டேய்
பூந்திலட்டு வரவேண்டுமென்றால் மாப்பிள்ளை தாலி கட்டவேணுமடா….. ஆனால் மாப்பிள்ளை தாலிகட்ட
நேரமிருக்கு, மேக்கப்காரியும் நேரத்துக்கு விடமாட்டா.
பூந்தி
லட்டு என்னடா? பூந்தி லட்டு, பின்னேரம் பார் ரெஜிஸ்ரேசன் கேக் வரும். அது இன்னும் சூப்பரா
இருக்குமடா; என்ற நிதிஸை வாயைப்பிளந்துகொண்டு
கேட்டான் மிதுன், “ உனக்கெப்படி அது சூப்பராக இருக்குமென்று தெரியும்?
அதுவா,
கலியாணப்பொம்பிளை அதுதான்ரா உங்கட சித்தி, கொழும்பில இருந்து இன்ரநெற்றில தேடிப்பார்த்து
எடுத்த டிசைனை, போனில கேக் செய்கிறவையளுக்கு சொன்னவாவாம். கேக் செய்கிறவை சொன்னவையாம்
நல்ல டிசைன் என்று, சித்தி கேக்குக்கு மேல போடுகின்ற கலர் சொல்ல அவை அப்படி ஒரு பிங்
கலர் எடுக்கிறது கஸ்டம், நாங்கள் முயற்சி செய்கிறம் என்று சொன்னவையாம்.
ஏன்டா
கேக்குக்குமேல கலர் அடிக்கிறாங்கள் என்று அப்பாவித்தனமாக மிதுன் கேட்டான்?
டேய்
அது கேக்குக்கு மேல கலர் அடிக்கிறது இல்லைடா. கேக்குக்கு மேல போடுகின்ற ஐசிங்கின் கலரடா.
ஐசிங்கோட கேக் சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா?
நிதிஸ்
ஐசிங்கைப்பற்றி சொன்னவிதமும் வாயை அசைத்தவிதமும் மிதுனுக்கு இன்று ஐசிங்கை எப்படியும்
ஒருகை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்து கொண்டது. ஆசை கண்களில் மின்ன, பெரிய கேக்காடா?
எல்லோருக்கும் காணுமா நிறையப்பேர் இருக்கிறாங்க? எங்களுக்கு கிடைக்குமாடா? என்று சந்தேகத்துடன்
மண்டபத்தை சுற்றி ஒருபார்வை விட்டான் மிதுன்.
பயப்படாதேடா….
சித்தி சொன்னவா பதினெட்டாயிரம் ரூபா என்று, அதோட அப்பாவிடம் சொன்னவா வானில போய் எடுத்துக்கொண்டு
வரச்சொல்லி. அதுவும் இரண்டு பேராகப் போய் எடுத்துக் கொண்டுவரச் சொன்னவா. அப்படியென்றால்
எவ்வளவு பெரியதாக இருக்கும்? என்று விழிபிதுக்கினான் நிதிஸ்.
டேய்
சத்தம் போடமா ஒழுங்கா இருங்கோடா பூந்திலட்டு வருது. என்றான் இன்னொருவன். பூந்திலட்டு
வருகிறாதா? அப்ப தாலி கட்டிட்டாங்களாடா? என்றவாறு தலையில் கைவைத்தபடி மணமேடையைப் பார்த்தான்
மிது.
நீ
ஏன்ரா தலையில் கைவைக்கின்றாய்? மாப்பிள்ளைதான் இனி தலையில துண்டையோ கையையோ வைக்கவேணும்
என்று பக்கத்தில் இருந்து சிரித்த இளைஞனின் பகிடி விளங்காமல் மிதுன் முழிக்க, ஏன்டா
முழிக்கிறாய் என்று நிதிஸ் கேட்டான்.
இல்லையடா
தாலி கட்டினா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகவேண்டும் என்று அம்மா சொன்னவா, கேக்
பார்க்க, சாப்பிட நிற்கேலாதே என்றான் பரிதாபகரமாக.
நீ
பயப்படாதே. அம்மா முதலில் வீட்டுக்குப் போகட்டும். நீ எங்களுடன் வா என்றான் நிதிஸ்.
மிதுனினதும் நிதிசினதும் கெஞ்சலில் மிதுவின் அம்மாவும் ரெஜிஸ்ரேசனுக்கும் நிற்க சம்மதிக்க
இருவரும் பிங்கலர் கேக்கின் கற்பனையில் மிதக்கக்தொடங்கினர்.
மண்டபக்
காப்பாளருக்குத் தெரியாமல் லிப்ற்றில் மேலும் கீழும் ஏறிஇறங்கி விளையாடிக் கொண்டிருந்தவர்களை,
டேய் வெளில வாங்கடா கேக் கொண்டாராங்கள் என்று ஒருவர் கூற கண்கள் மின்னிட வாய்பிளந்திட
வழிவிட்டு கேக்கை பார்ப்பதற்கு ஆவலுடன் நின்றுகொண்டனர்.
இரண்டுபேர்
மிகப்பக்குவமாக அலுங்காமல் குலுங்காமல் கேக்கை தூக்கிவந்துகொண்டிருந்தனர். டேய் இவ்வளவு
பாரமாட? எனக்கேட்டான் மிதுன்.
பதினெட்டாயிரம்
ரூபா கேக்கெல்லோ என்றான் நிதிஸ். அது சரிடா நீ பிங் கலர் என்றாய் ஆனால் கேக் சிவப்புமாதிரி
தெரியுது என்ற மிதுனுக்கு கேக்கைத் தூக்கிவந்தவர் எரிச்சலுடன் சொன்னார், அவர்களுக்கு
தெரிந்த பிங் நிறம் இதுதானாம். கேக்கைத் தூக்கிவந்தவர்கள் மணமக்களுக்கு முன்னால் உள்ள
மேசையில் கேக் வைக்கும்போது மணமகளின் முகம் சுருங்கிவிட்டது. காரணம் மணமகளின் சாறியைவிட
நல்ல சிவப்பாக கண்ணைப்பறித்துக் கொண்டிருந்ததை விட மணமகளை மறைத்துக் கொண்டும் இருந்தது.
மணமகளின்
முகம் கேக்கைப்பார்த்ததும் சுருங்கிக்கொள்ள அதைக் ஓரக்கண்ணால் அவதானித்த மணமகனின் முகம்
மலர்ந்தது. மனதுக்குள் முனகிக்கொண்டான், அடி பாதகி உந்தக் கேக்கிற்குதான் எவ்வளவு அடம்,
சண்டை, இப்ப தெரிகிறதா நம்மவர்களின் ரசனையும்
சுத்துமாத்தும், இனி உன்வாழ்வில் பிங் கலர் கேட்பியா? கேட்பியா?.
இரண்டு
மூன்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்த நிலையில் மணமகள் ஏதோ நினைத்தவராக, படம் எடுத்தவரை
அழைத்து எடுத்த படங்களை கமராவில் பார்த்தவரின் முகம் மேலும் சுருங்கியது. போட்டோவில்
கேக்பெரிதாக தெரிய பின்னுக்கு நின்ற தங்களின் தலை மட்டும் தெரிந்தது. பார்ப்பதற்கு
ஏதோ கண்காட்சியில் பொருட்களை எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.
அருகில்
இருந்தவர்களிடம் கேக்கின் உயரத்தை குறைக்க கேக்கின் கீழ் உள்ள தட்டினை எடுத்துவிடச்
சொல்ல, அவர்கள் அதை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பொறுமையிழந்த மணப்பெண்
அவர்களை பேசி கேக்கை அதன் அடுக்கிலுள்ள துண்டங்களை எடுத்தபின் தட்டை எடுக்கச் சொன்னாள்.
அருகில்
இருந்தவர் கேக்கில் இருந்த பூக்களையும், கேக்கில் உள்ள ஒவ்வொரு கேக் தட்டுகளையும் அனாயசமாக
ஒரு கையால் தூக்கி பக்கத்து மேசையில் வைக்க மிதுனுக்கும் நிதிசுக்கும் தூக்கிவாரிப்போட்டது.
என்னடா இது? ரெஜிபோமை தூக்கி வைக்கிறமாதிரி தூக்கி வைக்கிறாங்க?
மிதுனின்
கேள்விக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் சிரித்துக்கொண்டே சொன்னார் அது ரெஜிபோம்தான்
தம்பி.
அப்படியென்றால்
மேலே பூசியிருக்கிற சிவப்பு?
அதுவா
அது கலரிங்கும் ரிபனும் தம்பி.
உந்த
ரெஜிபோமுக்கா பதினெட்டாயிரம்? என்று மிதுன் வாயைப்பிளக்க, என்னது பதினெட்டாயிரமோ? என
பதிலுக்கு பெரியவர் வாயைப்பிளந்தார்.
ஆமா
இதுக்கு வான் வேற…..அதை விட பொம்பிளையின் அலைப்பறை வேற, யப்பா போதுமடா?
திருமணமேடையில்
கடைசியாக மணமகளின் வேண்டுகோளுக்கு அமைய பதினெட்டாயிரம் ரூபா கேக் ஒரு ஓரமாக பல துண்டுகளாக
வைக்கப்பட்டது.
டேய்!
என்னடா மேசையில் ஒரு சின்ன துண்டு கேக் கிடக்கு?
அதைத்தாண்டா
கொஞ்ச நேரத்துக்குமுன் மாப்பிள்ளையும் பொம்பிள்ளையும் உந்த ரெஜிபோமுக்குப்பின்னால்
வைத்து வெட்டி ஒருத்தருக்கொருத்தர் தீத்தினவை என்ற நிதிஸ் வடிவேலு பாணியில், என்ன ஒரு
மொள்ளமாரித்தனம் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே?
ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக்கட்டுதே என்றான்.
இருவரும்
மேடையின் அருகால் மேலேறி ரெஜிபோமை விளையாடுவதற்காக எடுக்கப்போக, டேய் அதைத் தொடாதையுங்கோடா
அதை கவனமாக திருப்பிக் கொடுக்கவேணும்.என்றார் மணப்பெண்.
என்ன?
இதை திருப்பிவேற வேற கொடுக்கணுமா? அப்ப வாடகைதான் பதினெட்டாயிரமா? என்ன கொடுமைடா? நம்ம
பெரியவங்க, எங்களை எங்கே கொண்டுபோய் விடப்போகிறாங்களோ
தெரியலடா? நாமதான் கொஞ்சம் கவனமாக இருந்துக்கனும். அல்லது உந்த கேக் வியாபாரத்தை நாம
தொடங்கனும்.
- மானிப்பாய்
சுதன்.

No comments:
Post a Comment