அடைமழையிலும்
புறோக்கர் சண்முகம் கடமையே கண்ணாக ஒரு கட்டு சாதகங்களுடன் சாரதாவின் வீட்டுவாசலில்
நின்று அவலக்குரல் எழுப்பினார். மழை இரைச்சலில் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு சண்முகத்தாரின்
அவலக்குரல் கேட்காதுபோகவே, கதவைத்திதறந்து கொண்டு வந்தவரைக் கண்ட நாய் மழையில் நனையாமல்
வீட்டு தாழ்வாரத்தின் ஓரமாக நின்று குரைத்தது. நாயின் சத்தத்தை கேட்ட நம்ம கதையின்
நாயாகி அகிலா; தலையை மட்டும் சற்று வெளியில் நீட்டி கேற்றடியை ஆராய்ந்தவளின் முகம்
பிரகாசமாகி மழையிருட்டையும் விரட்டியடிக்குமளவுக்கு ஒளிர்ந்தது.
“அம்மா,
சண்முகம் அங்கிள் வந்திருக்கிறார்” என்றாள் சந்தோசமாக. வெளிவிறாந்தைக்கு வந்த அகிலாவின்
அம்மா சாரதா, சண்முகத்தாரை வரவேற்றபடியே பிளாஸ்ரிக் கதிரையை கதைப்பதற்கு இலகுவாக போட்டபடி, “பிள்ளை, மனிசன்
மழையில் நனைந்து வருகுது…. ‘ரீ’ யைப்போட்டுக்கொண்டு வா” என்றாள்.
“என்ன
மழை! சனியன் பிடித்தது விட்டுத்தொலையிதில்லை” என்று புறுபுறுத்தவாறே குடையை சுருக்கி
ஓரமாக வைத்தார் சண்முகத்தார். “என்ன அண்ணை போனமுறை வரும்பொழுது, சனியன் பிடித்த மழை
ஒருக்கா பெய்யிதில்லை, என்று சொன்ன நீங்கள் இப்ப இப்படிக்கதைக்கிறீங்கள்” என்றாள் சாரதா.
“எடி
பிள்ளை தேர்தல் வரும்பொழுது வீட்டுக்காரர் எங்கட தலைவர் என்று சொல்ல, நல்லது என்று
வோட்டு போட்டுவிட்டு, பிறகு எங்கட கூட்டமைப்புக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நான் அறிய
ஒரு தொடர்புமில்லை என்று சொல்லும்போது, ஏன்டா போட்டுத்தொலைச்சம் என்று அலுத்துக்கொள்ளுகிறதும்,
திரும்ப தேர்தல் வரும்பொழுது; இவற்றையெல்லாம் மறந்து, அவர்கள் வாயில் புலிகளின் தலைவர்
எங்கட தலைவர் ஆகிறதும், அவர்வழியில் செல்கின்றோம் என்று சொல்ல, திரும்ப அவங்களுக்கே
வோட்டுப்போடுறதும்……
தான்
என்ன சொல்ல இந்த மனுசன் என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமல் சாரதா பேந்த பேந்த முழிப்பதைப்பார்த்த
சண்முகத்தார், “பயப்படாத உன்னை ஒன்றும் தனியாக சனியன் பிடிக்காது, ஏனென்றால் ஒட்டுமொத்த
தமிழ்ச் சனத்தையும் வீட்டின் பெயரில் சனியன் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறான், நான்
வந்த விசயத்துக்கு வாறன்” என்று தனது தொழிலை ஆரம்பித்தார்.
சண்முகத்தார்
காட்டிய சாதகங்கள் ஒன்றும் சாரதாவுக்கு திருப்பதியைத் தரவில்லை. எப்படித் திருப்தியைத்தரும்?
தன்னுடன் படித்தவளெல்லாம் மகள்மாரின் பிள்ளைப்பெத்து பார்க்க, பிள்ளைப்பெத்து பார்க்க
என்று லண்டன் பிரான்சு என்றெல்லாம் போய்ட்டுவர, தான் மட்டும் உள்ளூர் மாப்பிள்ளைக்கு
கட்டிக்கொடுத்துவிட்டு வெறும் ஆயாவேலை பார்த்துக்கொண்டிருக்க முடியுமே? என்று சிந்திக்கும்
சாரதாவுக்கு சண்முகத்தார் காட்டிய உள்ளளூர் மாப்பிள்ளைமாரின் சாதகங்களைப்பார்த்தால்
எப்படித்திருப்தி வரும். ஏதோ கடவுள் புண்ணியத்தில் பெட்டையும் படிப்பை குழப்பியதால்
இருபத்தியிரண்டு வயதிலேயே கலியாணத்தை பேச முடிந்தது. இல்லாவிடில் படித்துமுடிய பேசுவதென்றால்
வெளிநாட்டுமாப்பிள்ளைகளுக்கு பேசமுடியுமோ? இருந்தும் என்ன பயன் அவங்கள் முருக்கங்காய்மாதிரி
மெல்லிய பொம்பிளையெல்லோ கேட்கிறாங்கள்.
இந்த
ஒருவிசயத்தில்தான் சாரதா கொஞ்சம் பிழைவிட்டுட்டா, மகள் வீட்டில் இருந்து சாப்பிட்டு
சாப்பிட்டு மாரித்தவக்களை மாதிரி கொஞ்சமா உப்பித்தான் போனாள். பிறகு ‘அங்கமாறி இங்கமாறி’
ஒருமாதிரி முருக்கங்காய் மாதிரி இல்லாவிட்டாலும் புடலங்காய் அளவுக்குவருவதற்கு இடையில்
வயது இருபத்தெட்டயாயிடுத்து.
மகளும்
தாயும் எப்பாடுபட்டாவது வெளிநாட்டுமாப்பிள்ளைதான்; என்பதில் குறியாக இருந்தார்கள்.
நல்லூர் திருவிழாக்காலங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களைப்பார்த்து
கற்பனையில் மிதப்பாள் சாரதா, அகிலாவோ அதைவிட கொஞ்சம் உயரமாகக் கற்பனையில் பறப்பாள்.
புறோக்கர்
சண்முகத்துக்கோ அலுத்துப்போய்விட்டது. இருந்தாலும் தனது தொழிலுக்கே சவாலாக எடுத்துக்கொண்டு
அவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக பலவருடங்களாக அலைந்து கொண்டிருக்கின்றார். அடுத்த
தீபாவளிக்கிடையில்! வருசப்பிறப்புக்கு முதலில்!, தீர்வு வரும் என்று அரசியல்வாதிகள்போல்
அறிக்கையும் விட்டுக்கொள்வார். இருந்தும் சாதகங்கள் வரும் ஆனால் சரிவராது. இடையிடையில்
எத்தனையோ உள்ளூர் மாப்பிள்ளைகள், அரசாங்க உத்தியோகங்கள் வந்தும் சாராதாவோ அகிலாவோ மசியவில்லை.
குடும்பத்தில
ஆம்பிளைப்பிள்ளை வெளிநாட்டுக்கு போகிறதைவிட பெண்போனால்தான் குடும்பம் தழைக்கும் என்று,
யாழ்ப்பாணத்தில் ஒரு ஐதீகம். இதில் ஐதீகம் என்றால்? இருபது இருபத்தைந்து வருட தமிழரின்
பாரம்பரிய சிந்தனை. அப்ப ஐதீகம்தான் என்று சொல்கிறதுதானே சரி. இருநூறு முன்னூறு வருடமாக
கோயிலில் கிடாய் வெட்டுகிறதுபொல.
தேநீர்
ஊற்றிக்கொண்டிருந்த அகிலாவுக்கு இம்முறையும் வெளிநாட்டு சாதகம் வரவில்லை என்பது, அம்மாவினதும்
சண்முகத்தாரினதும் கதைகளிருந்து விளங்கிக்கொள்ள, தேநீருக்கு போட எடுத்த அங்கர் மாவை
வைத்துவிட்டு வெறும் தேநீரே போட்டுக்கொண்டாள். சண்முகத்தாருக்கு கறுப்பு தேநீரைக்கண்டதுமே,
தானும் சாரதாவும் கதைத்துக்கொண்டவை அகிலாவுக்கும் கேட்டுவிட்டது புரிந்தது. அவர் இப்படி
எத்தனை கறுப்பு, வெள்ளைத் தேநீரைக் கண்டுவிட்டார். தான் வரும்போது அங்கிளாக வந்ததும்
இனி போகும்போது செவிட்டுப்புறோக்கராக போகப்போவதும் அவருக்குத் தெரியும்.
சண்முகத்தார்
நினைத்தது போலவே, அவர் கேற்றைத்தாண்டும்போது
அகிலா சொல்வது அவர் காதில் விழுந்தது. “ இந்தப் செவிட்டுப்புறோக்கருக்கு எத்தனை தடவை
சொன்னாலும் விளங்காது… திரும்ப திரும்ப உள்ளூர் மாப்பிள்ளைகளையே கொண்டுவாறது. இனிச்
சொல்லுங்கோ இரண்டாம் தாரம் என்றாலும் வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் கட்டுவன் என்று”
அகிலாவின் முடிவு சண்முகத்தாருக்கு நம்பிக்கையை கொடுக்க, சாரதா அதிர்ச்சியடைந்தாலும்
மனம் ஏனோ உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டது.
தொடர்மழையால்
வீட்டிலேயே முடங்கியிருந்த அகிலாவின் முகப்புத்தகத்தில், சிவாவின் அறிமுகம் கிடைத்தது.
அகிலா முதல் வேலையாக சிவாவின் வாழ்விடத்தைப் பார்த்துக்கொண்டபோது இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.
சிவாவின் வாழ்விடம் அவுஸ்திரேலியா. அப்புறம் உங்களுக்கு தெரியும்தானே நாட்டுநடப்பு……
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்பு வளர்ந்து…… காதல் வளர்ந்து… மதிலுக்கு மெலால்
தெரிய, சாரதாவும் மாப்பிள்ளை கொஞ்சம் வயசாக தெரிந்தாலும் அவுஸ்திரேலியாவை நம்பி பச்சைக்கொடியைக்
காட்டிவிட, புறோக்கரின் அடிமடியில் கைவைக்கப்பட்டது. புறோக்கரும் “மார்க்கை” (முகப்புத்தகத்தை உருவாக்கியவர்) வைய……. அவுஸ்திரேலியாவில்
இருந்து வந்த மாப்பிள்ளை சிவராசா நேரே அகிலாவின் வீட்டுக்கே சென்று தங்கிக்கொண்டார்.
மாப்பிள்ளை
வந்த களை நீங்கி சம்பிரதாய பேச்சுக்கள் தொடங்கியது. பேச்சுக்கள் முடிய இரவு பத்துமணி
தாண்டியவேளையில் இருந்த ஒரு அறையையும் மாப்பிள்ளைக்கு கொடுத்துவிட்டு தாயுடன் படுத்திருந்த
அகிலா சின்னதா ஒரு பெரியகுண்டைத் தாயின் தலையில் போட்டாள்.
“அவருக்கு
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருக்கிறார். மனைவிபிள்ளைகள் இருக்கினம். பிள்ளைகள்
இவருடன் கதைக்கிறவையாம். ஆனால் அவர்கள் வேறாகத்தான் இருக்கினமாம்.”
சாரதாவின்
தலையில் “ஆட்லறி” செல்லொன்று வெடித்தது போலிருந்தது. “என்னடி பிள்ளை சொல்லுகின்றாய்?”
அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் தாய். மகளோ, அது ஒன்றும் பிரச்சினை இல்லை எனக்கு முதலேயே
தெரியும். விவாகரத்து எடுத்தாச்சுதானே. அங்கே இதெல்லாம் சாதாரணம். ஏன் இங்கேயும் இப்ப
இதெல்லாம் சாதாரணம்தானே. நீ கத்திக்குழறி ஒன்றையும் குழப்பிப்போடாதே” என்றாள் சாதாரணமாக.
அவ்வளவு மயக்கம் மாப்பிள்ளையில்…. இல்லை இல்லை அவுஸ்திரேலியாவில்.
சாரதாவோ
தமக்குதெரிந்தவர்களில் யார் யார் இரண்டாம்தாரமாக கலியாணம் செய்திருக்கிறார்கள் என்று
எண்ணிப்பார்க்கத் தொடங்கியிருந்தவள். “ஓமடி உன்ர கொப்பரும் இரண்டாந்தாரத்து பிள்ளைதானே”
என்றாள் பெருமூச்சுடன்.
அவுஸ்திரேலியா
மாப்பிள்ளை என்பது மட்டும் வெளியில் தெரிய, ஏனையவை மூடி மறைக்கப்பட்டு கலியாணம் மாப்பிள்ளையின்
செலவில் பெரியதொரு கலியாண மண்டபத்தில் அகிலாவைப் பல்லக்கில் தூக்கிவர, முன்னே இளம்பெண்கள்
ஆடிவர, ஓமகுண்டத்தில் ஓமம் வளர்ப்பதற்கு பதிலாக் வீடியோ எடுக்க ஏதுவாக, ஊதுபத்திகளைக்
கொழுத்தி ஓமப்புகையை நாகரீகமாக ஐயர் மெலிதாகஎழுப்ப, முகூர்த்த நேரத்தில் ஐயர் தாலியைத்
தூக்கிவைத்துக்கொண்டு வீடியோக்காரனைப்பார்க்க, அவர் “ஆக்சன்” என்பது போல் கையசைக்க
மாப்பிள்ளை இரண்டாந்தாரமாக!!!!…… ம்ம்ம்ம்…..இரண்டாந்தரமாக!!!, எதுவாகவோ? கமரா பறந்து
பறந்து வீடியோ எடுக்க, வீடியோக்காரனின் வழிகாட்டலில் தாலி அகிலாவின் கழுத்தில் ஏறியது.
இவை
பற்றி எதுவுமே கவலைப்படாமல் தற்போதைய யாழ்ப்பாண கலாச்சாரத்தின்படி மணமக்களை வாழ்த்திவிட்டு
சாப்பிடவும், சாப்பிட்டுவிட்டு மணமக்களை வாழ்த்தவும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
முண்டியடித்துக்கொண்டு இரண்டு நிரைகளாக நின்றுகொண்டனர்.
ஆசை;
முகப்புத்தகக் காலத்தில் முடிய, மோகம்; முப்பதுநாளில் முடிய, மாப்பிள்ளை அவுஸ்திரேலியா
பயனப்பட ஆயத்தமானர். அகிலா அழுதுவீங்கிய முகத்துடன் அழுதுகொண்டிருக்க, “ஏண்டி அழுதுஆர்ப்பாட்டம்
பண்ணுகிறாய்? போய் ஆயத்தங்களை செய்து கூப்பிடப்போகிறார்.” என்ற தாயைக் கட்டிப்பிடித்து
ஓவென்று அழுதாள் அகிலா.
அழுது
விம்மியபடியே “அவர் என்னை அவுஸ்திரேலியா கூட்டிக்கொண்டு போகமாட்டாராம், அங்கே தன்னுடைய
பிள்ளைகள் வந்துபோவினமாம், அவர்களுக்கு முன்னால் என்னைக்கூட்டிக்கொண்டு போனால் அவர்கள்
பிறகு தன்னிடம் வரமாட்டார்களாம். அதனால் ஆறுமாதத்துக்கு இங்கே வந்து நிற்பாராம்; அங்கு
ஆறுமாதம் நிற்பாராம்…..” என்று அழுதவளை பிரமைபிடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் தாய்
சாரதா.
- மானிப்பாய் சுதன்.
No comments:
Post a Comment