சிவத்தார் என்று அழைக்கப்படும் சிவம், மூன்று பிள்ளைகளின் தகப்பன். மூன்றாவது பிள்ளை பெண்ணாகப் பிறந்தால்அதிர்ஸ்டம் வரும்! என்ற அதீத நம்பிக்கையுடன் தனது மூன்றாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர். அவரதுநம்பிக்கை பொய்க்கவிலலை. பெண்குழந்தை பிறந்ததில்இருந்து அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வியாபாரம் அமோகமானது.
****************************
1984 – வடமராட்ச்சியில் வியாபார அலுவலாகப் போன சிவத்தார், பருத்தித்துறை தொண்டமனாறு வீதியால் வந்துகொண்டிருக்கும்போது, அங்கு சனநடமாட்டத்தில் சிறிது மாற்றத்தை உணர்ந்து கொண்டார்.
தனது சைக்கிளை நிறுத்தி, வீதியில் போய்க்கொண்டிருந்தவரை நிறுத்தி “என்னடா தம்பி சனமெல்லாம் பதட்டப்பட்டுக் கொண்டு போகுதுகள், உங்காலயெங்கேயும் ஆமி நிக்குதோ?
“ஓம் அண்ணை, உதில நெடியகாட்டுக்கு கிட்ட நிக்கிறாங்களாம், உங்கை எங்கை போறாய்? ஒழுங்கைக ளுக்கால போ. உதுக்குள்ளை போய் கரைச்சல்படாமல்” என்றவாறு வழிப்போக்கர் கடந்து சென்றார்.
யார்? எவர்? என்று தெரியாத வழிப்போக்கரின் அறிவுரையை ஏற்றுஒழுங்கைகளுக்குள் சங்கமித்தார் சிவத்தார். பாதுகாப்பாக போக வேண்டிய இடத்துக்கும் போனார்.
****************************
1987
யாழ்ப்பாணத்தில் இருந்து புகையிலை கட்ட வந்த சிவத்தார், வல்லையில முனியப்பரை கும்பிட்டுவிட்டு வெளிக்கிடும்போது ஏற்கனவே புகையிலை ஏத்திக்கொண்டு வந்தவர்களிடத்தில், புகையிலை நிலவரத்தை கேட்டுக்கொண்டிருந்தவர், திடீரென்று நெல்லியடிச் சந்தியால போகலாமே? ஆமி நிக்குதோ என்றொரு கேள்வியைக் கேட்டார்.
“ஓமண்ணை, ஆமி நிக்கிறாங்கள் என்று சனம் சொல்லித்தான், நாங்க சுத்தியடிச்சு மண்டானுக்கால வந்தனாங்கள்”, என்றார்கள்.
அறுவார் நிம்மதியாக தொழில் செய்யவும் விடமாட்டாங்களாம். முனியப்பர்தான் துணை. என்று புறுபுறுத்தவாறே கிளம்பினார்.
என்னதான் பிரச்சினை என்றாலும் தனது வியாபாரங்களில்கண்ணும்கருத்துமாக தொழிலை நடாத்தி வாழ்க்கையில் தன்னிறைவை அடைந்து, ஒரு மாதிரி யாழ் நகரில், ஒருவீட்டைக்ககட்டி விட்டார்.
1987 யூலை மாதமளவில்யாழ்ப்பாணத்துக்கு இந்திய இராணுவத்தின் அமைதிப்படைவருகையும் சிவத்தாரின் மனதில் புதிய நம்பிக்கையை விதைத்திருந்தது. சிவத்தாரின் தகப்பன் காந்தியைப்பற்றிசொன்ன வார்த்தைகள், படித்த புத்தகங்கள் இந்திய அமைதிப்படையின் மீது பெரும் நம்பிக்கையை விதைத்திருந்தன சிவத்தாரின் மனதில்.
மூத்தவன் 15 வயதானாலும் பார்ப்பதற்கு 20 வயதுமதிக்கத் தக்கவனாகவே இருப்பான். சாதாரணமாக மகிழ்வைத் தரவேண்டிய விடயம், ஆனால் நாட்டின் நிலைமை அடிவயிற்றில் புளியைக் கரைப்பதாகவே இருந்தது. தனது பிள்ளைகள் வளர வளர நிலவும் போராட்ட நிலைமைதன் பிள்ளைகளையும் பலிகொண்டு விடுமோ என்று பயந்துகொண்டிருந்தவனுக்கு இந்திய அமைதிப்படையினரின் வருகை, பிள்ளைகளின் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பை தந்தது.
ஆனால் 1987 செப்ரெம்பருடன் நம்பிக்கைள் காணாமல்போயிருந்து.
*********************************
1988
–வாழைக்குழை கட்டுவதற்காக நீர்வேலிக்கு சென்றவரை இடைமறித்த, வியாபாரியொருவர், கரந்தன் சந்தியால போகவேண்டாம் என்றார்.
ஏன்? ஆமி நிக்குதோ?
ஓ, பெடித் தரவழியளை தலையாட்டி வைத்து பிடிக்கிறாங்கலாம்?அந்தப்பக்கம் போகாதை அண்ணை.
யார் பெற்ற பிள்ளைகளோ? சிவத்தாரின் நெஞ்சை ஏதோஅடைப்பதுபோல் இருந்தது. மனதை ஏதோ குழப்ப, வீட்டுக்குதிரும்பினார்.
என்னப்பா? வேளைக்கே வந்திட்டீங்கள்? நான் பயந்து கொண்டிருந்தனான், கரந்தன் பக்கம் ரவுண்டப் என்று கடையடியில் கதைத்தவர்கள்.
தம்பி எங்கை?
பெடியலோட காலமையே வாசீகசாலைக்கென்று போனவன் இன்னும் வரேல்ல.
என்னப்பா சொல்லுகின்றாய்? காலம் கெட்டுக்கிடக்கு, அறுவாற்ற கண்ணில பட்டால் போச்சு என்றவர், மற்றைய பிள்ளைகளைப் பார்த்து, நீங்க இரண்டுபேரும் என்ன செய்கிறீங்க? போய்படியுங்கோ பார்ப்பம்.
கேற்றடியில் யரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. கூடவே சிவமண்ணை உன்ர மூத்தவனை ஆமி பிடிச்சுக்கொண்டு போறாங்கள். கெதியா மாஸ்ரரை கூட்டிக்கொண்டு போய் அவங்களோட கதைச்சு பெடியனை கூட்டிற்று வா. ஏத்திக்கொண்டு போனாங்கள் என்றால் பிறகுதேடிப்பிடிக்கிறது கஸ்ரம்.
கோயிலடி மணியத்தின் குரல் பதற்றத்துடன் கேட்க, சிவத்தாருக்கு தலைசுற்றியது. சிவத்தாரின் மனைவியோ ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள்.
அண்ணை நீ வேட்டியோட வாசீகசாலையடிக்கு ஓடிப்போ, நான் மாஸ்ரரை கூட்டிக்கொண்டு வாறன் என்றவாறு, கோயிலடி மணியம் நிலைமையை உணர்ந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு மாஸ்ரர் வீட்டுக்கு ஓடினார்.
இவர்கள் போவதற்குள்ளாகவே பிடித்தவர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ஆமி போய்விட, சில நாட்கள் காம்ப் காம்பாக அலைந்து,காலில் கையில் விழுந்து மகனைமீட்டெடுத்தார் சிவத்தார்.
மகனை மீட்டெடுத்தனரே ஒழிய, மகன் இயல்பிழந்து போனதை காலம் செல்லத்தான் உணர்ந்தனர் பெற்றோர்கள். ஆனால்உணர்வதற்குள் எல்லாம் கைமீறிப் போயிருந்தது.
நடைப்பிணமான சிவத்தார், மீதி இரு பிள்ளைகளுக்காக இயங்கத்தொடங்கினார்.
***********************************
1995
யாரும் எதிர்பாராத இடம்பெயர்வு வலிகாமம் மக்கள் முழுவதுமாய்இடம்பெயர்ந்து தென்மராட்சி, வடமராட்சி, வன்னி என சென்றனர். குடும்பத்தினரை பத்திரமாக தென்மராட்சியில் வீடோன்றில் கூட்டத்தோடு கூட்டமாக விட்டுவிட்டு சில சமான்களை எடுத்துவர மீண்டும் வாதரவத்தைக்குள்ளால் யாழ்நகர் நோக்கி சென்றார் சிவத்தார்.
வயதின் இயலாமை மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியிருப்பதும், மனதளவில் துவண்டிருப்பதும் சைக்கிளை மிதிப்பதில் சோர்வைஏற்படுத்தியிருந்து.
தளர்வுடன் சென்றவரை எங்கே ஐயா சாகவே போகின்றீர்கள்?என்ற வார்த்தை தடுத்து நிறுத்த, யாரோ ஒருவர் கேட்டகேள்வியும் அதற்கான பதிலும் அவரது பயனத்தை நிறுத்தியது.
“ஆமி நிக்குதோ”
“வாதரவத்தைச் சந்தியடியில் நிக்கிறாங்களாம்…..”
சைக்கிளை அப்படியே திருப்பினார்.
*********************************
2001 –சிவத்தார் பெருமாள் கோயிலை வலம் வந்து கும்பிட்டபின்னர், சற்று ஆற அமர்ந்திருந்தார். நேரம் ஆக ஆக யோசனை கூடிக்கொண்டே போனது. ரவுண்டப்புக்கள் அடிக்கடிநடந்துகொண்டிருக்கின்றது. காலங்கள் மாறுது, காட்சிகள் மாறுது ஆனால் ரவுண்டப்புக்கள் அப்படியேதான்….
தம்பி டேய் உங்க உங்கட கம்பசைச்சுத்தி ஆமி நிக்குதோ?
ஓம் ஐயா, பொங்குதமிழ் செய்யப் போகிறாங்களாம்! கம்பசைச்சுத்திஒரே ஆமி.
சிவத்தாருக்கு திக் என்றது. இரண்டாவது மகன் கம்பசுக்குப் போனவன்.
உடனே வீட்டுக்கு கிளம்பினார். வீட்டில் மகன் இருப்பதை கண்டபின்தான் நிம்மதி. ஏன் படிப்புகள் இல்லையே?
இல்லை. ஒரே ஆமி, அதுதான் திரும்பி வந்திட்டம்.
*******************************
2005
பிறந்ததில் இருந்து பல இடம்பெயர்வுகள், ஏற்றங்கள், இறக்கங்கள் இருந்தபோதும் இன்றுவரை ஒரு நப்பாசை. மூத்தவன் ஒருநாள் வருவான் என்று. மூத்தவனின் சிந்தனையுடன், ஓட்டோவில் மகளையும் ஏற்றிக்கொண்டு, உரும்பிராயில் உள்ள மகளின் மாமியார் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார்.
மகளின் அலைபேசி சிணுங்க, கவனம் கலைந்தார் சிவத்தார்.
ஹலோ…. ஓம் மாமி, பலாலி ரோட்டாலதான் வருகின்றோம்.
ஏன்?
ஆ…. உப்ப உள்ளால வருகின்றோம்?
தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிடம் "கொன்வே” வரப்போகுதாம்.
ஆமி நிக்கிதாமோ?
ஓம், கெதியா ரோட்டை கடந்து வரட்டாம்.
ம்... ம்... ம்…. இப்படி கெதியா பிரன்ஸ்சுக்கும் நீ போய்விட்டால், எனக்கும் அம்மாவுக்கும் நிம்மதி.
என்னப்பா செய்கிறது? வெளிநாட்டு மாப்பிள்ளை என்று செய்தாகிவிட்டது. அங்கே கார்ட் கிடைக்கும்வரை பொறுமையாகத்தான் இருக்கவேணும். அதுவரை மாமியை சமாளிக்கிறதுதான் பெரிய வேலை. ஒவ்வொன்றுக்கும் சும்மாசும்மா குறைசொல்லிக் கொண்டே இருப்பா. இனி அங்கே இருக்கின்ற நாளில் இவரும் என்னோட வடிவாகக் கதைக்கமாட்டார். சலித்துக்கொண்டாள்.
**********************************
2020
இஞ்சேரப்பா என்ன செய்கிறீங்க? நெடுக உந்தபோனை நோண்டிக்கொண்டு, பிள்ளைகள் இருந்தாலும் பொழுது போகும். ஊரடங்கைப்போட்டு வெளிக்கிட முடியாம செய்துபோட்டாங்கள். எங்கட சந்தியிலும் ஆமி நிக்கிறாங்களே? இல்லாட்டி ஒருக்கா சந்தியைத்தாண்டிவிட்டால், பெடி வீட்டை ஒருக்காப் போய்வரலாம்.
நிக்கிறாங்கள் நிக்கிறாங்கள் நாங்க கட்டையில போகும்வரைக்கும் நிற்கத்தான் போகிறாங்கள். பிரான்சில் இஞ்சத்தையைவிட கொரனாவும் கூடவாம், சாவும் கூடவாம்! பெட்டை போனில கதைக்கும்போது சொன்னவள்.
அங்கேயும் ஆமி நிக்கிதாமே?
மனைவியை முறைத்தவர். லான்ட்மாஸ்ரரில் மரக்கறி வர,வேண்டுவதற்காக ஓடிப்போனார்.
இஞ்சேரப்பா முகத்தில துணியைக் கட்டிக்கொண்டுபொவனப்பா?
******************************
2021
தம்பி மருதனார் மட சந்தையடியில ஆமி நிக்குதோ?
இல்லை அப்பு, மரக்கறி வேண்டலாம் போங்கோ.
சைக்கிளையும் ஏடுத்துக்கொண்டு போய் மரக்கறி வேண்டிக் கொண்டுவந்தவர், அடுத்தநாள் மனைவியிடம் சாதுவாக உடம்பு உழையுது என்றார்.
உடம்புழைவுடன், காய்ச்சலும் கூடி மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்படசிவத்தாரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல அம்புயுலன்ஸ் வந்தது.
மனைவியைப் பார்த்தார் சிவம்,
நான் தனிய என்று யோசிக்காதையுங்கோ, கொரனா என்று ஸ்டிக்கரும் ஒட்டி வாசலில் ஆமியும் நிக்கிது. கள்ளர் பயம் இல்லை. கவலைப்படாம வருத்தத்தை மாத்திக்கொண்டு வாங்கோப்பா. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
சிவத்தார் தலையை அசைத்தார், அதில்லையடி கவனமாக இரு, மூத்தவன் வருவான். அவன் வரும்பொழுது யாரெண்டாலும் ஒருவராவது இருக்க வேண்டும் என்றவர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க தலையைத் திருப்பிக்கொண்டார்.
போனவர் போனவர்தான். சிவத்தார் சிவமாகிக் கொண்டார்.
இப்ப வாசலில் யாரும் இல்லை. யாரும் வரப்போவதும் இல்லை.

No comments:
Post a Comment