சம்பிக்க
பண்டாரவின் தலை வெடித்துவிடும்போலிருந்தது. இலங்கைக் காவல்துறையில் இணைந்ததில் இருந்து
போதைப்பொருட்கள் தடுப்பு சிறப்புப் பிரிவின் ஒரு நேர்மையான அதிகாரியாக தொழிற்பட்டுக்கொண்டிருப்பவன்.
அண்மைக்காலமாக யாழ்மாவட்டத்தில் பரவி இருக்கும் போதைப்பொருட் பாவனையை தடுப்பதற்காக
யாழ்மாவட்டத்தின் முக்கியமான இடத்தில் நியமிக்கப்பட்டிருந்தான்.
யாழ்
மாவட்டத்துக்கு வந்தபின்னர் தனது வேலையின் முக்கியத்துவத்தையும், அதன் கடினத்தன்மையையும்
உணர்ந்துகொண்டவன். பலவிதமாக புலனாய்வு செய்தும் போதைப்பொருள் யாழ்மாவட்டத்துக்கு வருவதையோ,
அங்கிருந்து பிறமாவட்டங்களுக்கு பரவுவதையோ அவனால் ஊகிக்கவவோ, கண்டுபிடிக்கவோ முடியாதிருந்தது.
இதுவே சம்பிக்கவின் தலைவெடிப்புக்கு காரணமாக இருந்தது.
தமிழ்
மொழியில் பரீட்சயமிருந்த அவன் யாழ்ப்பாணம் வந்த ஒருவருட காலப்பகுதிக்குள் தமிழ் மொழியில்
மேலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். அதற்குக் காரணம் சம்பிக்க ஒரு காவல்துறை அதிகாரியாக
அல்லாது, பேருந்துச் சாரதியாகவே யாழ்ப்பாணம் வந்திருந்தான். வந்தவன் பல மட்டங்களிலும்
நண்பர்களைச் சேர்த்துக்கொண்டான். தனக்கு உதவியாக தமிழ் காவல்துறை ஒருவரையும் கேட்டுப்பெற்றுக்
கொண்டிருந்தான். அவன் பெயர் காந்தன்.
இருவரும்
பலவழிகளிலும் பல இடங்களிலும் இருந்து இரகசியமாக விசாரணைகளை மேற்கொண்டும் அவர்களால்
கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவின் கேரளப்பகுதியில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள கடலை
அண்டிய கிராமங்களுக்கு மீன் பிடிப்படகுகளில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது என்பது
மட்டுமே. அதிலும் கேரளக்கஞ்சா சிறப்பாக வந்துகொண்டிருந்தது. பல தடவை பத்திரிகைளில்
கேரளாவில் இருந்து கடத்தப்பட்ட பல கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பிடிபட்டதை பார்த்துக்கொண்டான்.
தமது காவல்துறை கஞ்சாவுக்குப்பின்னால் நின்று புகைப்படத்துக்கு முகம்காட்டிக்கொண்டிருந்தனர்.
அவை ஒரு சிறு பகுதியே என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது.
பாடசாலை
மட்டம் முதல் பல இடங்களிலும் போதைப்பொருள் பாவனை பரவியிருந்தமையால் மக்களும் காவல்துறைமேல்
மிகுந்த சினங்கொண்டிருந்தனர். இதனைவிட மக்களின் ஆதங்கங்களையும் அவ்வப்போது கேட்ககூடடியதாயிருந்தது
சம்பிக்கவுக்கு. “புலிகள் இருக்கும்போது இவையொன்றும் இல்லாமல் கட்டுப்பாடாகத்தானே இருந்தது”
“புலிகள்
நேர்மையானவர்கள், உவங்கள் காசைவேண்டிப்போட்டு விக்கவிடுகிறாங்கள்”
“புலிகளையே
தோற்கடித்தவர்களுக்கு; போதைப்பொருட்களை கொண்டுவாறவங்களை பிடிக்கத்தெரியாமலே இருக்கு, உவங்கள் தமிழ் சமுதாயத்தைத்
திட்டமிட்டு அழிக்கிறாங்கள்”
இப்படிப்பல
கதைகளை சம்பிக்கவால் கேட்கக்கூடியதாக இருந்தது. மக்கள் சொல்வதும் உண்மைதானோ? என்று
தன்னுள் கேட்டுக்கொள்வான். எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும்… கட்டுப்படுத்தவேண்டும்
என்ற சிந்தனையுடன் தேநீர்க்டையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தவனின் காதுகளில் அங்கிருந்த
இளைஞர்களின் உரையாடல் வித்தியாசமாகப்படவே காதைத் தீட்டிக்கொண்டான்.
“மச்சி,
இன்டைக்கு பள்ளிக்கூடத்தடிக்குப்போனா பாக்கு எடுக்கலாம்… வாறியா?” என்றான் ஒருவன்.
அதற்கு
மற்றவன், “போடா அதைப்போட்டால் தலையைச்சுத்தும் பிறகு வேலையும் செய்யேலாது. நான் வரவில்லை.”
“வேண்டாமடா
நான் வரவில்லை நீ போ, இண்டைக்கு கந்தசாமி ஐயா புதிதாக வேண்டிய காணி துப்பரவாக்க வேண்டும்.”
“அந்தமனுசன்
என்னடா திடீரென்று காணி, வாகனமெல்லாம் வேண்டுது. தபால் கந்தோரை விட வேறவேலை ஏதும் செய்கிறாரோடா?”
இல்லையடா!
ஆனால் வங்கிகளில் ஏதோ கடன் எடுக்கிறவர் என்று சொல்லுகிறவர்… எங்களுக்கு என்ன? வேலை
வந்தாச் சரிதானே.” என்ற அவனின் கூற்று சம்பிக்கவுடன் இருந்த காந்தனின் மண்டைக்குள் ஏதோ குறுகுறுக்க வைத்தது...
“சேர்,
எனக்கும் அந்த கந்தசாமியாரைத் தெரியும், அவரிடம் திடீரென்று பணம் புழங்கிறதும் தெரியும்,
அவர்வேலை செய்கிற தபால் நிலையமும் கடற்கரைப்பக்கந்தான். எங்கேயோ இடிக்குது! கந்தசாமியாரை
கொஞ்சம் கவனிச்சா ஏதாவது தடயம் கிடைக்கும்” என்றான் காந்தன்.
சம்பிக்கவும்
தலையை ஆட்டியவாறு; “காந்தன் நீங்க அவரை அவருக்கு தெரியாமல் கவனியுங்க, நான் ஊருக்கு
போய் வந்தபிறகு யோசிப்பம்” என சிந்தனையுடன் சென்றான்.
புகைவண்டியில்
இருந்த சம்பிக்கவுக்கு நித்திரை வரவில்லை. பல கடத்தல்களை இலகுவாக கண்டுபிடித்தவனுக்கு
இம்முறை கொஞ்சம் சிக்கலாகவே இருந்தது. சிந்தனையில் இருந்தவனின் பார்வை, தன்னுடன் முதலில்
பேரூந்தில் வந்த இரண்டு காவல்துறையினர் மீது விழுந்தது. அவர்கள் வேறு இரு காவல்துறையை
சார்ந்தவர்ளிடம் சில பொதிகளை கொடுத்தனர். அவர்களது நடத்தை சந்தேகத்தை வரவைக்கவே, அவர்களைப்
பின்தொடர தீர்மானித்தான்.
வவுனியாவில்,
பொதிகளை வழங்கிய காவல்துயைறினர் பேரூந்தில் ஏறி மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல, பொதிகளை
வேண்டியவர்கள் மன்னார் செல்லும் பேரூந்தில் ஏறிச்சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து
மன்னார் சென்றபோது பொதியை வேறு இரு நபர்களிடம் கைமாறிக்கொடுத்தபின், இருகாவல்துறையினரும்
கொழும்பு செல்லும் பேரூந்தில் ஏறிக்கொண்டனர்...
சம்பிக்க
பொதிகளைப் பெற்றவர்களது வாகன இலக்கத்தை குறித்துக்கொண்டு, மன்னார் காவல்துறை அலுவலகத்துக்குச்
சென்று, தன்னை அறிமுகப்படுத்திய பின் அன்றைய தினம் விடுமுறையில் சென்றவர்களது விபரங்களைக்
கேட்டுத் தெரிந்து கொண்டான். இருவர் மட்டுமே விடுமுறையில் சென்றிருப்பதை அறிந்த சம்பிக்கவுக்கு
இப்பொழுது ஒரு வழி கிடைத்தமாதிரி இருந்தது. தனது மேலதிகாரிக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா
என யோசித்தவன்: பின்னர் தன்முடிவை மாற்றிக்கொண்டான். முழுவதுமாக கண்டுபிடித்தவுடன்
ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம் என முடிவுசெய்தவனை காந்தனின் தொலைபேசி அழைத்தது.
“ஹலோ….,
சேர் நாங்க சந்தேகித்தது சரியென்று நினைக்கின்றேன். படகில் வருபவை தபால் நிலையத்துக்கு
சிறுபொதிகளாக வந்து தபால்பொதிகளுடன் பொதிகளாக இடமாற்றப்படுகின்றன. போதைப்பொருட்கள்
மட்டுமல்ல சில அனுமதியற்ற மருந்துவகைகளும் வருகின்றன.”
சம்பிக்கவுக்கு
காந்தனின் வார்த்தைகள் மேலும் உற்சாகத்தைக் கொடுக்க, “நன்றாகத் தெரியுமா” என கேட்டான்.
“சந்தேகமில்லை
ஆனால் ஆதாரத்துடன் பிடிக்க நாம் பொறுத்திருக்க வேண்டும். பொருட்கள் எப்போது வருகின்றன
என்பது தெரிய வேண்டும்.”
“சரி
… சரி நான் ஊருக்குப்போகவில்லை, வேறோரு அலுவலாக மன்னார் வரைக்கும் வந்துவிட்டேன். நாளை
யப்னா வருகிறேன், வந்து மிகுதியைக் கதைக்கின்றேன். நீங்க நான் சொல்கின்ற காவல் நிலையங்களில்
இருந்து இன்றைக்கு விடுமுறை பெற்றவர்களின் விபரங்களை எடுத்துவையுங்க” என கூறி காவல்
நிலையங்களின் பெயர்களைக் குறிப்பிட்டான்.
ஒகே
சேர்…. என்று கூறியவாறு தொலைபேசியைத் துண்டித்தான் காந்தன்.
காவல்
நிலையங்களில், காந்தன் விடுமுறை பெற்றவர்களின் விபரங்கள் சேகரித்தமை எப்படியோ காவல்நிலையத்தில்
எல்லோருக்கும் தெரியவந்துவிட்டது. அதிலும் ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியான
பூஜா பிரசன்ன முதலில் விடுமுறை விபரங்களை கொடுக்கவில்லை. பின்னர் சிறப்பு காவல்துறையின்
வேண்டுகோள் என கூறியே விபரங்களைப் பெற்றிருந்தான்.
விபரங்களைக்
கொடுத்த பூஜா பிரசன்னவுக்கு, நிலைமை தீவிரமடைவது தெரிந்தது. மாட்டுப்பட்டால் எல்லோரும்
கூண்டோடு கூட்டுக்குள்தான் என்று உணர்ந்தவன். இனி “டீலில்” ஈடுபடவதில்லை எனத் தீர்மானத்துக்கொண்டான்.
விடயம் கடத்தல்காரர்களது மேலிடம் வரை செல்ல, சம்பிக்கவுக்கு அமைச்சர் ஒருவரிடமிருந்து
தொலைபேசி அழைப்பு வந்தது.
“ஹலோ,
நீங்க மன்னாரில் நிற்பதாக அறிந்துகொண்டேன். என்னுடைய இடந்தான் என்ன தேவையென்றாலும்
கேளுங்க, ஆனால் தேவையில்லாத விடயங்களில் கவனம்செலுத்தாதீர்கள்” என அதிகாரத்துடன் கூறினார்.
சம்பிக்கவும்,
“ஒகே சார் என்று கூறியவாறே தொலைபேசியை துண்டித்தான். தனது வேலை மிகவும் பெரியதொன்றாக
இருப்பது தெரிந்தது அவனுக்கு. முதலில் யப்னா போகவேண்டும், காந்தனிடம் தகவல்கள் பெறவேண்டும்
ஆராய வேண்டும். பின்னர் யோசிப்போம் என்ன செய்வது என்று யோசித்தவாறே புறப்படத்தயாரானான்.
யாழ்ப்பாணம்
வந்த சம்பிக்க, காந்தனுடன் சேர்ந்து யோசிக்கலானான். தன்னால் கண்டுணரப்பட்டவைகளையும்
காந்தனால் கண்டுணரப்பட்டவைகளையம் பட்டடியல்ப்படுத்தினார்கள். வட்டம் போட்டார்கள், புள்ளடி
போட்டார்கள் இருந்தும் அடுத்தமுறை பொருட்கள் வரும்வரை காத்திருந்தால்தான் ஆதாரங்களுடன்
பிடிக்கலாம். கொழும்பில் இருந்து மேலதிகமாக ஆட்களை வரவழைத்திருந்தார்கள். அவர்கள் சுற்றுலாப்பயனிகள்போல்
சுற்றிக்கொண்டிருந்தார்கள் சம்பிக்கவின் கட்டளை கிடைக்கும்வரை.
“காந்தன்
நாங்க காத்திருக்கின்ற விடயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும், நான் இங்கு வந்திருப்பதும்
அவர்களுக்கு தெரியும், எனவே இத்திட்டத்தை கைவிட்டு நான் போகிற மாதிரிப்போனால்தான் சில
வேளைகளில் நாங்க நினைக்கிறது நடக்கும். எனவே இன்றிலிருந்து நீங்க வழமையான உங்க கடமைக்கு
போங்க, நான் கொழும்பு போகிறமாதரி இருக்கட்டும். தகவல் கிடைக்கும்போது வாங்க” என்று
கூறி காந்தனை அனுப்பிவிட்டு சம்பிக்க கொழும்பு செல்வதற்காக புகையிரத நிலையத்துக்குச்
சென்றான்.
புகையிரத்தில்
சென்ற சம்பிக்க வவுனியாவில் இறங்கி சுற்றுலாப்பயனிகள் வான் ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி
பயணிகளுடன் பயணிகளாக வந்துகொண்டிருந்தான். கிளிநொச்சியை அண்மிக்கும்பொழுது வேகமாக வந்த
டிப்பர் ரக வாகனம் சம்பிக்க வந்த வானுடன் மோதுண்டது; வாகனத்தின் முன்பக்கம் நசுங்கிப்போக,
அந்த விபத்தில் ஒரு சம்பிக்க பண்டார என்னும் காவல்துறை அதிகாரியும் படுகாயமடைந்த நிலையில்
வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்த செய்தி காந்தனுக்கு கிடைத்தது...
டிப்பரைச்செலுத்திய
சாரதி காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தான். வயிற்றுப் பசிக்காக போராடிக்கொண்டிருந்த,
போராட்ட பக்கமே படுத்திராத அந்த சாரதி, காவல்துறைப்பேச்சாளரால், புனர்வாழ்வுபெறாத முன்னாள்
போராளியாக உருவாக்கிகொள்ளப்பட்டான். இரண்டுநாட்களாக விபத்துதொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு.
முகப்புத்தகங்களில் படங்கள் பதிவிடப்பட்டது. நாளடைவில் விபத்து தொடர்பான ஆரவாரம் மெதுவாக
அடங்கிப்போக. படகுகளும் வழமைபோல் ஓடத்தொடங்கியிருந்தன. காந்தன் மட்டுமே சொல்லமுடியாத
தகவல்களுடன் சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்கின்றான்…
யாவும்
கற்பனை !
மானிப்பாய் சுதன்.


No comments:
Post a Comment