சுரேன்
வழமைபோல் இரவு 9.30 க்கு தனது கடையின் வெளிக்கதவை மூடிவிட்டு, கணக்குகள் எல்லாம் முடித்து,
சமான்களை ஒதுக்கிவைத்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு செல்ல நேரம் 11 ஆகிவிட்டது.
வீட்டுக்கு வந்தவன் குளியலறைக்கு சென்று குளித்து, சாப்பிட வந்தபோது மனைவி தூக்கக்கலக்கத்துடன்
இரவு உணவைப்பரிமாற அதனை அவசர அவசரமாக உண்டு விட்டுபோய் படுத்தவனுக்கு, நாள்முழுவதும்
கடையில் நின்றவனுக்கு நித்திரை எப்படி வந்ததென்று தெரியவில்லை.
சமயலறையில்
கணவனின் கோப்பையை கழுவிவைத்துவிட்டு வந்த வதனாவின் முகம் வழமைபோல் சுருங்கிவிட்டது.
கணவன் குறட்டை விட்டபடி நித்திரைகொள்வதைப் பார்த்தபோது ஓவென்று கத்தி அழவேண்டும்போல்
இருந்தது. சத்தம் வந்தால் பக்கத்து அறையில் படுத்திருக்கும் மாமியார் எழுந்துவிடுவாரோ
என்ற பயத்தில் படுத்துக்கொண்டாள்.
இப்படித்தான்
திருமணமான புதிதில் கணவன் படுத்துவிட எழுப்பி கதைத்துக் கொண்டிருந்தவளை, பகல் முழுக்க
வேலை செய்தவனை நித்திரைகொள்ளவிடாமல் தொணதொணத்துக் கொண்டிருக்கவேண்டாம் என அடுத்தநாள்
மாமியார் கடிந்தது இன்றுவரை ஞாபகமிருந்தது.
வதனாவின்
கணவன் நல்லவன்தான்! நல்லவனாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் ஒருநாளும் சண்டைபோட்டதும்
இல்லை, மனைவியை பேசியதும் இல்லை. ஏனென்றால் அவன்வீட்டில் இருந்தால்தானே பேசுவதற்கும்
சண்டையிடுவதற்கும். காலையில் 5 மணிக்கு எழும்பி தனது வேலைகளை முடித்துக்கொண்டு கடைக்குச்சென்றான்
என்றால் திரும்பி வருவது ஆரம்பத்திலேயே உங்களுக்குத் தெரிந்திருக்குந்தானே.
சுரேனின்
பத்தாவது வயதிலேயே அப்பா இறந்துவிட சுரேனின் தாய் கணவனின் கடையை தானே நடாத்தி சுரேனையும்
வளர்த்து, கடையில் முதலாளியாக அமர்த்தினாள். உழைப்பு உழைப்பு இதைவிட அவள் உலகம் சுரேன்,
சுரேனைத்தவிர வேறெதுவும் இல்லை. இன்றும் சுரேன் பத்துவயதுப் பிள்ளையே அவளுக்கு. எப்பொழுதும்
தன் கண்முன்னே சுரேன் இருக்கவேண்டும்.
சுரேனுக்கு
முப்பது வயதை கடக்க ஊரவர்கள் உறவினர்கள் சுரேனின் திருமணத்தைப்பற்றி கேட்டபோதுதான்,
சுரேனின் தாய்க்கு தனது மகன் இன்னும் சிறுவனில்லை என்ற நினைப்பே வந்தது. திடீரென்று
ஏதோ ஒரு ஏக்கம், பயம் பற்றிக்கொண்டது. தனது மகன் தன்னை விட்டு போய்விடப்போகின்றான்,
தனக்கென்று இனி எவருமில்லை என்ற உணர்வு மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியது.
அவளையறிமால்
மகனுக்கு வரும் ஒவ்வொரு பெண்களையும் தட்டிக்கழித்துக்கொண்டு வந்தாள். நிறைய நிபந்தனைகள்
விதித்தாள், நிபந்தனைகள் கூட கூட சுரேனின் வயதும் முப்பத்தெட்டை தொட்டது. இனியும் தட்டிக்கழிக்க
முடியாது என்று நினைத்தவள் பல நிபந்தனைகளுடன் வதனாவை திருமணம் முடித்து வைத்தாள் சுரேனுக்கு.
வதனா
குடும்பத்தில் மூத்தவள், ஒவ்வொரு பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும்போதும், திருமணம்
முடித்து புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது தனது தாய் கூறிய வார்த்தைகளே அவளது மனதில்
தோன்றும். “பிள்ளை, என்ன பிரச்சினைகள் வந்தாலும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும்.
உனக்கு பின் இரண்டு தங்கச்சிமாரின் வாழ்க்கை உள்ளது.”
இன்று
திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், வதனாவை தாயின் வார்த்தைகள் வழிநடத்திக்கொண்டிருக்கின்றன.
ஆனால் காலம் அமைதியாக இருக்கவிடுவதில்லை அனைத்து நேரங்களிலும். திருமணம் முடித்து வைத்த ஊரவர் வாய் அடுத்த கட்டமாக
இன்னும் ஒன்றும் இல்லையோ?, என்ன பேரப்பிள்ளை பார்க்கின்ற நோக்கம் இல்லையோ எனக்கேட்க
தொடங்கினர்.
சுரேனின்
தாயின் பார்வையும் நமது பாரம்பரியத்தின்படி மருமகளின்மீதே போனது. கடைசியில் வதனாவை
சோதித்த மருத்துவர் வதனாவில் பிரச்சினை எதுவுமில்லை எனக்கூறி, சுரேனை சோதித்துவிட்டு
எண்ணிக்கை காணாது என்றார். ஆனாலும் அது ஒரு பிரச்சினை இல்லை என கூறி இருவருக்கும் மருந்துமாத்திரைகளை
கொடுத்துகொண்டிருந்தார். வருடங்கள் இரண்டு ஓட சுரேனின் வயது நாற்பத்துமூன்றானது.
இந்த
வருட ஓட்டங்களுக்குள் வதனாவும் சுரேனும் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருந்தனர். வேறுவழியின்றி
வதனா தனது தாய்வீட்டுக்கு போய் ஒருகிழமை நிற்கப்போவதாக அடம்பிடிக்க, சுரேனும் இரவு பத்துமணிபோல் வதனாவுடன் மாமியார்வீட்டுக்கு
போனான். தங்களது விட்டுக்கு அத்திபூத்தாற்போல் வரும் மகளும் மருமகனும் இரவு நேரத்தில்
வருவதைக்கண்ட வதனாவின் தாய் பதைபதைத்துப் போனார்.
சிறிது
நேரம் சுரேன் மாமியார் வீட்டில் இருந்துவிட்டு தனது தாயின் தொலைபேசி அழைப்புவர, தான்
ஒருகிழமை கழித்து வந்து கூட்டிச்செல்வதாக கூறி கிளம்பினான். சுரேன் கிளம்பியதும் கட்டுடைத்த
வெள்ளம்போல் அழத்தொடங்கிவிட்டாள் வதனா. தாய் ஆதரவாக வதனாவை வருடியபடி, அவள் அழுது முடியும்
மட்டும் பொறுமையாக இருந்தாள்.
வதனா
அழுது ஓய்ந்து தாயின் மடியிலேயே நித்திரையாகிவிட்டிருந்தபோது மணி பதினொன்றை தாண்டியிருந்தது.
திடீரென வதனா எழும்பி அவருக்கு சாப்பாடு போட்டுவைக்கவேண்டும் என்றவள், தான் இருப்பது
தாய்வீடு என்று தெரிந்தபின் அமைதியானாள். தாய் கொடுத்த தேநீரை குடித்தபடி, தாயிடம்
தன் சோகங்களை கூறத்தொடங்கினாள்.
திருமணமான
புதிதில் எல்லாமே புதிதாக இருக்க, சந்தோசமாக எற்றுகொண்டாள் வதனா. தனது மாமியாரின் தாய்ப்பாசத்தை
பார்த்து பூரித்துப்போனாள். ஆனால் நாளாக நாளாக தான் ஓர் மூன்றாந்தரப்பு ஆளாக உணரத்தொடங்கினாள்.
சுரேன் எப்போதும் தன் கண்முன்னாலேயே இருக்கவேண்டும் என்ற மாமியாரின் நினைப்பு வதனாவையும்
சுரேனையும் வெகுவாக பிரித்துவைத்தது. வதனா வெறும் சமையலுக்காகவும், வீட்டுவேலைகளுக்காவும்,
வீட்டுக்கொரு காவலாளியாகவுமே இருந்து கொண்டாள்.
சுரேனும்
மாமியாரும் வியாபாரத்திலேயே குறியாக இருந்தனர். பணம் இருந்தது, வசதி இருந்தது. ஆனால்
ஏதோ ஒன்று இல்லாததாகவே உணர்வும் இருந்தது. உடுபுடவைகள் புதிதாக வேண்ட வேண்டிய தேவையும்
இல்லாமையாகவே இருந்தது. ஆரம்பத்தில் இரவு ஏழுமணிக்கு கடையை மூடி வீட்டுக்கு வந்த சுரேன்
வதனாவுடன் கூடுதலாக நேரத்தை செலவிட்டது மாமியாருக்கு பிடிக்கவில்லை. அவர் மனம் கடிவாளம் இட்ட குதிரையாக மகன் மீதான அன்பு
தன்னிடம் மட்டுமே அதிகம் இருக்கவேண்டும் என்ற உணர்வு, மகனுக்கு தன்மீதான பாசம் குறைந்துவிடுமொ?
என்ற உணர்வு என்பனவே மேலோங்கி இருந்தது. விளைவு கடையை 9.30 வரை திறக்கவேண்டும் இல்லாவிட்டால்
வியாபாரம் உடைந்துவிடும் எனக்கூறி வீட்டுக்கு போகும் நேரத்தை குறைத்துகடகொண்டார். சுரேனும்
வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்று அப்படியே இருந்து கொண்டான். ஞாயிறும் வியாபாரம்
நடந்தது. வதனாவின் அமைதியும் பொறுமையும் மாமியாருக்கு வாய்ப்பாக போய்விட, வதனா தனிமையில்
வீட்டில் துணியினால் மூடி வைத்திருக்கும் இருக்கைகள்
போலானாள். இருக்கைகள் குட்டிபோடுமா என்ன?
இதைவிட
வெளிப்படையாக ஒருமகளால் தாய்க்கு எதைக்கூற முடியும். தாயின் கண்களில் இருந்து கண்ணீர்
வடிந்தது. அது தமது வறுமையினாலா? வதனாவின் மாமியாரினாலா? மருமனின் அறியாமையினலா? மருமகனின் தொழிலினாலா? அல்லது தனது அறிவுரையினாலா
என்பது மட்டும் தெரியாமல் இருந்து அந்தத் தாய்க்கு. இப்போதும் மற்றைய இரு பெண்களும்
வதனாவின் தாயின் கண்முன் தோன்றினர். ஆனாலும் வதனாவை கூட்டிச்செல்ல வரும் மருமனிடம்
சிலகேள்விகள் கேட்க நினைத்துக்கொண்டாள் வதனாவின் தாய்.
- மானிப்பாய்
சுதன்.

No comments:
Post a Comment