Monday, March 25, 2019

வாழ்க வளமுடன். --- (மார்கழி (12).2017, ஒளிஅரசி மாதாந்த சஞ்சிகை)






தயவுசெய்து கதையின் தலைப்பை கதை முடிந்தவுடன் படித்துக் கொள்ளவும்…….

அரசாங்க வைத்தியசாலையில் கடந்த பதினைந்து வருடகாலமாக மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருக்கும் இராகுலன், எத்தனையோ நோயாளிகளைப்பார்த்து விட்டான். ஆனால் இன்று வந்திருந்த நோயாளியைப் பார்த்த பின், அந்த நோயாளியின் கதையைக் கேட்டபின் இராகுலனின் மனம் என்னவோ நிலையில்லாது தவித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நோயாளியும் தங்களது வருத்தங்களுடன் சேர்த்து ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள். ஆனால் இன்று வந்த நோயாளியின் கதை வேறுவிதமாகவும் புதிதாகவும் இருந்தது. ஒரு சமூகத்தின் மாற்றத்தை காட்டி நின்றது. ஆனால் அதற்கு எவரைக் குற்றவாளியாக்குவது என்பதுதான் பெரும் பிரச்சினையாகியிருந்தது.

இராகுலன் மருத்துவத்துடன் உளவியலையும் கற்றிருந்ததினால் அதனூடாகவும்  நோயாளிகளைப் பார்க்கமுனைந்து கொள்வான். ஏனேன்றால் வெளிநோயாளர் பிரிவில் வரும் நோயாளர்களில் பெரும்பாலனவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு; அதனால் நோயாளியானவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பதை அனுபவரீதியாக கண்டுகொண்டவன்.

அதிலும் இன்று வந்த நோயாளி பிரவீன் ஆறு வருடங்களுக்கு முன் தன்னிடம் வந்தவன். ஆனால் நோயாளியாக அல்ல. ஒரு காப்புறுதி நிறுவனத்தில் இருந்து வந்திருந்தான். அப்போது அவனைத்தான் பேசியதும், பின்னர் சமாளித்து அனுப்பியதும் நன்றாக ஞாபகமிருக்கிறது. இராகுலனுக்கு, அரசாங்கத்தினால் கிடைக்கும்: வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, வாகன வரிச்சலூகைக்காக விண்ணப்பித்து இருந்தான். அந்த வரிச்சலுகை அனுமதிப்பத்திரம் தனக்கு கிடைத்தவிடயம், தனக்குத் தெரியமுதலேயே; தன்னிடம் அது தொடர்பாக கதைப்பதற்கு பிரவீன் காப்புறுதி முகவராக வந்திருந்தான்.

“சேர், குட்மோனிங்…. உள்ளே வரலாமா? என்ற கேள்வியுடன் உள்ளே வந்தவன்; “உங்களுடன் ஒரு பத்து நிமிடம் கதைக்கலாமா?” என்று கேட்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனது எடுப்பான தோற்றமும், கடும் வெயிலுக்குள்ளும் முழுக்கை சேர்ட், “ரை” என வந்திருந்தவனை; ஒரு பதிலும் சொல்லாமலேயே, என்ன கதைக்கப்போகின்றாய்? என கண்களாலேயே கேட்டான் இராகுலன்.

“சேர் உங்களுக்கு வாகன வரிச்சலூகை அனுமதி கிடைத்திருக்கு, நீங்க எடுக்கிற வாகனத்துக்கு எங்கட காப்புறுதி நிறுவன…….” தொடர்ந்து அவனைப் பேசவிடாமல் இடைமறித்த இராகுலன் , “உங்களுக்கு யார் இதைச் சொன்னது? எனக்கு அனுமதி கிடைத்தது என்று? எனக்கு அதைப்பற்றி இன்றுவரை தெரியாது! என்றான் கடுப்புடன்.

“உங்கட மினிஸ்ரியில கதைச்சவை சேர்…… அதாலதான் தெரிய வந்தது. எங்களிடம் நிறைய….” என்றவனை இடைமறித்து, “எனக்கு வாகனம் எடுக்கிற நோக்கம் இல்லை, அப்படி எடுத்தாலும் இப்படி குறுக்கால நாகரீகமற்ற முறையில் எங்கட சொந்த விடயங்களை அறிந்து வருகின்ற உங்களிட்ட நான் காப்புறுதி எடுக்கமாட்டேன்” என்றான் இராகுலன்.

“சொறி சேர், பிழைதான்….. மன்னித்துக்கொள்ளவேணும் சேர். எங்களுக்கு வேற வழியில்லை சேர். “ராக்கெட்” ஐ முடிக்கவேணும் சேர். இல்லாட்டி பேசுவாங்க. புறமோசனும் வராது. தொடர்ந்து இப்படியே இருந்தால் புறமோசனும் போயிடும்.. சம்பளமும் குறைஞ்சிடும். அதுதான்.” என்று இழுத்தவனை, அவசரப்பட்டு திட்டி விட்டமோ என்று நினைத்த இராகுலன்; இப்படி அரச அலுவலகங்களிலும் நடைமுறையிருந்தால் நல்லாயிருக்கும் என நினைத்துக்கொண்டான். 

ஆனால் மேலதிகமாக நினைக்காதும் விட்டான். ஏனென்றால், இன்னும் பல மோசமான நிலைகளை நினைக்க வேண்டி வரும் பின் ரென்சனாகி மருந்தெடுக்க வேண்டி வரும்.

“சரி சரி …. உங்கள் போன் நம்பரை தந்துவிட்டு போங்க, தேவையென்று சொன்னால் நானே போன் பண்ணுகின்றேன்” என்று கூறி அவனது “விசிரிங் கார்ட்” ஐ பெற்றுக்கொண்டு, அவனைக் கொஞ்சம் சந்தோசமாக வழியனுப்பி வைத்தான் இராகுலன்.

காலங்கள் உருண்டோட, இன்று அவனைக் கண்ட கோலம்? மெலிந்து, செம்மைப்படுத்தாத தாடி, உப்பிய வயிறு, வாராத தலையுடன்… என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியே மனதைக் குடைந்து கொண்டிருந்தது இராகுலனுக்கு. உள்ளக நோயாளர் பிரிவில் அனுமதித்திருந்தவனை, நாளை சந்தித்து மேலதிகமாகக் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் வேலையில் மூழ்கினான்.

அடுத்தநாள் மதியநேரம், பிரவீனை பார்ப்பதற்காக உள்ளகநோயாளர் பிரிவுக்கு சென்றபோது, பிரவீன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவனை இராகுலன் பெயர் சொல்லி அழைத்தபோது குழப்பத்துடன் பார்த்த அவன் “என்னைத்தெரியுமா டொக்ரர்” என்றான் சந்தேகத்துடன்.

“நீங்க யாரென்று தெரியாது. ஆனால் முன்னர் நீங்கள் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமை புரிந்தது எனக்குத் தெரியும், என்னிடமும் அது தொடர்பாக வந்துள்ளீர்கள். இப்பொழுது நான் உங்களிடம் வந்தது சில விடயங்களைத் தெரிந்து கொள்ள, அவை எனது தொழிலுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன். அதுதான் உங்களுடன் சும்மா கொஞ்ச நேரம் கதைத்துவிட்டு போகலாம் என்று வந்தனான்” என்று மெதுவாக கூறினான் இராகுலன்.

“பரவாயில்லை டொக்ரர் எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு உதவும் என்றால் நான் எல்லாவற்றையும் சொல்லுகின்றேன் ….  என்னுடைய கதை எனது வாழ்க்கைமாற்றம் மட்டுமல்ல எங்களைப் போன்ற இளைஞர்களின் ஒரு சமூகரீதியான மாற்றமுந்தான்.” ஏனென்றால், பல தனியார் கொம்பனிகள் வெளிநாட்டுக் கொம்பனிகளின் பங்குதாரர் ஆகவோ, கிளைகளாகவோதான் இருக்கின்றன. அதனால் சில எமது சமூகத்துக்கு ஒத்துவராத நடைமுறைகளை கொண்டிருப்பதுடன், எமது உழைப்பை மட்டும் உறிஞ்சுபவனவாகவே காணப்படுகின்றன, எமது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்றனவாகவே காணப்படுகின்றன. என்றவாறு தன் கதையில் மூழ்கினான்.

“பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் பல இடங்களில் வேலைக்கு அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். அந்த நேரம்தான் எனது நண்பனைச் சந்தித்தேன்.”

“டேய் மச்சான் எங்கடா இங்கே?” சத்தம் வந்த திசையில் பார்த்தான் பிரவீன். தன்னுடன் படித்த கஜன் நிற்பதைக்கண்டவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். பிரவீன் ஆச்சரியப்பட்டது கஜனைக்கண்டல்ல, அவனின் தோற்றத்தையும் அவனது புதிய மோட்டார் சைக்கிளையும் கண்டேதான்.
“என்னடா இப்படி மாறிவிட்டாய்? எங்க வேலை செய்கின்றாய்? பார்த்து நீண்டநாள்?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றவனுக்கு தான் ஒரு காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்வதாகவும். அது தொடர்பாகத்தான் ஆட்களைச்சந்திக்க வந்திருப்பதாகவும் கூறியவனிடம், தன்நிலையைச் சொன்னான் பிரவீன்.

“டேய் நீ வேலை தேடியதுகாணும்…. நீயும் எங்கட நிறுவன காப்புறுதி முகவராக மாறு, உன்ர திறமைக்கேற்ப சம்பளம் கூடிக்கொண்டே போகும்” என்று கூறியவன் பிரவீனை தனது செல்வாக்கைப்பயன்படுத்தி தனது காப்புறுதி நிறுவனத்தில் சேர்த்தும் விட்டான்.

புதிய சூழல், புதிய பயிற்சிகள், மாதம் செல்லச்செல்ல பிரவீனின் திறமையால் சம்பளம், பதவி உயர்வு என பிரவீனின் உலகம் மாறத்தொடங்கியது. நண்பர்கள் வட்டம் கூடியது.

காப்புறுதி நிறுவனத்தின் ராக்கெற்றை அடைவதில் பிரவீன் தீவிரமாக உழைத்துக்கொள்வான். இதனால் அவனது ரீம் ராக்கெற்றை அடைந்தமைக்கான பல பார்ட்டிகளை நடாத்திக்கொண்டே இருந்தது. பலருக்கு பார்ட்டிகளில் பாராட்டுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் பார்ட்டிகளில் பாராட்டுக்கள், ஆலோசனைக்கா நேர ஒதுக்கீடுகளை விட மது அருந்துதலுக்கான நேரமே அதிகமாக இருந்தது.

பெரும்பாலும் அந்த காப்புறுதி நிறுவனம் சார்ந்த ஹொட்டல்களிலேயே பார்ட்டிகள் நடந்தேறின. பிரவீனுக்கு மது அருந்திப்பழக்கமில்லை. அதனால் தயக்கத்துடன் ஓரமாக நடப்பனவற்றைப்பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் உணவுகளை உண்டுகொண்டிருக்க ஆண்கள் மது அருந்தி ஆர்ப்பாட்டமாக குதூகலித்துக்கொண்டிருந்தனர்.

பிரவீனை எவரும் கவனிக்கவில்லை என்பதைவிட அவனை ஓர் நாகரீகமற்றவனைப்போல் பார்த்துக்கொண்டனர். அருகில் வந்த கஜன் “என்னடா மச்சான் பேசாமல் இருக்கிறாய், இப்படி இருந்தால் ஒன்றும் செய்யேலாது. நட்புகளும் கிடைக்காது.   அதைவிட மனேஜர் ஒருமாதிரி பார்க்கின்றார். வந்து சும்மா கொஞ்சம் எடுத்துப்பார்… பிறகு விடமாட்டாய்” என்றான்.

பிரவீனை இழுத்துக்கொண்டு போனான் கஜன். ஆண்கள், பெண்கள்  என எல்லோரும் சேர்ந்து கைதட்டி, மதுவையும் பிரவீனையும் அறிமுகப்படுத்தி வைத்தனர் கோலாகலமாக.

காலங்கள் உருண்டோட, பிரவீனைப் பார்த்து பலரும் வியந்தார்கள். பிரவீனின் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, நண்பர்கள் வட்டமும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. பிரவீன் செல்லும் பார்ட்டிகளும் உள்ளெடுக்கும் மதுவின் அளவும் அதிகரித்திருந்தது.

வேலைப்பளுவின் காரணமாக ஏற்படும் மன அழுத்ததத்தை குறைக்கவும், பணியாளர்ககளை ஊக்குவிக்கவும் என நிறுவனம் வெளிநாட்டு சுற்றுலாக்களை ஏற்படுத்திக்கொடுத்தது.

பிரவீனின் பெற்றோர் இனியும் தாமதித்தால் பிழை  என்றுணர்ந்து பிரவீனுக்கு திருமணபேச்சை எடுத்தனர். தனியார் நிறுவனம் என்றவுடனேயே பெண்வீட்டார்கள் தயங்கினர். பெண்களோ லண்டன், கனடா, இல்லையேல் அரசாங்க உத்தியோகம் என்றனர். விடாமுயற்சியுடன் பெண்தேடிப்பிடித்தனர். திருமணம் பெரும் தடல்புடலாக நிகழ்ந்தது.

அழகான மனைவி அமைந்த சந்தோசத்தில் மிதந்தான் பிரவீன். என்ன பிரவீனுடன் பார்க்க பெண் சின்னப்பிள்ளையாக  இருந்தாள். அதற்குக் காரணம், பிரவீனின் உணவுப்பழக்கமும், குடிக்கும்போது உண்ணும் உணவுகளும், எந்தவொரு உடல் உழைப்பும் இல்லாததால் ஏற்பட்ட அதிஉடற்பருமனுமே. இப்பொழுது பிரவீன் ஒரு குட்டி யானைபோல் வந்திருந்தான்.

மகிழ்ச்சிகரமாக காலம் சென்றதே தவிர “அப்பா” என்ற புறமோசன் மட்டும் வரவில்லை பிரவீனுக்கு. எமது சமூகத்தின் பாரம்பரியமான முறைப்படி பிரவீனின் மனைவிமீதே குற்றச்சாட்டு விழுந்தது. மருத்துவரிடம் சென்றபோதுதான் பிரவீனின் உடற்பருமன், அவனுக்கு ஏற்பட்டிருந்த நோய்கள் தெரிய வந்திருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை அதீத மதுப்பாவனையே என்று மருத்துவர் கூறிவிட்டார்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுவது சகஜந்தான். ஆனால் பிரவீனின் வாழ்க்கையில் விரைவாகவே ஏற்பட்டது. பிரவீனால் இப்பொழுது தனது ராக்கெற்றை பூர்த்தி செய்யமுடியாதிருந்தது. ஏனென்றால் அவனது அறிமுக வட்டம் முடிவு, வயது, என்பன தடையாக வந்தன.

“ராக்கெற்றை” பூர்த்தி செய்யாத கவலையையும் மதுப் பார்ட்டிகளே தீர்த்து வைக்கத்தொடங்கின. கொமிஸன்கள் குறைவடையத் தொடங்கின. பதவியுயர்வுகள் போய் பதவியிறக்கங்கள் வரத்தொடங்கின. புதிதாக வந்த இளையவர்களுடன் தாக்குப்பிடிக்க முடியாது இருந்தது. அதில் வேறு கௌரவப்பிரச்சினை தொடங்கியது.

குடும்பத்தில் வைத்தியச்செலவுகள், மனைவியின் கேள்விகள், சொந்தங்களின் கேள்விகள் என மோசமான நிலைக்கு பிரவீனை தள்ளிச்சென்றது வாழ்க்கை. நண்பர்கள் குறைந்தனர் ஆனால் மது மட்டும் அவனைக்கைவிடவில்லை இறுகப்பிடித்துக்கொண்டது. அதன் ஆறுதலில் பலநாள் உணவை மனைவியை மறக்கத்தொடங்கியிருந்தான் பிரவீன். வீட்டுக்கு தாமதித்து வரும்போதெல்லாம் கஸ்டமரை சந்தித்து வருவதாகக் கூறிக்கொண்டிருந்தான்.

மதுவின் தாக்கத்தால் மனைவிமீது பிரவீனுக்கு நாட்டம் குறைய, பிரவீனின் நடத்தையால் மனைவிக்கு பிரவீனின் மீது நாட்டம் குறைய, இருவரும் தொட்டதிற்கெல்லாம் சண்டைபிடிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், மனைவிபிரிந்து தாய்வீடு செல்ல தனிமரமான பிரவீன் மதுவுடனேயே கிடந்து தொழிலையும் இழந்தான். பெற்ற குற்றத்துக்கு பெற்றோர் கண்ணீருடன் கவனிக்க, ஒருநாள் இரத்தமாக வாந்தி எடுத்தவன் மயக்கமுற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவர்கள் இனி ஒன்றும் செய்யமுடியாது எனக்கைவிரித்திட, மதுவுக்கு அடிமையானவர்களுக்கான உளவியல் சிகிச்சை, மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.

பிரவீனின் நிலையறிந்து மனைவியும் பிரவீனுடன் வந்து சேர்ந்துகொண்டாள். எப்படியாவது பிரவீனை குணமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினாள். செல்லாத கோயில்கள் எல்லாம் சென்றாள், சாத்திரிகளிடம் சென்றாள், செய்வினை அகல தேசிக்காய் வெட்டி செய்வினைகளை அறுத்தாள். பாவம் அவள், செய்வினைகள் என்பது நாம் செய்த வினைகளே அன்றி வேறெதுவுமில்லை என்பது அவளுக்கு புரியவில்லை. நாம் செய்த வினைகளை பூசாரி அறுக்கமுடியாது. நாங்கள்தான் புண்ணியங்களைச் செய்து செய்வினைகளை அறுத்துக்கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை அவளுக்கு.

நாட்களை எண்ணிக்கொண்டிருந்த பிரவீனின் வாழ்க்கையில் மனைவியின் வருகையும், அவளின் பிரயத்தனங்களும் மனதளவில் புத்துணர்ச்சியை ஊட்டியது.

அவன் தனது பிழைகளை உணரத்தொடங்கியிருந்ததை காட்டியது அவன் தன்கதை சொல்லிய விதம்.

பிரவீனின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்த இராகுலனுக்கு பல சந்தேகங்கள் மனதில் வந்து போய்க்கொண்டிருந்தன. முக்கியமாக யார் மீது குற்றம்? தனியார் கம்பனிகளிலும் எம்மவர்தானே பணிபுரிகிறார்கள்? இருக்கலாம் ஆனால் தம் இருப்பை தக்க வைக்க சிலதை அவர்களும் செர்ந்துதானே செய்கிறார்கள். எல்லாம் முடிந்தபின்தானே வருந்துகிறார்கள்.

பணியாளர்களை வேலைச்சுமை, பணியால் ஏற்படும் மன  அழுத்தம் என்பவற்றில் இருந்து ஆசுவாசப்படுத்த என  பார்ட்டி என்ற போர்வையில் மதுப் பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள். “ஓகே! பிரவீன், கடைசியில் சித்தமருத்துவத்தையும் செய்து பார்ப்பம்! என்று இங்கு வந்திருக்கிறீங்க. நம்பிக்கையுடன் இருங்க. கடவுளை நம்புங்க…. நீங்க யோகா, தியானம் போன்றவற்றையும் செய்யுங்க. மனதுக்கும் உடலுக்கும் அமைதியைத்தரும்.” என்றவனை இடைமறித்த பிரவீன்.

“டொக்ரர், ஒரு டவுட், யோகா, தியானம் என்பன சந்தோசத்திலும் துன்பத்திலும் மனதை ஒருமுகப்படுத்தி நன்னிலையில் வைத்திருக்குமாமே. மதுவும் அப்படித்தானே டொக்ரர் சந்தோசம் என்றாலும் பாவிக்கிறம், துன்பம் என்றாலும் பாவிக்கிறம்….. மனத்தைச் சந்தோசப்படுத்த, துக்கத்தை மறக்க?, மறைக்க அப்ப இரண்டும் ……..” இரண்டுபேருமே சிரித்துக்கொண்டார்கள்.

இராகுலன் நீண்டதொருபெருமூச்சை விட்டுக்கொண்டான். அவனை அறியாமலேயே அவனது வாய் “வாழ்க வளமுடன்…..” என்று சொல்லிக்கொள்ள மனம் பிரவீனுக்காக பிரார்த்தித்துக் கொண்டது.

மானிப்பாய் சுதன்.


No comments:

Post a Comment

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...