Monday, March 25, 2019

பிரமிட் பாலா. --- (09.12.2018, சூரியகாந்தி - உதயன் நாளிதழில் வெளியானது.)

அந்த திருமண மண்டபம் களைகட்டியிருந்தது. ஆனால் திருமணத்துக்கு அல்ல. காரணம், பூமி நிறுவனத்தின் கூட்டத்துக்காக. சந்தைப்படுத்தலின் மகிமையை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் மக்களை கார், பெரிய வீடு, வெளிநாடுகளுக்கான சுற்றுலாப் பயனம் என சிலரை வசதியாக வாழ வைத்துக்கொண்டிருந்தது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின்  பிரதான சந்தைப்படுத்தல் முகவராக இருந்து, பலரை தனது சந்தைப்படுத்தல் உத்தியினால் மடக்கி பெரும்புள்ளியானவன் பாலா. 

பாலா என்றால் பலருக்கு தெரியாது “பிரமிட் பாலா” என்றால் அனைவருக்கும் தெரியும் அந்தளவுக்கு அந்த நிறுவனத்தின் மூலம் பலரை ஏமாற்றி மிதித்து முன்னேறியவன்தான் இந்த பாலா.

அவன் ஏமாற்றித்தான் வாழ்கின்றான் என்பது பலருக்குத் தெரியும் இருந்தும் ஆசை யாரை விட்டது? ஈசல்களாய் பாலாவிடம் மாட்டத்தான் செய்கின்றார்கள்.  இன்றும் புதிதாக சிலரை சேர்ப்பதற்காக அந்த வியாபார நிறுவனம் பேராசை பிடித்தவர்களுக்கு ஆசைகளைத் தூண்டும் கூட்டம் ஒன்றை கூட்டியிருந்தார்கள்.  அனைவரினது கவனமும் பாலாவின் வருகையை நோக்கியிருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கரனும் சிவாவும் கூட வந்திருந்தார்கள். இருவரும் மாணவர்கள், தமது குடும்பத்தின் வறுமையை போக்க சிறுசிறு வேலைகளைச் செய்து குடும்பத்துக்கு உதவிவருபவர்கள். உழைக்காமல் நோகாமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை இவர்களையும் பற்றிக்கொண்டது. இல்லை பற்ற வைத்திருந்தார் பாலா. ஏற்கனவே ஆசையை ஊட்டி கூட்டத்துக்கு வருகைதரவைத்து பலருக்கு முன்னால் அவர்களை சேர்த்தால் அவர்களுக்குப் பின்னால் பலர் தம்முடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற யோசனையுடன் பாலா திட்டமிட்டிருந்தார். ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான 1500 ரூபாவினைக்கூட தங்கள் பணத்தில் இருந்து கட்டியிருந்தார்கள் சிவாவும் கரனும்.

திருமண மண்டபத்துள் வெள்ளைநிற சொகுசு கார் நுழைந்தவுடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படத்தொடங்கியது. பாலா தம்பிடித்து ஒரு கெத்தாக இறங்கி நடந்து வருவதைப்பார்க்க ஒரு குட்டியானை அசைந்து அசைந்து வருவதைப்போன்றிருந்தது. பிரமிட் நிறுவன முகாமையாளர் மிகுந்த மரியாதையடன் வரவேற்று பாலாவை அறிமுகப்படுத்தி வைத்து பாலாவை பேசுவதற்காக அழைத்துக்கொண்டார்.

பாலா தனது பழைய வாழ்க்கையில் துன்பப்பட்டதையும் தற்பொழுது எப்படி வசதியாக வாழ்கிறார் என்பது பற்றியும் மிகவும் உருக்கமாக உரையாற்றிக்கொண்டிருந்தார். முன் இருந்தவர்களுக்கு தங்களை இரட்சிக்க வந்த தேவதூதனைப் போன்று நெற்றியில் வீபூதிக்குறியுடன் காட்சி தந்தார். தமது நிறுவனம் சந்தைப்படுத்தலை மத்திய தர வர்க்கத்தினரை இலகுவாக மேற்தட்டு பணக்காரராக மாற்றும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்றார்.

உரையாற்றியவரை இடை நிறுத்திய கரன் இதனால் உங்களுக்கென்ன இலாபம்? என்று நேற்று பாலா சொல்லித்தந்தது போல் கேள்வி கேட்டான். இவ்வளவு நேரமும் மந்திரித்து விட்டவர்களைப்போல் இருந்தவர்கள் அதுதானே இதில் அவர்களுக்கு என்ன இலாபம்? என்பதைப்போன்ற பார்வையை வீச. பாலா ஒரு வசீகரச் சிரிப்புடன் “இங்கேதான் எங்களது வியாபார தந்திரமும் மனித நேயமும் இணைந்திருக்கின்றது. என்றவாறு அவர்களைப் பார்த்தார். எல்லோரும் ஆர்வமாக தன் கதையை கேட்பதற்கு இருப்பதையும,; ஆசையுடன் கண்கள் மின்னுவதையும் அவதானித்துக் கொண்டார்.

எங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக விளம்பரம் செய்வதற்கு, எமது நிறுவனம் யோசித்தபோது விளம்பரத்துக்காக ஒரு கிரிக்கெட் வீரருக்கோ அல்லது ஒரு நடிகை நடிகருக்கோ வழங்கும் பணம் மிகப் பெருந்தொகையாக இருந்தது. அந்தப் பணத்தை ஏன் சாதாரண மக்களைப் போகச்செய்யமுடியாது என யோசித்தபோதுதான்!... இந்த திட்டம், பல பொருளாதார வல்லுனர்களால் எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எங்களுக்கு வியாபாரமும் ஆச்சு உங்களுக்கு பணமும் ஆச்சு. இந்த திட்டத்தில் இணைந்து கொண்டால் அதன் பின் நீங்களும் ஒரு முதலாளிதான். கீழே இருப்பவர்கள் தொழிற்பட தொழிற்பட உங்களுக்கு கொமிசன் வந்துகொண்டே இருக்கும்.

என்னைப்பாருங்கள் ஒருவருடத்துக்குள் வசதியான வீடு, கார், வெளிநாட்டுப்பயனங்கள் என வாழ்க்கை உயர்ந்துள்ளது. பாலாவின் பேச்சு எல்லோரையும் வேறு திசையில் சிந்திக்கவிடாது பாலா சொல்வதுதான் சரியென ஏற்றுக்கொள்ளவைத்தது. என்னை இந்த அருமையான திட்டத்துள் அறிமுகப்படுத்தி வைத்தவர் ரமணியம்மா. எல்லோரும் சொல்கிறார்கள் இது சட்டரீதியற்றது என்று ஆனால் ரமணியம்மா அரசாங்கத்தில் உயர்பதவில் இருப்பவர். சட்டரீதியற்றது எனின் அவர் இதில் இருப்பாரா?

என் மூலமாக இதில் சேர விருப்பமில்லாதவர்கள், பயப்படுபவர்கள் ரமணியம்மாவினூடு சேருங்கள் வளம்பெறுங்கள். ரமணியம்மாவிடம்  நீங்கள் சேர்ந்தாலும் ஊரவன் என்ற வகையில் நான் பொறுப்பு. ஏதேனும் பிரச்சினை என்றால் நான் தருவேன் உங்கள் பணத்தை. பணம் இல்லாதவர்கள் உங்கள் பொருட்களை அடகு வைத்து நம்பிச்சேருங்கள். மோட்டார் சைக்கிளை அடகு வைத்தால் நீங்கள் ஒருபோதும் அந்த மோட்டார் சைக்கிளை திருப்பி எடுக்கமாட்டீர்கள்!…. கார்தான் புதிதாக எடுப்பீர்கள்.

பாலாவின் இந்தப் பேச்சினூடே கூட்டத்தில் இருந்த கம்பஸ் பெடியன் ஒருத்தன் தனது ஸ்மாட் போனில் ஏதோ டி.எம்.ரி என்ற அப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி பாலாவின் சொகுசு கார் பாலாவுக்கு சொந்தமானதல்ல அது வேறு ஒருவருடைய பெயரில் லீசிங்கில் நிற்பதாக கூற கூட்டத்தில் இருந்த ஏனையவர்கள் அந்த பெடியனை ஒருமாதிரிப் பார்த்தார்கள். எங்களுக்கு நம்பிக்கையும் தெளிவும் இருக்கு நீ உன் வேலையைப் பார் என்றார்கள்… இதனை அவதானித்த பாலாவும் சிரித்தபடி படித்துமுடித்தபின் வேலைக்காக கச்சேரியின் முன்னால்  இருக்கும்போதுதான் தம்பிக்கு விளங்கும் என்று சொல்ல எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

கரன் தன்மோட்டார் சைக்கிளை அடகு வைத்து பணத்தைக்கொடுக்க, சிவா கூலி வேலை செய்து குருவி சேர்த்தமாதிரி வைத்திருந்த பணத்தை கொடுக்க இருவருக்கும் சனி மாற்றம் தொடங்கியது தெரியாமல், ஊரெல்லாம் நடக்கும் கூட்டங்களில் பங்கு கொண்டு  புளகாங்கிதம் அடைந்தார்களே ஒழிய உழைத்துச் சாப்பிட்ட அவர்களால் மற்றவர்களை வார்த்தைகளால் ஏமாற்றி இத்திட்டத்துள் சேர்க்கமுடியவில்லை.

இப்படி பல மாதங்கள் சென்ற நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணரத்தொடங்கினர். பாலாவிடம் இருந்த சொகுசு காரும் காணாது போயிருந்தது. ஒரு நாள் பாலாவிடம் போய் தங்களது காசைத்திருப்பி தரச்சொல்லிக் கேட்டனர்.

டேய் நீங்க என்ன லூசுகளா? நீங்க தந்த பணத்துக்குத்தான் அரிக்கன் லாம்பு ஒன்று பற்றுச்சீட்டுடன் நிறுவனம் தந்துவிட்டார்களே. புpறகெப்படி பணத்தினை திருப்பிக் கேட்பீர்கள்?

என்ன அண்ணை நாங்க கொடுத்தது 63333.00 ரூபா. அரிக்கன் லாம்பு நூற்றைம்பதோ இருநூறோ?

அதுதாண்ட வியாபாரம்! நீங்க சும்மாயிருந்து பணக்காரன் ஆகலாமென்று யோசிச்சா?
அப்ப எங்கட காசுக்கு நீங்க பொறுப்பு என்று சொன்னீங்கள்?

அது அன்றைக்கு முதல்நாள் இரவு அவங்க தந்த சாராயம் பேசினது…. நீங்க என்னடா முட்டாள் பசங்களா இருக்கிறீர்கள்? வெறியில பேசுறதுக்கும் சும்மா பேசுறத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்?  பேப்பர் படிக்கிறதில்லையே உந்த வியாபாரம் எல்லாம் சட்டரீதியற்றது என்றும் சட்டரீதியாக உங்கள மாதிர நடுத்தர வர்க்கத்தினால் போராட முடியாதென்றும் போட்டிருக்கிறாங்கள். மத்திய வங்கியானாலும் அங்கீகரிக்கப்படாததாம். நல்ல காலம் நான் கொஞ்ச காசு பார்த்திட்டன்… உங்க கனபேர் அரிக்கன் லாம்போட செம்பு விழுங்கினவை மாதிரித் திரியினம்.. என்ன ஒருக்கா சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டு போனவங்கள் அதில கொஞ்ச காசு செலவழிஞ்சு போய்விட்டது. அது பரவாயில்லை அதுக்குப்பிறகு சலவாசல்ல ஒரு அரிப்பு வந்தது அதுதான் நாலுமாசமா அப்படியே அரிச்சுக்கொண்டிருக்கு…அதுக்குள் நீங்கவந்து.. போங்கடா உதுகள வெளியில சொன்னா உங்களுக்குத்தான் வெட்கம்.

கரனுக்கும் சிவாவுக்கும் பாலாவின் கதையைக் கேட்க தலைசுற்றியது. இதுதான்ட அன்றைக்கே சொன்னவங்க அடைவு வைக்கிற மொட்டார் சைக்கிளை திருப்பி எடுக்க மாட்டீங்க என்று கரன் அழத்தொடங்கி விட்டான்.

டேய் இதுகளைப்பற்றி என்னைப்பற்றி வெளியில யாரோடையும் கதைத்தால் உங்களை பொலீசில மாட்டி விட்டிடுவன் பேசாம போங்கோ... பால்ச்சங்க தலைவரிட்டையும் உங்களைப்பற்றி சொல்லி உங்கட மாட்டுப்பாலை எடுக்கவிடாம பண்ணிவிடுவன் என்றவாறு லீசிங்கில் எடுத்த சுசுக்கி மாதிரி காரில் பறந்துவிட்டார்.

கரனும் சிவாவும் தங்களுடன் இத்திட்டத்தில் சேர்ந்தவர்களை சென்று அவர்களை விசாரிக்க….

நான் கடைசியில் உதில சேரவில்லைத் தம்பி. என்று பொய் சொன்னவரும்…
ஓம் தம்பி என்ன செய்ய ஏமாற்றிப் போட்டாங்கள்… போனது போகட்டும் பேசமா விடுங்கோ என்னறவரும்…

உதை வெளியில் சொன்னால் எங்களுக்கு அவமானந்தான் மிஞ்சும் என்றவரும்…
என்ன செய்ய வெட்கங்கெட்ட வேலை…. கிரகநிலை சரியில்லாமப் போச்சுது என்றவரும்….

ஊர் கெட்டுக்கிடக்கு உவங்கள் தரவழியோட பகைச்சுக் கொண்டு, ஏன் வீண்சோழி… என்றவரும்....

இன்னொருவர் ஒருபடி மேலே போய், அவங்களுக்கு கெட்டித்தனம் இருக்கு எங்களுக்கு அந்த வாய் வல்லமை இல்லை என்று ஏங்கியவரும்…

இதையும் விட இன்னொருவர் மேலே போய் அவர்கள் உங்களுக்கு வயதுக்கு மூத்தவர்கள் அவர்களைப்பற்றி பிழையாக கதைக்கக்கூடாது, அது சபை நாகரீகம் இல்லை என்றவரும்…

இறுதியில்…. கரனும் சிவாவும் பொடிநடையாக கூலி வேலைக்குச் செல்ல விடயமறிந்த ஊரார் வாய் மெல்லத்தொடங்கினர்.

மானிப்பாய் சுதன்.

No comments:

Post a Comment

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...