மாசி மாத பனி மூசிப் பெய்யும் என்பார்கள். ஆனால், கார்த்திகை மாதத்தில் மூசிப்பெய்துகொன்டிருந்தது பனி. பனியின்
குளிர் தாங்கொணாது போர்த்து மூடிப் படுத்திருந்தான் றமணன். காலை
ஏழு மணியாகியும் எழுந்திராத கணவனை, தன் திருப்பள்ளியெழுச்சியினாள் எழுப்பினால் றமணனின்
மனைவி மாலினி.
நித்திரையில் இருந்து
எழுந்தவன் சோம்பலை முறித்து, தேனீரைச் சுவைத்தபடி, மனைவியிடம் “இன்றைக்கு மதியம் என்ன
சாப்பாடு”. என்று கேட்டான்; “நீங்களே சொல்லுங்க” கணவன் விருப்பமே தன் விருப்பம்போல்
கூறினால் மாலினி. பந்து தன் பக்கம் வந்ததை
உணர்ந்த றமணன் ஆர்வக்கோளாறுடன் “மீன் வேண்டுவம்” என்றபொழுது மாமனாரின் அவலக்குரல் கேட்டது.
“மாலி… மாலி… ஓடி வா”
என்னவென்று பாருங்கோவன் என்றாள் மாலினி.
“கொப்பர் உன்னைத்தானே கூப்பிடுகின்றார்” என்றான்
தேனீரைச் சுவைத்தபடி றமணன்.
“தம்பி …. தம்பி…. கொத்தப்போகுது
கொத்தப்போகுது … கொத்துது….” மாமனாரின் அலறல் நிலைமையின் தீவிரத்தை உணர்த்த. முன்னர்
ஒருமுறை வீட்டுக்குள் பாம்பு வந்தபோது மாமானார் கட்டிலின் மேல் நின்றபடி அலறியது, ஞாபகத்துக்கு
வர, மீண்டும் பாம்புதானோ என்று நினைத்தபடி றமணன் மாமானாரின் குரல் வந்த திசை நோக்கி
தடியொன்றுடன் ஓடினான்.
மாமனார் சுவரோடு சுவராக
பல்லிபோல் ஒட்டிக்கொண்டு சூ.. சூ.. என்று கத்த முயன்று கொண்டிருப்பதும், ஆனால் வாயிலிருந்து
வெறும் காற்று மட்டும் வருவதையும், அவர் நடுங்கிய
கையில் அரிசிச்சுண்டு இருப்பதையும், அதை நோக்கி றமணன் செல்லமாக வளர்த்த வெள்ளடியன்
(?) கோழி பாய்ந்து பாய்ந்து கொத்துவதையும் கண்ட றமணனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு
வந்தது. “ஐயோ அப்பாவை வெள்ளடியன் கொத்தப்போகுது” என்ற மனைவியின் குரலில் பொத்துக்கொண்டு
வந்த சிரிப்பு ஏவறையாக வந்தது.
றமணன் வெள்ளடியன் சேவல்
வளர்க்க வேண்டுமென்ற ஆசையில் சிறு குஞ்சாக வேண்டிக் கோழிக் கூட்டில் விட்டது. நாளடைவில்
அது வளர்ந்து மற்றய கோழிகளைக் கொத்த கூட்டில் இருந்து விடுதலை கிடைத்தது வெள்ளடியனுக்கு.
வெளியில் நாய் பிடித்தாலும் பிடித்துவிடும் என்ற பயத்துடன் இருக்க நாய் வெள்ளடியனைப்பார்த்து
பயந்து ஒதுங்கியது. இதனால் றமணனுக்கு ஒரு பெருமை தனது வெள்ளடியனைப்பார்த்து. வெள்ளடியன்
வளர வளர அதன் அதிகாரம் வீட்டில் அதிகரித்துக்கொண்டே போனது. சிறுபிள்ளைகளைக் கண்டால்
துரத்தித் துரத்தி கொத்தத் தொடங்கிவிடும். இன்று அதன் வேட்டையில் சிக்கியவர் றமணனின்
மாமனார். கோழி பாவம் என்று அரிசிபோட வந்தவரை, சிறைப்பிடித்து தாக்கத்தொடங்கியிருந்தது.
றமணனும், மாலினியும்,
வெள்ளடியனிடம் இருந்து அவரை மீட்டெடுக்க கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இடையிடையில் மாலினியையும் கொத்த முற்பட்டது வெள்ளடியன். றமணன் ஒருமாதிரியாக மாமனாரை
மீட்டெடுத்தான். வெள்ளடியனை நல்லதொரு கயிற்றால் கட்டியவனைப்பார்த்து, மாலினி சொன்னாள்;
“உந்த சனியனை வித்துப்போட்டு வாங்கோ.” பதிலுக்கு
றமணன் “உனக்கென்ன விசரே?” என்றான்.
மாலினியோ, “கோழியை வித்துப்போட்டு
அந்தக்காசில் மீனை வேண்டிக்கொண்டு வாங்கோ, மத்தியானம் மீன் குழம்பு வைக்கலாம்.” என்றாள்.
“அதில்லையடி சந்தைக்கு
நான் கோழியோட போனால், என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு கோழி அமுக்கிற மாதிரி அமுக்கி
விடுவாங்கள். பிறகு நட்டத்திலதான் முடியும் கோழி வியாபாரம்.” றமணன் தன் பட்டறிவை வைத்து
தன் நிலையைச் சொன்னான்.
அதெல்லாம் வடிவா விற்கலாம்
“தனி ஓருவன்” படத்தில் அரவிந்தசாமி தன் அப்பாவுக்கு சொல்லுகிறமாதரி மாலினியும் றமணனுக்கு
சொன்னாள் இவ்வாறு, சந்தைக்குள்ள போகும்போது கொஞ்சம் தலையை நிமிர்த்தி, ஒருபக்கமாக சரித்து,
ஒரு அலட்சியப்பார்வையுடன் பார்த்துக்கொண்டு விலையைச் சொல்லுங்கோ”
“என்ன விலையைச் சொல்ல?”
றமணனின் கேள்வி மாலினிக்கு எரிச்சலைத் தர.
“இரண்டாயிரம் என்று சொல்லுங்கோ”
றமணன் சிறு குழப்பத்துடன் கோழியின் இரண்டு கால்களையும் கட்டி பையினுள் தூக்கிப் போடும்போது
கோழியின் கனம் திருப்தியைத் தந்தது றமணனுக்கு. இருந்தும் கோழியை முதலில் விட்டுவிட்டு
சந்தை நிலைமையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றான்.
சந்தைக்குள் சென்றவன்
கோழியிறைச்சி கடைக்கருகில் சென்று நோட்டம் விட்டான்.
“என்ன தம்பி கோழி இறைச்சி
வேணுமோ?” இறைச்சிக்கடைக்கு பக்கத்து கடைக்காரர் கேட்டார்.
றமணனின் மௌனத்தை கண்ட
கடைக்காரர் “இறைச்சி விக்கிறவர் தேத்தண்ணி குடிக்கப் போய்விட்டார். எவ்வளவு என்று சொல்லும்
நான் தருகின்றேன் என தன்னிலை விளக்கம் கொடுக்க, றமணனின் தலை ஒரு சரிவாக உயர்ந்துகொள்ள,
கண்கள் அலட்சியத்தை வீச “இல்லை, வெள்ளடியன் கோழி ஒன்று விற்கவேணும் அதுதான்....” என்றான்
அலட்சியமாக,
“வெள்ளடியனோ?, தம்பி
எவ்வளவு சொல்லுகிறாய்?” பக்கத்து கடைக்காரர் பாசமாய் கேட்க, றமணன் “பெருமையுடன் இரண்டாயிரம்
என்றால் குடுப்பன்.” என்றான்.
“சரி கொண்டுவாரும். இறைச்சிக்கடைக்கு
போகமுதல் என்னட்ட காட்டும்” என்றார் பக்கத்துக் கடைக்காரர்.
றமணன் மிகவேகமாக வீடுசென்று
மீண்டும் கோழியுடன் வந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பக்கத்து கடைக்காரருக்கு
சைகையால் கோழி கொண்டுவந்த பையைக் காட்ட, அவரும் கண்ணசைவின் அர்த்தம் புரிந்து விரைந்து
வந்து பார்த்தார். கோழியைப்பார்த்தவர் மீண்டும் தன் கடைக்குப் பின்னால் சென்று ஒரு
பெரிய கோழியை தூக்கிவந்தார். அதைப்பார்த்தவுடன் றமணனின் தலை சிறிதுதாள தன்னையறியாமலே
மோட்டார்சைக்கிளை விட்டிறங்கியிருந்தான்.
“தம்பி, இதைத்தான் நாங்கள்
வெள்ளடியன் கோழி என்று சொல்லுகிறனாங்கள். உதைக்கொண்டுவந்து வெள்ளடியன் என்று சொல்லுகின்றீர்.
றமணனுக்கு அவரது கோழியின் பருமனைப்பார்த்ததும் தனது கோழி அதன் குஞ்சுக் கோழிபோல் இருப்பதாகக்
தோன்றியது. இருந்தும் “அண்ணை இது வடமராச்சி கலப்பு வெள்ளடியன் அண்ணை என்றான். ஆனால்
அவனோ அதைக்கவனியாமல், இறைச்சிக் கடைக்காரனை விசிலடித்துக் கூப்பிட்டுவிட்டு தன்பாட்டில்
போய்விட்டான். இதனால் றமணனின் கௌரவம் சிறிதுபாதிக்கப்பட்டதாய் றமணன் உணர, இறைச்சிக்டைக்காரனிடம்
“அண்ணை கலப்பு வெள்ளடியன் இரண்டாயிரம் என்றால் தருவன்” என்றான்.
பையைத் தூக்கிப்பார்த்த
கடைக்காரனுக்கு கோழியின் கனம் திருப்தியைத்தர, தலையை ஆட்டியவாறே கோழியை வெளியில் எடுத்து
பின் அதனைப்புரட்டி அதன் குதவாசலில் விரலால் அழுத்தி மணந்து பார்த்துவிட்டு, “அழுகல்
மணம் வருது தம்பி” என்றான். கடுப்பாகிய றமணன், “அதுக்குள்ள கையை வைச்சா அழுகல் மணந்தானே
வரும்” என்றான். “இல்லை தம்பி கழிச்சல் பீச்சல் வருத்தம் போல…. ஏதாவது” என்று இழுத்தவனை
இடைமறித்த றமணன் “ ஒருவருத்தமும் இல்லாத வீட்டுக்கோழி இரண்டாயிரம் என்றால் எடுங்கோ
இல்லாட்டி விடுங்கோ” என்றான்.
“ஆயிரத்து ஐநூறு என்றால்
தாங்கோ தம்பி” என்றவனை இடைமறித்து. வேண்டாம் அண்ணை நான் வேற இடத்தில விற்கிறன் என்று
கிளம்பி கோழிப் பண்ணையொன்றுக்கு சென்றான். அங்கிருந்தவர்களும் அதே விலையைக் கேட்க,
தளர்ந்துபோன றமணன், மீன்சந்தையில் மீனை வேண்டிக்கொண்டு கோழியையும் வீட்டுக்கு கொண்டு
போவோம் என்று நினைத்தவாறு பர்ஸ்ஸைப்பார்த்தான் வெறும் நூறு ரூபா மட்டுந்தான் இருந்தது.
ஆக, கோழியை விற்றால்தான் மீன்குழம்பும் என்று யோசித்தவாறு மீன்சந்தையை நோக்கிச் செலுத்தினான்
மோட்டார் சைக்கிளை.
மீன்சந்தையில் கோழிப்பையுடன்
அநாதரவாக நின்ற றமணனை, மீன் வெட்டிக் கொடுப்பவர் “என்ன தம்பி இன்றைக்கு கோழியே?” என்றார்.
றமணன் அவசர அவசரமாக “இது விக்கிறதுக்கு” என்றான். பார்ப்பம் கோழியை என்று வேண்டிப்பார்த்தவர்,
அருகில் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக நின்றவரிடம் “ஐயா நாட்டுக்கோழிக்கு அலைஞ்சியள்,
இஞ்ச தம்பி நல்ல வெள்ளடியன் கோழியோட நிக்குது, பார்த்து வேண்டுங்கோவன்” என்றார். அடப்பாவி
திரும்பவும் வெள்ளடியன் என்று சொல்லி என்னைத் தலைகுனிய வைக்கப் போகின்றானே இவன் என்று
றமணன் யோசித்தவாறு இருக்க.
“தம்பி இது வெள்ளடியன் கோழிதானே?” வெள்ளையும் சொள்ளையும்,
வெள்ளந்தியாக கேட்டார்!
இப்போது றமணனின் தலை
ஒருபக்கமாக சாய்ந்து உயர்ந்து அலட்சியமாக ஆட்டியது. ஆடொன்று சிக்கிட்டுது, விடப்படாது
மனது யோசித்துக்கொண்டது.
“விலை?” கேட்டது வெள்ளையும் சொள்ளையும்.
“இரண்டாயிம்”.
“தம்பி பார்த்துக்குடு” மீன் வெட்டுபவர்.
சரி இவனும் என்னைமாதிரயே
வெள்ளந்தியா இருக்கின்றானே! என்று மனதுள் யோசித்தவாறே… “ உங்களுக்கு என்றபடியால் ஆயிரத்து
எண்ணூறு”
“ஆயரத்து எழுநூறு என்றால்
தாங்கோ தம்பி.”
இவரிட்டையும் என்னிடம்
நூறு ரூபா மட்டும் இருக்கிற மாதிரி, ஆயிரத்து எழுநூறுதான் இருக்கோ? பாவம்! என்று நினைத்தவாறு.
தன் சந்தோசத்தையும் வெளிக்காட்டாதவாறு வெள்ளடியனை
இடது கையால் கொடுத்து வலது கையால் காசை வேண்டிக்கொண்ட றமணன் நாக்கில் நீரூர மீன் வேண்டுவதற்கு
சந்தைக்குள் சென்றான்.
- மானிப்பாய்
சுதன்

No comments:
Post a Comment