதுவும் மயூரதியில் தெரியவில்லை. ஆனால் அன்பாக “உங்களது மொட்டந்தலை எனக்கு விருப்பம்” என்றாள். ஏன்? என்ற தயாளனின் கேள்விக்கு, உங்கட தலை மொட்டையாக இருந்தால் கம்பசில ஒரு பெட்டையலும் உங்கள பார்க்கமாட்டினம்தானே. அடிப்பாவி கலியாணம் கட்டமுதல் தலைநிறைய முடி இருக்கவேண்டுமென்று சொன்னனீயாம். ஏன்ற தயாளனின் கேள்விக்கு, அது அப்ப, இது இப்ப?. உனக்கென்ன லூசா? அப்ப நானும் என்ன அப்படி அலையிறவனா? என்னையே சந்தேகப்படுகிறாயே? பார்த்தீங்களா உங்களுக்கு கோபம் வருகுது. குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும் என்றவளை ஓங்கி அறையவேண்டும்போல் இருந்தது. ஆனால் நாங்க ஆதர்ச தம்பதிகளாயிற்றே அப்புறம் எப்படி அடிப்பது? அடிப்பாவி! இது நீ என்னை நம்பவில்லையே என்று வந்த கோபம். நாங்க ஆதர்ஸ தம்பதிகள் என்று சொல்வாய். பிறகு ஏன் இப்படி கதைக்கிறாய்?
அது நீங்க என்னை சந்தோசப்படுத்த பொய்தானே சொல்கிறனீங்க. நேற்று இரவு நீங்களே சொன்னதுதானே. நான் எல்லாவற்றையும் சேர்த்து கூட்டிக்கழித்துப் பார்த்துதான் சொன்னான்… எப்பூடி என் சாமர்த்தியம்? வுந்தது கோபம், இருந்தாலும் மனதை அடக்கியவாறு, “பாவம் அவள் என்னிடந்தானே அதிகாரம் செலுத்தமுடியும்” என்ற நினைப்புடனும், முடிவுடனும் சலூனுக்கு கிளம்பினான்.
சலூனில் மீதமிருந்த தலைமயிரையும் வளிக்கும்போது தயாளனின் மனதில் தனது திருமண வாழக்கைபற்றிய கனவுகளும் நடைமுறை வாழ்க்கைப்பிரச்சினைகளும் மீள ஓடியபடி இருந்தன. இறுதியில் மயூரதியின் பக்கம் மனம் சாய்ந்தது காரணம், அவளுக்கு, என்னில் இருக்கும் அபரீதமான அன்பும் தனக்கு மட்டும் உரியவர் என்ற உணர்வுமே அவளின் நடத்தைகளை குழப்புகின்றன. இதில் நான் கோபப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்ற உணர்வுடன் தயாளனின் கைகள் திருப்தியுடன் மொட்டந்தலையை தடவியது.
- மானிப்பாய் சுதன்

No comments:
Post a Comment