Monday, March 25, 2019

குட்டிக் கதைகள் --- (05.2017, 06.2017 ஒளிஅரசி சஞ்சிகைகள் )


1.   மதிய நேர… மருத்துவர்.

அந்த சிறிய வைத்தியசாலையினுள் பகல் பன்னிரண்டுக்கு வருகை தந்த வைத்தியர் அவசர அவசரமாக இருந்த ஓரிரு நோயாளிகளைப் பார்த்தவுடன், தனது தலைமையகத்துக்கு போன் பண்ணினார்.

“என்னுடைய “கிளைம்” போட்டாச்சோ?”.

“ ம்..ம்…ம்… அதற்குரிய ஆள் லஞ்சுக்கு போய்விட்டா…..”

“லஞ்சுக்கு போயிட்டாரோ, பரவாயில்லை, மெடம், நான் இப்பதான் நோயாளிகளை பார்த்து முடிஞ்சு போன் எடுக்கிறேன், சரி  அதை ஒருக்கா பாருங்கோ மெடம்”

“ஓம் நான் பார்க்கிறேன், வேலை… வேலை என்றிராமல், சாப்பாட்டையும் கவனியுங்க டொக்ரர்”

“ஓ… சாப்பிட மறந்து போய்விட்டேன் நன்றி மெடம்” என்றவாறு கையெழுத்திட்டு, வரும்போது பக்கத்து சந்தையில் வேண்டிய மீனுடன் வீட்டுக்கு ஓடினார்.

2.     “சேர்….. மாக்கெற்றிங்”

“சேர், நாங்க பிள்ளைகளின் ஆங்கில அறிவை வளர்க்கிறதுக்காக ஒரு பக்கேஜ்ஜை அறிமுகப்படுத்துகிறோம் சேர், உங்களுக்கு பத்துவயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருந்தால் ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும் சேர்”

“உங்கட பக்கேஜில் என்ன இருக்கு?”

“நிறைய இருக்கு சேர், வொக்காப்புலறிஸ்!, எக்ஸ்ஸசைஸ்! ….நிறைய சேர், நிறைய டொக்ரர்ஸ் இதை யூஸ் பண்றாங்க சேர்! ஒரு பக்கேஜ் ஐம்பதாயிரம் ரூபா. நீங்க இன்ஸ்ரோல்மென்ற்றில கொடுக்கலாம் சேர்”

“ஓ! டொக்ரர்ஸ் கூட பாவிக்கிறாங்களா? அப்ப மாத்திரையாக தருகிறீங்களா?

”“நோ… சேர், அவங்கட பிள்ளைகளுக்கு சேர்..” நீங்க ஒன்றும் செய்யத்தேவையில்லை சேர், ஒரு நாளைக்கு ‘வண்ணவர்’ (1 மணித்தியாலம்) மெனக்கட்டால் போதும் சேர்”.

“நான் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் மெனக்கெட்டால் உங்கட பக்கேஜ் எதுக்கு? நான் மெனக்கெடாதமாதிரி ஒரு பக்கேஜ் கொண்டுவாங்க”

“சேர்????”

3.     மரம் நடுவோம்?

அந்தக் கிராமம் அமைதியானது. அங்கு வாழ்கின்றவர்கள்  மற்றைய இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒருநாள், திடீரென பல வாகனங்கள் வந்துநின்றன. அதிலிருந்து இறங்கியவர்கள் மிகக் கூரான ஆயுதங்களை வைத்திருந்தனர்.

“ஐயோ! இவங்கள் வந்துவிட்டாங்க, எமது கிராமம் அழியப்போகின்றது. வெட்டப்போகின்றார்கள், கொத்தப்போகின்றார்கள்… எல்லோரும் வேறு இடங்களுக்கு ஓடுங்கள்.” ஊர்த்தலைவரிடம் இருந்து கட்டளை பிறந்தது. 

எல்லோரும் செல்லும் வரை தலைவர் ஊரிலேயே இருந்தார். ஊரவர் வரிசையாக இடம்பெயர்ந்தவண்ணம் இருந்தனர்.

வந்த மனிதர்கள், ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். கண்ணைக் குருடாக்கும் அளவு மின்னியன கமராக்கள். கையில் மண்படாமல் மரக்கன்று ஒன்றை நட்டார் மனிதர்களின் தலைவர். போத்தல் தண்ணீரில் கைகளைக் கழுவியவர் வாகனத்தில் புறப்பட, அனைவரும் புறப்பட்டனர் அவர் பின்னால்.

அமைதியானது கிராமம். ஆனால், ஊரவரை திரும்பும் படி கட்டளையிட, எறும்புகளின் தலைவர் உயிருடன் இல்லை, மரம் நட்ட இடத்தில் அவர் உடல், தலைவேறு உடல்வேறாகக் கிடந்தது. சில நாட்களில் மரக்கன்றும் பட்டுப்போனது.

4.   பாசக்கார….. மனைவி.

பின்னேரம் அலுவலகத்தில் இருந்து நேராக வயலைப் பார்க்க போயிட்டுவாறன். சொல்லியபடி வேலைக்கு கிளம்பிய கணவனை, “வந்து தேத்தண்ணியை குடிச்சிட்டு போங்கோ” என்ற மனைவியின் பாசத்தில் உருகி “ம்” என்றவாறு கிளம்பினான்.

மாலை அலுவலகத்தில் இருந்து வீடு வரும்போது கேற்றடியில் பார்சலுடன் நின்றிருந்தாள் மனைவி. சூடாறமுதல் வழியில் அம்மாவீட்டில் கொடுத்துவிடுங்கோ என்று பார்சலைக் கொடுத்தாள்.

“தேத்தண்ணி”

போட்டுவந்து ஓரேயடியாக குடியுங்கோ. நீங்கள் தேத்தண்ணி குடித்துக்கொண்டிருக்க அப்பம் சூடாறிவிடும். என்றாள் பாசத்துடன்….

5.   நல்ல விலைபோகுது?

பால் கலனுடன் பாற்சபையில் பால் விற்பதற்கு நின்ற நாதனிடம்,

“அண்ணை, இந்த வயசிலயும் குளிருக்குள் நடுங்கிக்கொண்டு, கையில வெண்ணெய்யை வைச்சுக்கொண்டு, ஏன் அண்ணை இப்படி,  நெடுக உங்களால மாடுகளைக் கட்டி அவிழ்க்க முடியுமே? பருவத்தில விற்றுவிட்டால், காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு இருக்கலாம்” என்றார் சுந்தரத்தார்.

“உந்த விசயம் என்ர கையில மட்டும் இல்லையடா, பெடியன், தாய்க்காரி ஓமென்றவேணும்… நானும் யோசிச்சனான்தான், வீட்டில கதைச்சுப்போட்டு  சொல்றன், நீதான் முடிச்சுக்கொடுக்கவேணும்…” சொல்லியபடி சைக்கிளை மிதித்தார் நாதன்.

அடுத்தநாள் காலை நாதனின் கண்கள் புறோக்கர் சுந்தரத்தைத் தேடிப்படித்தது.

“தம்பி வீட்டிலயும் ஓமென்று சொன்னவை, “தம்பி, கஸ்டப்பட்டு படிப்பிச்சனாங்கள், அதனால வீடும், எங்கடபேரில ஒரு ஐம்பது லட்சம் காசும் போதும், நகை வேணுமென்றால் அவை விருப்பப்படி போடட்டும். பெடியனுக்கு மனிசியும் வேலை செய்யவேணுமாம், பார்த்து முடிச்சுக்கொடு” என்று சொல்லியபடி,

மகனின் சாதகத்தை கலியாணப் புறோக்கர் சுந்தரத்திடம் கொடுத்தார்.

6.   பள்ளிக்கூடம் போகவேணும்….

காலைநேர வீதி, வாகனங்களால் அல்லோகல்லோளப்பட்டுக் கொண்டிருந்தது. ராகவன் மோட்டார் சைக்கிளில் அவசரமாக சென்றுகொண்டிருந்தான்.

வீதியில் இருநூறு மீற்றருக்கு முன்னால் சிறு சனக்கூட்டம் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. பல ஸ்மார்ட் போன்கள் படமெடுத்துக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

ராகவனை, வீதியில் கைகளை ஆட்டி மறித்தான் பள்ளிக்கூடச் சிறுவனொருவன். “அண்ணா பள்ளிக்கூடம் போகவேணும் வரட்டா?”, நன்றாக சீவப்பட்ட அடர்த்தியான தலைமயிர், நெற்றியில் சந்தனப்பொட்டு, சிவப்புநிற புத்தகப்பை, சிவப்புநிற “ரை”, கோரிக்கையை தட்டமுடியாமல் மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டான்.

சனக்கூட்டத்தை அண்மித்தபோது விளங்கியது விபத்தொன்று நடந்து; சிறுவனொருவனின் உடல் பாதையோரம் கிடத்தப்பட்டிருந்தது.

“தம்பி அந்தப்பக்கம் பார்க்காமல் இரு” என்றவாறு திரும்பியவன் அதிர்ந்தான். பையனைக் காணவில்லை. கிடத்தப்பட்டிருந்த சடலத்தைப்பார்த்தான், அதே தலைஇழுப்பு ஆனால் குருதி ஒழுக, சந்தனப்பொட்டு, சிவப்பு புத்தகப்பை, ரை…… உறைந்துநின்ற ராகவனை சுற்றி நின்றவர்களின் பேச்சு மேலும் உறையவைத்தது.

“ ஒரு நூறு… நூற்றம்பது மீற்றர் தூரம், ஆட்டோ பஸ்ஸோட இழுபட்டுக்கொண்டு வந்தது………”
-   
மானிப்பாய் சுதன்.

No comments:

Post a Comment

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...