மதிய
நேரம், கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து வெளியில் வந்த வரதனின் உடலை குப்பென்று
இலங்கை வெயில் தாக்க துடிதுடித்துப்போனான். அவன் வாயில் இருந்து ச்சீ! என்ன வெயில்!
வெக்கை!, கண்களில் கூலிங்கிளாசும், தலையில் எஞ்சியிருந்த நான்கு தலைமயிரும்கூட பட்டுப்போய்
மண்நிறமாய் தெரிய, முக்கால் காற்சட்டையுடன் வெயில் வெக்கை தாங்கமுடியாது. முகத்தை அட்டகோணலாக்கி
நின்ற, வரதனின் பக்கத்தில் அவன் டார்லிங்ஞம் அவனுக்கு சளைக்காமல் பலவண்ண கொசுவலைகளை
உடையாக்கி என்னேரமும் வெடித்து சிதற தயாராக இருக்கும் பூசனிக்காய் போல நிற்க, அவளருகில்
ஒரு குட்டிக் குண்டுப் பூசனியாக அவர்களின்
கிறுக்கலால் உருவான செல்லமகள் ஸ்ரேஸ்னி.
“ஹே!
“மம்” ஐ டோன்ற் லைக் திஸ் கன்றி” சோ…… நோட்டி அன்ட் நொய்சி! …….. தன்பாசையில் முளங்கத்தொடங்கியது
ஸ்ரேஸ்னி. அவள் பேசும் அழகைப்பார்க்க மயில்வாகனத்தாருக்கு இருப்புக்கொள்ளவில்லை.
“பார்த்தியாடி
என்ர பேர்த்தி எப்பிடி இங்கிலீஸ் கதைக்கிறா எண்டு? என்ர பரம்பரையடி அவள்.”
“ஆமா
லண்டனில பிச்சைக்காரன்கூட இங்கிலீசிலதான் பிச்சை எடுப்பான். அப்ப அவையளும் உங்கட
….”
என்ற
தர்ம பத்தினியை மயில்வாகனத்தாரின் கோபக்கனல் தாக்க, வெண்மை தாங்கமால் கமலத்தின் முகம்
வாடியது. அதனைக்கவனியாதவர் போல “வாடி என்ர பட்டுச் செல்லம்” என்று தூக்கச் சென்றவரை,
“டோன்ற் டச் மி, மை நேம்ஸ் ஸ்ரெஸ்னி, நொட்
பட்டுசெல்ல” என்ற வார்த்தையின் வெம்மை மயில்வானத்தாரின் முகத்தை வெயிலை விட வாட்ட கமலத்தை
பார்த்து அசடுவழிந்தவர், இப்பதானே வந்தவள் போகப்போகப் பழகிவிடுவாள் என்றார்.
“நான்
சொன்ன படிதானே வான் பிடிச்சனியள்? காசு பிரச்சினை இல்லை. ஏசி இருக்கவேனும். புதுசா
இருக்க வேணும். பதினைஞ்சு நாளும் எங்களடோயே நிக்க வேணும். அப்பதான் வீட்டுக்கும் அடிக்கடி
வந்து போகலாம்.” என்றவனின் பார்வை தாங்கள் பயனமாக இருக்கும் வானை துலாவியது.
அடிக்கடி
வந்து போகலாம் என்றால்? அப்ப மருமோளின்ர வீட்டிலேயே நிக்கப் போறியள்? கமலத்தின் அங்கலாய்ப்பு.
நோ!
நோ! அங்கே எப்படி நிற்கிறது மாமா? எங்கட வீட்டில் “கொமெட்டும்” இல்லை. அதைவிட எங்கட
சனங்களின்ர கரைச்சல் தாங்கேலாது பிறகு. மருமகளின் சலிப்புடன் ஆன பெருமை.
ஏன்பிள்ளை
உன்ர வீட்டில நிற்கமுடியாது? அந்த முத்தத்தில மிளகாய் பரப்பி, வடகம் போட்டு நீ வாழ்ந்த
வீடு. பக்கத்து வீட்டு கந்தையா அண்ணைதானே உன்னை முதன்முதலா பக்குவமா கொழும்புக்கு கூட்டிக்கொண்டுபோய்
பிளேன் ஏத்தி விட்டது. உன்னை எப்படி கஸ்டப்பட்டு கூட்டிக்கொண்டு போய்விட்டவர், அந்த
மனுசன். அது சரி அப்ப எங்க நிக்கப்போறியள்? மயில்வாகனத்தாரின் படபடப்பு.
ஹொட்டல்
ஒன்று “புக்” பண்ணியிருக்கிறேன் அப்பா. ஒன்லைனில் செய்தது. இவள் பிள்ளைக்கும் எங்கட
வீடுகள் ஒத்துவராது. மகன் வரதனின் சவாடல்.
ஹொட்டலும்
யாழ்ப்பாணத்தில்தானே இருக்கிறது. எங்கட வீடும் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கிறது. அப்பாவின்
பரிதவிப்பு வீட்டில
ஏசி இருக்கோ? இல்லைத்தானே? சத்தம் போடமா வாங்கோ? தடீர் பணத்தின் அதிகாரம்.
ஏசிதானே
போட்டாப்போச்சு….
என்ன
வீட்டுக்கு ஏசி போடலாமோ?
ஏன்
நாங்க என்ன காட்டுக்குள்ளேயே இருக்கிறம்? தந்தையின் வெறுப்பு.
நாங்க
இஞ்ச வந்து வீடுகளில் நின்றுவிட்டுப்போனால் அங்க மதிக்கமாட்டாங்க அப்பா. இஞ்ச மாதிரி
அங்க இல்ல. மகனின் எரிச்சல்.
அடேய்
தமபி! அங்கே இருக்கிறவங்கதாண்டா இஞ்கே காசை அனுப்பி ஹொட்டல்கள் கட்டி வைச்சிருக்கிறாங்கள்.
அவங்களுக்கு அங்கேயிருந்து வந்து நீங்க பிழைப்பு கொடுக்கிறீங்க? அப்பாவின் நக்கல்.
கதைப்போக்கில்
முருகண்டி வந்ததை டிரைவர் ஞாபகப்படுத்த, அனைவரும் பிள்ளையாரைத் தரிசிக்க சென்றனர்.
மயில்வானத்தார் மட்டும் பேயறைந்தவர் போல வாகனத்தலேயே இருந்தார். அவரை ஒருவரும் பிள்ளையார்
தரிசனத்துக்கு அழைக்கவில்லை. பிள்ளையும் அழைக்கவில்லை, பிள்ளையாரும் தன்னை அழைக்கவில்லையே
என்ற கவலை தொற்றிக்கொண்டது.
என்ன
ஐயா? கடுமையான யோசனை? மகன் வெளிநாடுபோய் ஒரு பத்து வருசத்துக்குள்ளே இருக்குமே?
எப்படித்தம்பி?
இவ்வளவு சரியாகச் சொல்லுறாய்!!!
இது
புலமபெயர்ந்த டமிளர் மீதான எங்கட உளவியல் பார்வை ஐயா. பெரும்பாலும் பத்து வருசத்துக்குள்ளே
போனவர்களின் கதை உங்கட மகன்ர கதைபோலத்தான் இருக்கும். ஆரம்பத்திலேயே போனவங்க என்றால்,
யன்னலை திறந்துவிடண்ணை எங்கட காத்துப்படட்டும் என்று சொல்லுவினம். பிள்ளையளின் பாதணிகளை
கழற்றி எங்கட நிலச்சூடு படட்டும் என்று சொல்லுவினம்.
இவ்வளவு
விசயம் இருக்கோ! சரி…..சரி… பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுது என நினைத்தவாறு மயில்வாகனத்தாரும்
ஒரு கும்பிடுபோட்டார் முருகண்டிப் பிள்ளையாருக்கு.
வான்
சராசரி வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. என்ன டிரைவர் ஊர்ந்து கொண்டு போறீங்கள். என்ர
மனிசியே அங்க நூற்றிநாற்பதில்தான் போவா! நீங்க இஞ்ச இப்பவும் உருட்டிக்கொண்டிருக்கிறீங்க?
கிளிநொச்சி
ரவுனுக்குள்ள ஐப்பதிலதான் போகலாம் அண்ணை. லண்டனிலும் அப்படித்தான் என்று போனமுறை வந்நதவை
சொன்னவை. நூற்றிநாப்பது என்றால் நீங்க சிற்றிக்குள்ள இல்லையோ அண்ணை? நானும் ஏழு வருடம்
இங்க இருந்திட்டுத்தான் வந்தனான். நீங்க எந்த சிற்றி?
ஆப்பிழுத்த
குரங்கின் நிலையில் அசடுவழிய சிரிப்பொன்றினை வழியவிட்டவாறே மகளுக்கு ஏதோ விளங்கப்படுத்துவது
மாதிரி கதையின் போக்கை மாற்றினான் லண்டன் வரதன். மயில்வாகனத்தாருக்கு ஏனோ ஒரு திருப்தி,
தன்னால் முடியாததை டிரைவர்தம்பி செய்து போட்டான்.
சாவச்சேரியில்
வானை நிற்பாட்டச்சொன்னார் மயில்வாகனத்தார். ஏன் அப்பா வானை நிற்பாட்ட சொன்னனீயள் என்றவனுக்கு,
சந்தையில நல்ல மாம்பழம் இருக்கும் வேண்டிக்கொண்டு போவோம். தந்தையின் பாசம்.
மாம்பழமோ
வேண்டாம். இன்ரநெற்றில பார்த்தனாங்கள் இங்கே எல்லாம் மருந்தடிச்சு விக்கிறாங்களாம்.
பிறகு “பூட்பொய்சன்” வந்துவிடும். நீங்க நேராக எங்களை ஹொட்டலில் இறக்கிவிட்டு, அப்பா
அம்மாவை வீட்டில விட்டுவிடுங்கோ டிரைவர். மகனின் சுகாதாரம்.
அப்ப
பிறகு நீங்க வீட்டுக்கு வர வாகனம்?
அது
அவை தங்கிற ஹொட்டலில ஒழுங்கு செய்வாங்கள் அப்படித்தானே அண்ணை? இது டிரைவர் கடி.
டிரைவரை
முறைத்தான் வரதன். வரதனின் இயலாமை.
டிரைவருக்கு
தெரியும் தான் ஏழு வருடம் லண்டனில நின்ற விபரம் தெரிந்தவுடனேயே தன்னை கழற்றிவிடுவாங்க
என்று.
ஹொட்டலில்
பிள்ளைகளை இறக்கிவிட்டுட்டு ஊருக்குள் போவது என்னமோ சீலை இல்லாமல் போவது போலத்தான்
மயில்வானத்தாருக்கு இருந்தது. கமலா ஒரு படி மேலே போய் அழுதவண்ணமே வீடு நோக்கிப்புறப்பட
ஆயத்தமானாள். தந்தை தாயின் ஏக்கம், ஏமாற்றம்.
வான்
ஹொட்டல் வாசலை தாண்டும்போது எதிரே இரண்டு வெள்ளைக்காரர்கள் ஓட்டோச்சாரதியுடன் தமது
போனை காட்டி காரசாரமா கதைத்துக்கொண்டிருந்தார்கள். டிரைவர் வாகனத்தை மெதுவாக நிறுத்தியவாறு,
என்ன பிரச்சினை அண்ணை? என்றான்.
ஓட்டோவில
வந்தவங்க, இப்ப காசுகேட்டால் நான் கூடுதலாகக் கேட்கின்றேன் என்று சத்தம் போடுறாங்க,
போனில் ரூட் காட்டுறாங்க எனக்கு. தாங்கல இவங்க தொல்லை. விஞ்ஞான வளர்ச்சியாம்.
டிரைவர்
வெள்ளைக்கார தம்பதிகளுடன் கதைத்து ஓட்டோக்காரரின் பணத்தினை பெற்றுக்கொடுத்தான். என்னவாம்
தம்பி? கேட்டார் மயில்வாகனத்தார். தகவல் அறியும் உரிமை, ஆவல்.
லண்டனில்
இருந்து வந்திருக்கிறாங்களாம், ஹொட்டல்கள் செலவு அதிகமாம். ஓட்டோக்காரரும் அதிகமாக
கேட்கிறாங்களாம். தங்களது ஒரு பிள்ளையும் தங்கிறதுக்கு ஏற்றமாதிரி இடம் கிடைக்குமோ
என்று கேட்கிறாங்கள். வெள்ளைக்கரான் சிக்கனம்.
இருக்கு
தம்பி. எங்கடவீடு இருக்கு எங்கட பிள்ளையள் வருகிறார்கள் என்று எல்லா வேலையும் செய்து
வைத்திருக்கிறோம்.அவர்களுக்கு பிரச்சினை இல்லை என்றால் வந்து தங்கச் சொல்லு. காசும்
வேண்டாம் ஒன்றும் வேண்டாம். விரக்தியின் முடிவு.
டிரைவர்
சொல்ல முதலே, மயில்வாகனத்தார் தன் வாய்மொழி, உடல் மொழியென சேர்த்து தனக்கு தெரிந்த
ஆங்கிலத்தில் சொல்லிமுடித்தார். லண்டன் குடும்பம் குதுகலத்துடன் ஏறியது வாகனத்தில்.
தங்குமிடம்
இலவசமாக கிடைக்க, வந்த வாகனத்தையே தாங்கள் பாவிக்க போவதாக கேட்டார்கள். திருகோணமலை
பார்க்கும்போது மோட்டார்ர் சைக்கிள் ஒன்று
வாடைக்கு எடுத்திருந்ததாக சொன்னார்கள்.
மயில்வாகனத்தாரின்
வீடு லண்டன் தம்பதிகளின் பிள்ளையினால் அல்லோகல்லோளப்பட்டது. பல சமான்கள் உடைந்தன. மயில்வாகனத்தாரின்
மனம் என்னவோ பொருட்கள் உடைய உடைய பூரித்தது. பல சமயங்கள் பிள்ளை மயில்வாகனம் தம்பதிகளுடனேயே
தங்க, லண்டன் தம்பதிகள் ஊர்சுற்ற சென்றனர். நம்பிக்கை, உரிமை, மகிழ்ச்சி.
மூன்று
நாட்களின் பின், மகன் வரதன் பெற்றோரைப்பார்க்க வந்தபோது, வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில்
விசாரித்தபோது வெள்ளைக்கார பேரனுக்கு வைத்த நேர்த்தியை முடிக்க பேரனுடன் நயினா தீவுக்கு
சென்றுள்ளதாக சொன்னார்கள். வரதன் ஊர்ப்புழுதி ஒத்துக்கொள்ளததினால் மீண்டும் ஹொட்டலுக்கு
பயனமானான். இனம்புரியாத வெறுமையுடன்.
- மானிப்பாய் சுதன்

No comments:
Post a Comment